சம்பளத்தைப் பற்றி சர்க்காருக்கு ஏன் இவ்வளவு கவலை
வரி கட்ட முடியவில்லை என்கின்ற கூச்சல் பொதுவாக எல்லா வகுப்பு மக்களிடமிருந்தும் கிளம்பிக் கொண்டே இருக்கிறது.
இந்திய சட்டசபையிலும் மாகாண சட்டசபையிலும் ஜனப்பிரதிநிதிகள் என்பவர்கள் சகல வித வரிகளையும் குறைக்க வேண்டும் என்று கூப்பாடு போட்ட வண்ணமாய் இருக்கிறார்கள். சர்க்காராரும், “”ஒவ்வொன்றையும் அனுதாபத்தோடு கவனித்துத் தக்கது செய்கிறோம்” என்று சொல்லிக் கொண்டே வருகிறார்கள். சில இனத்தில் குறைப்பதாகவும் ஒத்துக் கொள்ளுகிறார்கள்.
இது ஒருபுறமிருக்க மற்றொரு புறத்தில் செலவுக்குப் பணம் போதவில்லை என்று நெருப்புப் பெட்டி போன்றவைகளுக்குப் புதிய வரிகளும் போடுகிறார்கள். காலணா கார்டை முக்காலணாவும், அரையணா கவர் ஒன்றே காலணாவும் ஆக்கினார்கள். இதுவும் தவிர விளை பொருள்கள் மிகவும் குறைந்த விலைக்கு விற்கின்றது என்பதை சர்க்காரே ஒப்புக்கொண்டு உணவுப் பொருள்கள் மீதும் வரி போட வேண்டுமென்று கருதுகின்றார்கள்.
இவ்வளவும் அல்லாமல் மக்கள் நலனுக்காக செய்ய வேண்டிய சுகாதாரம், கல்வி, போக்கு வரவு சாதனங்கள், நீதி இலாக்கா ஆகியவை களுக்கு செய்ய வேண்டிய இன்றியமையாத காரியங்களைக்கூடச் செய்வதற்கு பணம் இல்லை என்று சர்க்காரும் மந்திரிமார்களும் ஒப்பாரி வைத்து அழுகின்றார்கள்.
இப்படிப்பட்ட இந்த நிலையில் சர்க்கார் சிப்பந்திகள் அதாவது மாதம் 100, 500, 1000, 4000, 5000 ரூபாய் வீதம் சம்பளம் வாங்கும் உத்தியோகஸ்தர்கள் சம்பளத்தில் ரூபாய்க்கு ஒரு காசு கூடக் குறைக்கக் கூடாது என்றும், முன்னால் எப்பவோ குறைத்ததைக்கூட இப்போது இப்படிப்பட்ட கஷ்ட காலத்தில் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லுவதானால் இந்த சர்க்கார் கொள்கையின் மனப்பான்மையைப் பற்றி என்ன சொல்லுவது என்பது நமக்குப் புரியவில்லை.
சர்க்காரின் இப்படிப்பட்ட மனப்பான்மையைக் கண்டித்து பஞ்சாப் மாகாண இந்திய வர்த்தக சங்கத்தார் சர்க்காருக்கு ஒரு கடிதம் எழுதி இருப்பதாகத் தெரிய வருகின்றது.
இவ்வளவு இருந்தும் சர்க்கார் ஒன்றுக்கும் அஞ்சாமல் வரிப் பணத்தை சர்க்கார் சிப்பந்திகளுக்கு அள்ளிக் கொடுப்பதில் இவ்வளவு தாராளமாகவும், துணிகரமாகவும் இருப்பதற்குக் காரணம் இந்த நாட்டு மக்கள் மீது சர்க்காருக்கு நம்பிக்கை இல்லாததுதான் என்று நினைக்க வேண்டி யிருக்கிறது.
நம்நாட்டுப் பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் காங்கிரசின் பேரால் பொறுப்பற்றதனமாய் கூப்பாடு போட்டதும் போக்கிரித்தன மாகவும், காலித்தனமாகவும் நடந்து கொண்டதுமான நடவடிக்கைகளே சர்க்காரின் இப்படிப்பட்ட சகிக்க முடியாத விஷயத்தை நியாயமாக்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
சர்க்காரார் எங்கெங்கு மக்களுக்கு சீர்த்திருத்தத்தின் பேரால் சுதந்திரமும், சௌக்கியமும் கொடுத்து வைத்திருந்தார்களோ அங்கெல்லாம் அவைகளை பார்ப்பனர்கள் துர்வினியோகமும், துஷ்பிரயோகமும் செய்ததாலேயும் அவர்கள் பேச்சை பாமர மூடமக்கள் கேட்டு அறிவில்லாமல் ஆடினதாலேயும் மக்களுக்கு திமிர் வரி போடுவது போல் வரி விதித்து உத்தியோகஸ்தர் சம்பளங்களை ஏராளமாய் இருக்கும்படி கொடுத்து அவர்களையே நம்பிக் கொண்டு ராஜியப் பிரசாரம் செய்ய வேண்டியதாகி விட்டது. இதை தப்பு என்று எப்படி சொல்லுவது.
முன்பெல்லாம் சர்க்காருக்கு போலீசுக்கும், பட்டாளத்துக்கும் மாத்திரம் அன்பும் விசுவாசமும் காட்டினால் போதுமானதாய் இருந்தது.
ஆனால் 1920ம் வருஷத்து சீர்திருத்தத்தைக் காங்கிரஸ்காரர்கள் நடத்திக் காண்பித்த யோக்கியதையின் பலனாய் (முட்டுக்கட்டை போட முயன்றதனால்) தோட்டி முதல் மந்திரிகள் வரை உள்ள எல்லா சிப்பந்தி களுக்கும், உத்தியோகஸ்தர்களுக்கும் சர்க்கார் அன்பும் விசுவாசமும் காட்ட வேண்டியதாய் போய்விட்டது. ஆதலால் சம்பளத்தில் ஒரு தூசிகூட குறையக் கூடாது என்கின்ற பிடிவாதமும் துணிச்சலும் சர்க்காருக்கு ஏற்பட வேண்டியதாயிற்று.
பார்ப்பனத் தொல்லையும் அவர்கள் காலை நக்கிப் பிழைக்க வேண்டிய அவசியமுமுள்ள பார்ப்பனரல்லாதார் நிலையும் மாறுபடும்வரை இந்திய ஏழை மக்கள், இது மாத்திரமல்ல இன்னும் எவ்வளவு கஷ்டம் அடைய வேண்டியது பாக்கி இருக்கிறதோ என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது.
குடி அரசு கட்டுரை 24.02.1935