மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் கொல்லப்பட்ட தலித் மக்களுக்காக போராடிய தோழர்கள் கைது ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கண்டனம் !
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் கொல்லப்பட்ட தலித் மக்களுக்காக போராடிய தோழர்கள் கைது !
கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கண்டனம் !
மேட்டுப்பாளையத்தில் மழையில் சுவர் இடிந்து விழுந்து 17 தலித் மக்கள் கொல்லப்பட்டுள்ளதில்
ஆபத்தான நிலையில் இருந்த சுவரை பராமரிக்காத உரிமையாளரை கைது செய்யாமல்,
கொல்லப்பட்ட ஏழை எளிய தலித் மக்களுக்காக போராடிய தோழர்களை காவல்துறை அநாகரீகமான முறையில் கைது செய்யப்ட்டுள்ளதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக அரசு,
கைது செய்யப்பட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்வதோடு மட்டுமல்லாமல்,
சுவரை பராமரிக்காமல் தலித் மக்களின் மரணத்திற்கு காரணமானவர்களை உடனடியாக
தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
கொல்லப்பட்ட தலித் மக்களுக்கு உடனடியாக இழப்பீடும்,வீடிழந்த மக்களுக்கு உடனடியாக புதிய வீடுகளும் கட்டித்தரவும் தமிழக அரசு முன் வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி.காலணியில் 2.12.2019 அன்று அதிகாலை பெய்த மழையின் காரணமாக ஒரு சுவர் இடிந்து விழுந்தது என்றும் அதன் காரணமாக அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் 17 பேர் இறந்து விட்டதாக செய்திகள் வந்தது.
ஆனால் இதன் உண்மை நிலை,
அந்தப் பகுதி ஒரு குடியிருப்பு பகுதியாக மாற்றப்பட்ட பொழுது (லேஅவுட்)
அருகில் இருக்கும் தலித் மக்களின் குடியிருப்புகள் வெளியே பார்வைக்கு தெரியக்கூடாது என்கிற நோக்கத்தில் 22 அடி உயரத்தில் கருங்கல்லினால் ஆன ஒரு தற்காலிக சுவரை 12 ஆண்டுகளுக்கு முன் எழுப்பி இருக்கிறார்கள்..வெறும் மண்ணினால் கட்டப்பட்டு மெல்லிய சிமெண்ட் பூச்சால் அமைக்கப்பட்ட வலிமையற்ற சுவர் அது. அந்த சுவர் மிகவும் வலுவிழந்து இருக்கிறது என்றும் ஏற்கனவே பல முறை மழை பெய்த பொழுது அதில் அடைப்பு ஏற்பட்டு நீர் கசிவுகள் வருகிறது என்றும் அந்த பகுதியில் குடியிருக்கும் தலித் மக்களின் பிரதிநிதிகள் அரசுக்கு தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளனர். இதை கண்டுகொள்ளாத தமிழக அரசும் நிர்வாகமும் அந்த மக்களின் கோரிக்கையை கண்டு கொள்ளவே இல்லை. சுவரை வலுப்படுத்தவோ அதனை பராமரிக்கவோ சுவற்றின் உரிமையாளரும் முன் வரவில்லை.
தலித் மக்களின் குடியிருப்புகளை மறைத்து எழுப்பப்பட்ட அந்த சுவருக்கு மறுபுறம் சக்கரவர்தி துகில் மாளிகை எனும் நிறுவனத்தின் நிறுவனர் சக்கரவர்த்தி என்பவர் இல்லம் அமைந்துள்ளது.
இந்நிலையில் அந்த 22 அடி உயர கருங்கல்லினால் ஆன ஆபத்தான மண் சுவர் பராமரிப்பின்மை காரணமாக நேற்று பெய்த மழையில் அதிகாலை 4.00 மணி அளவில் இடிந்து தலித் மக்களின் குடியிருப்புகள் மீது விழுந்துள்ளது. அதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 17 தலித் மக்கள் இறந்துள்ளனர்
இறந்த தலித் மக்களின் மரணத்திற்கு நீதி கேட்டு இன்று காலை போராடிய தலித் மக்களின் பிரதிநிதிகளை காவல்துறை மிக மோசமான முறையில் வன்முறையை ஏவி அடிப்பது,தரதரவென்று இழுத்து செல்வது போன்ற நடவடிக்கைகளின் மூலம் கைதுசெய்து சிறைப்படுத்தி வைத்துள்ளார்கள்.
இந்த மரணத்திற்கு காரணமான சுவர் அமைத்தவர்களை,பராமரிக்காதவர்களை கைது செய்யாமல் தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடிய தமிழ் புலிகளின் கட்சித் தலைவர் தோழர் நாகை.திருவள்ளுவன், திராவிட தமிழர் கட்சித் தலைவர் தோழர் வெண்மணி, சமத்துவ கழக தலைவர் தோழர் கார்க்கி, தோழர் களப்பிரன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் நேருதாஸ் ஆகியோர் உள்ளிட்ட தோழர்களை தமிழக காவல்துறை கைது செய்து சிறை வைத்துள்ளது கண்டிக்கத்தக்கது.
கைது செய்யப்பட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், மரணமடைந்த தலித் மக்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதோடு அவர்களுக்கு புதிய வீடு கட்டித் தரவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.
தமிழக அரசு உடனடியாக இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாமல் போராட்டங்களை வன்முறையை ஏவி ஒடுக்க நினைத்தால் மேலும் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கிறோம்.
கொளத்தூர் தா.செ.மணி,
தலைவர்,
திராவிடர் விடுதலைக்கழகம்.
2.12.2019