பெண்ணுரிமை; ஜாதி ஒழிப்பு; இந்துத்துவா எதிர்ப்பு; மாநில உரிமைகளுக்காக… 2017இல் கழகத்தின் செயல்பாடுகள்
2017ஆம் ஆண்டு திராவிடர் விடுதலைக் கழகத்தின் முக்கிய களப்பணிகள் பற்றிய ஒரு தொகுப்பு:
ஜனவரி – தமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திரு நாள் விழாக்கள், கலை நிகழ்ச்சிகளுடன் சென்னை, மயிலாப்பூர், கொளத்தூர், நங்க வள்ளி, கொளப் பலூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கழகத் தோழர்கள் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளுடன் மக்கள் விழாவாக நடத்தினர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சிறுகாம்பூர் கிராமத்தில் நந்தினி என்ற தலித் மாணவி, இந்து முன்னணி கும்பலால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, நந்தினிக்கு நீதிகேட்டு கழக சார்பில் குடியாத்தம், திருச்செங்கோடு, அரியலூர், மதுரை, ஆத்தூர், நங்கவள்ளி, திருப்பூர், மேட்டூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
பிப்ரவரி: காதலர் நாளை பிப். 12ஆம் தேதி ஒரு நாள் விழாவாக மேட்டூரில் கலை நிகழ்வுகளுடன் கழகத் தோழர்கள் நடத்தினர். ஜாதிவெறிக்கு கணவரை பலி கொடுத்து ஜாதி ஒழிப்புக் களத்தில் நிற்கும் பெண்களுக்குப் பாராட்டும் விருதுகளும் வழங்கப்பட்டன.
கோவையில் வனப்பகுதிகளை சட்ட விரோத மாக ஆக்கிரமித்து, ‘ஈஷா’ மய்யம் நடத்தி வரும் ஜக்கிவாசுதேவ் நிறுவிய ‘ஆதியோகி சிவன்’ சிலை திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடி பங்கேற்க வருவதை எதிர்த்து கருப்புக் கொடி (பிப்.24) காட்டி கழகத்தினர் கைதானார்கள்.
காதலர் நாளில் ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்த இணையர்களுக்கு சென்னையில் கழக சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. (பிப்.14)
ஈரோட்டில் ‘இராமானுஜர் ஆயிரம் ஆண்டு விழா’ என்ற மத நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலை வர், மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் பங்கேற்கவிருப்பதை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது. விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று மாவட்ட ஆட்சித் தலைவரும், காவல்துறை அதிகாரியும் அறிவித்தனர். கோரிக்கை வெற்றி பெற்றது.
மார்ச் : அன்னை மணியம்மையார் பிறந்தநாள் மார்ச் 10 அன்று திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நடத்தப்பட்டது. பல்வேறு துறைகளில் சாதனை செய்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
கழகத்தில் இணைந்து, கடவுள், மதமறுப்புக் கொள்கைகளை பரப்புவதில் உறுதியாக செயல் பட்டார் என்பதற்காக கோவை கழகத் தோழர் ஃபாரூக், மத அடிப்படைவாதிகளால் படு கொலை செய்யப்பட்டபோது தமிழகமே அதிர்ந்தது. பாரூக் கொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட் டங்களை கழகம் நடத்தியது.
உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் அவமதிப்புக்குள்ளாக்கும் ஜாதி வெறியைக் கண்டித்து தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் தோழர்கள் சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு கைதானார்கள்.
ஏப்ரல் : அம்பேத்கர் பிறந்த நாள் (ஏப்.14) மேட்டூரில் சைக்கிள் பேரணி, கலை நிகழ்வு களுடன் கொண்டாடப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. கோவையில் பாரூக் குடும்பத்துக்கு நிதி வழங்கும் நிகழ்வு (ஏப். 16) உணர்ச்சியுடன் நடந்தது. கழக சார்பில் ரூ.10 இலட்சம் நிதி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
சென்னையில் ஒரு நாள் குழந்தைகள் பயிற்சி முகாம் (ஏப்.30) நடந்தது.
தலைமைக் குழு கூட்டம் தலைமை நிலையத்தில் கூடி, நடுவண் அரசு அலுவலகங்களில் இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப் பட்டது (ஏப்.10).
மே : மோடி பா.ஜ.க. ஆட்சி கொண்டு வந்த மாட்டுக்கறி விற்பனை தடை சட்டத்தைக் கண்டித்து சேலத்தில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடத்தி தோழர்கள் கைதானார்கள் (மே 12). கழகத் தலைமை அலுவலகத்தில் தலைமைக் குழு கூடியது (மே 5).
ஜூன் : ‘இந்தித் திணிப்பை எதிர்ப்போம்; இழந்து வரும் உரிமைகளை மீட்போம்’ என்ற முழக்கத்தை முன் வைத்து சென்னை திருவான் மியூரில், தமிழர் பண்பாட்டு மாநாட்டை (ஜூன் 4) சென்னை மாவட்டக் கழகம் நடத்தியது.
அடுத்த நாள் (ஜூன் 5) பா.ஜ.க. ஆட்சியின் இந்தித் திணிப்பை எதிர்த்து சென்னையில் இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டம் நடத்தி கழகத் தோழர்கள் கைதானார்கள்.
உடுமலை திருமூர்த்தி படகுத் துறையில் திருப்பூர், கோவை மாவட்ட கழகத் தோழர்கள் இணைந்து இரண்டு நாள் பயிற்சி முகாமை சிறப்புடன் நடத்தினர்.
ஜூலை : சென்னை தலைமைக் கழகத்தில் தலைமைக் குழு கூடி பரப்புரைக்கான திட்டங்களை உருவாக்கியது.
காமராசர் பிறந்த நாள் விழாக்கள், சென்னை, திருப்பூர், மேட்டூர், அந்தியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கழக சார்பில் நடத்தப்பட்டன.
ஆகஸ்டு : ‘இழந்து வரும் உரிமைகளை மீட்போம்; தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்’ என்ற முழக்கத்தோடு தமிழகம் தழுவிய பரப்புரைப் பயணத்தை ஆகஸ்டு 5ஆம் தேதி கழகம் தொடங்கியது. கோவை, சென்னை, மேட்டூர், மயிலாடுதுறை, மதுரையிலிருந்து கழகப் பரப்புரை குழுக்கள் புறப்பட்டன. திராவிடர் விடுதலைக் கழகம் தொடங்கப்பட்ட நாளான ஆக.12ஆம் தேதி திருச்செங்கோட்டில் நிறைவு விழா மாநாடு எழுச்சியுடன் நடந்தது.
விநாயகன் ஊர்வலத்தை நடத்தும் இந்து அரசியல் அமைப்புகள் சட்டங்களை மீறி செயல்படுவதை கட்டுப்படுத்தக் கோரி, ஈரோடு, சென்னை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் கழகத் தோழர்கள் காவல்துறை அதிகாரி களிடம் மனு அளித்தனர்.
விநாயகன் மத அரசியல் ஊர்வலத்தை எதிர்த்து சென்னை மாவட்டக் கழக சார்பில் பெரியார் கைத்தடி ஊர்வலம் நடத்தி தோழர்கள் கைதானார்கள் (ஆக.31).
செப்டம்பர்: 1,200க்கு 1,176 மதிப்பெண் பெற்றிருந்தும் ‘நீட்’ தேர்வு எனும் தடையால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத நிலையில் அனிதா என்ற தலித் பெண், தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார். ‘நீட்’டுக்கு உயிர்ப்பலியான அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு தமிழகமே கொதித்தது. சென்னையில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை முற்றுகை யிடச் சென்ற கழகத் தோழர்கள் கைதுசெய்யப் பட்டனர். சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
முதல்கட்ட பரப்புரைப் பயணத்தில் விடுபட்ட பகுதிகளில் சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் செப்.23 தொடங்கி, செப்.28 வரை இரண்டாம் கட்ட பரப்புரைப் பயணம் நடத்தினர். செப்.17இல் தமிழகம் முழுதும் கழகத் தோழர்கள் பெரியார் பிறந்த நாள் விழாவை எடுத்தனர்.
அக்டோபர் : சென்னையில் ஜாதி ஒழிப்புக் களம் நோக்கி இளைஞர்களை அழைக்கும் இளம் பெண் போராளிகள் மாநாடு எழுச்சி யுடன் நடந்தது. தமிழகம் முழுதுமிருந்தும் தோழர்கள் மாநாட்டுக்கு திரண்டு வந்திருந்தனர். கோவையில் மத்திய அரசின் அச்சகம் மூடப்படுவதை எதிர்த்து கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தி யது. கேரளா கோயில்களில் தலித் அர்ச்சர்கள் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ் நாட்டில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களை அர்ச்சகர்களாக்கக் கோரி சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தி தோழர்கள் கைதானார்கள்.
நவம்பர் : நவம்பர் 26இல் ஜாதி ஒழிப்புக்காக பெரியார் அறிவித்த அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று 1957இல் சிறையேகிய போராளிகளை நினைவுகூர்ந்து சூலூரில் ஜாதி ஒழிப்பு, சட்ட எரிப்பு நாள் பொதுக் கூட்டம் நடந்தது.
டிசம்பர் : தமிழ் தெரியாதவர்களும், தமிழ்நாட்டைச் சாராதவர்களும் தமிழக அரசின் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்ற தமிழ்நாடு தேர்வாணையக் குழுவின் அறிவிப்பை திரும்பப் பெறக் கோரி கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. சென்னை, காஞ்சிபுரம், திண்டுக்கல், மேட்டூர், திருப்பூர், ஈரோட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதை மாநாடு எழுச்சியுடன் நடந்தது (டிச.16). சென்னையில் குடிசைப் பகுதி மக்களை கட்டாயப் படுத்தி வெளியேற்றியதைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்தி தோழர்கள் கைதானார்கள். டிச.29இல் சேலத்தில் கழகத் தலைமைச் செயற்குழு கூடியது. கழக சார்பில் 2018ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி தயாரிக்கப்பட்டது.
பெரியார் முழக்கம் 28122017 இதழ்