சிறப்புக் கட்டுரை – அடக்குமுறை சட்டங்களை முறியடிப்போம்!
அடக்குமுறை சட்டங்களை எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தினார்.
அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்புச் சார்பில் இந்துத்துவ மக்கள் விரோத அரசின் அடக்குமுறைக்கு எதிராகக் கண்டனக் கருத்தரங்கம் கோவை அண்ணா மலை அரங்கில் 30.7.2015. அரங்க. குணசேகரன் (தமிழக மக்கள் புரட்சிக் கழகம்) தலைமையில் நடந்தது. கருத்தரங்கில், தமிழகத்தில் காவல் துறை புதிதாகப் பயன்படுத்தத் தொடங்கி யிருக்கும் மற்றொரு அடக்குமுறை சட்டமான ‘சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்துக்கு (Unlaw – ful Activities( Prevention ) Act – UPPA) கடும் எதிர்ப்பு தெரிவித்து தோழர்கள் பலரும் உரையாற்றினர். ‘தடா’, ‘பொடா’ சட்டங்களைப்போல் இதுவும் ஒரு கொடூரமான அடக்குமுறை சட்டமாகும். இந்த சட்டங்கள் முறைகேடாகவே பயன் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் பொடா சட்டத்தை நீக்கிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, இந்தச் சட்டத்தில் இடம் பெற்றிருந்த பல மோசமான பிரிவுகளை சட்ட விரோத தடுப்புச் சட்டத்தில் இணைத்து விட்டது. ஏற்கெனவே இந்த நோக்கத் தோடு இரண்டு முறை திருத்தத்துக்கு உள்ளான இந்த சட்டம், மேலும் கொடூரமாக மாற்றப்பட்டது. 2008ஆம் ஆண்டு மும்பை நகரம் பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதைப் பயன்படுத்தி மன்மோகன் ஆட்சி இந்த திருத்தப்பட்ட சட்டத்தைக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்தரங்கில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். அவரது உரையிலிருந்து:
பிரிட்டிஷ் ஆட்சியில் அடக்குமுறை சட்டங்களை எதிர்த்தவர்கள் ‘சுதந்திரம்’ பெற்ற பிறகு, அதைவிடக் கொடுமையான சட்டங்களைக் கொண்டு வருகிறார்கள். ஒரு சட்டம் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டால், அதே வேகத்தில் மற்றொரு சட்டத்தைக் கொண்டு வந்து விடுகிறார்கள். அப்படி வந்த சட்டம்தான், இந்த சட்டவிரோத தடுப்புச் சட்டம். பிரிட்டிஷ் ஆட்சி கொண்டு வந்த சட்டத்தை உருவாக்கியது ரவுலட் மட்டுமல்ல, குமாரசாமி சாஸ்திரி என்ற பார்ப்பனரும் சேர்ந்துதான். அந்தச் சட்டத்தை உருவாக்கினார், ‘ரவுலட்-சாஸ்திரி’ சட்டம் என்று தான் அது அப்போது அழைக்கப் பட்டது. பின்னால் ‘சாஸ்திரி’யை விடுவித்து, ‘ரவுலட்’ சட்டம் என்று குறுக்கி விட்டார்கள். பிரிட்டிஷ்காரன் கொண்டு வந்த இந்த சட்டத்தில்கூட ஒருவரை விசாரணையின்றி 6 மாதம் வரை தான் சிறை வைக்க முடியும். தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்ட 3 உயர்நீதிமன்ற நீதிபதிகளும் சேர்ந்து முடிவெடுத்தால் மட்டுமே மரணதண்டனை விதிக்க முடியும். நீதிமன்ற விசாரணைகள்கூட வெளிப்படையாகவே நடந்தன.
இந்த உரிமைகள்கூட இந்திய அரசுகளால் கொண்டுவரப்பட்ட அடக்குமுறை சட்டங்களில் மறுக்கப்படுகின்றன. மரணதண்டனைகூட குற்றத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற மரபு முதன்முதலாக இந்திரா கொலை வழக்கில் மீறப்பட்டது. நேரடியாக குற்றத்தில் ஈடுபடாத கேகர் சிங் தூக்கிலிடப்பட்டார். இராஜீவ் கொலை வழக்கிலும் இதுதான் நடந்தது. குற்றத்தில் நேரடியாக ஈடுபட்ட சிவராஜ்-தாணு உயிருடன் பிடிபடவில்லை. சதி செய்ததாகக் குற்றம்சாட்டப் பட்டவர்களுக்கு தூக்குதண்டனை விதித்தார்கள். இப்போது யாகூப் மேமன் வழக்கிலும் இதுதான் நடந்திருக்கிறது. அவரது சகோதரர் டைகர்மேமன் ( 4ஆம் பக்கம்) குற்றத்தில் நேரடியாக ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அவரைப் பிடிக்க முடியவில்லை. அதற்காக குற்றத்தில் நேரடியாக ஈடுபடாத அவரது தம்பியை தூக்கில் போட்டுள்ளார்கள்.
மகாராஷ்டிரா சிறை விதிகளின்படி மரண தண்டனை அறிவிக்கப்பட்டு, ஒரு வார அவகாசம் தரப்பட்ட பிறகே தூக்கிலிடப்பட வேண்டும். ஆனால், அவசர அவரமாக விடியற்காலை உச்சநீதிமன்றம் கருணை மனுவை தள்ளுபடி செய்த உடனே, அடுத்த சில மணி நேரத்தில் காலை 7 மணிக்கு தூக்கில் போட்டுவிட்டார்கள். அதுவும் மரணதண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று அழுத்தமாகக் குரல் கொடுத்து வந்த அப்துல் கலாம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட அதே நாளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து நாம் கடுமையாக கவலையோடு சிந்திக்க வேண்டும்.
காவல்துறையின் தலையீடு அனைத்துத் துறைகளிலும் நடந்து கொண்டிருக்கிறது. காவல்துறை தான் ஆட்சி நடத்துவதுபோலவே தெரிகிறது. ஒரு ஊரில் குடிநீர் கிடைக்கவில்லை என்று மக்கள் போராடினால், சாலை மறியல் செய்தால், உடனே காவல்துறைதான் அங்கே போய் சமரசம் பேசுகிறது. மக்கள் போராடும் போது அந்தப் பிரச்சினைக்குத் தொடர்பான அரசுத் துறை அதிகாரிகள் அங்கே சென்று அதில் தலையிட்டு, நடவடிக்கை எடுத்ததாக ஒரு சம்பவத்தையாவது கூற முடியுமா?
விசாரணையில் காவல்துறை அடிப்பது, சித்திரவதை செய்வது சட்ட விரோதம். ஆனால், அது தானே நடக்கிறது. இதை எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளோ, மது அருந்தும் காட்சிகளோ வரும்போது, திரையில் மது குடிப்பது, புகைப்பிடிப்பது உடலுக்குக் கேடு என்று அறிவிப்பு போடுவதுபோல், காவல்துறை திரைப் படங்களில் சட்டவிரோதமான விசாரணைகளில் தாக்குதல் நடத்துவது, சித்திரவதை செய்வது போன்ற காட்சிகள் வரும்போது, இது சட்ட விரோதமானது என்று எழுத்தில் அறிவிக்க வேண்டும்.
(பலத்த கைதட்டல்)
திருவாங்கூர் சவஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க முடியாது, அது தனிநாடாகவே இருக்கும் என்று கூறியவர், அந்த சவஸ்தானத்தின் ‘திவான்’ ஆக (தலைமை அதிகாரி) இருந்த சர். சி.பி. இராமசாமி\ அய்யர். அவரைத்தான் 1961இல் உருவாக்கப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவுக்கு தலைவராகப் போட்டார்கள். அதன் பரிந்துரைப்படி இந்தியாவில் பிரிவினை கொள்கைகளைப் பேசுகிறவர்கள் தேர்தலில் நிற்க முடியாது என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். (16ஆவது சட்டத் திருத்தம்) பிறகு 1963இல் தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் ஒருமைப்பாடு உறுதி ஏற்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தார்கள். இதேபோல்தான் இலங்கையில் தமிழ் ஈழம் கேட்பவர்கள், தேர்தலில் நிற்க முடியாது என்று 1978இல் சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ் ஈழத்தை முன்வைத்து போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன. டி.அய்.ஆர்., ‘மிசா’, ‘என்.எஸ்.ஏ.’, ‘தடா’, ‘பொடா’, ‘பொடோ’ கிரிமினல் சட்டத் திருத்தம் என்று ‘சுதந்திர’ இந்தியாவில் எத்தனையோ அடக்குமுறை சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இது தவிர மாநில அரசுகளும், இதுபோன்ற சட்டங்களைக் கொண்டு வந்திருக்கின்றன.
2008இல் மும்பை தாக்குதலைத் தொடர்ந்து சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கொடூரமான பிரிவுகள் சேர்க்கப்பட்டு திருத்தச் சட்டம் 2008 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை நாடாளுமன்றக் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் பல உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால், ஆட்சியாளர்கள் அதை செவிமெடுக்கவில்லை. நாடாளுமன்றமும் விரிவாக விவாதிக்கவில்லை. மனித உரிமைகளுக்கு எதிரானவை என்று புறந்தள்ளப்பட்ட ‘தடா’, ‘பொடா’ சட்டத்தில் இடம் பெற்ற பல பிரிவுகள் இதில் சேர்க்கப்பட்டன. அரசுக்கு எதிராக வெறுப்பை உருவாக்கும் வகையில் எதை பேசினாலும், இந்த சட்டப்படி குற்றம். அத்யாவசியப் பொருள்களை தடுத்தல் குற்றம்; இதன்படி இரயில் மறியல் செய்தால்கூட இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும். ஒரு அமைப்பாக செயல்படாமல் தனித்தனியாக நண்பர் குழுவாகவோ அல்லது படிப்பு வட்டமாகவோ செயல்படுவதை அரசு விரோதம் என்று கருதினால் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும். ஒரு அமைப்பில் உறுப்பினராவதே கிரிமினல் குற்றமாக்கப்படுவது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கே எதிரானது.
இந்தச் சட்டம் 1967ஆம் ஆண்டு முதன்முறையாக கொண்டு வரப்பட்டபோதே சட்டத்தின் பிரிவுகளைப் பரிசீலித்த கூட்டு நாடாளுமன்றக் குழு சட்ட விரோதமாகக் கருதப்படும் இயக்கத்தின் மீதான தடையை மூன்று ஆண்டுகளிலிருந்து இரண்டு ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும் என்று கூறியதோடு, அடிப்படை உரிமைகளை மிகக் கடுமையாக இது மீறுவதாகக் கூறியது. அப்போது உறுப்பினராக இருந்த வாஜ்பாய், ‘இது ஒரு கழுதை சட்டம், குதிரை உருவில் கொண்டு வரப்பட்டிருக்கிறது’ என்றார். ஜார்ஜ் பெர்னாண்டஸ், இயக்கத்தை தடை செய்வதை ஓராண்டாகக் குறைக்க வேண்டும் என்றார். இவ்வளவும் மீறப்பட்டு 5 ஆண்டுகள் வரை ஒரு இயக்கத்தைத் தடைப்படுத்த சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உள்ளாகிறவர்கள், அரசிடம் இழப்பீடு கோருவதற்கு ‘பொடா’ சட்டத்தில் இருந்த உரிமைகூட (58ஆவது பிரிவு) இந்தச் சட்டத்தில் பறிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்போடு தொடர்பு இல்லாதவர்களைக்கூட இந்தச் சட்டத்தில் கைது செய்ய முடியும். அப்படி கைது செய்யப்பட்டவர்கள் தங்களுக்கும், இயக்கத்துக்கும் தொடர்பு இல்லை என்பதற்கான ஆதாரங்களை அவர்கள்தான் முன்வைக்க வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதே சுமையைத் தூக்கி வைக்கிறது. மனித உரிமைப் போராளி, டெல்லிப் பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என்.சாய்பா, 90 சதவீதம் ஊனமுற்றவர். சக்கர நாற்காலியில் நகரக்கூடிய அவரை 2014 மே மாதம் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள். அவரது வீட்டில் ஆட்சேபத்துக்குரிய நூல்கள், ஆவணங்கள் இருந்தன என்பதுதான் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம். 14 மாத சிறைவாசத்துக்குப் பிறகு, கடந்த ஜூலையில் 3 மாத பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதே சட்டத்தின் கீழ் மருத்துவர் வினாயக்சென் கைது செய்யப்பட்டு, எந்த விசாரணையும் இன்றி இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பார்ப்பனர் சங்கராச்சாரி, ஒரு மாதத்திலேயே உச்சநீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டு விடுகிறார். பிணை வழங்கிய நீதிபதி, அதற்கான பிணை உத்தரவிலேயே சங்கராச்சாரி குற்றமற்றவர் என்று ‘தீர்ப்பே’ எழுதுகிறார்.
தமிழ்நாட்டில் என்ன நிலை? ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க ஒரு சட்டம் இயற்ற, 2012ஆம் ஆண்டிலேயே ஒரு சட்ட வரைவை உருவாக்கி, சட்ட ஆணையம் மாநில அரசுகளின் கருத்து கேட்டு அனுப்பியது. தென்னகத்தில் அனைத்து மாநிலங்களும் கருத்து தெரிவித்துவிட்டன. தமிழ்நாட்டில் அக்கட்சியினரால் ‘தெய்வமாகக்’ கொண்டாடப்படும் ‘தெய்வத்தாய்’ ஆட்சி இதுவரை, இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. கோகுல்ராஜ் எனும் தலித் பொறியியல் பட்டதாரி ஜாதி கடந்து காதலித்ததற்காக கொலை செய்யப்பட்ட வழக்கில் நேரடி தொடர்புடைய குற்றவாளி யுவராஜ் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர் ‘வாட்ஸ் அப்’ வழியாக காவல்துறைக்கே சவால்விட்டுப் பேசுகிறார். தவறான குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு குற்றம் தவறானது என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களை விடுதலை செய்யும் வழிமுறைகள் அமெரிக்காவில் இருக்கின்றன. ஆனால், பேரறிவாளன் வாக்குமூலத்தைத் தான் தவறாகப் பதிவு செய்ததாக பதிவு செய்த அய்.பி.எஸ். அதிகாரி தியாகராஜன் ஒப்புக் கொண்டப் பிறகும், விடுதலை செய்வதற்கு சட்டம் அனுமதிப்பதில்லை. மாவோயிஸ்டு களுக்கு ஆதரவாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கோவையிலே தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைதுக்கு தமிழகத்தில் சட்டவிரோத தடுப்புச் சட்டத்தை (1967)பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி ‘பொடா’ சட்டம் கொண்டு வந்தபோது, அறிவுப்பு வந்தவுடனே அதை அனைத்துக் கட்சிகளையும் திரட்டி பெரியார் திராவிடர் கழகம் எதிர்த்தது. பின்னர், பொடோ சட்டம் வந்தபோது தந்தை பெரியார் திராவிடர் கழகம் அனைத்துக் கட்சிகளையும் திரட்டி எதிர்ப்பைத் தெரிவித்தது. இனி தமிழக காவல்துறை முறைகேடாக இந்தச் சட்டத்தை கட்டவிழ்த்துவிடும் என்று எதிர்பார்க்கலாம். இந்த அடக்குமுறை சட்டங்களின் ஆபத்துகளை எதிர்த்து, மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டியது நமது கடமை. இதற்கான இயக்கத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் முழுமையாகப் பங்கேற்கும் என்று கொளத்தூர் மணி பேசினார்.
கருத்தரங்கில், கு. இராமகிருட்டிணன் (த.பெ.தி.க.), இரவிக்குமார் (ஆதித் தமிழர் விடுதலை முன்னணி), வி.எம். அபுதாகீர் (எஸ்.டி.பி.அய்.), இலக்கியன் (வெல்பேர் பார்ட்டி), நாகை திருவள்ளுவன் (தமிழ்ப் புலிகள்), வழக்கறிஞர் பழனியாண்டி (குடியுரிமை பாதுகாப்பு நடுவம்), வடிவேல் (ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்) ஆகியோர் உரையாற்றினர். அரங்கம் முழுதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. – நமது செய்தியாளர்
பெரியார் முழக்கம் 06082015 இதழ்