தீட்சதர்கள் அத்துமீறல்களைக் கண்டித்து தில்லையில் ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் நடராசர் கோவிலில், சிற்றம்பல மேடையில் நின்று வழிபாடு நடத்திய பெண்ணை தீட்சிதர்கள் தாக்கினார்கள். தீட்சிதர்கள் 20 பேர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சிதம்பர நடராஜர் கோவில் திருச்சிற்றம்பல மேடையில் அனைத்து சாதியினரையும் வழிபாடு நடத்த அனுமதிக்க கோரி, மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பாக சிதம்பரம், காந்தி சிலை அருகில் பிப்.28ஆம் தேதி மாலை 3 மணியளவில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
கழகத் தலைவர் செய்தியாளர்களிடத்தில், “தமிழ்நாட்டில், அறநிலையத் துறைக்கு கட்டுப்படாத, அரசுக்கு கட்டுப்படாத எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாத இடமாக இந்த சிதம்பரம் நடராசர் கோவில் இருந்து வருகிறது. இங்கு மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல சமய உரிமைகளும் இங்கு மீறப்பட்டிருக்கிறது. வழிபாட்டுக்குச் சென்றவர்கள் தாக்கப்படுகிறார்கள், தேவாரம் பாட சென்றவர் தாக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் சிதம்பரம் நடராசர் கோவிலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வர வேண்டும். தற்போது கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் முறையாக பயிற்சி பெற்றவர்களா என்பதையும் சரிபார்க்க வேண்டும். இல்லை என்றால், முறையாக பயிற்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும். எங்களைப் போன்ற இயக்கங்கள் மட்டுமல்லாமல் கடவுள் நம்பிக்கையுள்ள மக்களும் இதை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.
மக்கள் ஒருங்கிணைப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர், வழக்கறிஞர் த.தயாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் உரிமைக்கான கூட்டமைப்பு செயலாளர் விடுதலையாளன் முரளி வரவேற்பு கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம் பேராசிரியர் த.ஜெயராமன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் நிலவழகன், தமிழர் உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் சுப்பு மகேஷ், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், தமிழ் தேசிய போராளி ஆலப்பாக்கம் முருகேசன், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா உள்ளிட்ட பல இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.
இறுதியாக, திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் பிரகாஷ் நன்றி கூறினார். தொடர்ந்து, பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.
தில்லை கோயில் ‘பலி பீடமாக’ இருந்திருக்கிறது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உண்டு. பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியம் ‘கோபுரத் தற்கொலைகள்’ நூலில் கீழ்க்கண்ட செய்தியைப் பதிவு செய்துள்ளார்.
பதினாறாம் நூற்றாண்டில் செஞ்சியை ஆண்ட கிருஷ்ணப்பநாயக்கர், சிதம்பரம் நடராசர் கோவிலில் இருந்த தில்லைக் கோவிந்தன் கருவறையைச் செப்பனிடும் வேலைகளைச் செய்தார். பெருமாளின் உருவத்தை அங்கு வைக்கக் கூடாதென்று சைவர்கள் எதிர்த்தனர். இவ்வெதிர்ப்பின் உச்சகட்டமாகக் கோவிலில் தீட்சிதர்கள் சிலர் கோவில் கோபுரத்தில் ஏறி, கீழே விழுந்து உயிர் துறந்தனர். இதனால் உத்வேகம் பெற்ற பெண் ஒருத்தி தன் கழுத்தை அறுத்துக் கொண்டாள். ஆனாலும், கிருஷ்ணப்ப நாயக்கர் திருப்பணியைச் செய்து முடித்தார். 1597 இல் இதை நேரில் கண்டதாக பிமெண்டோ என்ற சேசுசபைத் துறவி தம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
(பரந்தாமனார் 1966:423-424)
தில்லை நடராசன் ‘நடன கோலத்தில்’ தோற்றமளிப்பபதற்கான காரணங்களை அக்னிஹோத்திரம் இராமானுஜ தாதாச்சாரி இந்து மதம் எங்கே போகிறது என்ற நூலில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.
‘நடராஜன்’ திருத்தாண்டவப் பின்னணி என்ன?
சிதம்பரம் நடராஜ பெருமானை எல்லாரும் அறிந்திருப்பீர்கள். உங்களில் சிலபேர் அவரது ஆலயத்துக்கு சென்று தரிசனமும் செய்திருப்பீர்கள். இந்த ஸ்தலத்திற்கு விசேஷமே சிவபெருமானான நடராஜ பெருமானின் நர்த்தனம்தான். ஒருநாள், மிகப்பழைய காலத்தின் அழகான நாள், சிதம்பரத்தில் ஒரு போட்டி. நடனப்போட்டி. கலந்து கொள்பவர்கள் யார், யார்?
பரமசிவன், தில்லை காளி.
யாரிந்த தில்லை காளி ? சிவபெருமானுடன் நடனப்போட்டி போட வந்தவள். மிகச்சிறந்த நர்த்தன நாட்டியக்காரி. இயற்கையிலேயே ஆண்களைவிட பெண்கள் தான் நடன அசைவுகளிலும் இசைத் துடிப்புகளிலும் அழகாக இழைவார்கள்.
புருஷர்கள் ஆடும்போது ஏற்படும் ரசனையைவிட ஸ்திரீகள் நர்த்தனமாடும்போது அதிகபட்ச அழகு மிளிரும். இது இயற்கையின் ஏற்பாடு. அதிலும்… தில்லைகாளி நடனப்பயிற்சி பெற்றவள். பின் சொல்ல வேண்டுமா?
அவளது சலங்கை ஒலி கேட்டு காற்றே ஆடிப் போகும்; அவளது நடனத்துக்குப் போட்டியாக ஆடவருபவர்களே ஆடிப் போய் விடுவார்கள்.
இப்படிப்பட்ட தில்லை காளிதான் சிவபெருமானின் நடனப் போட்டிக்கு வந்தாள். ஏற்பாடுகள் நடந்தன. இரண்டு மேடைகள் எதிரெதிரே. அதில்தான் சிவபெருமானும் காளியும் நடமாட வேண்டும்.
கூட்டம் கூடியிருக்கிறது. ஆட்டம் தொடங்க இருக்கிறது. போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என கூடியிருந்தவர்களிடையே ஒரு கிசு கிசு பேச்சு நுழைந்து நெளிந்துகொண்டிருந்தது.
தொடங்கியாகிவிட்டது தனது ஆர்ப்பாட்டமான அசைவுகளோடு ஆட ஆரம்பித்தாள் காளி. அவளது பாதங்கள் சலங்கைகளை ஒலியோடு சுருதி சேர்த்தன. காளியின் கை விரல்கள் காற்றில் நடனச் சித்திரங்கள் தீட்டின. மறுபக்கம் சிவன் தனது தாண்டவத்தை ஆரம்பித்தார். சிவனின் தாண்டவத்தை அய்ந்து வகையாக அவரது அடியார்கள் போற்றுவர். அற்புத தாண்டவம், அநவாத தாண்டவம், அற்புத தாண்டவம், பிரளய தாண்டவம், சங்கார தாண்டவம். இங்கே சிவன் ஆடியது ஆனந்த தாண்டவம்.
காளியின் நடன அசைவுகளும் நர்த்தன நுட்பங்களும் பார்ப்பவர்களை வசீகரித்தன. சிவனின் தாண்டவம் காளியின் தாண்டவம் முன்பு தோற்றுவிடும் நிலைமை..
பார்த்தார் சிவபெருமான். ஒரு பெண்ணிடம் நான் தோற்பதா ? அவள் கால்கள் செய்யும் நடனம் அவருக்குள் கலகம் செய்தது. ‘ஆஹா… சிவபெருமானை தில்லை காளி ஜெயித்துவிட்டாளே’ என குரல்கள் கிளம்பப் போகிற நேரம்..
இனியும் இவளை ஆடவிடக்கூடாது என முடிவுகட்டிய சிவன்… தன் இடதுகாலை சற்றே தூக்கினார். நடனத்தின் ஒருவகைதான் என ஈடு கொடுத்து ஆடிக் கொண்டிருந்தாள் காளி. சிவனின் இடது கால் இன்னும் எழும்பியது. ஆமாம்… இன்னும் உயரமானது. கொஞ்சம் கொஞ்சமாக இடது காலை விலக்கி எடுத்துச் சென்ற சிவபெருமானின் திட்டம் பலித்தது.
வலது காலை ஊன்றி இடது காலை உயர விலக்கிக்கொண்டே போக… சபையே ஒரு கணம் அதிர்ந்தது. ஏன்…? வேண்டுமென்றே சிவனின் சிஷ்டம் (அதாவது ஆணுறுப்பு) வெளியே தெரியும்படி ஆனது. இதற்காகத்தான் இடது காலை விலக்கி தூக்கியிருக்கிறார் சிவன்.
வெற்றியின் விளிம்பில் நடனமாடிக் கொண்டிருந்த தில்லை காளி இக்காட்சியை பார்க்க வேண்டிய கட்டாயம் நேர்ந்துவிட்டது. பொட்டென அவளது நர்த்தனம் நின்றது. தலைகுனிந்தாள். தனக்கு முன் ஒரு ஆண் இப்படிப்பட்ட கோலத்தில் நிற்பதை எந்தவொரு பெண் பார்த்துக்கொண்டே தன் வேலையை தொடருவாள் ?
காளியின் நர்த்தனம் நின்றதா ? நிறுத்தப்பட்டது. ஆனால் சிவபெருமான்…. தாண்டவமாடிக்கொண்டே இருந்தார். ஆக, சிவன் ஜெயித்தார் என்றாகிவிட்டது.
வலது காலை ஊன்றி இடது காலை தூக்கி சிஷ்டத்தை வெளிக் கொண்டு வந்து ஜெயித்துவிட்டார். இதுதான் சிதம்பர இரகசியமோ என்னவோ ?
இப்படி ஜெயித்த பிறகுதான் சிவனுக்கு நடராஜர் என்ற நாமமே உண்டானது. இதற்கு நடனத்தில் ராஜா என்று அர்த்தம்.
இதை நான் சொல்லவில்லை. நடராஜ மகாத்மியம் என்னும் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது சிதம்பரம் சொல்லும் செய்தி என்ன ?
ஆணிடம் பெண் போட்டி போடக்கூடாது. அப்படியே திமிராக போட்டி போட்டாலும் ஜெயித்துவிடக்கூடாது. அவளை தோற்கடிக்க ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
தோற்றவள் காளி. நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். காளி, ஆகமத்துக்கு அப்பாற்பட்டவள் காவல் தெய்வம். இங்கேதான் முக்கியமான இன்னொன்றை கவனிக்க வேண்டும். “ளுiஎய ளை ய hiபா உடயளள ழுடின. க்ஷரவ முயடi ளை ய டடிற உடயளள சரசயட ழுடின”என்று காளி ஒதுக்கப்பட்டாள். எங்கே ?
இன்னமும் நீங்கள் சிதம்பர நடராஜர் கோயிலுக்குப் போய் தில்லை காளி எங்கே என்று கேளுங்கள். கோயிலுக்கு வெளியே வடக்கு நோக்கி கை காட்டுவார்கள்.
கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் தூரத்தில் சிதம்பரத்தின் எல்லையில் ஒரு சின்ன கோயிலுக்குள் கோபமாக உட்கார்ந்திருப்பாள் காளி.
‘அதாவது ஆணுக்கு பெண் போட்டி போட முடியாது. போட்டியிட்டால் இப்படித்தான் விரட்டப்படுவாள்’ என்று நமக்கு நடராஜர் மூலம் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறாள் காளி. இன்னும் சிதம்பரம் கோவிலில் அர்ச்சனையில் ஈடுபடும் தீட்சிதர்கள் அக்காளியை திரும்பிக்கூட பார்ப்பதில்லை.
இவ்வாறு தெய்வங்களுக்கிடையே ஆண் – பெண் பேதம் போற்றி வளர்க்கப்பட்டிருக்கிறது. அதோடு வர்க்க பேதமும் பின்பற்றப்பட் டிருக்கின்றன.
– ‘இந்து மதம் எங்கே போகிறது’ நூலிலிருந்து
பெரியார் முழக்கம் 03.03.2022 இதழ்