ஒவ்வொருவரையும் உலுக்க வேண்டும்
மனிதக் கழிவுகளும் செத்த உயிரினங்களும் நிறைந்த குப்பைகளை அள்ளும் பணியை துப்புரவுப் பணியாளர்கள் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கும் பொது சமூகத்துக்கு மனிதக் கழிவை மனிதர்களே அகற்றுவது சட்டப்படி குற்றம் எனத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லைதான். ஆனால், தமிழ்நாடு அரசுக்குத் தெரியும் தானே! 2013ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மனிதக் கழிவை மனிதர்களே அகற்றுவதைத் தடைசெய்யும் சட்டத்தின்படி, மனிதக் கழிவோடு நேரடித் தொடர்புள்ள எந்த வேலையிலும் மனிதர்களை ஈடுபடுத்துவது குற்றம்தான். ‘இந்தக் குப்பைகள் மனிதக் கழிவு அல்ல’ என அரசு வாதிடலாம். ஆனால், சாக்கடைகள், மலக்குழிகள், கழிவறைகள் எல்லாம் வெள்ள நீரில் கலந்து குப்பைகளில் தேங்கிவிட்ட நிலையில், எல்லாமே மனிதக் கழிவாகத்தான் மாறுகிறது. துப்புரவுப் பணி யாளர்கள் பலரும், மனிதக் கழிவையும் செத்த உயிரினங்களையும் கைகளால் அப்புறப் படுத்தியதாக உறுதியளிக்கிறார்கள் எனும்போது இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதற்காக தமிழ்நாடு அரசு தண்டிக்கப்படுமா? சரி, இப்படி ஒரு பேரிடர் நிகழ்ந்துவிட்டது. யார் இதைச் சுத்தம் செய்வார்கள்?...