கராச்சி  தீர்மானத்தின்  யோக்கியதை

 

1931  ஜுலை  19  இல்  வெளியான  குடி  அரசில்  “”இன்னும்  என்ன  சந்தேகம்?  பிராமணா!  உன்  வாக்குப்  பலித்தது”  என்ற  தலைப்  பெயருடன்  வெளியான  தலையங்கத்தில்  கராச்சி  காங்கிரசின்  தீர்மானங்களைப்  பற்றி  எழுதியிருப்பதிலிருந்து சிலவற்றைக் கீழே குறிப்பிட்டிருக்கிறோம்.  இதைப்பார்த்த  பிறகாவது  காங்கிரஸ்  தீர்மானத்திலிருந்து  நாம்  திருடிக் கொண்டோமா?  அல்லது  நமது  கொள்கைகளிலிருந்து  காங்கிரஸ்காரர்கள்  திருடிக்  கொண்டிருக்கிறார்களா  என்பது  விளங்கும்.

1931  ஜுலை  19  தேதி  தலையங்கக்  குறிப்புகள்:

காங்கிரஸ்  காரியக்  கமிட்டியும்,  தோழர்  காந்தியும்  சேர்ந்து  27731ந்  தேதி  செய்த  பிரஜா  உரிமை  தீர்மானமானது  நாம்  காங்கிரசையும்  அதன்  தலைவர்கள்  என்பவர்களையும்  பற்றி,  அவர்கள்  எப்படிப்பட்ட  அபிப்பிராயக்காரர்கள்  என்று  குற்றம்  சொல்லி  வந்தோமோ?  அதே  அபிப்பிராயம்  இனி  வேறு  யாரும்  வேறு  எவ்வித  வியாக்கியானமும்,  தத்துவார்த்தமும்  செய்ய  முடியாதபடி  நன்றாய்  வெளிப்படையாய்  அழுத்தந்  திருத்தமாய்  சொல்லப்பட்டு  விட்டது.

“”கராச்சிக் காங்கிரசில் சமதர்மக் கொள்கை ஏற்பட்டு விட்டது”  என்று  வாய்த்தப்பட்டை  அடித்ததெல்லாம்  சுத்த  “ஹம்பக்’  என்பதாகவோ,  அல்லது  அது  அதனுடைய  உண்மை  அர்த்தத்தை  அறிந்து  கொள்ள  முடியாத  மக்களின்  கூற்று  என்பதாகவோ  இப்போது  யாவருக்கும்  நன்றாய்  விளங்கி  இருக்கு மென்றே  கருதுகின்றோம்.

பம்பாய்  காரியக்கமிட்டியின்  உத்தரவாத  தீர்மானத்தைக்  கொண்டு  காங்கிரசின்  உண்மையான  தன்மையை  ஒருவரியில்  கூறவேண்டுமானால்  “”காங்கிரஸ்  என்பது  சுயமரியாதைக்  கொள்கைக்கு  நேர்மாறான  முரண் பட்ட  ஸ்தாபனம்”  என்று  சொல்லுவதை  விட  வேறு  என்ன  சொல்ல  முடியும்?

இவை  எப்படி  இருந்த  போதிலும்  “”இன்றய தினம்  இந்த  நாட்டில்  இருந்துவரும்  ஜாதி  மத  பேதங்களும்,  ஆச்சார  அனுஷ்டானங்களும்,  மதங்களும்,  மததர்ம  சொத்துக்களும்  காப்பாற்றுவதற்காக  நமக்கு  சுயராஜியம்  வேண்டும்  என்ற  கருத்தின்  மீதுதான்  இன்றைய  “”தேசீயக் கிளர்ச்சி”  நம்  நாட்டில்  நடைபெற்று  வருகின்றது  என்று  சொன்னவர்களின்  வார்த்தைகளில்  எந்த  எழுத்தாவது  தப்பிதமானது  என்று  இதிலிருந்து  யாராவது  சொல்ல  முடியுமா?  என்று  கேட்கின்றோம்.  அப்போது

தமிழ்நாடு  எழுதியிருப்பது:

“”இந்திய  தேசீய  காங்கிரசுக்கு  தலைகுனியும்படியான  காலம்  வந்ததைக்  குறித்து  நாம்  மிகவும்  துக்கப்படுகின்றோம்”

“”காங்கிரசின்  தேசீய  லக்ஷியம்  இப்போது  பின்னடையும்படி  நேர்ந்து  விட்டது”

“”பிரதி  வகுப்பாரின்  பாஷை,  எழுத்து,  கல்வி,  ஆசார  அனுஷ்டானம்,  மதம்,  தர்ம  சொத்துக்கள்  ஆகிய  விஷயங்களுக்குத்  தக்க  பாதுகாப்பளிப்பதாக  (காங்கிரஸ்)  காரியக்கமிட்டி  கூறுவதின்  கருத்து  நமக்கு  விளங்கவில்லை”

“”மற்ற  மக்களுடைய  பிரஜா  உரிமை,  சுயமரியாதை,  மனிதத்  தன்மை  ஆகியவற்றிற்குப்  பங்கம்  விளைவிக்காத  வரையில்  பிரதி  மனிதனுடைய  மதம்,  ஆச்சாரம்,  அனுஷ்டானம்  பாதுகாக்கப்படும்  என்று  காரியக்கமிட்டி  கூறி  இருந்தால்  அதன்  பொருள்  தெளிவாக  ஏற்பட்டிருக்கும்”

“”இந்தியாவில் சமதர்மத்தை நிலை நிறுத்துவதற்கு காரியக்  கமிட்டியின்  முடிவு  முட்டுக்கட்டையாக  அமையுமென்று  அஞ்சுகின்றோம்”.

குடி அரசு  கட்டுரை  14.04.1935

You may also like...