ஜாதிப்புத்தி போகாதையா ராஜகோபால மாலே
காரைக்குடியில் நடக்கும் காங்கிரஸ் மாகாண மகாநாட்டுக்கு தலைவராக தமிழ் நாட்டில் உள்ள பார்ப்பனரல்லாதார் உணர்ச்சியை உத்தேசித்து பல ஜில்லா காங்கிரஸ் கமிட்டிகளும் தோழர் அவனாசிலிங்கம் செட்டியாரையே சிபார்சு செய்ய முடிவு செய்து கொண்டிருப்பதை உணர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரியார் தங்கள் ஜாதியைச் சேர்ந்த தோழர் ருக்மணி அம்மாளை தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஜில்லாக் கமிட்டிக்கு ரகசியமாகக் கடிதம் எழுதியிருக்கிறார். இதை அறிந்த ஊழியன் என்னும் பார்ப்பனரல்லாத பத்திரிக்கை மூர்த்தியாரின் நடத்தையைக் கண்டித்து எழுதி இருக்கிறது. இதற்குப் பதில் எழுதும் முறையில் ஜெயபாரதி என்னும் ஒரு பார்ப்பன பத்திரிக்கை டிசம்பர் 9ந் தேதி பத்திரிக்கையில் சத்தியமூர்த்தியாரை ஆதரித்து,
“”தியாகமே உருவாய் விளங்கும் ஸ்ரீமதி ருக்குமணி லட்சுமிபதியை சிபார்சு செய்து கடிதம் எழுதுவதில் என்ன தப்பு” என்று கேட்கின்றது.
தோழர் ருக்குமணியம்மாள் தியாகமே உருக்கொண்டவர் என்றால், தோழர் அவனாசிலிங்கம் செட்டியார் என்ன உருக்கொண்டவர் என்று அப்பத்திரிக்கை கருதியதோ தெரியவில்லை. தியாகமும் தியாக உருவும் பார்ப்பனர்களுக்கும், பார்ப்பன அம்மாமார்களுக்கும்தான் உண்டு என்பதை அஸ்திவாரமாகக்கொண்டு தான் காங்கிரஸ் இருந்து வருகின்றது என்று சுமார் 20 வருஷத்துக்கு முன்பே டாக்டர் நாயர் அவர்கள் கருதித்தான் தியாகமே உருவாய்க் கொள்ளத்தக்க ஜீவன் பார்ப்பனரல்லாதாரிலும் உண்டு என்பதைக் காட்டுவதற்காக ஜஸ்டிஸ் கட்சியை ஸ்தாபித்தார்கள்.
அவர் வார்த்தை மெய்யாக்க அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இதுபோலவே 1925ல் காஞ்சீபுரம் மாகாண மகாநாட்டுக்கு தோழர் கல்யாணசுந்திர முதலியாரை தலைவராகப் போடுவதற்கு தமிழ்நாட்டு ஜில்லாக்கள் முடிவு செய்திருக்கும் போது, அதுசமையம் மித்திரன் ஆசிரியராய் இருந்தவர் முதலியாருக்குக் கிடைக்காமல் இருக்கும்படி செய்வதற்கு எவ்வளவோ பாடுபட்டதும், இதைப் பற்றி குடி அரசு அப்போதே கண்டித்ததும் பத்திரிகை பார்த்தால் தெரியவரும்.
அதுபோலவே தோழர் வரதராஜுலு நாயுடு திருப்பூர் மாகாண மகாநாட்டுக்கு தலைமை வகிக்காமல் செய்ய வேண்டும் என்று மித்திரன் கூட்டத்தார் செய்த சூக்ஷியும், அப்போது நடந்த தகறாறுகளும் காங்கிரசி லிருந்தவர்கள் மாத்திரம் அல்லாமல் இந்தியா பூராவுமே சிரித்தது யாவரும் அறிவார்கள்.
ஆகவே எத்தனை தடவை சலவை செய்தாலும் ஜாதிபுத்தி போகாதையா ராஜகோபாலமாலே என்ற வாக்குத் தவறாது.
பார்ப்பனர் போட்டிக்கு வரும்போது எவ்வளவு உயர்ந்த தரமுள்ள பார்ப்பனரல்லாதாராய் இருந்தாலும் அழுத்தி விடுவார்கள். பார்ப்பன ரல்லாதாரில் யாராவது தகுந்த ஆசாமி எதிரியாய் வருவதாய் இருந்தால் ஒரு பச்சகானாவை கொண்டு வந்து போட்டு அதற்கு பெரிய தியாகமூர்த்தி உருவம் உண்டாக்கிவிடுவார்கள். எனவே பாரசர் ஸ்மிருதிப்படி எப்படிப்பட்ட விவகார தோஷமும் நெய் பூசிக்கொள்ளுவதாலும், பட்டினி கிடப்பதாலும் தீர்ந்து விடுகிறதோ அதுபோல், எப்படிப்பட்ட அயோக்கியத்தனங்களும் தேசபக்தி தேசாபிமானம் என்கின்ற மந்திரத்தால் பரிகாரமாகிவிடுகிறது.
எனவே நமது பார்ப்பனர் சக்தியை யாரே அளவெடுக்க முடியும்?
குடி அரசு கட்டுரை 15.12.1935