தேவக்கோட்டையில்
மே தினம்
(ஈ.வெ. ராமசாமி அவர்கள்) மே தினம் என்பது பற்றியும் சீர்திருத்தத் திருமணம் என்பது பற்றியும் யாகம் என்பது பற்றியும் பேசினார்.
கூட்டத்தில் இரண்டொரு பார்ப்பன வக்கீல்கள் வந்து யாகத்தைப் பற்றி பேசக் கூடாது என்று ஆட்சேபித்தார்கள். அவர்களை ஜனங்கள் ஆதரிக்காமல் தடுத்துப் பேசினார்கள். தோழர் ஈ.வெ.ரா. ஜனங்களை அமைதிப்படுத்தி வக்கீலை நன்றாய்ப் பேசுவதற்கு இடம் கொடுத்து அவர் பேச்சைக் கேட்கச் செய்தார். தலைவர் அவரை மேடைக்கு வந்து பேசும்படி பல தடவை கூப்பிட்டும் அவர் வரவில்லை என்றாலும் அவர் பேச்சு முழுவதும் இடையூறு இல்லாமல் கேழ்க்கச் செய்தார். பிறகு ஒவ்வொன்றுக்கும் பதில் சொன்னார்.
அய்யருடைய வாதமெல்லாம் யாகம் ரிஷிகளால் சொல்லப்பட்ட தென்றும் யாகத்தில் செய்யப்படும் ஜீவ இம்சையும் கொலையும் இம்சையும் கொலையுமாகாதென்றும் யாகத்தில் கொல்லப்பட்ட ஜீவன் மோட்சத்தை அடைகிறதென்றும் அதைப்பற்றிப் பார்ப்பன ரல்லாதார் பேசுவதற்குப் பாத்தியமில்லை என்றும் குறிப்பாக ராமசாமி, சாஸ்திரம் படிக்காதவர் ஆனதால் அவர் இதைப்பற்றிப் பேசச் சிறிதும் அருகதை அற்றவர் என்றும் சொன்னார்.
தோழர் ராமசாமி இதற்குப் பதில் சொல்லுகையில், புத்தர் சமணர்கள் எல்லாம் பார்ப்பனரல்லாதார்கள்தான் என்றும், அவர்கள் யாகத்தைக் கண்டித்து இருக்கிறார்கள் என்றும் இராவணன் தாடகை எல்லாம் பார்ப்பனரல்லாதார்கள்தான் என்றும் அவர்களும் யாகத்தைக் கண்டித்து இருக்கிறார்கள் என்றும் பார்ப்பனர்கள் யாரைக் கொன்றாலும் அவர்கள் தான் மோட்சத்துக்கு போவதாகத்தான் ஐதீகம் சொல்லுவார்கள் என்றும் சாஸ்திரங்கள் பார்ப்பனரல்லாதார் படித்ததாகச் சொன்னாலும் பார்ப்பனர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்றும், மிருகங்களை ஒரு சொட்டு ரத்தம் சிந்தச் செய்யாமலும், அறுக்காமலும், வெட்டாமலும் சாகடிப்பதாய் இருந்தால் அதற்கு இம்சை இருக்காது என்று சொன்னால் இதை யாராவது நம்ப முடியுமா என்றும், ஆடு மோட்சம் போவதும், நரகம் போவதும் இவருக்கு எப்படித் தெரியும் என்றும், நம்ம பெற்றோர்களை மோட்சத்துக்கு அனுப்புவதாய் நம்மிடம் காய் கறி அரிசி பருப்பு மாடு தானம் வாங்குவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றும் பார்ப்பனர்கள் இந்த யாகத்தை நம்புகிறார்கள் என்று சொல்ல முடியாதென்றும் பார்ப்பனரல்லாத மக்களை ஏய்க்கவும், மிரட்டவுமே யாகம் முக்கியம் ஜபம் தபம் என்கின்ற வார்த்தைகளையும், சடங்குகளையும் உபயோகிக்கிறார்கள் என்றும் யாகம் என்பது பொதுவாகவே ஒருவித பார்ப்பனீய பிரச்சாரமென்றும், இதில் நம்பிக்கை ஏற்படும்படி பிரசாரம் செய்ய அவர்களுக்கு உரிமை இருந்தால் நம்பிக்கை இல்லாமல் இருக்கும்படி பிரசாரம் செய்ய நமக்கு உரிமை உண்டு என்றும் அரை மணி நேரம் பதில் சொன்னார். கூட்டத்திலுள்ள ஜனங்கள் சிரி சிரி என்று சிரித்த வண்ணமாய் இருந்தார்கள்.
குறிப்பு: 02.05.1935 ஆம் நாள் தேவகோட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மே தினம் குறித்தும் சீர்திருத்தத் திருமணம் குறித்தும் ஆற்றிய உரையின் சுருக்கம்.
குடி அரசு சொற்பொழிவு 12.05.1935