200000 கோவா கிறிஸ்தவர்களின் சுயமரியாதை
இரண்டு லக்ஷம் பேர் சுயமரியாதைக்காக இந்து மதத்தில் சேரப் போகின்றார்களாம்.
கோவாவில் உள்ள கத்தோலிக்க கிருஸ்தவக் கோவில்களில் வகுப்பு வேற்றுமையும், ஜாதி வித்தியாசமும் பாராட்டப்படுவதை சகிக்கமாட்டாமல் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
சமீபத்தில் பூனாவில் கூடப்போகும் இந்திய கத்தோலிக்கக் கிறிஸ்தவர் மகாநாட்டுக்கு ஒரு தீர்மானம் அனுப்பப் போகிறார்கள். அதாவது:
“”இப்பொழுது நடமுறையில் இருந்து வரும் வகுப்பு வேற்றுமையில் இரண்டு லக்ஷம் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கு மதத்தின் மீதும் துவேஷம் ஏற்பட்டிருக்கிறது. இதை மாற்றாவிட்டால் இரண்டு லக்ஷம் பேரும் இந்து மதத்தில் சேர்ந்து விடுவோம்” என்று சொல்லப்போகின்றார்களாம். இந்து மதத்தில் பார்ப்பனர்கள் எப்படியோ, அப்படியே நமது ரோமன் கத்தோலிக்க பாதிரிமார்களும் ஆவார்கள். அவர்கள் இந்த மாதிரி பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்பட மாட்டார்கள். ஒரு இந்து இருந்தாலும் போதும் அவனை புழுமாதிரி அரித்துச் சாப்பிட்டுக்கொண்டிருக்கலாம் என்று எப்படி நமது பார்ப்பனர்கள் கருதிக்கொண்டு அறிவுக்கும், மானத்துக்கும் பொருத்தமில்லாத முறைகளை வைத்து வாழுகின்றார்களோ அதுபோலவே ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்தவன் இருந்தாலும் போதும் என்ற தைரியத்தின் பேரில் அறிவுக்கும், மானத்துக்கும் பொருத்தமில்லாத கொள்கைகளை வைத்து வாழலாம் என்கின்ற குணமுடையவர்கள். ஆதலால் அவர்களுக்கு நீதியைப் பற்றியோ, கிறிஸ்து கட்டளைகள் என்பதைப் பற்றியோ, பகுத்தறிவைப் பற்றியோ கவலை கிடையாது.
மக்களைப் பிரிவினையாகவும், வேற்றுமையாகவும் நடத்துவதற்கு அவர்கள் வெட்கப்படுவதும் கிடையாது. எல்லோரையும் நன்றாய் வைவார்கள். கடசியாய் சுயமரியாதை இயக்கத்தின் மீது பழி போடுவார்கள்.
பகுத்தறிவு கட்டுரை 06.01.1935