சந்தேகக் கேள்விகள்
சரியான விடைகள்
சித்திரபுத்திரன்
வினா: கிறிஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி?
விடை: ஒரு கெடுதியும் இல்லை; ஆனால் மதத்தின் பெயரால் குடிக்காதே.
வினா: மகம்மதியனாவதில் என்ன கெடுதி?
விடை: ஒரு கெடுதியும் இல்லை; ஆனால் பெண்களுக்கு மூடி போடாதே.
வினா: உண்மையான கற்பு எது?
விடை: தனக்கு இஷ்டப்பட்டவனிடம் இணங்கியிருப்பதே உண்மையான கற்பு.
வினா: போலிக் கற்பு என்றால் என்ன?
விடை: ஊராருக்கோ, சாமிக்கோ, நரகத்திற்கோ, அடிக்கோ, உதைக்கோ, பணத்திற்கோ பயந்து மனதிற்குப் பிடித்தமில்லாதவனுடன் தனக்கு இஷ்டமில்லாத போது இணங்கியிருப்பதே போலிக் கற்பு.
வினா: மதம் என்றால் என்ன?
விடை: இயற்கையுடன் போராடுவதும் அதைக் கட்டுப்படுத்து வதுந்தான் மதம்.
வினா: பண்டிகை நாட்களில் உத்தியோகஸ்தர்களுக்கும், தொழிலாளர் களுக்கும் ஏன் “”லீவ்” கொடுக்கப்படுகிறது?
விடை: பாடுபட்டுச் சம்பாதிக்கும் பணத்தில் மீதி வைக்காமல் பாழாக்கிவிடவேண்டும் என்பதற்காகத்தான்.
வினா: பெண்களைப் படிக்கக்கூடாதென்று ஏன் கட்டுப்படுத்தினார்கள்?
விடை: அவர்களுக்கு அறிவு இல்லை; சாமர்த்தியமில்லை என்று சொல்லிச் சுதந்தரம் கொடாமல் அடிமையாக்குவதற்காகவே.
வினா : ஒரு மனிதனுக்குக் கவலையும் பொறுப்பும் குறைய வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?
விடை: பெண் அடிமையை ஒழித்து அவர்களுக்குக் கல்வியறிவும், முழுச் சுதந்தரமும் கொடுத்துவிட்டால் ஆண்களுக்கு அனேக தொல்லைகள் ஒழியும்.
வினா: பெண்களுக்கு வேலை நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?
விடை: தலை மயிரை வெட்டிவிட்டால் அதிக நேரம் மீதியாகும்.
வினா: பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்கவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
விடை: அவர்களுக்கு ஒரு குப்பாயம் (மேல் சட்டை) போட்டு விட்டால் கைக்கு ஓய்வு கிடைத்துவிடும். (இல்லாவிட்டால் அடிக்கடி மார்புச் சீலையை இழுத்து இழுத்துப் போடுவதே வேலையாகும்.)
வினா: பெரிய மூடன் யார்?
விடை: தனது புத்திக்கும் பிரத்தியட்ச அனுபவத்துக்கும் தோன்றுவதை நம்பாமல், எவனோ ஒருவன் எப்போதோ சொன்னதை நம்பி வாழ்வை நடத்துபவன் பெரிய மூடன்.
வினா: ஒழுக்கம் என்பது என்ன?
விடை: ஒழுக்கம் என்பது தனக்கும் அன்னியனுக்கும் துன்பம் தராமல் நடந்துகொள்ளுவதாகும்.
வினா: சமயக்கட்டுப்பாடு, ஜாதிக்கட்டுப்பாடு என்றால் என்ன?
விடை: மனிதனைத் தன் மனச்சாட்சிப்படியும், உண்மைப்படியும் நேராய் நடக்கவிடாமல் கட்டுப்படுத்துவதுதான் ஜாதி, சமயக் கட்டுப்பாடுகள்.
வினா: உண்மையான கடவுள் நம்பிக்கை என்றால் என்ன?
விடை: கடவுள் எங்கு மறைந்து போவாரோ என்று பயந்து, அவரைக் காக்கப் பிரயத்தினம் செய்வதுதான் உண்மையான கடவுள் நம்பிக்கையாகக் காணப்படுகிறது.
வினா: ஜனநாயக ஆட்சி யென்றால் என்ன?
விடை: தடியெடுத்தவன் எல்லாம் தண்டக்காரன் என்பதுதான் ஜனநாயக ஆட்சி.
வினா: இந்தியாவில் நல்ல திடகாத்திரம் உள்ள ஜனசங்கியை பெருகவேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?
விடை: சிறு பெண்களுக்கு மணம் செய்வதையும், அதிகமாகப் பிள்ளை பெறுவதையும் நிறுத்தி விதவைகளுக்கு மறுமணம் செய்தால் நல்ல திடகாத்திரம் உள்ள ஜன சங்கியை பெருகும்.
வினா: இந்தியா சீர்பட என்ன வேண்டும்?
விடை: இந்தியா சீர்பட்டு, இந்தியர்களும் மனிதர்கள் என்று உலகத்தோர் முன்னிலையில் சிறந்து நிற்க வேண்டுமானால் நாஸ்திகமும், நிபந்தனையற்ற பெண்கள் விடுதலையும் வேண்டியதாகும்.
வினா: இந்தியா அடிமையானதற்குக் காரணம் என்ன?
விடை: இந்தியா கெட்டு நாசமாய் என்றும் விடுபட முடியாத அடிமையாய்ப் போனதற்குக் காரணம் அவர்கள் மதமும் கடவுளுமே முக்கிய காரணமாகும்.
வினா: பார்ப்பான் மாத்திரம் எப்படி இவ்வளவு பெரிய பதவிக்கு வர முடிந்தது?
விடை: மத விஷயத்தில் அவர்களுக்குக் கிடைத்துள்ள உயர்ந்த நிலையால், அவர்கள் (பார்ப்பார்கள்) எல்லோரையும்விட முன்னேறியிருக்க முடிந்தது. மத விஷயத்தில் பார்ப்பனர்களுக்குள்ள பெருமை போய்விட்டால் அவர்கள் இழிவான மனிதர்களுக்கும் இழிவான மனிதர்களாகிவிடுவார்கள்.
பகுத்தறிவு (மா.இ.) வினா விடை மே 1935