விருதுநகர் ஜஸ்டிஸ் மகாநாடு

 

விருதுநகரில் ராமநாதபுரம் ஜில்லா ஜஸ்டிஸ் முதலாவது மகாநாடு இம்மாதம் 30, 31ந் தேதிகளில் சென்னை திவான் பகதூர் எ.ராமசாமி முதலியார் அவர்கள் தலைமையில் கூடப் போகிறது. இந்த மகாநாடானது ஜஸ்டிஸ் கட்சிக்கு இந்திய சட்டசபைத் தேர்தலில் ஒரு பெரிய தோல்வி ஏற்பட்ட பிறகும் அதைக் காரணமாக வைத்து ஜஸ்டிஸ் கட்சியின் எதிரிகள் ஜஸ்டிஸ் கட்சியை அடியோடு ஒழித்துவிடச் செய்த சூழ்ச்சியாகிய நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முறியடித்துப் பெரியதொரு வெற்றி ஏற்பட்ட பின்னும், பொது ஜனங்கள் யாவரும் ஜஸ்டிஸ் கட்சியில் இனி என்ன நடக்கப் போகிறது பார்ப்போம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற நிலையில், விருதுநகரில், முனிசிபல் சேர்மன் தோழர் வி.வி.ராமசாமி அவர்களுடைய பெரியதொரு முயற்சியில் அவரையே வரவேற்புத் தலைவராய்க் கொண்டு, முதல் முதலாக ராமநாதபுரம் ஜில்லா முதலாவது ஜஸ்டிஸ் மகாநாடாகக் கூடுகிறது. இது பெயருக்கு ஜில்லா மகாநாடு ஆனாலும் பெரியதொரு பொது மகாநாடு என்றே சொல்ல வேண்டும். ஆகவே இதை நாம் வரவேற்கிறோம். தோழர் வி.வி. ராமசாமி அவர்களையும் பாராட்டுகிறோம்.

இதுவரையில் அனேகமாய் நடந்த ஜஸ்டிஸ் மகாநாடுகள் என்பது அடுத்தாற்போல் யார் தலைவராய் வருவது? யார் மந்திரியாக வருவது? மற்றும் இது போன்ற விஷயங்களையே குறி வைத்து குறிப்பிட்டவர்கள் நன்மையைக் கருதி அதற்காக மகாநாடுகள் கூட்டப்படுவதும், அதன் மூலம் பெரியதொரு கட்சித் தகராறுகள் நடைபெறுவதும், அதன் பயனாய் கட்சி வெகுதூரம் பாதிக்கப்பட்டு சிரிப்பாய்ச் சிரிக்கப்படுவதும், கட்சி வேலைகளும் பெரிதும் பாதிக்கப்படுவதும், நமது எதிரிகள் இதைப் பயன்படுத்திக் கொண்டு கட்சிக்கு விரோதமாய் எதிர்ப் பிரசாரம் செய்து கட்சியை அழிக்க முயற்சிப்பதும் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது என்று சொன்னால் அதை அடியோடு ஆட்சேபிக்க முடியாது என்றே சொல்லுவோம். ஆனால் இதை யாரும் அப்படிப்பட்ட மகாநாடுகளில் ஒன்றாகச் சேர்க்க முடியாது என்பதில் நமக்கு நம்பிக்கை யிருக்கிறது.

ஜஸ்டிஸ் கட்சியானது நல்ல செல்வாக்கோடு இருந்து பல நல்ல காரியங்களைச் செய்து கொண்டிருந்த சமயத்தில் நெல்லூரில் கூட்டப்பட்ட  மாகாண மகாநாடு பெரியதொரு பிளவை யுண்டாக்கிவிட்டதென்பது யாவரும் அறிந்த விஷயமே.

இதன் பயனாய் ஒரு பலம் பொருந்திய மந்திரிசபையை அமைக்க முடியாமல் போய், அதன் பயனாய் உருப்படியான காரியம் ஒன்றும் செய்வதற்கில்லாமல் மந்திரிசபையைக் காப்பாற்றுகிற வேலையிலேயே ஜஸ்டிஸ் கட்சியானது ஈடுபட்டிருக்க வேண்டியதாயிருந்தது என்று சொல்லுவதற்கு வெட்கமாயிருந்தாலும் ஒப்புக் கொண்டுதான் தீரவேண்டும்.

ஜஸ்டிஸ் கட்சியின் பிரதான லட்சியமாகிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்படியே, அரசாங்க உத்தியோகங்களில் எல்லாம், எல்லா வகுப்பாருக்கும் பிரதிநிதித்துவம் இருக்கும்படி செய்ய வேண்டியதான முக்கியமான காரியத்திலும்கூட எதிரிகளின் கூப்பாட்டுக்கும், வசவுக்கும் பயந்து அலட்சியமாகவே இருந்து வந்திருக்கிறார்கள். அரசாங்க உத்தியோகஸ்தர் ஜாபிதாப்படி இப்பொழுதும் உத்தியோகங்களில் எந்த வகுப்பினர் அதிகமாக இருந்து வருகிறார்களென்பதைப் பார்க்கும்பொழுது இவ்வளவு வருஷங்களாக ஜஸ்டிஸ் கட்சியானது அதிகாரப் பதவியில் இருந்துங்கூட இன்னும் பெரும்பாலும் எல்லா இலாக்காக்களிலும் பார்ப்பனர்களே அதிகமாக உத்தியோகப் பதவிகளை வகித்து வருகிறார் களென்றால் இது ஜஸ்டிஸ் கட்சிக்கும், கட்சிப் பிரமுகர்களுக்கும், தலைவர் களுக்கும் மிகவும் அவமானத்தை உண்டாக்கக்கூடிய விஷயமேயாகும். இவ்வாறு ஜஸ்டிஸ் கட்சியின் ஜீவாதாரக் கொள்கைகளில் முக்கியமான தொன்றையே அலட்சியம் பண்ணி வந்ததற்குக் காரணம் மேற் கூறியபடி கட்சிக்குள்ளிருந்த ஊழல்களேயாகும் என்பதை யாராவது இல்லை என்று சொல்ல முடியுமா?

நல்ல சம்பவமாய் தஞ்சாவூர் மகாநாட்டில் பொப்பிலி அரசர் தலைவராகக் கிடைத்து அதன்பின் ஏதோ சில நல்ல காரியங்களாவது செய்ய முடிந்தது என்றாலும், அதற்கும் கட்சிக்குள்ளாகவே உள்ள பல சுயநலக் காரர்களாலும், பார்ப்பனர்களாலும் தொல்லை விளைவிக்கப்பட்டே வந்திருக்கிறது.

ஆகவே இப்பொழுது விருதுநகரில் கூடுகிற மகாநாடு அடுத்த தலைவர் யார்? மந்திரிகள் யார்? மகாநாடு கூட்டினவர்களுக்கு என்ன பிரதிப் பிரயோஜனம்? மற்ற சின்ன உத்தியோகங்களில் யார் யாருக்கு என்ன என்ன உத்தியோகங்களைப் பிரித்துக் கொடுப்பது என்பது போன்ற தனிப்பட்ட நபர்களின் அபிலாசைக்காக என்று இல்லாமல், இந்த மந்திரி சபையின் காலமாகிய பாக்கி இருக்கும் இன்னும் ஒன்றரை வருஷ காலத்துக்குள் என்னென்ன காரியங்கள் செய்வது? கட்சியின் திட்டமான கொள்கை இனி எப்படி இருக்க வேண்டும்? அதற்கேற்ற வேலைத் திட்டங்கள் என்ன? அவைகளை எப்படிக் காரியத்தில் நிறைவேற்றி வைப்பது என்பன போன்ற விஷயங்களை நிர்ணயம் செய்து, பாக்கியுள்ள காலத்துக்குள் குறைந்தபட்சம் இன்னின்ன விஷயங்களையாவது நிறைவேற்றி வைப்பது என்று முடிவு செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே கூட்டப்படுகின்றது என்று நம்புகிறோம்.

இது மாத்திரம் அல்லாமல் மற்றொரு முக்கிய விஷயம் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டும். அதாவது டாக்டர் சுப்பராயன், குமாரராஜா முத்தையா செட்டியார் போன்ற கட்சியிலிருந்து பிரிந்து நின்று கட்சிக்குத் தொல்லை கொடுத்து வரும் கனவான்களையும் உள்ளே இழுத்துப் போட்டுப் பார்ப்பனர் அல்லாதாரிடையில் மதிக்கத்தகுந்த பிரிவினை யில்லை; கட்சி பேதம் இல்லை என்பதான ஒரு நிலையையும் மகாநாட்டில் ஏற்படுத்த முயல வேண்டியது மிகவும் அவசியமாகும். இதற்கு வரவேற்புத் தலைவர் தோழர் ராமசாமி அவர்கள் முயற்சித்து அதன் பெருமையை அடைவார் என்றும் நம்புகிறோம்.

அதிகாரமும், பட்டமும், பெரும் சம்பளங்களும், பொறுப்பைவிட பெருமையும், போக போக்கியமும் அதிகமுள்ள ஸ்தானங்களை அடைவதற்கு வசதியுமிருந்தால் எப்படிப்பட்ட கூட்டத்திலும் உள் சண்டையும் கட்சியும், பொறாமையும், துவேஷமும், சூழ்ச்சியும் இல்லாமல் இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. இதைப் பெரும்பான்மையான மனித சுபாவத்தை ஆதாரமாக வைத்தே சொல்லுகிறோம். ஆதலால் இப்படி யெல்லாம் இருக்கக்கூடிய ஒரு கட்சியை கேவலமான கட்சியென்றும் உருப்படாத கட்சி என்றும் சுலபத்தில் சொல்லிவிட முடியாது.

கேவலம் காங்கிரசின் யோக்கியதையை எடுத்துப் பார்த்தாலும் அதில் இப்பேர்ப்பட்ட யோக்கியதைகள் இல்லையென்று யாரும் சொல்லிவிட முடியாது. அதிலும் சதா சர்வகாலமும் உள் கலகங்கள் இருந்து கொண்டுதான் வந்திருக்கிறது. ஆனால் அது அதிகம் கண்ணில் படாமல் இருப்பதற்குக் காரணம் காங்கிரஸ் கூட்டமானது நமது மாகாணத்தில் இப்பொழுது அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது ஒரே கண்ணாய் இருப்பதாலும் அவர்களைக் கவிழ்க்க வேண்டியதே தங்களுடைய முக்கிய முதல் கடமை என்று எண்ணியிருப்பதாலும் தங்களுக்குள் பெரும் பதவி பட்டத்துக்கு இடமில்லாமல் இருப்பதாலும், தங்களுக்குள்ளாக உள் சண்டை போட்டுக் கொண்டு வெளியில் காட்டிக் கொள்ளச் சவுகரியம் இல்லாமல் இருக்கிறார்கள்.

ஆதலால் ஏதாவது ஜனங்களுக்கு உருப்படியான காரியங்கள் செய்ய வேண்டும் என்று கருதினால் அதைச் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபனத்தில் மக்களை மயக்கும்படியானதும் சுயநலத்திற்கு ஏற்றதுமான பெரிய லாபங்கள் ஒன்றும் இல்லாமல் இருக்க வேண்டும்.

ஆதலால் அதற்கு முதலாவதாக மந்திரிகளுடைய சம்பளம் பெருந் தொகையாயிருப்பதை ஒன்றா சிறு தொகையாகக் குறைத்துக் கொள்ள வேண்டும் அல்லது பெருந்தொகையில் ஒரு சிறு தொகையை மாத்திரம் மந்திரிகள் சொந்த செலவுக்கென்று எடுத்துக் கொண்டு பாக்கியை கட்சியின் அல்லது ஸ்தாபனத்தின் நன்மைக்காகச் சேர்ப்பித்துவிட வேண்டும்.

இந்தப்படி செய்யப்படாத வரையில் எந்தக் கட்சி மந்திரி சபையும் தொல்லையில்லாமல் இருந்து எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய முடியாது. மந்திரிகளாக வருபவர்களும் எதற்காக எதன் பேரால் மந்திரிகளானார்களோ அதை அடியோடு மறந்து விட்டு எப்படி நடந்து மந்திரிப் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளலாமோ என்கின்ற கவலையிலேயே கொள்கைகளைக் கைவிட்டுவிட வேண்டியதாக வரும். ஆகையால் அந்தக் காரியங்களை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

தவிர, ஜஸ்டிஸ் கட்சியின் தற்கால வேலைத் திட்டம் என்பதாக தோழர் ஈ.வெ. ராமசாமியால் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களை மகாநாட்டில் பரிசீலனை செய்து அதை ஒப்புக் கொள்வதோடு அவற்றுள் கூடுமானவற்றை உடனே அமுலுக்குக் கொண்டு வரவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதற்கும் முறைகள் வகுக்க வேண்டும்.

மகாநாட்டுக்குப் பின் கட்சித் தலைவர் ஜில்லாக்கள் தோறும் சுற்றுப் பிரயாணம் செய்து ஆங்காங்குள்ள பிரமுகர்களை நேரில் கண்டு கட்சியின் சம்பந்தமாய் அவரவர்களுக்குள்ள நியாயமான குறைகளைக் கேட்டு அவற்றுக்குச் சமாதானம் சொல்லி அவர்களை எல்லாம் கட்சியில் சேர்க்க வேண்டும்.

கிட்டப் போனால் தனக்கொரு மந்திரி வேலை கேட்பானே என்கின்ற பயத்தை அடியோடு விட்டுவிட வேண்டும். மந்திரி வேலைக்கு சூழ்ச்சிக் காரர்களும், கலகக்காரர்களும், தொல்லைக்காரர்களும், பெரும் ஜமீன்தாரர்களும், பணக்காரர்களும் தான் தகுதியானவர்கள் என்கின்ற நிலைமையை அடியோடு மாற்றி ஏதாவதொரு தகுதியையோ முறையையோ வைத்து அதன்படி நியமனம் அடையும்படியாகச் செய்ய வேண்டும்.

கடைசியாக சுயமரியாதை இயக்கம் ஆரம்பமான கால முதல் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்தும் கூடிய உதவி புரிந்தும் வந்திருக்கிறது என்பதை ஜஸ்டிஸ் கட்சியார் மறுத்துவிட முடியாது. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களும், மந்திரிகளும் (காலஞ்சென்ற முனுசாமி நாயுடு ஒருவரைத் தவிர) சுயமரியாதை இயக்கத்தைப் பாராட்டி வந்திருக்கிறார்கள் என்பதும் மிகையாகாது. பிரபல தோழர்களும் ஜஸ்டிஸ் கட்சியிலும் சுயமரியாதை இயக்கத்திலும் கலந்தும் முக்கியஸ்தர்களாகவும் இருந்து வருகிறார்கள் என்பதும் மறுக்க முடியாது. சுயமரியாதை இயக்கத்தின் வேலைத் திட்டம் என்பதாகக் குறிப்பிட்டு வந்த திட்டங்கள் எல்லாம் சட்ட வரம்புக்கு உட்பட்ட முறையிலேயே நடத்துவது என்கின்ற நிபந்தனையின் மீதே வெளிப்படுத்தப்பட்டு வந்திருப்பதும் யாவரும் அறிந்ததே யாகும்.

ஆகவே ஜஸ்டிஸ் கட்சியானது சுயமரியாதை இயக்கத்தைத் தனது நிர்மாண ஸ்தாபனமாகவும் பிரச்சார ஸ்தாபனமாகவும் வைத்து அதன் கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் இணங்கி அதைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது புத்திசாலித்தனமான காரியம் ஆகும் என்பதை ஞாபகப்படுத்துகிறோம்.

நிர்மாணம் இல்லாமல், பிரச்சாரம் இல்லாமல் பாமர ஜனங்களின் மனப்பான்மையை அப்போதைக்கப்போது அறிந்து அதற்குத் தக்கபடி நடந்து தங்கள் பிரசாரத்தை அவர்களுக்குள் செலுத்தாமல் நடைபெறுகிற எந்த இயக்கமும், ஸ்தாபனமும் வெற்றி பெறுவதென்பது கஷ்டமான காரியமேயாகும்.

ஆகவே விருதுநகர் மகாநாடானது இந்த விஷயங்களை யெல்லாம் கவனித்து தகுந்தபடி நடந்து கொள்ளுமென்று எதிர்பார்க்கிறோம்.

குடி அரசு  தலையங்கம்  24.03.1935

You may also like...