பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (2) – வாலாசா வல்லவன்
பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட் டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. முதல் பாகம் தொடர்ச்சி “மேயர் தமது சொந்தப் பொறுப்பில் 16.3.53 அன்று திருவல்லிக்கேணி கடற்கரையில் கூட்டம் நடத்த முயன்றார். பெரியார் ஈ.வெ. ராவையும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்குமாறு ராஜாஜி கூறினார். நான் அவர்தான் சென்னை ஆந்திராவுக்குப் போனாலும் தமிழ் நாட்டிலிருந்தாலும் திராவிடத்தில் தானே இருக்கப் போகிறது என்று சொல்லிவிட்டாரே! தமிழ்நாட்டில் தான் இருக்க வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு அவர் வருவாரா?” என்றேன். இந்தக் கூட்டத்தில் நாயக்கர் பேசுவதை நான் விரும்புகிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள் அவர் வருவார் என்று சொன்னார். (ம.பொ.சி. எனது போராட்டம் பக் 623) இது எவ்வளவு பெரிய வரலாற்றுப் பொய். திராவிடர் கழக மத்தியச் செயற்குழு 11.1.1953இல் சென்னை தமிழகத்திற்கே சொந்தம்...