மூடநம்பிக்கை பரப்பும் தொலைக்காட்சிகள் மீது புகார்கள் குவிகின்றன!
தொலைக் காட்சிகளில் பேய், பில்லி, சூன்யம், திகில், குரங்குக் கதைகள் போன்ற மூடநம்பிக்கைகளைப் பரப்பும் நிகழ்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. சிறிதும் சமூகப் பொறுப்பின்றி அரசியல் சட்டம் வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்ற கொள்கைகளுக்கு எதிராக நிகழ்ச்சிகளை ஒளி பரப்பி வருகின்றன இந்த தொலைக்காட்சிகள் பற்றி மத்திய அரசிடம் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை 1850 புகார்கள் பார்வையாளர்களிடமிருந்து குவிந்துள்ளன. இதில் 1250 புகார்கள் இந்த மூடநம்பிக்கை நிகழ்ச்சிகள் தொடர்பானவை. மற்றவை ஆபாசம், வன்முறை தொடர்புடைய நிகழ்ச்சிகள் பற்றிய புகார்கள். இது வரை ஆபாசம், வன்முறை பற்றிய புகார்கள் மட்டுமே அதிகம் குவிந்த நிலை மாறி, இப்போது மூடநம்பிக்கை நிகழ்ச்சிகளுக்கு எதிரான புகார்கள் முதல்முறையாக அதிகரித்துள்ளன. தொலைக்காட்சிகள் குறித்த புகார்களை விசாரிப்பதற்காக ‘ஒளி பரப்புகள் உள்ளடக்கத்துக்கான புகார் கவுன்சில்’ (பிசிசிசி) என்ற அமைப்பு உள்ளது. மத்திய தகவல் ஒளி பரப்பு அமைச்சகம் இந்த புகார்களை மேற்குறிப்பிட்ட அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த ‘பிசிசிசி’ என்ற அமைப்பு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களுக்குள் ஒழுங்குபடுத்திக் கொள்ள நடத்தி வரும் அமைப்பு . இந்த அமைப்புக்கு எந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கும் உரிமை கிடையாது.
மத்திய அரசும் மூடநம்பிக்கைகளை வளர்க்க வேண்டும், அதன் வழியாக ‘இந்து’ மதவெறியை பாமர மக்களிடம் பரப்பலாம் என்ற கருத்துடைய ஆட்சி தானே? அரசு தொலைக்காட்சி நிறுவனமான ‘தூர்தர்ஷன்’ தொலைக்காட்சிக்கே இதுவரை எந்த சட்டங்களும் விதிமுறைகளும் உருவாக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும். மத்தியில் ஆளும் கட்சியின் ‘ஊதுகுழலாக’ செயல்பட வேண்டும் என்பதே – இந்த நிறுவனத்துக்கு எழுதப்படாத விதி. தமிழ்நாட்டில் திராவிட அரசியல் கட்சி குடும்ப தொலைக்காட்சியான ‘சன்’ குழும தொலைக்காட்சியிலும், அ.இ.அ.தி.மு.க. தொலைக்காட்சியான ‘ஜெயா’ தொலைக்காட்சியிலும் மூடநம்பிக்கையை பரப்பும் நிகழ்ச்சிகளை போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பி வருகின்றன. மூடநம்பிக்கையை பரப்பும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று ‘பிசிசிசி’ இதுவரை பத்துக்கும் மேற்பட்ட அறிக்கைகளை வேண்டுகோள்களாக முன் வைத்துள்ளது. ஆனால் இந்த அறிக்கைகளை தொலைக்காட்சிகள் குப்பைக் கூடையில் வீசிவிட்டன. அறிவியல் சாதனத்தை அறியாமையைப் பரப்புவதற்கு பயன்படுத்தும் இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மக்கள் புறக்கணித்து ஒதுக்க வேண்டும்.
பெரியார் முழக்கம் 08092016 இதழ்