ஜனநாயகம் என்றால்… பெரியார்
ஜனநாயகம் என்றால் மெஜாரிட்டிகள் மைனாரிட்டிகளை ஆளுவது என்றுதான் அர்த்தம். அதாவது ஒரு விஷயத்தை 51 பேர் ஆதரித்து 49 பேர் எதிர்த்தாலும் அதற்குச் ஜனநாயக வெற்றி என்றுதான் அர்த்தம்… வடநாட்டுத் தென்னாட்டு ஆட்சியை எடுத்துப் பார்த்தால் நமக்கு எப்போது வரப்போகுது மெஜாரிட்டி? நம் வாழ்வெல்லாம் இன்றைக்கு இருக்கிற அமைப்புகள் மாறாமல் இருக்கிற வரையில் மைனாரிட்டியாகத்தானே இருக்க முடியும்? (‘விடுதலை’ 20.1.1959)
கட்சியின் பெயரால் அரசாங்கம் நடை பெறுகிறதென்றால் அது எப்படி ஜனநாயகம் ஆக முடியும்? அவரவர்கள் தங்கள் தங்கள் கட்சிக்கு வேண்டிய நோக்கங்களின்படி எதையும் செய்து கொள்ளுகிறார்கள் என்றால் அவர்கள் மக்களின் விருப்பத்திற்கிணங்க ஆட்சி புரிந்ததாகக் கொள்ள முடியுமா? தனிப்பட்ட கட்சியின் பேரால் வருபவரானாலும் அவர் பாரபட்சமின்றி யாவரையும் ஒன்றெனப் பாவித்து ஆட்சி புரிவதே முறையாகும். தன் கட்சிக்காக என்று நீதியையும் நேர்மையையும் கைவிடுவதென்பது முற்றிலும் ஒழுக்கமற்ற செயலாகும். (‘விடுதலை’ 12.1.1956)
ஜனநாயகம் என்றால் மக்களாட்சி என்பதுதான் உண்மையான கருத்து. அப்படிப்பட்ட ஜனநாயகத்திற்கு மக்கள் அறிவாளிகளாகவும், ஒரு அளவிற்காவது யோக்கியர்களாகவும், ஒழுக்கமுடையவர் களாகவும் இருக்க வேண்டும்.
(‘விடுதலை’ 22.4.1965)
சரியாகவோ தப்பாகவோ இந்தியாவில் ஜனநாயக ஆட்சி வந்துவிட்டது. ஆனால் கட்சி ஆட்சிகள் அதைச் சிரிப்பாய்ச் சிரிக்க வைக் கின்றன? இதைப் பார்த்து மற்ற நாட்டான் என்ன நினைப்பான்? ஜனநாயகவாதிகள் வெட்கப்பட வேண்டாமா? (‘விடுதலை’ 19.3.1968)
அரசாங்கம் எவ்வளவு யோக்கியமாக நடத்தப்பட்டாலும் மக்கள் போதிய அறிவற்ற வர்களாயிருப்பதால் நீதியான யோக்கியமான ஆட்சிக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. ஜனநாயகம் காரணமாக எல்லா அயோக்கியத் தனங்களுக்கும் சகிப்புத் தன்மை காட்டி இடம் அளிக்கும் நிலை ஏற்படுகிறது.
(‘விடுதலை’ 12.1.1956)
சுதந்திரம் கொடுத்ததாகப் பெயரளவில் இருக்கிறது. ஆனால், அரசியலில் நடை பெறுவது எல்லாம் பித்தலாட்டமும் அயோக்கியதனமுமாகத்தான் இருக்கிறது. ஜெயித்தவன் அவனவன் ஜாதிக்கு நலத்தை யும், சௌகரியத்தையும் செய்து கொள்கிறான் என்றால் இது ஜனநாயகமா? பித்தலாட்ட நாயகம், அயோக்கிய நாயகம், ஜாதி நாயகம் என்பதுதான் பொருந்தும்.
(‘விடுதலை’ 15.10.1954)
போதிய பிரதிநிதித்துவம் இல்லாதவர் களுக்குச் சரியான நீதியும் பிரதிநிதித்துவமும் வழங்குவதுதான் ஜனநாயகத் தத்துவத்திற்கு மதிப்புக் கொடுப்பதாகும். எல்லா வகுப்பு களுக்கும் ஏற்ற பிரதிநிதித்துவம் அளிக்காத எந்தச் ஜனநாயகமும் நொண்டி ஜனநாயக மாகத்தான் – உதவாக்கரை ஜனநாயகமாகத் தான் – காட்சியளிக்கும். (‘விடுதலை’ 6.3.1959)
நமது ஜனநாயகத்தின் அயோக்கியத்தனம் வெற்றி பெற்றவனை எப்படிக் கவிழ்ப்பது என்பதிலேயே இருக்கிறது. வெற்றி பெற்றவன் தோற்றுப் போனவனின் எதிர்ப்பைச் சமாளிக்கிற முயற்சியிலேயே இருக்க வேண்டியிருப்பதால் அவனால் எந்த நல்ல காரியமும் செய்ய முடியாமல் போகிறது. போட்டி, தேர்தல் வரைதான் இருக்க வேண்டும். தேர்ந்தெடுத்து உள்ளே வந்து விட்டால் இருவரும் சேர்ந்து காரியம் செய்ய முன்வர வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய முடியும்.
(‘விடுதலை’ 13.12.1969)
பெரியார் முழக்கம் 19052016 இதழ்