சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் அபேதவாதி எழுதுவது
50 வருஷ காங்கிரசினால் இந்தியாவுக்கு என்ன பலன் ஏற்பட்டது என்று தோழர் திவான் பகதூர் ஏ. ராமசாமி முதலியார் காங்கிரஸ்காரர்களை ஒரு கேள்வி கேட்டார். அதற்கு எந்தக் காங்கிரஸ்வாதியும், எந்தக் காங்கிரஸ் பத்திரிகையும் யோக்கியமாய் பதில் சொல்ல முன்வரவில்லை.
“”சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.”
வெறுங்கையில் முழம் போட்டால் கணக்கு ஏற்படுமா?
என்பதுபோல் ஒன்றும் பதில் சொல்லுவதற்கு இடமில்லாமல் போய்விட்டது.
இருந்த போதிலும் இக்கேள்விக்குப் பதில் சொல்ல காங்கிரஸ்காரர் களுக்குத்தான் யோக்கியதை இல்லாமல் போய்விட்டதே ஒழிய மற்றப்படி நமக்கு யோக்கியதை இல்லாமல் போகவில்லை. என்னவென்றால்,
முதல்முதலாக சும்மா “”சுந்தரமூர்த்தி சுவாமிகள் வேலை” செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் தேசபக்தர்களானார்கள். பச்சைப் பச்சையான வக்கீல்கள் எல்லாம் லோகமான்யர், மகாத்மா, தேசபந்து, தேசோத்காரணர், ராஜாஜி ஆனார்கள்.
மற்றும் வேறு வழியில் ஜீவிக்க முடியாமல் தங்கள் வாழ்க்கை இன்னது என்று குதிர்பாடு இல்லாத காரணத்தால் சர்க்காருக்கு ஜாமீன் கொடுத்துவிட்டு வாழ வேண்டியவர்கள் எல்லாம் பெரியதொரு தேசாபிமானிகள் ஆனார்கள்.
தகரப் போகணி அம்மாமார்கள் எல்லாம் மேடை மீது ஏறி பெரிய பெரிய பொதுநல சேவைக்காரர்களையும் தற்கால சமூக முறையில் மதிக்கப்பட வேண்டியவர்களையும் குச்சிக்கார பாஷையில் வையும்படியான தைரியத்தை அடைந்தார்கள்.
இதுகளும் இதுகள் போன்ற மற்றும் பல காரியங்களும் தனிப்பட்ட நபர்கள் இந்த 50 வருஷ காங்கிரசினால் பயன் அடைந்தார்கள் என்பது ஒரு புறமிருக்க தேசப் பூசல், மதப் பூசல், வகுப்புப் பூசல் ஆகியவைகள் தலைநிமிர்ந்து தீயைப் போல் இனி யாராலும், எந்த வகையிலும் அணைக்க முடியாத மாதிரியில் எரிந்து கொண்டிருக்கின்றன.
மக்களுக்குள் ஒருவருக்கொருவர் ஏதாவது ஒரு காரணத்தைக் கொண்டு துவேஷம், வெறுப்பு, பொறாமை, ஒருவரை ஒருவர் கெடுக்க சூழ்ச்சி செய்தல் ஆகியவைகள் பாதாமி அல்வா சாப்பிடுவதுபோல் அவ்வளவு ஆவலுடனும், மகிழ்ச்சியுடனும் செய்யப்படுகின்றன.
“”சும்மா கிடக்கும் சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி” என்பதுபோல் தானாகவே சகலவித நன்மையையும் மக்களுக்குச் செய்து தீரவேண்டிய நிலையில் பொறுப்பை ஏற்று இருந்த அரசாங்கத்தை குறும்புத்தனமான கிளர்ச்சிகள் செய்து யாதொரு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லாத நிலைமையில் கொண்டு வந்து விட்டது.
ஜனங்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்யும்படி அரசாங்கத்தை நிர்ப்பந்தப்படுத்த வேண்டிய நிலையில் இருக்க வேண்டிய மக்களை அரசியல் கிளர்ச்சியின் பேரால் முட்டாள்களாக்கி வைத்து அரசாங்க நடவடிக்கையைக் கணிக்க முடியாமல் செய்து ஒருவரோடொருவர் ஒரு வகுப்பாரோடொரு வகுப்பார், ஒரு மதக்காரரோடொரு மதக்காரர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்படி செய்துவிட்டது.
இவ்வளவு தானா?
காலணாக் கார்டு முக்காலணா, அரையணா கவர் ஒன்னே காலணா, மயிலுக்கு 2 காசு இருந்த ரயில் சார்ஜ் இன்று 3 காசு, 4 காசு, 4லீ காசு ஆயிற்று.
மாதம் 6 ரூ. வாங்கிக் கொண்டிருந்த சம்பளக்காரனுக்கு இன்று மாதம் 18 ரூ. கொடுக்க வேண்டியதாயிற்று.
ஜில்லாவுக்கு 2 முனிசீப் கோர்ட்டு இருந்த நீதி இன்று ஜில்லாவுக்கு 6, 7, 8 முனிசீப் கோர்ட்டுகள் ஆயிற்று. அரசாங்க வரி 56 கோடி ரூ. 60 கோடி ரூ. இருந்ததானது 200 கோடி ரூ. வரி ஆகிவிட்டது.
22 கோடி ரூ. செலவில் நிர்வகித்து வந்த ராணுவம் காங்கிரஸ் கிளர்ச்சி பிறகு 65 கோடி ரூபாய் செலவில் நிர்வகிக்க வேண்டி வந்துவிட்டது.
இந்தச் சம்பள உயர்வு உத்தியோகஸ்தர்கள் எண்ணிக்கை உயர்வு அரசாங்க நீதி நிர்வாக ஸ்தாபனங்களின் எண்ணிக்கை உயர்வு எல்லாம் ஏற்பட்டதற்குக் காங்கிரஸ் கிளர்ச்சியின் காரணமே ஒழிய வேறில்லை.
இவற்றை எல்லாம் ருஜுப்பிக்க காங்கிரஸ் தீர்மானங்களை எடுத்துக் காட்ட நம்மால் முடியும்.
இதை ருஜுப்பிக்க வேண்டும் என்று நம்மைக் கேட்க இஷ்டமில்லா தவர்கள் சுதேசமித்திரன் புத்தக சாலையில் விற்கும் காங்கிரஸ் சரித்திரம் என்னும் புத்தகத்தை வாங்கிப் படித்துப் பார்த்தால் காங்கிரசினால் விளைந்த தீமைகள் கேடுகள் உள்ளங்கை பப்ளிமாஸ் பழம் போல் விளங்கும்.
சர்க்காரிடத்தில் ஜனங்களுக்குத் துவேஷமும், வெறுப்பும் உண்டாகும்படி செய்வதையே என்றைய தினம் காங்கிரசானது அரசியல் கிளர்ச்சி லட்சியமாய்க் கொண்டதோ அன்று முதலே சர்க்கார் தங்கள் ஆட்சியை கிரமமாகவும், பத்திரமாகவும் நடைபெறச் செய்ய அதிக உத்தியோகஸ் தர்களை நியமிக்கவும், என்ன செய்தாலும் விட்டுவிட்டு ஓடாமல் இருக்கும்படிக்கும் சுவாமி வேதாசலமவர்கள் அறிவுரைக் கொத்தில் சொல்லி இருப்பது போல் எது செய்தாவது உத்தியோகத்தில் வந்து சேரவுமான நிலையை சர்க்கார் உற்பத்தி செய்ய வேண்டியதாயிற்று.
தொழில் வரி, வருமான வரி, அன்னிய சாமான்கள் மீது அதிக வரி, கள்ளு சாராயங்களுக்கு 100க்கு 300 பங்கு வரி முதலிய கடுமையான வரிகள் எல்லாம் போட்டு பணம் வசூல் செய்து உத்தியோகஸ்தர்களுக்கு அதிகச் சம்பளம் கொடுத்தாக வேண்டிய அவசியமே காங்கிரஸ் முட்டாள்தனமாக சர்க்காரைக் கண்விழித்து அதிக ஜாக்கிரதை செய்து கொள்ளும்படி செய்த கிளர்ச்சி தானே ஒழிய வேறில்லை.
சர்க்கார் உத்தியோகத்தில் பார்ப்பனர்களே இருந்தாலும் பார்ப்பனர்களே படித்தவர்களாகவும் உத்தியோகத்துக்கு லாயக்கானவர்களாகவும், பார்ப்பனர்களுக்கே சகல உத்தியோகமும் கிடைக்கத்தக்க மாதிரியில் ஆதிக்கம் பார்ப்பனர்கள் கையில் இருந்தாலும் வரி கொடுக்கிற ஜனங்கள் பார்ப்பனரல்லாதவர்களாகவே 100க்கு 95 பேர்கள் இருந்தாலும் பார்ப்பன ஆதிக்கம் பெற்ற காங்கிரஸ் இந்த நிலையை உண்டாக்கி வளர்த்திக் காப்பாற்ற வேண்டி வந்தது.
காங்கிரசின் 50 வருஷ கிளர்ச்சியில் சர்க்காரிடம் இருந்து பெற்ற ஏதாவதொரு பெரிய உத்தியோகமோ ஏதாவது ஒரு சுதந்திரமோ யோக்கியமாய், நாணயமாய் நடத்த முடிந்தது என்று யாராவது சொல்ல முடியுமா?
கோர்ட்டு அதிகாரிகள், டிப்டி கலக்டர்கள், முனிசீப்புகள், ஜட்ஜிகள், போலீசு சூப்ரண்டுகள் ஆகியவர்கள் முதல் அவர்கள் சிப்பந்திகள் வரை பலர் செய்யும் அயோக்கியத்தனம், வாங்கும் லஞ்சம் அளிக்கும் அக்கிரமமான தீர்ப்புகள் ஆகியவைகளைப் பற்றி ஒரு காங்கிரசுக்காரனும் பேசுவதில்லை.
வெள்ளைக்கார கேப்நட் மெம்பர்கள், வெள்ளைக்கார பெரிய அதிகாரிகள் நடத்தையைப் பற்றி எந்தக் காங்கிரஸ்வாதியும் பேசுவதில்லை.
ஆனால் பார்ப்பனரல்லாத ஸ்தல ஸ்தாபனத் தலைவர்கள் அரசாங்க மந்திரிமார்கள் ஆகியவர்களைப் பற்றி மாத்திரம் மகாத்மாக்கள் முதல் சத்தியமூர்த்தி வரை எல்லாக் காங்கிரஸ்காரர்களும் குறை கூறி விஷமம் செய்து கண்டபடி தூற்றிய வண்ணமாகவே இருக்கிறார்கள். இதெல்லாம் காங்கிரசினால் ஏற்பட்ட பயன் என்று சொன்னால் யாராவது மறுக்க முடியுமா?
காங்கிரசினால் ஏற்பட்ட யோக்கியதைகள் இன்னம் வேண்டுமானால் இதுபோல் ஆயிரக்கணக்காக சொல்லலாம். சிலது நியாய விரோத மில்லா விட்டாலும் சட்ட விரோதமாகுமே என்று பயப்பட வேண்டியிருக்கிறது.
குடி அரசு கட்டுரை 22.09.1935