காங்கிரஸ் கூத்து

 

வாக்குறுதிகள் தேர்தல் சூழ்ச்சியா?

இனியும் பொது ஜனங்கள் ஏமாறப் போகிறார்களா?

தேர்தல் காலத்தில் காங்கிரஸ்காரர்கள் வானத்தை வில்லாக வளைக்கிறோம், மணலைக் கயிறாகத் திரிக்கிறோம், வெள்ளைக்கார அரசாங்கத்தை அப்படியே மூட்டை முடிச்சுகளுடன் கப்பலேற்றி விட்டுத் தோழர் ராஜகோபாலாச்சாரியாரை கவர்னர் ஜெனரலாகவும், தோழர் சத்தியமூர்த்தி போன்றவர்களைக் கவர்னர்களாகவும் நியமிக்கப் போகிறோம் என்றெல்லாம் உளறிக் கொட்டினார்கள். (இணிணண்tடிtதtடிணிணச்டூ அண்ண்ஞுட்ஞடூதூ) அதாவது ஜனநாயக  சபை கூட்டி அதன் மூலம் இந்திய சுயராஜ்யத் திட்டத்தை ஏற்படுத்தப்  போவதாகவும், தற்பொழுது பார்லிமெண்டாரால் கொடுக்கப் போகும் சீர்திருத்தத்தை அடியோடு நிராகரிக்கப் போவதாகவும் வகுப்புத் தீர்ப்பு விஷயத்தில் மாத்திரம் நடுநிலமை வகிக்கப் போவதாகவும் பொது ஜனங் களிடம் கூறி ஓட்டு வாங்கினார்கள். அரசியல் சீர்திருத்தத்தை நிராகரிப்பதும், ஜனநாயக சபை கூட்டுவதும் தவிர வேறு காரியங்களில் காங்கிரஸ்காரர்கள் தற்பொழுதைய சட்டசபையில் தலையிடப் போவதில்லை என்றுகூடக் கூறினார்கள். ஆனால் சென்ற 5, 6, 7ந் தேதிகளில் இந்திய சட்டசபையில் நடந்த விவாதங்களிலிருந்தும், 7 ந் தேதி காங்கிரஸ்காரர்களின் திருத்தத் தீர்மானங் களுக்கு ஏற்பட்ட  கெதியிலிருந்தும், காங்கிரஸ்காரர்களின் ஆர்ப்பாட்டங் களெல்லாம் “”புஸ்” என்று புகைந்து போன சங்கதி தெரிந்துவிட்டது.

காங்கிரஸ்காரர்கள் அரசியல் திட்டத்தை நிராகரிப்பதாகக் கூறுவதும், ஜனநாயக சபையைக் கூட்டப் போவதாகக் கூறுவதும், வகுப்புத் தீர்ப்பு விஷயத்தில் பேடிகளாக இருப்போம் என்று கூறுவதும், சுத்த ஹம்பக்கான விஷயங்களென்றும், இவைகள் நடைபெறாத விஷயங்களென்று தெரிந்துங் கூடப் பொது ஜனங்களை ஏமாற்றி ஓட்டுப் பெறுவதற்காகவே ஜாலம் பண்ணுகிறார்களென்றும் தேர்தல் காலத்திலேயே பலர் பல தடவை எடுத்துக் கூறியிருக்கின்றனர். இப்பொழுது அவ்விஷயம் சர்ச் லைட்டு போல் வெளியாகிவிட்டது.

சென்ற மூன்று நாட்களும் நடைபெற்ற இந்திய சட்டசபை விவாதத்தில், ஒரு காங்கிரஸ்காரராவது, மறந்துகூட, நாக்குத் தடுமாறிக் கூட ஜனநாயக சபை கூட்டும் விஷயத்தைப் பற்றிய ஒரு எழுத்தைக்கூட உச்சரிக்கவில்லை என்பதை அறியலாம். இதைப் பற்றி உள்நாட்டு மந்திரி சர். ஹென்ரி கிரெயிக் பேசும்போது,

தேர்தல் காலத்தில் காங்கிரஸ்வாதிகள், அரசியல் விஷயமாக, ஜனநாயக சபையைக் கூட்டப் போவதாகக் கூறினார்கள். ஆனால் சென்ற இரண்டு நாட்களாக நடைபெற்ற விவாதத்தில், காங்கிரஸ்காரர் அல்லாத ஒருவரைத் தவிர மற்ற எவரும், (அதாவது ஒரு காங்கிரஸ்காரர்கூட) ஜனநாயக சபை கூட்டும் விஷயத்தைப் பற்றிக் கூறவே இல்லை. இதிலிருந்து நிலை நிற்காமல் மறைந்து போகும் நிழல் போன்ற ஒரு கொள்கையைக் காங்கிரஸ்காரர்கள் பின்பற்றாமல் விட்டுவிட்டார்களென்று தெரிகிறது.

என்று பேசியிருப்பதன் மூலம் காங்கிரஸ்காரர் தங்கள் வாக்குறுதியை காற்றுவாக்கில் விட்டுவிட்ட சங்கதியை வெளிப்படுத்தியிருக்கிறார். உள்நாட்டு மந்திரி இவ்வாறு கூறும்போது சில காங்கிரஸ்காரர்கள் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஏதோ தாங்களே முணுமுணுத்துக் கொண்டார்களாம். பாவம்!

இவ்வாறு ஜனநாயக சபை கூட்டும் விஷயந்தான் அழுவார் அற்ற பிணமாகி விட்டதென்றால் அடுத்த இரண்டு விஷயங்களும் அடைந்த கதியும் பரிதவிக்கத் தகுந்ததே யாகும். பார்லிமெண்டு கமிட்டி அறிக்கையை ஒப்புக்கொள்ள முடியாதெனக் காங்கிரஸ் சார்பில் கொண்டு வந்த திருத்தத் தீர்மானமும், சமூகத் தீர்ப்பு விஷயத்தில் நடுநிலமை வகிக்க வேண்டுமென காங்கிரஸ் சார்பில் கொண்டு வந்த திருத்தத் தீர்மானமும் பெருவாரியான ஓட்டுகளால் நிராகரிக்கப்பட்டன. காங்கிரஸ்காரர்கள் எவற்றைச் சாதிக்கப் போவதாகப் பிதற்றிவிட்டுச் சட்டசபைக்குச் சென்றார்களோ அவற்றில் முக்காடு போட்டுக் கொண்டு மூலையில் உட்காரும் மாதிரியான தோல்வியை அடைந்தார்கள். இனி அவர்களுடைய திட்டம் என்ன? என்று பொது ஜனங்கள் கேட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.

அன்றியும் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ்காரர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களும், மனக் கசப்புகளும், அபிப்பிராயங்களும் பலவாகும். அவற்றைப் பற்றிய செய்திகள் ஒவ்வொரு நாளும், பத்திரிகை நிருபர்களால் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

கூட்டுக் கமிட்டி அறிக்கையை நிராகரிக்கும் விஷயத்தில் காங்கிரஸ் காரர்களுக்குள்ளேயே ஏகப்பட்ட தகராறுகள் இருப்பதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. பெரும்பான்மையான காங்கிரஸ் மெம்பர்கள் நிராகரிப்புக்கு எதிராக இருக்கின்றார்களாம். ஒரு சிலர், தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியை மீறக் கூடாது என்று அபிப்பிராயப் படுகின்றார்களாம். சீர்திருத்தத்தை ஏற்று நடத்த வேண்டும் என்பதற்கும், பெரும்பாலான காங்கிரஸ் மெம்பர்கள் சாதகமாகவும்,ஒரு சிலரே பாதகமாகவும் இருப்பதாக வெளிப்படுகிறது. இவ்வாறு வெளிப்பட்டிருக்கும் செய்திகள் முற்றும் உண்மை என்பதற்கு, காங்கிரஸ்காரர்கள் சட்டசபையில் கொண்டு வந்த “”பார்லிமெண்டு கமிட்டி அறிக்கையை ஒப்புக் கொள்ளுவ தில்லை” என்ற திருத்தத் தீர்மானமே போதுமான அத்தாட்சியாகும். உண்மையில் பா.மெ.க. அறிக்கையை நிராகரிக்கும் விஷயத்தில் காங்கிரஸ் மெம்பர்களுக்குள் ஏகோபித்த அபிப்பிராயம் இருந்தால் இத்தகைய திருத்தம் வந்திருக்க முடியுமா? பா.மெ.க. அறிக்கையை அடியோடு நிராகரிப்பதாக ஒரு திட்டமான திருத்தத்தை தைரியமாகக் கொண்டு வந்து தங்களுடைய ஆண்மையைக் காட்டித் தேர்தல் காலத்தில் பொது ஜனங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்க மாட்டார்களா? இவ்விஷயத்தைச் சட்ட மந்திரியான, சர்.என்.என்.சர்க்கார் அவர்களும்

புதிய அரசியல் திட்டத்தை ஏற்று நடத்த முடியாது என்று ஒரு தீர்மானத்தைத் திட்டமாக வெளியிட்டிருந்தால் அது சுயமரியாதைக்கு அழகாகும். ஆனால் காங்கிரஸ்காரர்கள் அவ்விதம் செய்யவில்லை. காங்கிரஸ் அங்கத்தினர்களில் ஒருவராவது புதிய அரசியலை ஏற்று நடத்த முடியாது என்று சொல்லவும் இல்லை. அப்படியிருக்க வீரத்துடன் பிரயோஜனம் இல்லாத் தீர்மானங்களைப் பிரரேபிக்க வேண்டிய அவசியம் என்ன?

என்று எடுத்துக்காட்டி காங்கிரஸ்காரரின் குட்டை வெளியாக்கிவிட்டார்.

ஆகவே காங்கிரஸ் தேர்தல் காலத்தில் கூறியது என்ன? சட்டசபைக்குப் போனதும் நடந்து கொண்டது என்ன? என்பதைப்பற்றிச் சென்ற வாரம் இந்தியா சட்டசபையில் நடந்த நாடகங்களைக் கொண்டு நன்றாகப் பொது ஜனங்கள் தெரிந்து கொள்ளலாம். காங்கிரஸ்காரர்கள் தாங்கள் கூறும் வாக்குறுதிகளையெல்லாம் ஏமாற்றும் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே கருதியிருக்கின்றார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

இனித் தோழர் ஜின்னா அவர்களின் தீர்மானங்களைப் பற்றி மாத்திரம் கூறி நிறுத்துகின்றோம்.

பிரிட்டிஷ் பிரதம மந்திரியால் அளிக்கப்பட்டிருக்கும் சமூகத் தீர்ப்பை ஆதரிப்பதாக தோழர் ஜின்னா அவர்கள் கொண்டுவந்த திருத்தத் தீர்மானம் பெருவாரியான ஓட்டுகளால் நிறைவேறியது. 15 பேர்கள் தான் இதை எதிர்த்திருக்கின்றார்கள். தீர்மானத்தை ஆதரித்தவர்கள் 68 பேர். நடுநிலமை வகித்த காங்கிரஸ்காரர் 43 பேர்.

நம்மைப் பொறுத்தவரையிலும், நமது நாட்டில் வகுப்பு வேற்றுமைகள் நிலைத்திருக்கும் வரையிலும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் இருந்துதான் தீரவேண்டும் என்பதே முடிவான அபிப்பிராயமாகும் என்பது எல்லோரும் அறிந்த விஷயம் ஆகும்.

உண்மையில், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தினால், நன்மையடை கின்றவர்கள், மைனாரிட்டி வகுப்பினர்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால், இது வரையிலும் சிறு மீன்களெல்லாம் பெரிய மீன்களுக்கு இரையாவது போல, மைனாரிட்டி வகுப்பினர்களின் உரிமைகளையும் தாங்களே ஏகபோகமாக ஆண்டு அநுபவித்து வந்த மெஜாரிட்டி வகுப்பினர்க்கு அதாவது அவர்களுடைய சுயநலத்திற்கு கொஞ்சம் ஆபத்து ஏற்படுகிறதென்பதும் உண்மை தான். இதனால்தான் மெஜாரிட்டி வகுப்பினருடைய ஸ்தாபனமான இந்து மகாசபை வகுப்புத் தீர்ப்பை பலமாகக் கண்டிக்கிறது. அதற்கு அண்ணனாக இருக்கிற காங்கிரஸ் தன்னோடு சில முஸ்லீம்களையும் சேர்த்துக் கொண்டிருப்பதனால் வகுப்புத் தீர்ப்பை வெளிப்படையாகக் கண்டிக்க ஆண்மையில்லாமல் நடு நிலமை வகிப்பதாகப் பாசாங்கு பண்ணுகிறது.  ஆனால் காங்கிரசைச் சேர்ந்த எல்லா இந்து அங்கத்தினர்களும், வகுப்புத் தீர்ப்பைப் பலமாக கண்டிக்கிறார்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. இதுபோலவே காங்கிரசைச் சேர்ந்த முஸ்லீம் அங்கத்தினர்கள் வகுப்புத் தீர்ப்பைப் பலமாக ஆதரிக்கிறார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. இக்காரணத்தாலேயே காங்கிரஸ்காரர் பண்டிட் மாளவியாவிடம், வகுப்புத் தீர்ப்பை ஆதரிக்கும் தீர்மானத்தை எதிர்க்கப் போவதாகக் கூறியிருந்தும் நடுநிலைமை வகிக்கும்படி நேர்ந்தது.

இந்த நிலையில் சட்டசபையில் வகுப்புத் தீர்ப்பை எதிர்த்து ஓட்டுக் கொடுத்த 15 பேர்கள் யார் என்பதைப் பற்றியும், இவ்விஷயத்தில் நடுநிலமை வகித்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பற்றியும் நாம் இன்னும் விரித்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறோம்.

அடுத்தபடியாக, “”ஐக்கிய சர்க்கார் ஏற்படுத்தும் முறையை விட்டு இந்திய சர்க்காரில் பூரண  பொறுப்பாட்சியளிக்க வேண்டும்” என்று தோழர் ஜின்னாவால் கொண்டுவந்த திருத்தத் தீர்மானமும் பெருவாரியான ஓட்டுகளால் நிறைவேற்றப்பட்டிருப்பதும் நம்மால் கவனிக்கக் கூடியதாகும்.

ஐக்கிய ஆட்சி, அதாவது சுதேச சமஸ்தான மன்னர்களும், இந்திய முதலாளிகளும் சேர்ந்து ஏழை மக்களை அடக்கி ஒடுக்கி ஆளக் கூடிய ஆட்சியானது, இந்திய முதலாளிகளால் மாத்திரம் ஆளக் கூடியதாக அமையும் பூரண பொறுப்பாட்சியைக் காட்டிலும் பெருத்த ஆபத்தான தென்றே ஆரம்ப முதல் கூறி வருகிறோம். இந்திய சமஸ்தானங்களே இல்லாமல் ஒழிந்தால்தான் இந்தியாவிற்கு இந்திய ஏழை மக்களுக்கு விடுதலை பெற வழியுண்டு என்னும் உறுதியான அபிப்பிராயம் உடைய நாம் எப்படி பெடரல் கவர்ன்மெண்டு என்று சொல்லப்படுகின்ற ஐக்கிய ஆட்சியை ஒப்புக் கொள்ள முடியும் என்று கேட்கின்றோம்.

தோழர் காந்தியும், காங்கிரசும் சமஸ்தான மன்னர்களும், அவர்களுடைய பிரதிநிதிகளும், பிரிட்டிஷ் இந்தியப் பொது ஜனங்களின் மேல் அதிகாரம் செலுத்தக்கூடிய ஐக்கிய ஆட்சியை ஆரம்ப காலத்தில் ஒப்புக் கொண்டதி லிருந்து அவர்கள் ஏழை மக்களின் விடுதலைக்கு நேர் விரோதிகள் என்றும், இந்தியாவில் முதலாளிகளின் ஆதிக்கமே பரம்பரையாக நிலைத்திருக்கப் பாடுபடுகின்றவர்களென்றும் நாம் கூறிக் கண்டித்து வருகின்றோம். ஆகவே இந்தியாவிலுள்ள ஏழை மக்களின் விடுதலைக்குப் பாதகமான ஐக்கிய  அரசாட்சி ஏற்படுவதைக் கண்டித்துச் செய்த தீர்மானத்தைப் பொறுத்த வரையிலும் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

இனி காங்கிரஸ்காரர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதையும், சமஸ்தான மன்னர்களுக்கு வக்காலத்து வாங்கிப் பேசி வந்த தோழர் காந்தியவர்கள் என்ன செய்யப் போகின்றார் என்பதையும் அறிய ஆசைப் படுகிறோம். ஆகவே அவர்களுடைய நடவடிக்கைகள் எப்படி மாறிக் கொண்டே போய்க் கொண்டிருக்கின்றன என்பதையும் அவர்கள் இது வரையிலும் எவ்வளவு கரணங்கள் போட்டிருக்கிறார்கள், போடப் போகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொண்டு வருமாறு பொது ஜனங்களுக்கு நினைப்பூட்டுகிறோம்.

குடி அரசு  துணைத் தலையங்கம்  17.02.1935

You may also like...