கீழ் மேல் என் கை கீழே:  உன் கை மேலே

 

ஒரு பார்ப்பன யாசகக்காரன்:  ஐயா பிரபுவே யேதாவது தர்மம் கொடுங்கள் உங்களுக்கு மகா புண்ணியமுண்டு.

பிரபு:  போம் வோய், போய் எங்காவது பாடுபடுமேன்.  மண்ணு வெட்டினாலும் தினம் 8அணா சம்பாதிப்பீரே.  கொட்டாப்புளியாட்டமாய் இருந்துகொண்டு வடக்கயிறாட்டமாக பூணூல் போட்டுக் கொண்டு பிச்சைக்கு வறீரே வெட்கமில்லையா?

யாசகக்காரன்: என்னமோ பிரபுவே தங்கள் கை மேலாகி விட்டது, என் கை கீழாகிவிட்டது என்ன வேண்டுமானாலும் தாங்கள் சொல்லக்கூடும்.

பிரபு: மேலென்ன, கீழென்ன. இதற்காக நீர் ஏன் பொறாமைப்படுகிறீர்.  கடையில் 10அணா போட்டால் ஒரு ஜர்மன் (க்ஷவரக்) கத்தி கிடைக்கும். வாங்கிக் கொண்டுபோய் வாய்க்கால் கரையில் உட்காரும்; எத்தனை பேர் தலைக்கு மேல் உம்ம கை போகுது பாரும். உமக்கென்னத்துக்கு உம்ம கைக்கு மேல் நம்ம கை போகிறதே என்கின்ற பொறாமை.

யாசகக்காரன்: சரி நான் போய் வருகிறேன்.  பகவான் இப்படி தங்களைச் சொல்லவைத்தான்,  நம்மளைக் கேள்க்க வைத்தான். தங்களை நொந்து என்ன பயன்.

பிரபு:  அப்படியானால் அடியுமே அந்த பகவானை. போம் போம் சோம்பேரியே.

பகுத்தறிவு (மா.இ.)  உரையாடல்  செப்டம்பர் 1935

 

கிருஷ்ணன்   அர்ஜுனன் சம்வாதம்

சித்திரபுத்திரன்

அர்ஜுனன்: சகேசீனாம் நிகேசீனாம் காகதிபுருஷோத்தமா?

கிருஷ்ணன்: அஹம் சந்யாசி ரூபேணாம் புரோஷ்டிதாம் தனஞ்செயா!  இதன் பொருள்.

அர்ஜுனன்:  ஹே புருஷோத்மா! தலையில் மயிருடனும், மயிரில்லாமல் மொட்டத் தலையுடனும் இருக்கும் (படியாய் நீ செய்திருக்கின்ற) விதவைகளுக்கு என்ன கதி?

கிருஷ்ணன்:  ஹே அர்ஜுனா! நானே சந்நியாசியாக பூமியில் அவதரித்து அவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்வேன்.

அர்ஜுனன்:  ஹே கிருஷ்ணா!  உன்னை ஒரு பெரிய கடவுளென்று சொல்லிவிட்டு பிறகு நீ இப்படிச் செய்தாய்,  அப்படிச் செய்தாய், கண்ட ஸ்திரீகளுடன் கலந்தாய்,  உதைபட்டாய், அடி பட்டாய், அழுவாரற்ற பிணமாய் செத்தாய் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கின்றார்களே இதைப்பற்றி உனக்கு சிறிதும் அவமானமில்லையா?

கிருஷ்ணன்:  ஹே அர்ஜுனா! அதைப்பற்றி நீ சிறிதும் கவலைப்பட வேண்டாம்.  இதெல்லாம் எனது திருவிளையாடலென்றும் இவற்றைப் படித்த கேட்ட ஒவ்வொருவரும் இதனைக் கொண்டாட வேண்டுமே ஒழிய குற்றம் சொல்லக்கூடாதென்றும், குற்றம் சொன்னால் பாவமென்றும்,  நரகமென்றும் அவற்றை எழுதின அவர்களே எழுதி இழிவை அடக்கி விட்டார்கள்.  ஆதலால் நமக்கு ஏன் கவலை?

அர்ஜுனன்:  கிருஷ்ணா  அதுதான் போகட்டும். நம்பமுடியாத அநேக பொய்யையும், புழுகையும் சொல்லி நீ சின்னக்குழந்தையாயிருக்கும்போது பெரிய முலையை உருஞ்சி சூப்பையாக்கி விட்டாயென்றும்,  மலையை சுண்டு விரலால் குடையாய்ப் பிடித்தாய் என்றும் 10 ஆயிரம் பெண்களை ஏக காலத்தில் கலந்தாய் என்றும் இப்படியெல்லாம் எழுதி இருக்கின்றார்களே, இந்தப் புளுகுகளை எவன் நம்புவான்?

கிருஷ்ணன்:  ஓ! அர்ஜுனா  அதைப்பற்றியும் நீ கவலைப்படாதே. ஏனென்றால் அந்தப்படியெல்லாம் எழுதினவர்கள் இவற்றையெல்லாம் எவன் நம்பவில்லையோ அவன் நாஸ்திகன் என்றும் அவனை அரசன் தண்டிக்க வேண்டுமென்றும் அரசன் தண்டிக்காவிட்டாலும் அவன் நரகத்துக்குப் போகவேண்டும் என்றும்  எழுதி மக்களை மிரட்டிப் பயப்படுத்தி வைத்திருக்கின்றார்கள். ஆதலால் எவனும் தைரியமாய் தான் இவற்றை நம்புவதில்லை என்று வெளியில் சொல்ல வரமாட்டான்?

அர்ஜுனன்:  அதென்ன கிருஷ்ணா பாவம் என்றாலென்ன?  நரகம் என்றால் என்ன?  எனக்கு ஒன்றும் புரியவில்லையே.

கிருஷ்ணன்:  அந்தப்படி புரியாமலிருக்கின்றதாகவே பார்த்துதான் சொல்லி இருக்கின்றார்கள்.

அர்ஜுனன்:  அதென்ன புரியாததைச் சொன்னால் என்ன பயன்.

கிருஷ்ணன்:  ஒருவனுக்குத் தெரியாததையும்,  புரியாததையும் சொன்னால்தான் மனிதர்கள் பயப்படுவார்கள்.  புரியும்படியானதாக எதைச் சொன்னாலும் திருப்பிக் கேழ்க்க ஆரம்பித்து விடுவார்கள்.  ஆதலால்தான் அது செய்தால் பாபம், இது செய்தால் பாவம், நினைத்தால் பாவம் என்றெல்லாம் மிரட்டி வைத்திருக்கின்றார்கள்.

அர்ஜுனன்:  இந்த மாதிரி எத்தனை நாளைக்கு ஏமாற்ற முடியும்?

கிருஷ்ணன்:  முடிந்த வரையில் முடியட்டும்.

அர்ஜுனன்:  இந்தப் புரட்டு வெளியாய் விட்டால் அப்புரம் என்ன செய்வது?

கிருஷ்ணன்:  அப்புரம் வேறு புறட்டை யுண்டாக்கிக்கொள்ள அவர்களுக்குத் தெரியும்.

அர்ஜுனன்:  அதென்ன புரட்டு?

கிருஷ்ணன்:  அரசியல் புரட்டு.

அர்ஜுனன்:  அதுவும் வெளியாகி விட்டால்.

கிருஷ்ணன்:  அதற்குள் பார்த்துக் கொள்ளுவோம். இந்த இரண்டு புரட்டும் மண்டுகள் நிறைந்த இந்தியாவுக்கு சுலபத்தில் வெளியாய் விடவா போகின்றது?

அர்ஜுனன்:  சுயமரியாதைக்காரர்கள் இந்த இரண்டையுமே சேர்த்து வெட்ட வெளியாக்கிக் கொண்டு வருகின்றார்களே சீக்கிரத்தில் வெளியாய் விடாதா?

கிருஷ்ணன்:  அவர்களால் சுலபத்தில் முடியாது.  ஏனென்றால் அந்த இரண்டு புரட்டின் மேல் தங்கள் வாழ்வையே ஏற்பாடு செய்து கொண்ட அநேகர் சுயமரியாதைக்காரர்களுக்குள்ளாகவே இருக்கிறார்கள்.  அந்தப்படி மீறி அவர்கள் எல்லாம் தங்கள் வாழ்க்கைக்குக் கேடுவந்தாலும் வரட்டு மென்று துணிந்துக் கட்டுப்பாடாய் வேலை செய்தாலும் கூட அது தமிழ் நாட்டிலும் மலையாளத்திலும் தான் செல்லும். இந்தியாவில் மற்ற பாகங்கள் எவ்வளவோ இருக்கின்றன.

அர்ஜுனன்:  எப்படியானாலும் என்றைக்கிருந்தாலும் இந்த இரண்டு புரட்டுக்கும் ஆபத்து ஆபத்துதான்.

கிருஷ்ணன்: அந்தக்காலத்தில் பார்த்துக்கொள்ளலாம்.  நடந்தவரை நடக்கட்டும்.

பகுத்தறிவு (மா.இ.)  உரையாடல்  செப்டம்பர் 1935

You may also like...