சிறப்புக் கட்டுரை – மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களின் எழுச்சி
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் மாவட்டந்தோறும் கழகத் தோழர்களை மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களில் பங்கேற்று சந்தித்து வருகிறார்கள். கழக அமைப்புகளின் பணிகளை மேலும் தீவிரப்படுத்தவும், “எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; எங்கள் தலைமுறைக்கு வேலை வேண்டும்” பரப்புரை இயக்கத்துக்கு திட்டமிடவும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு மேலும் சந்தாக்களை சேர்ப்பது குறித்தும் கூட்டங்களில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி தொடக்க உரை நிகழ்த்தினார். பெரியாரியம் சந்திக்கும் புதிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க பெரியாரியலை வளர்த்தெடுக்க வேண்டிய தேவைகள் குறித்தும், ஜாதி-தீண்டாமை வெறியை தூண்டிவிட்டு குளிர் காய நினைக்கும் ஜாதி சங்கத் தலைவர்கள் தூண்டிவிடும் ஜாதி வெறியை முறியடிப்பது குறித்தும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உரிமைகளை...
