இராசீபுரம் தாலூகா

தாழ்த்தப்பட்ட மக்கள் மகாநாடு

தோழர்களே! இந்நாட்டில் இன்று எங்கு பார்த்தாலும் தாழ்த்தப் பட்டவர்கள் மகாநாடு என்பதாகப் பல மகாநாடுகள் கூட்டித் தாழ்த்தப்பட்ட மக்கள் குறைகளைப் பற்றி பேசப்படுகின்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் சுதந்திரம் பெற வேண்டும் என்றும், சுயமரியாதை பெற வேண்டும் என்றும், இந்த 10, 18 வருஷ காலமாகத்தான் வெளிப்படையாகவும், தைரியமாகவும் கிளர்ச்சி செய்யச் சந்தர்ப்பமும் சௌகரியமும் பெற்றிருக் கிறார்கள் என்பதோடு, உங்களுக்கே இந்த உணர்ச்சியும் இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நாட்டில், புராண காலங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் மேம்பாட்டிற்காகப் பொதுவாக உழைத்ததாகவோ, உழைக்க ஆசைப்பட்ட தாகவோ காண முடியவில்லை என்றாலும், ஏதோ இரண்டொருவர் நந்தன், பாணன், சொக்கன் என்பதாகச் சிலர் தங்கள் தங்கள் சொந்தத்தில் முக்தி அடையவோ, கடவுளைத் தரிசிக்கவோ என்று பாடுபட்டதாகப் புராணங்களில் காணலாம். அவை வெற்றி பெற்றதாகக் கதைகள் இருந்த போதிலும் அவை நம்ப முடியாததும், சாதிக்க முடியாத பெரிய நிபந்தனைகள் மீது அதாவது நெருப்பில் குளித்து விட்டு வந்தும், கடவுளுடைய சம்மதமும் உத்தரவும் பெற்ற பிறகும் ஏதோ முத்தியோ, மோக்ஷமோ அடைந்ததாகத்தான் காணப்படுகின்றனவே ஒழிய, இந்த உலகத்தில் மற்ற மனிதர்களைப் போல் மானத்துடன் வாழ முயற்சித்ததாகவோ வாழ முடிந்ததாகவோ பொய்க் கதைகள் கூட கிடையாது. அது மாத்திரமல்லாமல் இந்து (ஆரிய) அரசர்கள் காலத்திலும், நீங்கள் இன்றுள்ள நிலையைவிட மிக்க கேவலமான நிலையில் நடத்தப்பட்டதாகத்தான் காண முடிகின்றது.

அன்றியும் தமிழ் அரசர்கள் மூவேந்தர்கள் முதலியவர்களுடைய ஆட்சிக் காலத்திலும் நீங்கள் மிக்க கேவலமாகவே உயிர்வாழ்ந்ததாகத்தான் காணக் கிடக்கிறது.

அவற்றிற்கு உதாரணம் திருவாங்கூர், கொச்சி முதலிய இந்து அரசர்கள் வாழும் நாட்டில் நீங்கள் எப்படி நடத்தப்பட்டீர்கள்? நடத்தப் படுகிறீர்கள்? என்பதைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

இந்து அரசர்கள் அல்லாத மகமதியர் அரசர்கள், கிறிஸ்துவர் அரசர்கள் ஆகியவர்கள் ஆட்சிக் காலமே உங்களை ஒரு அளவுக்காவது மனிதர்களாக நடத்தப்பட்டதாகச் சரித்திரமும் பிரத்தியக்ஷ அனுபவமும் காணப்படுகின்றது.

உண்மையாகவே இந்நாட்டில் முகம்மதிய அரசர்கள் ஆட்சி 600, 700 வருஷகாலம் நடந்திருக்கவில்லையானால், தாழ்த்தப்பட்ட தீண்டாத மக்களின் எண்ணிக்கை இன்று “”தோட்டத்தில் முக்கால் பாகம் கிணறு” என்பதுபோல் சுமார் 15, 20 கோடி மக்களுக்குக் குறையாமல் இருந்திருக்கும்.

தீண்டப்படாதவர்கள் எண்ணிக்கை இன்று இந்திய ஜனத்தொகையில் 5ல் ஒரு பாகத்திற்கு உள்ளாக இருப்பதற்குக் காரணம் முகமதிய ஆட்சியே ஆகும். அது பெருகாமல் அந்த அளவுக்கு உள்ளாகவே இருந்து வருவதற்கும், கூடிய சீக்கிரத்தில் அடியோடு ஒழிந்து போவதற்கும் நம்பிக்கைக்கு இடம் ஏற்படக் காரணமாய் இருப்பது பிரிட்டிஷ் அரசாட்சியின் பயனே ஆகும்.

இந்த இரண்டு ஆட்சியும் எந்தக் காரணத்தாலோ இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்க வில்லையானால் இந்தியாவில் ராஜ குடும்பமும், பார்ப்பனர் குடும்பமும் தவிர மற்ற மக்கள் எல்லோரும் தீண்டத்தகாதவர்களாய், தாழ்த்தப்பட்ட மக்களாய்த்தான் இருந்திருக்க வேண்டும். இன்றுகூடப் பார்ப்பனரொழிந்த மற்ற மக்கள் கீழ் ஜாதிக்காரராய் மத சம்பிரதாயப் படியும், பழக்க வழக்கப்படியும் ஏன் அரசாங்க சட்டமுறைப்படியும் குறிப்பிடப்பட்டிருப்பதை யாரே மறுக்க முடியும்?

பழய கால அரசர்கள் யோக்கியதைகள் பார்க்க வேண்டுமானால், அவர்கள் மக்களை எப்படி நடத்தினார்கள் என்பதை உணர வேண்டுமானால், ராமன், அரிச்சந்திரன், சந்தனராஜன், பாண்டியன் முதலிய இந்து அரசர்கள் என்பவர்கள் நாடகத்தைப் பார்த்தாலே அறியலாம்.

முதல் முதலாக அரசன் கொலு மண்டபத்துக்கு வந்தவுடன் என்ன கேட்கிறான்.

“”மந்திரீ! நமது நாட்டில் பிராமணர்கள் ஜபதபம், ஓமம், எக்கியம், யாகம் முதலியவைகளைச் செய்து சுகமாக வாழ்கின்றார்களா?

அவர்களுக்கு மான்யங்கள் முதலியவைகள் தாராளமாக விடப் பட்டிருக்கின்றனவா?

சூத்திரர்கள், பிராமணர் முதலியவர்களுக்கு அடங்கி ஒடுங்கி ஒழுங்காகத் தொண்டு செய்து வருகிறார்களா?” என்று தானே நகர விசாரணை செய்கிறார்களே ஒழிய வேறு என்ன?

ஆனால் இன்று உள்ள பிரிட்டிஷ் ஆட்சியின் நகர விசாரணை எப்படி இருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள்.

சமீப காலத்தில் பாராளுமன்றம் என்னும் பார்லிமெண்டைத் துவக்கியபோது அரசர் பெருமான் என்ன சொன்னார்?

“”என்னுடைய பிரஜைகள் எல்லோரையும் அவர்கள் எந்த ஜாதியினராய் இருந்தாலும், எவ்வித வித்தியாசமும் இல்லாமல் எல்லாத் துறையிலும் சரி சமமாய் நடத்துவேன்” என்று சொல்லித் திறந்து வைத்தார்.

அந்தப்படி அவர் நடத்துவார் என்பதற்கு என்ன நம்பிக்கை என்று ராமராஜ்ய ஸ்தாபிதர்களாகிய காந்தியாரும், காந்தி பக்தர்களும் கேட்கலாம்.

மற்ற காரியங்களில் பிரிட்டிஷ் அரசாங்கம் எப்படி நடந்து கொண்டு வந்தது என்றாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களாகிய உங்களைப் பொறுத்த மட்டில் யோக்கியமாகவும் கூடிய அளவுக்கு நீதியாகவும் ஆட்சி புரிந்திருக்கிறது என்று தைரியமாய்ச் சொல்லுவேன்.

இன்று தாலூக்கா போர்டு, ஜில்லா போர்டு, பஞ்சாயத்துச் சபை, சட்டசபை, இந்திய சட்டசபை ஆகியவைகளில் உங்களுக்கு ஸ்தானம் அளித்து பெரிய சாஸ்திரிகள், கனபாடிகள், சங்கராச்சாரிய சுவாமிகள், ராஜாக்கள், ஜமீன்தார்கள் என்பவர்களுக்குச் சமமாய் நடத்துகிறார்கள். ராமராஜ்யத்தில் இந்தச் சபைகளுக்கு கக்கூஸ் வாரவோ, பங்கா போடவோ கூட உங்களை அனுமதிக்க மாட்டார்கள்.

உதாரணமாக இன்றும் சில அக்கிரகாரங்களில் உங்களை எச்சிலை எடுக்கவோ, குப்பை கூட்டவோ, கக்கூஸ் வாரவோ கூட உங்களை அனுமதிப்பதில்லை. கும்பகோணம் முனிசிபாலிட்டியில் அக்கிராகாரத்துக்கு கக்கூஸ் எடுக்கச் சூத்திரர்கள் என்பவர்களை நியமிக்க வேண்டும் என்று பாடுபட்டது உங்களுக்குத் தெரியாதா?

இப்படி பிரிட்டிஷ் அரசாங்கம் உங்களைப் பொறுத்தவரை எவ்வளவோ நன்மை செய்து வந்திருப்பதோடு உங்களுக்கு ஒரு மந்திரி ஸ்தானமும் கிடைக்கும்படியான அளவுக்குச் சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் கிடைக்கும்படி சீர்திருத்தம் வழங்கியிருக்கிறது.

ஆகவே நான் ஏதோ ராஜவிஸ்வாச உபன்யாசம் செய்வதாய் “”தேசாபிமான வீரர்”களுக்குத் தோன்றலாம்.

பிரிட்டிஷ் அரசாங்கம் மாத்திரமே அல்லாமல், உலகில் உள்ள அரசாங்கங்கள் எல்லாமே ஒழிந்து போக வேண்டும் என்கின்ற ஆசை யுள்ளவன் நான்.

ராஜாக்கள் என்பவர்களே இன்றைய உலகுக்கு அவசியமில்லா தவர்கள் என்றும் பொது ஜனங்களுடைய சுயமரியாதைக்குக் கேடானவர்கள் என்றும் கருதியும் சொல்லியும் எழுதியும் வருகின்றவன் நான்.

ராஜாக்கள் மாத்திரமல்லாமல் பணக்காரர்கள், ஜமீன்தாரர்கள், வியாபாரிகள், முதலாளிகள் என்கின்றதான கூட்டங்கள் கூடப் பொது ஜனங்களை அரித்துத் தின்னும் புழுக்கள் ஆனதால் அவை அழிக்கப்பட வேண்டியவை என்றும் கூடச் சொல்லுகிறவன் நான்.

உங்களைப் பொறுத்த வரையிலும் நீங்கள் காந்தி ராஜ்ஜியத்துக்கோ, ராமராஜ்ஜியத்துக்கோ கராச்சி சமதர்ம ராஜ்ஜியத்துக்கோ போவதைவிட பிரிட்டிஷ் அரசாங்கம் ஆயிரம் மடங்கு மேலானது என்று பறை அடிப்பேன்.

ராமராஜ்ஜியத்தில் ஆகட்டும், காந்தி ராஜ்ஜியத்திலாகட்டும், கராச்சி திட்ட சமதர்ம ராஜ்ஜியத்திலாகட்டும், வருணாச்சிரம தர்மமோ, ஜாதிப் பாகுபாடோ இவைகள் சம்மந்தப்பட்ட பழய பழக்க வழக்கங்கள் அது சம்மந்தமான கலைகளோ சிறிதுகூட மாற்ற முடியாது என்றும் அவை பத்திரமாகக் காப்பாற்றப்படும் என்றும் மேல் ஜாதியாருக்கு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த வாக்குறுதிகள் உங்களுக்கு எவ்வளவு ஆபத்து என்பது இப்போது ஒரு சமயம் உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.

இந்த வாக்குறுதிகள் எவ்வித முற்போக்குக்கும் முட்டுக்கட்டையாக வந்து தடுத்துக் கொள்ளும்.

ஏதோ ஒரு காலத்தில் விக்டோரியா மகாராணியார் “”உங்கள் மத விஷயங்களில் பிரவேசிப்பதில்லை” என்று வாக்குறுதி கொடுத்ததாகக் கூறிக் கொண்டு, இன்று அவ்வாக்குறுதியை, ஏதாவது ஒரு பொதுக் கிணற்றில் எல்லோரும் தண்ணீர் இறைத்துக் கொள்ளலாம் என்றாலும்,

ஏதாவது ஒரு பொது ரோட்டில் எல்லோரும் நடக்கலாம் என்றாலும்,

ஒரு பொதுச் சத்திரத்தில் எல்லோரும் இருக்கலாம் என்றாலும்,

விபசாரத்துக்குக் கடவுள் பேரால் பெண்களுக்கு (பொட்டுக்கட்டு) லைசென்சு கொடுக்கக் கூடாது என்றாலும்,

ஏதாவது ஒரு கடவுள் என்பதைக் கோயிலில் சென்று தரிசிக்கலாம் என்றாலும்,

பால் குடிக்கும் குழந்தைகளை சீலை கட்டத் தெரியாத குழந்தைகளைப் பெண் ஜாதியாக ஆக்கிப் படுக்கை வீட்டிற்குள் விடக் கூடாது என்றாலும், அவ்வாக்குறுதிகள் வந்து முட்டுக்கட்டையாக இருக்கும்படி பயன்படுத்தப் படுகின்றன. இப்படி இருக்கும் போது பழய பழக்க வழக்கங்கள், சாஸ்திரங்கள், கலைகள், தொழில் முறைகள் ஆகியவை காப்பாற்றப்படும் என்று வாக்குறுதி கொடுத்து ஒரு சமதர்ம ராஜ்ஜியத்தை ஸ்தாபிப்ப தென்றால் அந்த சமதர்ம ராஜ்யத்துக்குக் காந்தியாரால் ராமராஜ்ஜியம் என்றும் வருணாச்சிரம ராஜ்ஜியம் என்றும் பாஷ்யம் சொல்லப்பட்டு இருக்கிறது என்றால், சர்வ வியாதிக்கும் ஒரே மாத்திரை என்பது போல் சகலவித சீர்திருத்தத்துக்கும் இந்த ஒரு வாக்குறுதியே எமனாய் வந்து கொன்றுவிடாதா என்று யோசித்துப் பாருங்கள். இந்த வாக்குறுதியின் கீழ் என்ன என்ன சீர்திருத்தமோ, ஏதாவது ஒரு மாறுதலோ செய்ய முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். இன்று உங்கள் மக்களுக்கு இருக்கும் தரித்திரமும் கொடுமையும் சேர்த்து இந்த ராமராஜ்ஜியத்தை ஆதரிக்கச் செய்கின்றது. ஏன் உங்களைவிட பெரிய ஜாதி என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனரல்லாத மேல் ஜாதி இந்துக்கள் என்பவர்களுடைய வயிற்றுப் பசியான தங்களுடைய சூத்திரப்பட்டம் இந்த ராமராஜ்ஜியத்தில்  வர்ணாச்சிரம ராஜ்ஜியத்தில்  கராச்சி சமதர்ம ராஜ்ஜியத்தில் ஒழியாது என்று தெரிந்திருந்தும் எத்தனை பேர் இன்று அதை ஆதரிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, உங்களில் சிலர் ஆதரிப்பதைப் பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை.

இவ்வளவு தூரம் நான் இவற்றை விவரித்துச் சொல்லக் காரணம், இன்று உள்ள உங்கள் குறைகள், இழிவுகள் நீங்கி மனிதத் தன்மை பெறுவதற்கு நீங்கள் பிரிட்டிஷ் ஆட்சியைத் தான் நம்ப வேண்டுமென்றும், அது உள்ள காலத்திலேயே உங்கள் குறைகளை, இழிவுகளை நிவர்த்தித்துக் கொள்ள முயல வேண்டும் என்றும், அரசாங்கத்துக்கு விரோதமாகப் பேசவோ, மக்களுக்குள் விரோத உணர்ச்சி ஏற்படச் செய்கின்றதோ அரசாங்கத்தாரோடு போர் புரிவதாகவோ சொல்லிக் கொள்ளுகின்ற கட்சியிலோ கூட்டத்திலோ நீங்கள் கலந்து கொள்ளக்கூடாது என்றும் சொல்லுவதற்கு ஆகவே இவற்றைச் சொல்லுகிறேன்.

நீங்கள் எல்லாம் அப்படிச் செய்யவில்லையா என்றும் மற்றும் எத்தனையோ பேர் அந்தப்படி அரசாங்கத்துக்கு விரோதமாய் நடந்து கொண்டு வாழவில்லையா என்றும் கேட்பீர்கள்.

அவர்கள் நிலை வேறு, உங்கள் நிலை வேறு. அவர்களில் சிலர் இன்று மதத்தில் கீழாக மதிக்கப்பட்டாலும், பழக்க வழக்கத்தில் பலர் சமமாக மதிக்கப்படுகிறார்கள். கல்வியில்  சிறிது முன்னணிக்கு வந்து விட்டார்கள். உத்தியோகம்  தொழில்கள் ஆகியவைகளில் எதிலும் போட்டி போடத் தகுதி அடைந்து விட்டார்கள்.

பார்ப்பனர்கள் சங்கதியோ கேட்க வேண்டியதில்லை. எல்லா விதத்திலும் மதத்தாலும் பழக்க வழக்கத்தாலும் பிரத்தியக்ஷத்திலும் மேல் நிலையில் இருக்கிறார்கள்.

பாடுபடாமல் வாழ்க்கை நடத்தும் யோக்கியதை அடைந்து விட்டார்கள். 100க்கு 100 பேர் படித்து இருக்கிறார்கள். 100க்கு 90க்கு மேல் உத்தியோகங்கள் அவர்கள் கைவசம் இருக்கிறது.

இனி அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அவர்களோ அவர்களது அடிமைகளோ நாட்டை ஆள வேண்டியது என்பதைத் தவிர வேறு இல்லை. ஆதலால் அவர்கள் அரசாங்கத்தாரோடு போராடவும், சட்டம் மீறும் அரசாங்கத்துக்குச் சதா தொல்லை விளைவிக்கவும் சௌகர்யமுடையவர் களாயிருக்கிறார்கள்.

இது மாத்திரமல்லாமல் அவர்கள் மதத்துக்கும், பழக்க வழக்கத்துக்கும் விரோதமாக அரசாங்கம் சில சீர்திருத்தங்களைச் செய்ய முற்படுவதாலும், அதனால் பார்ப்பன ஆதிக்கத்துக்குப் பங்கம் வரும்போல் இருப்பதாலும், அச் சீர்திருத்தங்களைச் செய்ய வொட்டாமலும் செய்து விட்டால் அது அமுலில் நடத்தப்படாமலும் இருப்பதற்கு ஆக வேண்டியாவது, அரசாங்கத்தை வழி மறிப்பதற்காக அரசாங்கத்துக்குத் தொல்லை விளைவிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஆதலால் அவர்களுடன் நீங்கள் சேரக் கூடாது என்று சொல்ல வேண்டியவனாய் இருக்கிறேன்.  (தொடர்ச்சி  13.10.1935 குடி அரசு)

குறிப்பு:            29.09.1935 ஆம் நாள் இராசிபுரம் உயர்நிலைப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற இராசீபுரம் தாலூக்கா தாழ்த்தப்பட்ட மக்கள் மாநாட்டில் ஆற்றிய தலைமையுரை.

குடி அரசு  சொற்பொழிவு  06.10.1935

You may also like...