தமிழகத்தில் உள்ள ஈழ ஏதிலியரின் துயர்துடைக்க தமிழக முதல்வரிடம் வேண்டுகோள்

பெறுநர்:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்கள்,

தமிழ்நாடு. 

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம்.

பொருள்: தமிழகத்தில் உள்ள ஈழ ஏதிலியரின் துயர்துடைக்க வேண்டுகோள்

 

இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசின் இன ஒடுக்குமுறை, இன அடக்குமுறை, இனக் கொலைக் கொடுமைகளால் அங்கிருந்து உயிர்தப்பித் தஞ்சம் நாடித் தமிழகம் வரும் ஈழத் தமிழ் மக்களை ஏற்று வாழ வைக்கும் உரிமையும் கடமையும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழக அரசுக்கு உண்டு.  இவ்வடிப்படையில், இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் வாழ்ந்துவரும் இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழீழ ஏதிலியர் (அகதிகள்) நலவுரிமைகளுக்காகத் தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பின் சார்பில் பின்வரும் கோரிக்கைகளைத்  தங்களிடம் வலியுறுத்துகிறோம்.

 

  • இலங்கைத் தமிழ் அகதிகள் எனப்படும் தமிழீழ ஏதிலியர் அனைவர்க்கும் இந்நாட்டில் இடைக்காலக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு இந்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
  • தமிழீழ ஏதிலியரின் அரசியல், குடியியல் உரிமைகளும் பொருளியல் உரிமைகளும் சட்டத்திலும் நடைமுறையிலும் உறுதி செய்யப்பட வேண்டும்.
  • திபெத்துப் போன்ற பிறநாட்டு ஏதிலியரோடு ஒப்பிட்டால் தமிழீழ ஏதிலியர்க்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதை இந்திய அரசு கைவிடுமாறு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
  • சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலியர் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழக அரசு அம்முகாம்களைக் கலைத்துவிட  வேண்டும்.
  • ஏதிலியர் முகாம்களை சிறை முகாம்கள் போல் கருதி நடத்துவதைக் கைவிட வேண்டும்; அவற்றில் காவல் துறை உளவுப் பிரிவின் ஆதிக்கமும் தலையீடும் இல்லாமற்செய்ய வேண்டும்; ஏதிலியர்க்கு எதிராக மாந்த உரிமை மீறல்களில் ஈடுபடும் அரசின் காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். முகாம்களுக்கு வெளியேயும் ஏதிலியர் வாழ்வில் காவல் துறைத் தலையீடும் கெடுபிடியும் இல்லாமற்செய்ய வேண்டும்.
  •  தமிழீழ ஏதிலியரின் கல்வியுரிமையும் வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்; ஏதிலிக் குழந்தைகள் அனைவர்க்கும் கட்டாய இலவயக் கல்வி கிடைக்க வகை செய்ய வேண்டும். ஏதிலி மாணவர்கள் இந்நாட்டில் மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்வி பெற இப்போதுள்ள தடையை நீக்க வேண்டும். தனியார் துறையிலும் அரசுத் துறையிலும் அவர்களின் வேலைவாய்ப்புக்கு இப்போதுள்ள வழித் தடைகள் அனைத்தையும் களைந்திட வகை செய்ய வேண்டும்.
  • சட்டம் பயின்று தகுதி பெற்ற தமிழீழ ஏதிலியர் நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணியாற்ற இப்போதுள்ள தடையை நீக்க வேண்டும்.
  • ஏதிலியரின் கண்ணியமிக்க மாந்த வாழ்வுக்கு ஏற்ற வகையில்   ஏதிலியர் முகாம்களில் வீட்டு வசதியும் பிற குடிமை வசதிகளும் செய்து தர வேண்டும், ஏதிலியர்க்கான அரசின் உதவித் தொகையை உயர்த்திக் கொடுக்க வேண்டும்.
  • இலங்கை திரும்ப விரும்பும் ஏதிலியரிடம் இந்நாட்டில் மிகைத் தங்கலுக்காகத் தண்டம் விதிப்பதைக் கைவிட வேண்டும்.  உடனடியாகத் தண்டத் தொகையைப் பெரிதும் குறைக்க வேண்டும்.

தமிழகத்தில் ஈழத் தமிழர்கள் அயலாராகவும் குற்ற மரபினராகவும் நடத்தப்படுவது வருந்தத்தக்க உண்மையாக இருக்கிறது. இந்த அவல நிலையை மாற்ற மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி ஈழ ஏதிலிகளின் உரிமைகளை உறுதிசெய்யுமாறு தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

 நன்றியுடன்,

உண்மையுள்ள,

கொளத்தூர் தா.செ.மணி

ஒருங்கிணைப்பாளர்,

தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு

சேலம்

14 சனவரி 2019

 

 

 

 

 

 

You may also like...