பாலின மாற்றுத் திறனாளிகள் என்றழைக்க கழகத் தலைவர் கோரிக்கை
Self Balancing Scooter
Self Balancing Scooter Sale
01012016 அன்று மாலை 6-00 மணியளவில், கோபி இராமாயம்மால் திருமண மண்டபத்தில் மரித்துவர் எம். இராசேந்திரன் தலைமையில், தமிழர் உரிமை இயக்கத்தின் சார்பாக – பல தடைகளைத் தாண்டி காவல்துறையில் உதவி ஆய்வாளராகத் தேர்வு பெற்றிருக்கிற திருநங்கை பிரித்திகா யாஷினிக்குப் பாராட்டுவிழா நடைபெற்றது.
அந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர்க் கழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன், புலவர் புலமைப்பித்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
எழுத்தாளர் பாமரன், இய்க்குநர் வ.கவுதமன், மாநில மகளிர் ஆணையத்தின் மேனாள் தலைவர் முனைவர். இராமாத்தாள், மூத்த வழக்குரைஞர் ப.பா.மோகன், தமிழ்நாடு பி.யூ.சி.எல் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பாலமுருகன், தமிழினப் பாதுகாப்பு இயக்கத்தின் கி.வே.பொன்னையன், கொடிவேரிப் பாசனதாரர்கள் சங்கத் துணைத்தலைவர் அ.இரா.பிரதாபன் , கோவை பொறியாளர் கு.பன்னீர்செல்வம் ஆகியோர் பாராட்டுரையாற்றினர்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி தனது உரையில்,
திருநங்கையரில் சிலர் மாநகர மேயராக, 1998இலேயே மத்தியபிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினராக, கல்லூரி முதல்வராக ஆகியிருக்கும் செய்திகள் அண்மைக்காலமாக வரத் தொடங்கியிருக்கின்றன. தமிழ்நாட்டிலும் தோழர் பிரித்திகா காவல்துறையில் தேர்வு பெற்றிருப்பதைப் போலவே, நர்த்தகி நடராஜ் போன்றோர் நாட்டியத்துறையில், கல்கி சுப்பிரமணியம், ரோசு வெங்கடேசன்,பத்மினி போன்றோர் காட்சி ஊடகத்துறையில்,லிவிண்ட் ஸ்மைல் வித்யா போன்றோர் நாடக, எழுத்துத் துறையில் என தங்களுக்கென தனித்துவமான இடங்களைப் பெற்றுள்ளனர் என்பது உண்மையேயாயினும், இவர்கள் தனிநபர்களாக, தங்களின் விடாமுயற்சியில் பெற்ற தனித்த சிறுவெற்றிகளே ஆகும்.. ஆனால் திருநங்கையர் சமூகம், பொதுச்சமூகத்தின் புறக்கணிப்பிலிருந்து, கேலியிலிருந்து, குரூர அணுகுமுறையிலிருந்து விடுபட்டு சமத்துவமாய் நடத்தப்படக்கூடிய ஒரு நிலையை அடைவதற்கு நாம் ஆற்றவேண்டிய கடமைகளைப் பற்றி, முன்னெடுக்கவேண்டிய நடைமுறைகளைப் பற்றி பரிசீலிப்பதும், தேவைப்படும் நேரங்களில் எல்லாம் அவர்களின் உரிமைப் போராட்டத்தில் நம்மையும் இணைத்துக் கொள்வதைப் பற்றி உறுதியேற்பதுமே தோழர் பிரித்திகாவுக்கு நாம் எடுக்கிறப் பாராட்டுவிழா பொருள்பொதிந்ததாக ஆக்கும்.
1910களில் டாக்டர் நடேசனார் உருவாக்கிய திராவிடர் இல்லம் தேர்வுபெற்ற ஒவ்வொரு பார்ப்பனரல்லாத பட்டதாரியையும் அழைத்துப் பாராட்டியிருக்கிறது; பெரியார், ஒவ்வொரு பெண்ணும் தமிழகத்திலானாலும், பிறபகுதிகளில் என்றாலும், பட்டப்படிப்பில் தேறிய போதெல்லாம், அரசின் உயர் பதவிகளில் நியமனம் பெறுகிறபோதெல்லாம் தமது குடிஅரசு இதழில் தனிச்செய்திகளக, பெட்டிச் செய்திகளகப் போட்டு மகிழ்ந்திருக்கிறார்;. 1920களில் கல்விக்கென்றே தனது முழுச்சொத்தையும் எழுதிச் சென்ற எங்கள் பகுதியைச் சேர்ந்த வேலூர் கந்தசாமிக் கண்டர், பட்டம் பெறுகிற ஒவ்வொரு வன்னிய மாணவனுக்கும் ஒரு சவரன் தங்கப் பதக்கத்தோடு பாராட்டப் படவேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். புரட்சியாளர் அம்பேத்கர் 1942இல்நடந்த நாக்பூர் மாநாட்டில் பூனாவில் மட்டும் 50 தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்லூரிகளில் பயில்கிற செய்தியைப் பெருமிதத்தோடு குறிப்பிட்டுள்ளார். .முத்துலட்சுமி ரெட்டி மருத்துவப் பட்டம் பெற்றபோதும், சட்டமன்ற உறுப்பினரான போதும் தமிழ்நாடே பாராட்டி மகிழ்ந்தது, ஆனால் முன்னர்க் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பிரிவினரும் தற்போது ஆயிரமாயிரமாய் அத்தகுதியைப் பெறுகின்றனர், இப்போது அவை இயல்பானவைகளாய் மாறிப்போயிருக்கின்றன.அவை போன்றே திரு நங்கையர், திருநம்பியர் சமுதாயமும் வளரவேண்டுமானால் நாம் என்ன செய்யவேண்டும்?
2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு இந்தியா முழுதுமாய் இவர்கள் எண்ணீக்கை 4,90,000 மட்டுமே என்று தெரிவிக்கிறது. ஒருவேளை உண்மையான எண்ணிக்கை சற்றுக் கூடுதலாகக் கூட இருக்கலாம். ஒரு இலட்சம் பேருக்கு 45 பேராகக்கூட இல்லாத இச்சமூகத்தின் உரிமைக் குரல் அரசின் காதுகளுக்கோ, பொதுச்சமூகத்தின் காதுகளுக்கோ கேட்குமா? ஆகவே, பாராட்டுவிழாவில் கலந்துகொண்டிருக்கிற நம்மப் போன்றோர் ஒத்த கருத்துள்ள மற்றையோரையும் உடன்சேர்த்துக் கொண்டு இச்சமூகத்தின் உரிமைக்குரலுக்கு வலு சேர்க்கவேண்டும் என்பதே எமது முதலாவது வேண்டுகோளாகும்.
பலம் குறைந்த, முதல் தலைமுறையாய் எழத்துடிக்கிற இந்த சமூகத்தினர் கல்வியில், வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கிடூ பெறுவதற்கும், அவ்வொதுக்கிடு செய்வதற்கு தேவை எழுமாயின் நம்மனைவரின் ஒதுக்கீட்டில் இருந்து எடுத்துக் கொள்வதற்கு சம்மதிக்கும் மனநிலையை ஏற்படுத்தியாக வேண்டும்.
அவர்களின் உரிமைக் குரலை அவர்களே எடுத்து வைப்பதற்கு வாய்ப்பாக சட்டமன்றங்களிலும், நாடாளுமன்ற இரு அவைகளிலும் அவர்களுக்குப் பிரநிதித்துவம் வேண்டும். கேட்டறிந்தவர்கள், படித்தறிந்தவர்கள் அவர்களுக்காகப் பேசுவதைவிட, பட்டுணர்ந்த அவர்களே தங்களூக்காகப் பேசுவதுதான் சரியானதாக இருக்கும். எண்ணிக்கையில் மிகமிக சிறுபான்மையோராய் இருக்கும் அவர்களுக்கு தனித்தொகுதிகளை ஏற்படுத்தலாம். அதுவரை நாடாளுமன்றத்தில் ஆங்கிலோ இந்தியர்களுக்கு நியமன உறுப்பினர்முறை உள்ளதைப்போல இவர்களுக்கும் நியமன உறுப்பினர்முறையை சட்ட மன்றங்களிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒதுக்கவேண்டும். இக்கோரிக்கைகளை நம்மைப் போன்றோர், சிறு இயக்கங்கள்,அரசுசாரா அமைப்புகள் பேசுவதைவிட, பேசுவதோடுகூட, அரசியல் கட்சிகளும் பேசவேண்டும்; பேசுமாறு நாம் நிர்ப்பந்த்தித்தாக வேண்டும்.
அடுத்ததாக ஒரு வேண்டுகோள். இங்கு வந்திருப்பவர்களுக்கும், மற்றவர்களுக்குமாக வைக்கவிரும்புகிறேன். அண்மைக் காலம்வரை பொதுவெளிகளில், திரைப்பட வசனங்களில் சண்டாளர் என்னும் சொல் மிகச் சாதரணமாக புழங்கிவந்த ஒரு சொல்லாக இருந்து வந்தது. தொடர்ச்சியாக் பலரும், பலமுறை எடுத்துக் காட்டிய பிறகே அது தாழ்த்தப்பட்ட ஒரு சாதியின் பெயர் என்பதையும், மிகக்கேவலமாக ஒருவரை இழிவு படுத்தவிரும்புகிறவர்கள் தம்மை அறியாமலேயே ஒரு சாதியினரைக் இழிவுபடுத்துகிறார்கள் என்பது நமக்குப் புரியவந்தது., அதேமுறைவில் பேடி, ஒன்பது, இரண்டுங்கெட்டான் என்ற சொற்கள், ஒரு பயந்தாங்கொள்ளியை, கோழையை, எதிர்த்துப்பேசக்கூட அஞ்சுபவனைக், கேவலப் படுத்த, இழித்துரைக்கப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் கொஞ்சம் பொறுமையாக சிந்தித்துப் பார்த்தால் இச்சொல் பயன்பாடு எவ்வளவு அபத்தம் என்பதை நம்மால் உணர முடியும்.
தான் பிறந்த குடும்பத்தாராலேயே புறக்கணிக்கப் பட்டு, பொதுவெளியில் சந்திக்கிற எல்லோராலும் எள்ளி நகையாடப்பட்டு, கல்விநிலையங்களில் கேலிக்குரியப் பொருளாகப் பார்க்கப்பட்டு, காவல்துறையினர் போன்றோரால் சித்திரவதைப்படுத்தப்பட்டு வரும் சூழலிலும் இவையனைத்தும் தாங்களாகவே, யார்துணையும் உதவியுமில்லாமல், பரிந்துரையும், பரிவும்கூட இல்லாமல், எதிர்கொண்டு அத்தடைகளைக் கடந்து தம்மையும் ஒரு ஆளுமையாய் நிலைநிறுத்திக்கொள்ளப் போராடும் இவர்களை வீரத்தின் எடுத்துக்காட்டாய், தன்னம்பிக்கையின் குறியீடாய், விடாமுயற்சியின் அடையாளமாய்க் காட்டப்பட வேண்டியவர்களை, கோழைத்தனத்தின், பயந்தாக் கொள்ளித்தனத்தின் குறியீடாய் கூறுவது சரியா என்பதை அனைவருக்கும் நாம் உணர்த்தியாக வேண்டும்.
அது போலவே இச்சமூகத்தை அடையாளப் படுத்துவதும்.- இவர்களை மூன்றாம் பாலினம் என்றால், முதல் பாலினம் எது, இரண்டாவது எது என்ற வினாக்களும் கூடவே எழுகின்றன.மாற்றுப் பாலினமென்பாரும் உண்டு. எப்படியானாலும், எந்த மத, சாதி அடையாளமற்ற இவர்களைக் குறிக்க , இந்து புளுகுப் புராணக் கதை அடிப்படையிலான அரவாணி என்ற சொல் வழக்கிழந்து போவது ஒருவகையில் நல்லதே. உடல் உறுப்பினில் குறையுள்ளோர் அக்குறையைத் தம் தனித்திறனால் சரிசெய்துகொண்டு, தன்னம்பிக்கையோடு எல்லோரையும் போலவே எல்லாவகையிலும் இயங்குவோரை மாற்றுத்திறனாளிகள் ( Physically Challenged ) என்று குறிப்பிடுவதைப் போல, பாலினத்தில் சிறுகுறையுள்ளவர்கள், தம் தனித்திறமையால் இதை சவாலாக எடுத்துக்கொண்டு எதிர்கொள்வோரை – பாலின மாற்றுத் திறனாளிகள் ( ) என்று குறிப்பிடக் கூறுவது எத்தனைப் பொருள் பொதிந்ததாக இருக்கும்?
இவற்றயெல்லாம் சிந்திப்பதும், செயலாக்க துணைநிற்பதும், காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்குத் தேர்வாகியிருக்கும் தோழர் பிரித்திக்காவுக்கு, பயிற்சிக் காலத்திலோ, பணிக் காலத்திலோ சில நெருக்கடிகள் எழக்கூடும். அச்சமயங்களில் அவற்றை அவர் எதிர்கொள்ள, தடைகளைத் தாண்டிவர முன்வர நாம் எடுக்கும் உறுதியே அவருக்கான நல்ல பாராட்டாக அமையும். …. எனக் குறிப்பிட்டார்.
நிறைவாக தோழர் பிரித்திகா தனது ஏற்புரையில், பெயர் மாற்றத்துக்கு, வேலைவாய்ப்புப் பதிவுக்கு, தேர்வில் பங்கேற்பதற்கு என பலக் கட்டங்களிலும் நீதிமன்றங்களை நாடவேண்டியிருந்ததையும், இறுதியில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பற்றியும் கூறி, பணியை நேர்மையாகவும், பொதுமக்களுக்கு உதவும் வகையிலும், குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் கூடுதல் அக்கறையுடனும் பணியாற்றுவேன் எனவும், இப்பணிக்கிடையில் இந்தியக் காவல் பணித் தேர்வில் வெற்றிபெறவும் முயலுவேன் எனவும் குறிப்பிட்டார். நிகழ்வு 10-00 மணிக்கு நிறைவடைந்தது. நிகழ்வுக்கு 500க்கும் மேற்பட்ட , பல்வேறு அமைப்புகள், கட்சிகளைச் சேர்ந்தோரும் வந்திருந்தனர்.