எது பிற்போக்கான கட்சி?

7.9.35ந் தேதி தூத்துக்குடியில் கூடிய திருநெல்வேலி ஜில்லா அரசியல் மகாநாடு என்னும் பார்ப்பன ஆதிக்க மகாநாட்டில் தலைமை வகித்த தோழர் சி.ஆர்.ரெட்டி அவர்கள் காங்கிரசின் உண்மை சொரூபத்தையும், பார்ப்பன ஆதிக்கத்துக்கு உண்மையான மார்க்கத்தையும் வெட்டவெளிச்சமாய் கொட்டி விட்டார்.

இன்று காங்கிரஸ்காரர்கள் என்பவர்களின் முக்கிய நோக்கமெல்லாம் ஜஸ்டிஸ் மந்திரி சபையைக் கவிழ்க்க வேண்டும், அதைப் பார்ப்பன ஆதிக்க மந்திரிசபையாக ஆக்க வேண்டும் என்பதேயாகும்.

அதற்காக வேண்டியே ஜஸ்டிஸ் கட்சி மந்திரி பதவிக்கு வந்தவுடன் காங்கிரஸ்காரர்கள் தங்கள் வேலைத் திட்டமாக அதி தீவிர தத்துவங்களை எடுத்துச் சொல்லி பாமர மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதை முக்கிய கருத்தாய் கொண்டு 15 வருஷ காலம் வேலை செய்தும் அது சிறிதும் பயன்படாமல் போனதால் அடியோடு அவற்றைக் கைவிட்டு விட்டு இப்போது எப்படியாவது ஜஸ்டிஸ் கட்சியைக் கவிழ்த்து மந்திரி பதவிகளை அடைய வேண்டும் என்கின்ற கவலையில் இருக்கிறார்கள்.

காங்கிரசுக்காரர்கள் இந்த நிலைமைக்கு வந்தவுடன் தங்களுடைய பழைய பாடங்களை எல்லாம் மறக்கப்பட வேண்டியவர்களாகிவிட்டார்கள்.

அதாவது முதலில் சட்டசபை மூலம் ஒன்றும் செய்ய முடியாது என்று அதைப் பஹிஷ்கரித்தும்,

பிறகு, சட்டசபைக்குச் சென்று பார்த்து சட்டசபை அதிகார வர்க்கத்தின் ஆயுதம் என்றும், அதற்குள் நுழைந்தால் அதிகார வர்க்கத்தின் கை பலப்பட்டு விடும் என்றும்,

சட்டசபைக்குப் போவதும், அங்கு இருப்பதும் தேசீய நேரக்கேடு என்றும்,

தேசசேவைக்குப் பயன்படாத சட்டசபை அழிந்து போன நந்தவனத்துக்கு ஒப்பானதென்றும், அதில் ஆடு மேய்ந்தாலென்ன? கழுதை மேய்ந்தாலென்ன? என்பதுபோல் கெட்டுப் போன ஸ்தாபனத்தில் வேறு யார் இருந்தால் நமக்கு என்ன? அதைப் பற்றி சிந்திக்கவே கூடாது என்றும்,

சட்டசபை கள்ளுக்கடை, சாராயக் கடை ஆகியவைகளுக்கொப்பான தென்றும்,

சட்டசபைக்குப் போகிறவர்கள் நாய், கழுதைகளுக்குச் சமானமென்றும் கூறி, சட்டசபைத் தேர்தல்களின்போது கழுதைகளைப் பிடித்து அவற்றின் கழுத்துகளில் அட்டைகளைக் கட்டித் தொங்கவிட்டு,

“”சட்டசபைக்குப் போகிறேன் எனக்கு ஓட்டுக் கொடு” என்று கழுதைகள் மக்களை ஓட்டுக் கேட்பது போல எழுதியும்,

“”சட்டசபைக்குப் போகிறவர்கள் தேசத் துரோகிகள்” என்றும், “”தயவு செய்து ஓட்டுக் கொடுக்காதீர்கள்” என்றும் காந்தியார் கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சுவது போல் படம் போட்டு சுவர்களில் ஒட்டியும்,

இரண்டொரு தடவை உள்ளே சென்று, பிறகு அது பயன்படக் கூடியதல்ல என்று சொல்லி வெளி வருவது போல் நடந்தும், மற்றும் ஏதேதோ தந்திரங்களும், கிளர்ச்சிகளும் எல்லாம் செய்து பார்த்துவிட்டு, இந்த 15 வருஷ காலமாக பல கோடி ரூபாய்களை அரசியல் செலவுக்கென்று பொது மக்களிடம் இருந்து வசூல் செய்து, பாழாக்கிவிட்டு இப்போது முன் சொன்னவைகளையெல்லாம் அடியோடு மாற்றி புதியதொரு பாடத்தைச் சொல்லிக் கொண்டு அதாவது,

“”காங்கிரசுக்காரர்களாகிய நாம் எவ்வளவோ வேண்டாம் என்று சொல்லியும் நம்மை லட்சியம் செய்யாமல், இந்தியாவுக்கு சைமன் கமிஷனை அனுப்பி நமக்கு விரோதமாக, நம்மை லட்சியம் செய்யாமல் ஒரு தலைப்பக்ஷமாக நம்நாட்டில் விசாரித்துக்கொண்டு போன சேதிகளை நம் அபிப்பிராயம் என்று வைத்துக் கொண்டு ஒரு புதிய சீர்திருத்தம் தயாரித்திருப்பதானது காங்கிரசின் சுயமரியாதைக்கு ஈனம் ஆனதால் அப்படிப்பட்ட சீர்திருத்தத்தை உடைத்து நொருக்கி பாழாக்கி விடவேண்டும். அதற்காக சட்டசபைக்குப் போக வேண்டியிருப்பதால், பொது ஜனங்கள் ஓட்டுக் கொடுக்க வேண்டும்” என்று காந்தியார் பேரால் பல ஸ்ரீ முகங்களைப் பிரசுரித்து, அனுமார் படம் போட்டு ஓட்டுக் கேட்டு சட்டசபைக்குப் போய் அங்கு தங்களுக்குப் பலமாக இடமும் ஏற்பட்ட உடன்,

இப்போது “”சீர்திருத்தத்தை உடைப்பது என்பது ஆகாத காரியம்” என்றும், “”சீர்திருத்தத்தை உடைப்பது முட்டாள்தனமான காரியம்” என்றும் சொல்ல முன் வந்து, மெல்ல மெல்ல “”மாகாண சட்டசபைகளையும் கைப்பற்றி ஆக வேண்டும்” என்கின்ற உறுதியை அடைந்து விட்டார்கள்.

இந்த நிலையில் மாகாண சட்டசபையைக் கைப்பற்ற இன்று காங்கிரசுக்காரர்கள் சொல்லும் காரணங்களை பொது ஜனங்கள் உணர வேண்டும் என்பதற்கு ஆகவே இதை எழுதுகிறோம்.

தலைப்பில் குறிப்பிட்ட, அதாவது இம்மாதம் முதல் வாரத்தில் தூத்துக்குடியில் கூட்டிய திருநெல்வேலி ஜில்லா அரசியல் மகாநாட்டில் தலைமை வகித்த தோழர் சி.ஆர். ரெட்டி அவர்கள்,

“”சீர்திருத்தத்தை உடைத்தெறிய வேண்டும் என்கின்ற உத்தேசத்துடன் நான் சட்டசபைப் பிரவேசத்தையும், உத்தியோகம் ஏற்பதையும் கைக்கொள்ள மாட்டேன்” என்று பேசி இருக்கிறார்.

ஆகவே சீர்திருத்தத்தை உடைத்து நொறுக்குவது என்னும் பேரால் ஓட்டு வாங்கின இவர்கள் தங்கள் அபிப்பிராயத்தை இப்போது மாற்றிக் கொண்டதால் உடனே ராஜீனாமா செய்துவிட்டு, “”நாங்கள் சட்டசபைக்குப் போய் உத்தியோகம் ஏற்போம்” என்றும், “”சீர்திருத்தத்தை உடைத்து நொறுக்க மாட்டோம்” என்றும், ஓட்டர்களுக்குச் சொல்லி அதன் பேரில் ஓட்டு பெறுவார்களானால் இவர்களை ஜனப் பிரதிநிதிகள் என்றோ, யோக்கியமான பிரதிநிதிகள் என்றோ சொல்லலாம். அப்படிக்கு இல்லாமல் ஒன்றைச் சொல்லி ஓட்டுப் பெற்று, இடம் கிடைத்தவுடன் முன் சொன்னதற்கு விரோதமாக மற்றொன்றைச் சொல்லுவதென்றால் இவர்களை எப்படி மக்கள் நம்ப முடியும் என்று கேட்கின்றோம்.

மற்றும் “”உத்தியோகம் ஏற்கக் கூடாது என்றால் சட்டசபைக்கு போவது என்பது வீண் வேலை” என்று சொல்லுகிறார்.

ஆகவே இவ்விரண்டு வாசகங்களையும் ஒன்று சேர்த்து வைப்போ மானால் இன்றைய காங்கிரஸ்காரருக்கும், மிதவாதிகளுக்கும், ஜஸ்டிஸ் கட்சியாருக்கும், சீர்திருத்தத்தைப் பற்றியோ, மந்திரி பதவிகளை பற்றியோ அல்லது மற்றும் ஏதாவது கொள்கையிலோ என்ன வித்தியாசம் இருக்கின்றது என்று கேட்கின்றோம்.

ஜஸ்டிஸ்காரர்கள் அரசியல் பிரதிநிதித்துவத்திலும், உத்தியோகங் களிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமென்றார்கள்.

காங்கிரஸ்காரர்களோ, கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள், ஆதி திராவிடர்கள் ஆகியவர்களைப் பொறுத்த வரை மேல்கண்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமை வேண்டியதுதான் என்று ஒப்புக் கொண்டு, காங்கிரஸ் தீர்மானங்கள் மூலமாகவும், பூனா பாக்ட் என்னும் ராஜீ மூலமாகவும் உறுதி செய்து கொண்டு விட்டார்கள். மிதவாதிகளுக்கும் இவ்விஷயத்தில் ஆ÷க்ஷபணை இல்லை. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பதில் காங்கிரசுக்கு ஆ÷க்ஷபணை இருப்பதாக காணப்படும் விஷயம் எல்லாம் தென்னிந்தியாவில், சென்னை மாகாணத்தில் இந்துக்கள் என்பவர்களில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கின்றதைப் பொருத்த அளவில்தான் பார்ப்பனர்களுக்கு ஆட்சேபணை இருப்பதாகச் சொல்லக்கூடும். அப்படி ஆனால் இவ்விஷயத்தில் நாம் ஒன்று கேட்கின்றோம்.

அதாவது இன்று காங்கிரசில் மிகமிகப் பிரதானப்பட்ட புருஷர்களாய் இருக்கும் பார்ப்பனரல்லாதார்களில் தோழர் சி.ஆர். ரெட்டி போன்றவர்கள் இந்தப் பார்ப்பனரல்லாதார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஆட்சேபிக் கிறார்களா என்பதேயாகும். மற்றும் இவர்கள் விரும்பும் தோழர் ஈணூ. சுப்பராயன், டி.எ. ராமலிங்கம் செட்டியார் ஆகிய கூட்டத்தார்கள் ஆட்சேபிக்கிறார்களா என்று கேள்க்கின்றோம்.

மேலும் காங்கிரஸ் பார்ப்பனர்கள் இன்று ஜில்லாக்கள் தோறும், பட்டணங்கள் தோறும், ஸ்தல ஸ்தாபனங்களுக்கும், சட்டசபைக்கும் தேடிப் பிடிக்கும் பார்ப்பனரல்லாதார்களில் யாராவது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஆட்சேபிக்கிறார்களா என்றும் கேள்க்கின்றோம்.

ஜஸ்டிஸ் கட்சியார் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளுவதாய் தீர்மானம் செய்தவுடன், அனேக பார்ப்பனரல்லாதார் “”இனி காங்கிரசுக்கும், ஜஸ்டிஸ் கட்சிக்கும் என்ன வித்தியாசம்? ஏன் ஜஸ்டிஸ் கட்சி, அல்லது பார்ப்பனரல்லாதார் கட்சி என்பதாக ஒன்று இருக்க வேண்டும்!” என்றெல்லாம் கேட்டார்கள். இப்படிக் கேட்பது சுத்த முட்டாள்தனம் என்றும் பார்ப்பனரல்லாதார் கட்சி என்றாலும் சரி, ஜஸ்டிஸ் கட்சி என்றாலும் சரி, தென்னிந்திய நல உரிமைக் கட்சி என்றாலும் சரி எல்லாம் அரசியல் விஷயத்தில் சட்டத்திற்குக் கட்டுப்பட்டுக் கிளர்ச்சி செய்வதும், சமூக விஷயத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்க வேண்டுமென்பதும் ஆகியவைகளைக் கொள்கையாகக் கொண்டது என்றும், அதை ஒப்புக் கொள்ளுகிற பார்ப்பனர்களைத்தான், ஜஸ்டிஸ் கட்சியில் சேர்த்துக் கொள்வதே ஒழிய மற்றப்படி பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு விரோதமான எல்லாப் பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொள்ளுவதாக எப்போதும் சொல்லவே இல்லை என்றும் பல தடவை பரம மூடர்களுக்கும் விளங்கும்படி எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம்.

ஆகவே இதுவரையில் அரசியல் விஷயத்தில் சட்டத்துக்கு மீறியும் சட்டங்களை மறுத்தும் கிளர்ச்சி செய்து வந்ததாகவும் சீர்திருத்தங்களை பஹிஷ்கரிப்பதோடு மாத்திரமல்லாமல், அதை உடைத்துத் தகர்த்து எறிவதாகவும், மந்திரி பதவிகள் உத்தியோகங்கள் ஆகியவைகளை ஏற்காமல், அவற்றை எதிர்த்து யாருக்கும் நிலைக்காமல் இருக்கும்படி செய்வதாகவும் சொல்லி வந்த காங்கிரசுக்காரர்கள், இன்று அரசியல் விஷயத்தில் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு சட்ட மறுப்பைக் கைவிட்டுவிட்டு சட்டசபைக்குச் சென்று உத்தியோகத்தையும் பதவியையும் ஏற்றுக் கொள்வதுடன் சீர்திருத்தத்தையும் உடைப்பதில்லை என்றும் சொல்லி வாக்குக் கொடுத்து ராஜவிஸ்வாசப் பிரமாணம் செய்துவிட்ட பிறகு, இனி ஜஸ்டிஸ் கட்சிக் காரருக்கும், காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கும் ஏனைய கட்சிக்காரருக்கும் அரசியலில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று கேள்க்கின்றோம்.

மற்றும் ஆங்காங்கு எந்த எந்த தோழர்கள் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களாக நாளது வரை இருந்து வந்தார்களோ, வெளி ஜில்லாக்களிலும், தாலூக்காக் களிலும், ஸ்தல ஸ்தாபனங்களிலும், சட்டசபைகளிலும் ஜஸ்டிஸ் கட்சியில் எந்த எந்த பார்ப்பனரல்லாத தோழர்கள் இருந்து வந்தார்களோ அவர்கள் எல்லாரையுமேதான் இன்று காங்கிரஸ்காரர்கள் என்பவர்கள் காங்கிரசின் பேரால் சட்டசபைக்கும், ஸ்தல ஸ்தாபனத்துக்கும் நிற்கும்படி கெஞ்சுகிறார்கள்.

மற்றும் எந்த எந்த இடங்களில் ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனரல்லாதார் சட்டசபையிலும், ஸ்தல ஸ்தாபனங்களிலும் இருப்பதால் அந்தந்த ஸ்தல ஸ்தாபனம் ஒழுங்கீனமாய், நாணையக் குறைவாய், சுயநலமாய் நடக்கின்றது என்று காங்கிரஸ்காரரும், அவர்களது காலிகளும், கூலிகளும் குறைத்து வந்தார்களோ அந்தப் பார்ப்பனரல்லாதார்களையேதான் இன்று காங்கிரஸ் பிரமுகர்கள் காங்கிரசுக்கு 4 அணா கொடுத்துவிட்டால் பழயபடியே நடக்க அனுமதி கொடுப்பதாய் கெஞ்சுகிறார்கள். அதுவும் அவரவர்கள் வீட்டு வாசலில் நின்று மண்டிப் போட்டுக் கெஞ்சுகிறார்கள்.

ஆகவே இதிலிருந்து காங்கிரசுக்கு ஆள் பிடிப்பதில் கொள்கை வித்தியாசமோ, திட்ட வித்தியாசமோ, ஒழுக்க வித்தியாசமோ, நாணைய வித்தியாசமோ ஏதாவது இருப்பதாக யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.

இன்றும் காங்கிரசில் கையெழுத்துப் போட்டு ஸ்தானங்கள் பெற்ற தோழர்கள் சி.ஆர். ரெட்டி, இரத்தினவேலு தேவர், பிச்சைமுத்துக் கோனார், அவனாசிலிங்கம் செட்டியார், சாமி வெங்கிடாசலம் செட்டியார் உள்பட இன்னும் பலர் பார்ப்பனரல்லாதார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஆட்சேபிக்கிறார்களா என்று கேட்பதோடு மற்றும் காங்கிரசுக்காரர்கள் தங்களோடு சேர்ந்து கொள்ளும்படி கெஞ்சும் தோழர்களான திருநெல்வேலி ரங்கநாத முதலியார், ஈஸ்வரம் பிள்ளை, சிதம்பரநாத முதலியார், ராமநாதபுரம் ராஜா, பாலுய்யா பிள்ளை, மதுரை சேத்தூர் ஜமீன்தார், போடி அழகண்ணன் செட்டியார், முத்து செட்டியார், திருச்சி டி.எம். நாராயணசாமி பிள்ளை, மீனாம்பள்ளி ஜமீன்தார், தஞ்சை நாடிமுத்து பிள்ளை, ராஜப்பா, வீரப்ப வாண்டையார், சாமியப்பா முதலியார், ஜம்புலிங்க முதலியார், வேணுகோபால் நாயுடு, ராமச்சந்திரப் படையாச்சி, சேலம் எல்லப்ப செட்டியார், ராஜமாணிக்க பண்டாரம், வி.எம்.ராமசாமி முதலியார் முதலிய இன்னும் எவ்வளவோ பேர்கள் இன்று வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வேண்டாம் என்று சொல்லுவார்களா என்றும் கேட்கின்றோம்.

வீணாக, கொள்கை வித்தியாசமோ, திட்ட வித்தியாசமோ, அர்த்த வித்தியாசமோ இல்லாமல் எப்படியாவது என்ன செய்தாவது இன்று பதவியில் இருப்பவர்களை ஒழித்து விட்டு அந்தப் பதவியை கைப்பற்றி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒழிக்க அதுவும் ஜாதி அகம்பாவமும், சுயநல வெறியும் கொண்ட பார்ப்பன ஆதிக்கத்துக்கு அனுகூலமாய் இருக்கும்படி சூட்சிகள் செய்யப் பாடுபட்டால் அச்சூட்சிகளை அறியாமல் சில மக்கள் முட்டாள்தனமாக உளருவதென்றால், இவர்களது நிலைமைக்கு பரிதாபப்பட வேண்டியதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

ஏதாவது ஒரு கட்சி அதிகாரத்திலும் பதவியிலும் இருந்தால் அதற்கு சினேகிதர்கள் ஏற்படுவதைவிட, அதிகமாக எதிரிகள் ஏற்படுவது சகஜமேயாகும். ஏனெனில் அந்த அதிகாரத்தைப் பற்றி பொறாமை கொண்ட மக்கள் ஒரு புறமும், தங்களுக்குக் கிடைக்க முயற்சித்து ஏமாற்றமடைந்தவர்கள் ஒரு புறமும், அதிகாரத்தில் உள்ளவர்களால் பயன்பெற உத்தேசித்து ஏமாற்றமடைந்தவர்கள் ஒரு புறமும், இந்த நான்கு கூட்டத்தாருடைய கூலிகள் ஒரு புறமும், வேறு வகையில் பிழைக்க வகையற்று இப்படிப்பட்ட நிலைமையைப் பயன்படுத்தியே வாழ நினைத்திருப்பவர்கள் ஒரு புறமும், இன்னும் பலவிதமானவர்கள் ஒரு புறமுமாக விரோத பாவத்தில் இருந்து பதவியிலிருப்பவர்கள் என்ன நன்மை செய்திருந்தாலும் அதைப்பற்றி கவலை இல்லாமல் அவர்களுக்கு தொல்லை விளைவிப்பது இயற்கையேயாகும்.

இன்று உள்ள ஜஸ்டிஸ் கட்சிக்கு நாட்டில் செல்வாக்கு இல்லை என்றோ, அவர்களது கொள்கைகளை மக்கள் ஆதரிப்பது இல்லை என்றோ, யாராவது சொல்லக்கூடுமானால் இந்த 15, 16 வருஷங்களாக ஸ்தல ஸ்தாபனம் கிராம பஞ்சாயத்து முதல் மந்திரி சபை வரையில் இவ்வளவு சூக்ஷிகளையும், தொல்லையையும் சமாளித்து ஜனங்கள் தேர்தல் பலத்தைக் கொண்டே ஜஸ்டிஸ் கட்சியார் ஆதிக்கத்தில் இருந்திருக்க முடியுமா என்று கேட்கின்றோம்.

மத்தியில் சிறிது நாள் காங்கிரஸ் ஆதிக்கத்தில் மந்திரி பதவி இருக்க நேர்ந்தும் ஏன் மாதக் கணக்குக்குள் கவிழ்ந்து போக நேரிட்டது? என்று கேட்கின்றோம்.

ஜஸ்டிஸ் கட்சியை வகுப்புவாதக் கட்சி என்று யாராவது சொன்னால் அதற்கு சமாதானம் சொல்ல வேண்டும் என்பதை ஒப்புக் கொள்வதோடு அதற்கும் பல தடவை சொல்லப்பட்டு வந்திருக்கிறது என்பதை ஞாபகமூட்டுகிறோம்.

ஆனால் ஜஸ்டிஸ் கட்சி பிற்போக்கான கட்சி என்றும், பணக்காரர் கட்சி என்றும் சொல்லி அதன் மீது குறை கூறி அதற்கு ஓட்டுக் கொடுக்கக் கூடாது என்று யாராவது பிரசாரம் செய்வார்களேயானால், அவர்களை பரம முட்டாள்கள் என்றோ அதை ஒப்புக் கொள்ள அவர்களுக்கு இஷ்டமில்லை யானால், வடிகட்டின அயோக்கியத்தனத்தால் சொல்லப்படுகிறது என்றோதான் சொல்லித் தீர வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இன்று நடுநிலையில் இருந்து யோக்கியமாய் இருந்து ஒருவன் பார்ப்பானானால் காங்கிரஸ்காரர்களைவிட ஜஸ்டிஸ்காரர்கள் பணக்காரர்கள் என்று சொல்லிவிட முடியுமா? ஜஸ்டிஸ்காரர்கள் பதவியில் இருக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். சாதாரணமாக கணக்குப் பார்த்தால், தமிழ்நாட்டைப் பொருத்தவரைகூட காங்கிரசிலும், ஜஸ்டிஸ் கட்சிக்கு வெளியிலும் தாராளமாக பணக்காரர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பார்ப்பனரல்லாதார்களை எடுத்துக் கொண்டால் காங்கிரசிலிருக்கும் ஏழை மக்கள், நடுத்தர மக்கள் என்பவர்களைவிட சிறிதாவது அதிகமாகவே தான் ஜஸ்டிஸ் கட்சியில் இருக்கிறார்கள்.

கொள்கை விஷயத்திலும் சட்டத்திற்கு அடங்கின கிளர்ச்சி என்பதிலும், சட்ட மறுப்பு செய்வதில்லை என்பதிலும், சீர்திருத்தத்தை உடைப்பதில்லை என்பதிலும், சட்டசபைக்கு போவதிலும், உத்தியோகம் மந்திரி பதவி ஏற்பதிலும், கிருஸ்தவர், முகமதியர், ஆதித் திராவிடர், ஆங்கிலேயர் ஆங்கிலோ இந்தியர் என்பவர்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வழங்குவதை ஒப்புக் கொள்ளுவதிலும், மற்றும் எல்லாவற்றிலும் காங்கிரஸ்காரர்களைப் போலவேதான் ஜஸ்டிஸ்காரர்களும் கொள்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால் இவை தவிர, வருணாஸ்ரமத்தை ஒழிப்பதிலும், ஜாதி பேதத்தைத் தகர்ப்பதிலும், எல்லா ஜாதிக்கும் கோவில் முதலிய பிரவேசம் அளிப்பதிலும், சகல ஜாதியாருக்குச் சமசந்தர்ப்பமும், சம உரிமையும் ஏற்படும்படி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வழங்குவதிலும் ஜஸ்டிஸ்காரர்கள் தயாராய் இருக்கிறார்கள். இக்கொள்கைகளை காங்கிரஸ்காரர்கள் ஒப்புக் கொள்கிறார்களா என்பதை வர்ணாச்சிரம தர்மத்தால் பின் தள்ளப்பட்டு கீழ்மைப்படுத்தி இழிவாக்கப்பட்ட மக்களாகிய பார்ப்பனரல்லாதார்களை கேள்க்கின்றோம்.

ஆகவே ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களைவிட எந்த விதத்தில் காங்கிரஸ் காரர்கள் மேலானவர்கள் என்பதோடு ஜஸ்டிஸ் கட்சி எந்த விதத்தில் பிற்போக்கான கட்சி என்றும் கேட்டு இதை முடிக்கின்றோம்.

குடி அரசு  தலையங்கம்  15.09.1935

You may also like...