வினாயகன் அரசியலுக்கு எதிராக சென்னை-பொள்ளாச்சியில் பெரியார் கைத்தடி ஊர்வலம்: கைது
மதத்தை அரசியலாக்கி, மதக் கலவரத்தை உருவாக்கி வரும் ‘விநாயகன்’ ஊர்வலங்களை எதிர்த்து சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி பிற்பகல் 4 மணியளவில் பெரியார் கைத்தடி ஊர்வலம் எழுச்சியுடன் நடைபெற்றது. அன்று தான் இந்து முன்னணி நடத்தும் ‘விநாயகன் சிலை’ ஊர்வலமும் நடந்தது. திருவல்லிக் கேணி அய்ஸ்அவுஸ் பகுதி மசூதிக்கு அருகே கழகத் தோழர்கள் திரண்டனர். பெரியார் கைத்தடிகளுடன் ‘விநாயகன் ஊர்வலத்தை அரசியலாக்காதே!’, ‘கலவரம் உருவாக்கும் விநாயகன் ஊர்வலங்களுக்கு, அரசே அனுமதி அளிக்காதே!’ ‘வீடுகளில் நடக்கும் பக்தி பண்டிகைகளை வீதிக்குக் கொண்டு வந்து அரசியலாக்காதே!’ என்ற முழக்கங்கள் அடங்கிய பதாகைகள் தாங்கி தோழர்கள் முழக்கமிட்டனர். கைத்தடி ஊர்வலத்துக்கு பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இரா.உமாபதி முன்னிலை வகித்தார். திருச்செங்கோடு, விழுப்புரம், மேட்டூர், காவலாண்டியூர், குடியாத்தம் பகுதிகளிலிருந்து கழகத் தோழர்கள் பங்கேற்றனர். கண்டன ஊர்வலத்தின் நோக்கங்களை விளக்கி பால்பிரபாகரன் பேசினார். தோழர்களை காவல்துறை கைது செய்தது. இராயப்பேட்டை பி.எஸ்.என்.எல். சமூகக் கூடத்தில் தோழர்கள் வைக்கப்பட்டிருந்தனர். 120 தோழர்கள் கைதானார்கள். மண்டபத்துக்குள் மதவெறி சக்திகள் தலைதூக்கும் ஆபத்துகளையும், கழகம் மேலும் முன்னெடுக்க வேண்டிய தீவிர களப்பணிகள் குறித்தும் தோழர்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் தபசி குமரன், அன்பு தனசேகரன், கழக உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் துரை அருண், திருமூர்த்தி, இரா.உமாபதி, ஏசுகுமார், விழுப்புரம் அய்யனார்,விழுப்புரம் இராமர், குடியாத்தம் சிவா, காவலாண்டியூர் ஈசுவரன், காவை இளவரசன், திருச்செங்கோடு வைரவேல், பெரியார்பாசறை கோபால், பொள்ளாச்சி ஆனந்த், நாமக்கல் சிவக்குமார், இரண்யா ஆகியோர் உரையாற்றினர். வேழவேந்தன் நன்றி கூறினார். 9 மணியளவில் தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சியில்
விநாயகன் சிலை ஊர்வலங்களுக்கு எதிராக பொள்ளாச்சியில் செப்டம்பர் 8ஆம் தேதி பகல் 11 மணியளவில் பெரியார் கைத்தடி ஊர்வலம் நடைபெற்றது. பெரியார் அம்பேத்கர் கூட்டு இயக்கங்கள் சார்பில் நடந்த இந்த கைத்தடி ஊர்வலத்தில் கழக சார்பில் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கோவை நிர்மல் குமார், மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், திருப்பூர் முகில் இராசு, சூலூர் பன்னீர் செல்வம், நீதிராசன் மற்றும் பொள்ளாச்சி கா.சு.நாகராசன் உள்ளிட்ட தோழர்களும், த.பெ.தி.க., அம்பேத்கர் இளைஞர் முன்னணி, மக்கள் விடுதலை முன்னணியை சார்ந்த தோழர்களும் உள்பட 60 பேர் கைதானார்கள். பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டு, இரவு 8.30 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.
பெரியார் முழக்கம் 15092016 இதழ்