ஐந்துக்கு இரண்டு பழுதில்லை – சித்திரபுத்திரன்
நான் கொஞ்ச காலமாக மறைந்திருந்தேன். இனி அடிக்கடி தோன்று வேன். அன்பர்கள் வரவேற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றேன். ஏதாவது விஷயத்தைப் பற்றி பேசுகிற போது முழுதும் உண்மையா யிருக் காது என்று சந்தேகப்படுகிற காலத்தில் “ஐந்துக்கு இரண்டு பழுதில்லை” என்கிற பழமொழி சொல்வதுண்டு. அது எப்பொழுது ஏற்பட்டது, எதற்காக ஏற்பட்டது என்கிற விபரம் அநேகமாய் நமது தமிழ் மக்களுக்குத் தெரியா தென்றே நினைக்கிறேன். தெரியாதென்று நினைப்பதால் அதைப்பற்றி நான் கண்டு பிடித்த முடிவை சொல்லுகிறேன். “ஐந்துக்கிரண்டு பழுதில்லை” யென்பதானது ஐந்து விஷயம் சொன்னால் அதில் இரண்டாவது பொருத்தமாயிருக்கும். அப்படி இருந்தாலே போதும் என்கிற கருத்துக்கொண்டே இப்பழமொழி வழங்கப்பட்டிருக்கிறது. அது எப்பொழுது என்று பார்ப்போமானால் ஆரியர்கள் நமது நாட்டில் வந்து பொய்யும் புரட்டும் புளுக ஆரம்பித்த காலத்தில் அப்புரட்டுகளை யாராவது கண்டுபிடித்து கேழ்க்க ஆரம்பித்தால் “ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல்” அதாவது முன் சொன்னது போல் ஐந்தில் இரண்டு விஷயங்கள் நிஜமா யிருந்தாலே போதுமென்று...