சூக்ஷியும் விஷமமும் பொறாமையும்
தோழர் சுந்திராம்பாள் இந்துமத தர்மப்படி கொடுமைப்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.
இந்தியாவில் சிறப்பாகத் தென்னாட்டில் சமீபகாலம் வரை தேவதாசி வகுப்பு என்பதானது அவர்கள் எவ்வளவு ஒழுக்கத்துடனிருந்தாலும், எப்படி மதிக்கப்பட்டு வந்தது என்பதை ஐம்பது, அறுபது வயதுக்கு மேற்பட்ட மக்களைக் கேட்டுப் பார்த்தால் விளங்கும்.
மற்றும் அந்த வகுப்பார் எவ்வளவு வித்வானாயிருந்தாலும், எவ்வளவு மேதாவியாய், செல்வவானாய் இருந்தாலும் மற்றவர்கள் அவர்களைத் தாழ்த்தப்பட்ட மக்களை நடத்துவது போல் ஒருமையில் அதாவது அடி அடே என்று அழைக்க வேண்டியதும், மற்றவர்களை அவர்கள் பன்மையில், எஜமான்றே, சாமிகளே என்று அழைக்க வேண்டியது நட்டத்தில் நின்று கைகட்டி வாய் பொத்திக் கொண்டு பேச வேண்டிய ஜாதியாய் இருந்து வந்தது.
உதாரணமாக கோவை ஜில்லாவில் அந்த வகுப்பைச் சேர்ந்த பல லக்ஷத்திற்கு அதிபதியாய் இருந்த ஒரு பிரபுவை நல்ல தர்ம சிந்தை உள்ள பெரியாரை அந்த வகுப்பு என்கின்ற காரணத்துக்காக பார்ப்பனர்களும், மற்ற குடியானவர்களும் கூட ஒருமையிலேயே அழைத்து வந்தார்கள்.
இன்னமும்கூட தஞ்சை, திருச்சி, மதுரை முதலிய ஜில்லாக்களில் சங்கீத வித்தையில் மகா வித்வ சிரோமணிகளாயிருந்து மணிக்கு 100, 200 ரூபாய்கள் வீதம் வரும்படி சம்பாதிக்கத் தகுந்த செல்வமும், ஞானமும் உடையவர்களாய் இருந்து வந்த பெரியார்களையும் ஒருமையிலேயே அழைப்பதும் பேசுவதுமாயிருந்து வந்தது நமக்குத் தெரியும்.
அப்படிப்பட்ட கொடுமைகள் எல்லாம் பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்னும் ஜஸ்டிஸ் இயக்கமும் சிறப்பாக சுயமரியாதை இயக்கமும் தோன்றி வேலை செய்து வந்ததின் காரணமாய் இருந்த இடம் தெரியாமல் மறைந்து வெகு தீவிரமாக மாறி சமத்துவமாக பாவிப்பது மாத்திரமல்லாமல் சிற்சில சமயங் களில் மேலாகவும் மதிக்கக்கூடிய தன்மை உண்டாகிக் கொண்டு வருகின்றது.
ஆனால் அவ்வகுப்பில் உள்ள சிலர் அதை உணராமல் ஜஸ்டிஸ் கட்சியையும் பழித்தும், இழித்தும் கூறி அதை அழிக்கக் காத்திருக்கும் கூட்டத்தாருடன் சேர்ந்து கொண்டு கோவிந்தா போடுவதைப் பார்க்கிறோம்.
தோழர் சுந்திராம்பாள் அம்மாள் அவர்களும் சேர்ந்து அக்கூட்டத்தாருக்கு உதவி புரிந்து வந்ததையும் நாம் அறிவோம். நாம் அவர்களது நிலையை உத்தேசித்தும், தொழிலை உத்தேசித்தும் அதைப் பற்றி லட்சியம் செய்யாமல் இருந்து வந்ததோடு ஏதோ நமது இயக்கங்களை வைவதின் மூலமாவது சிலருக்குப் பார்ப்பனர்களிடம் பெருமையும், சமத்துவ பாவிப்பும், வாழ்க்கை சௌகரியங்களும் பெற மார்க்கமிருந்து வருகிறதல்லவா என்று கருதி ஒரு அளவு திருப்தியையும் அடைந்து வந்தோம்.
கடைசியாக அம்மாள் அவர்களுக்கு பெருமையும், கியாதியும் பெருகி செல்வமும் சேர்ந்து இனி எவ்வித குறைவும் இல்லை என்கின்ற தன்மை ஏற்பட்டவுடன் அம்மாளை பயன்படுத்தி, பலன் அனுபவித்து வந்த பார்ப்பனர்களே பொறாமை அடையும்படியாக ஏற்பட்டுவிட்டது.
அதே தொழிலில் ஈடுபட்ட இரண்டொரு பார்ப்பனர்களுடைய சுயநலத்துக்கு அம்மாள் முட்டுக்கட்டையாய் இருக்கிறார்களென்ற விஷயம் தெரிந்தவுடன் ஒரே அடியாய் அம்மாளை கவிழ்த்துவிட வேண்டுமென்று இப்போது எல்லாப் பார்ப்பனர்கள் கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.
இன்றைய நாடக உலகிலும், சினிமா உலகிலும் இனி எவராலும் அசைக்க முடியாத அளவுக்கு தோழர் சுந்திராம்பாள் அம்மாளுக்கு எப்படியோ கியாதியும் விளம்பரமும் ஏற்பட்டு விட்டதும், சினிமா தொழில் விருத்தியாக ஆக அம்மாளுக்கே கிராக்கி அதிகமாக ஏற்படும் என்பதும், அதனால் இன்னும் எதேஸ்டமாக பொருளும் கீர்த்தியும் சேரும் என்பதும் பார்ப்பனர்கள் நன்றாய் அறிந்து கொண்டார்கள்.
ஒரு பார்ப்பனரல்லாத பெண், அதிலும் தாழ்மையாய் கருதப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் இந்தப்படி கியாதியும், செல்வமும் பெறுவதா என்கின்ற விஷயத்தில் பார்ப்பனர்களுக்கு பொறாமையில்லாமல் இருக்க முடியும் என்று யார் தான் எதிர்பார்க்க முடியும்?
தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் இதுவரையில் எந்தப் பார்ப்பனரல்லா தாரையாவது பெருமை பெறவோ, கீர்த்தி அடையவோ, மேல் நிலைக்குப் போகவோ ஏதாவது ஒரு கலையின் மூலம் செல்வம் பெறவோ அனுமதித்து இருக்கிறார்கள் என்று எவராவது சொல்ல முடியுமா? என்று பார்த்தால் “”ஒரு நாளுமில்லை” என்கின்ற பதில்தான் கிடைக்கும்.
அப்படிப்பட்டவர்கள் இன்று தோழர் சுந்தராம்பாள் அவர்களை எப்படி நாடகராணி ஆக அனுமதிப்பார்கள்? அதிலும் அந்தத் தொழிலிலேயே பல பார்ப்பனர்கள் பெண்ணும் ஆணுமாய் போட்டி போட்டுக் கொண்டு ஊராரை ஏமாற்ற நினைத்துக் கூட்டுக் கொள்ளை விளம்பரங்கள் செய்து கொண்டிருக்கும் போது அம்மாளை பார்ப்பனர்கள் மிஞ்ச விட்டு விடுவார்களா என்பதை யோசிக்க வேண்டுகிறோம்.
இந்த நிலையில் பார்ப்பன பத்திரிக்கைகள் எல்லாம் பெரிதும் இப்போது திடீரென்று ஒன்று சேர்ந்த கொண்டு தோழர் சுந்திராம்பாள் அவர்கள் ஞானத்தையும் நடிப்பையும் இகழ்ந்தும், பரிகாசம் செய்தும், விஷமப் பிரசாரமாய் எழுதுவதும், பேசுவதும் ஒரு புறத்தில் நடக்கவும் தோழர் சத்தியமூர்த்தி ஐயர் அவர்களும் சில காங்கிரஸ் பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாதார் கட்சியை வைவதற்காகவும் கூட்டம் கூட்டிக் கொள்வதற் காகவும் அம்மாளைப் பயன்படுத்திக் கொள்ள மற்றொரு புறத்தில் முயற்சி செய்வதுமான காரியங்களைப் பார்த்தால் எப்படி அவர்கள் ஆளுக்கு ஒரு தொண்டை ஏற்றுக் கொண்டு தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்ளத்தக்க சூழ்ச்சி புத்தியும், விஷமப் புத்தியும் உடையவர்களாய் இருக்கிறார்கள் என்பதும் சுலபத்தில் விளங்காமல் போகாது.
ஒரு சாதாரண நாடக நடிப்பு விஷயத்தில் அதில் ஈடுபட்டு பிரக்யாதி பெற்ற ஒரு பார்ப்பனரல்லாதார் பெண்ணுடைய பெயரைக் கெடுக்க இவ்வளவு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் நமது பார்ப்பனர்களுக்கு ஏன் வந்தது என்பது ஒருபுரமிருக்க சாதாரணமாய் நாடக விஷயம், பாட்டு விஷயம் மற்றும் ஏதாவது வித்வத்துவ விஷயம் ஆகியவைகளில் யாரையாவது அளவுக்கு மிஞ்சிக் கூட புகழ்ந்து பேசுவதும், எழுதுவதும் மரியாதையான காரியமாய் இருக்கலாம். இதை யாரும் செய்யலாம். இதனால் யாரும் குற்றம் சொல்லவுமாட்டார்கள்; கோபிக்கவும் மாட்டார்கள். ஆனால் இகழ்ந்தும், குற்றம் சொல்லியும் அதுவும் உண்மைக்கு விரோதமாகவும் எழுதுவதும், பேசுவதும் இதுவரை எங்காவது, அதிலும் தேசீயப்பத்திரிகைகள், காங்கிரஸ் பத்திரிகைகள், காந்தியைப் பின்பற்றுகின்றவர்கள் என்கின்றவர் களுக்கு வழக்கத்திலிருந்து வந்திருக்கிறதா? அல்லது அப்படிப்பட்ட காரியத்தை மனிதத் தன்மையாகவாவது மதிக்கப்பட்டிருக்கிறதா? அனாவசியமாக ஒரு பெண் விஷயத்தில் பார்ப்பனரல்லாத பெண் என்ற காரணத்துக்காக இந்தப் பார்ப்பனர்களுக்கு இவ்வளவு பொறாமையும், கெடுதல்புத்தியும் ஏன் வரவேண்டும்? என்று பார்த்தால் இவையெல்லாம் பார்ப்பனர்களுடையவும், அவர்களது தேசீயத்தினுடையவும், காங்கிரசினுடையவும் யோக்கியதையை விளக்கும் உரைகல் என்பது நன்றாய் விளங்கிவிடும்.
அம்மாள் விஷயத்தில் “”ஆனந்த விகடன்” பத்திரிகையானது சிறிதாவது மனிதத் தன்மையோ, ஈர நெஞ்சம் என்பதோடல்லாமல் பார்ப்பனத் தன்மையை உள்ளது உள்ளபடியே நிர்வாணமாய் காட்டியிருக்கிறது. அதற்கு ஒரு அளவு “”சினிமா உலகம்” என்கின்ற பத்திரிகை பதிலளித்திருக்கின்றது என்றாலும், அதற்கு தக்க பதில் கொடுக்க வேண்டும் என்கின்ற விஷயத்தில் நாம் சிறிதும் கவலை எடுத்துக் கொள்ளாமல் இந்த சம்பவமானது தென்னாட்டுப் பார்ப்பனர்களின் தன்மையை பச்சையாய் எடுத்துக்காட்டுவதற்கு ஒரு நல்ல அத்தாட்சியாய் ஏற்பட்டதே என்று மகிழ்ச்சியடைகின்றோம்.
அதோடு இது விஷயத்தில் கவலை எடுத்து தோழர் சுந்திராம்பாள் அம்மாள் அவர்களை ஆதரித்து எழுதியும், பார்ப்பனர்களுடைய விஷமக் கூற்றுக்கும், கெடுதல் புத்திகளுக்கும் புத்தி கற்பிக்கத்தக்க மறுப்புகள் எழுதியும், வெளியாக்கியும் வரும் பார்ப்பனரல்லாதார் பத்திரிகைகளாகிய “”தமிழ்நாடு” “”ஊழியன்” “”நகர தூதன்” முதலிய பத்திரிகைகளைப் பாராட்டுவதோடு அவர்களுக்கு நன்றியும் செலுத்துகிறோம்.
குடி அரசு தலையங்கம் 04.08.1935