வக்கீல்  தொல்லைகள்

 

ஒரு  தேசத்தில்  எவ்வளவு  கொடுங்கோல்  ஆட்சி  இருந்தாலும்,  ஒரு  தேசத்தில்  எவ்வளவு  வழிப்பறி  தீவட்டிக்  கொள்ளை  பகல்  கொள்ளை  போன்ற  வெளிப்படையாய்,  பலாத்காரமாய்  மனம்  பதறப்  பதற  பரித்துக்  கொள்ளும்  கொடுமைகள்  இருந்தாலும்  மற்றும்,  சமூக வாழ்க்கையில்  சமாதானத்துக்கும்,  சாந்திக்கும், நல்லொழுக்கத்துக்கும்  விரோதமானது  என்று  சொல்லப்படும்  கள்ளு,  சாராயக்  கடைகள்,  தாசி  வேசி  வீடுகள்,  சூது  மடங்கள்  ஆகியவைகள்  இருந்தாலும்,  சாமான்கள்  விலை  பேசுவதுபோல்  நீதிக்கும்,  தீர்ப்புக்கும்  லஞ்சம்  வாங்கும்  அனியாய  அயோக்கிய  நீதிமுறைகள்  இருந்தாலும்,  அவைகளையெல்லாம்  விட  இன்றைய  வக்கீல்  தன்மை  என்பது  மனித  சமூகத்துக்கு மிக  மிக  கஷ்டமானதும்,  தொல்லையானதும்,  சித்திரவதைக்கு  ஒப்பானதுமான  துன்பங்களைக்  கொடுக்கக்  கூடியது  என்பது  நமது  பல நாளைய  அபிப்பிராயமாகும்.

மனித  சமூகத்துக்கு  காலரா,  பிளேக்கு,  க்ஷயம்,  உளமாந்தை  போன்ற  கொள்ளை  நோய்கள்  எப்படியோ,  அதுபோலவே  தான்  மனித  சமூக  ஒழுக்கத்துக்கும்,  நாணையத்துக்கும்,  சாந்திக்கும்  வக்கீல்  சமூகம்  ஒரு  பெரும்  வியாதியேயாகும்.

வக்கீல்  சமூகம்  என்கின்ற  ஒரு  கூட்டம்  இல்லாதிருந்திருக்குமானால்  இன்று  அரசியல்,  சமூக  இயல்,  பொருளாதார  இயல்  ஆகியவற்றில்  இருந்து  வரும்  கேடுகள்  100க்கு  99  பாகம்  இல்லாமலே  இருந்திருக்கும்  என்று  உறுதியாய்ச்  சொல்ல  அனேக  விபரங்கள்  நம்மிடமிருக்கின்றன.

காங்கிரசில்  காந்தியார்,  முதல்  முதல்  அதாவது  1920ம்  வருஷம்  பிரவேசித்து  மக்களுக்கு  ஒத்துழையாமையைப்  பற்றி  உபதேசிப்பதற்கு  முன்  மக்கள்  ஒழுக்கம்  பெற  வேண்டும்  என்று  சொல்லி  வந்த  காலத்தில்  முதல்  முதல்  காங்கிரஸ்  சபையை  பரிசுத்தமாக்க  வேண்டுமென்கின்ற  திட்டம்  வகுத்தபோது  “”காங்கிரசில்  வக்கீல்களைச்  சேர்க்கக்  கூடாது”  என்பதாக  முதல்  விதி  ஏற்படுத்தினது  எல்லோருக்கும்  ஞாபகமிருக்கும்.  அதோடு  கூடவே  அதற்குக்  காரணம்  சொல்லும்  போது  அக்கூட்டத்தார்  தேசத்திற்கு  எவ்வளவு  கேடானவர்கள்  என்பதை  வெகு  அழகாகவும்,  உண்மையை  அப்படியே  சிறிதுகூட  மிகைப்படுத்தாமலும்  போட்டோ  படம்  எடுத்தது  போல் விளக்கியும்  காட்டி  இருக்கிறார்.  தானும்  சிறிது  காலம்  வக்கீலாய்  இருந்ததால்  அது  அவருக்கு  நன்றாய்  தெரிய  முடிந்தது.

கடைசியாக  காந்தியார்  “”காங்கிரசில்  வக்கீல்கள்  இருப்பதைவிட  சக்கிலிகள்  இருப்பது  மேலானதும்,  நன்மை  பயக்கத்தக்கதுமான  காரியம்”  என்றும்  சொல்லி  இருக்கிறார்.

காந்தியார்  “”சக்கிலி  ஜாதி”  என்பதை  கீழான  ஜாதி  என்று  கருதி  இருக்க  மாட்டார்  என்றாலும்  1920ல்  அவரது  மனப்பான்மை  இருந்த  நிலையில்  வக்கீல்கள்  மனித  சமூகத்தில்  மிக  மிகக்  கீழானவர்கள்  என்று  காட்டுவதற்காக  அன்று  மனித  சமூகத்தில்  எந்தக்  கூட்டத்தாரையும்,  எந்தத்  தொழிலையும்  இழிவாய்க்  கருதும்  வழக்கம்  இருந்ததோ  அந்தக்  கூட்டத் தாரையும்,  தொழிலையும்  ஒரு  உதாரணத்துக்காக  எடுத்துக்  காட்டினார்  என்பதையாவது  ஒப்புக்  கொள்ளத்தான்  வேண்டும்.

அப்படிப்பட்ட  கீழானதும்  இழிவானதுமான  வக்கீல்  கூட்டமேதான்  இன்று  உலக  நடப்பில்  சகல  துறையிலும்  ஆதிக்கம்  வகிக்கும்  நிலையில்  இருந்து வருகின்றது  என்றால்  இதன்  பயனாய்  மக்கள்  எவ்வளவு  துன்பமும்,  துயரமும்  அடைவார்கள்  என்பதை  எடுத்துக்காட்ட  வேண்டுமா  என்று  கேட்கின்றோம்.

அரசியல்  துறையில்  நாணையமில்லை,  நாணையமில்லை  என்று  வெகுகாலமாகவே  ஒருமுகங்  கொண்டதான  பெரியதொரு  கூச்சல்  இருந்து  வருவது யாரும்  அறியாததல்ல.  அப்படி  இருந்தும்  இன்றும்  அத்துறை  அவ்வளவு  நாணையக்  குறைவாகவே  ஏன்  இருந்து  வருகின்றது  என்று  பார்ப்போமானால்  அரசியல்  துறையின்  பிறப்பிடம்  முதல்,  வளர்ப்பிடம்,  வாழ்க்கைப்படும் இடம் எல்லாமுமே  வக்கீல்  கூட்டத்தார்கள்  கையிலேயே  இருந்து வருகின்றது என்பதைத் தவிர வேறு காரணங்கள் சொல்ல  நமக்குத் தோன்றவில்லை.

இன்று அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது என்பது எவ்வளவு சாதாரணமாய்  இருக்கின்றது  என்பதை  நாம்  விவரிக்க  வேண்டியதில்லை.  1000,  10000,  100000, 1000000,  10000000  ரூபாய்கள்  பொருமான  வியாஜ்யங்களின்  தலையெழுத்துக்கள்  எல்லாம்  ஒரு காலத்தில்  வக்கீல்  உத்தியோகத்தில்  N  100,  50க்குக்கூட  சம்பாதிக்க  முடியாமல்  திண்டாடித்  தெருவில்  அலைந்து  கொண்டிருந்த  டவுட்  வக்கீல்  பேர்வழிகளின்  கை  பேனாவின்  நுனியில்  அடிமைப்பட்டுக்  கிடக்க நேரிடும்போது  லஞ்சங்கள்  பெருகியும்,  சிகரெட்,  பீடி  விற்பனை  போல  சாதாரணமாய்  பொது  ஜனங்களிடம்  செல்வாக்குப்  பெற்றும்  இருப்பதில்  ஏதாவது  அதிசயமிருக்க  முடியுமா  என்று  கேட்கின்றோம்.

இந்தியாவில்  உள்ள  ஆட்சியின்  நாணையக்  குறைவைப்  பற்றியும்,  நீதி  நிர்வாகத்தின்  நாணையக்  குறைவுகளைப்  பற்றியும்  குறை  சொல்லக்  கூடிய அம்சங்கள் எவ்வளவு இருக்கின்றதோ சற்றேரக் குறைய  அவ்வளவுக்கும்  வக்கீல்  கூட்டத்தின்  சம்மந்தம்  அவற்றில்  கலந்திருப்பதே காரணம்  என்று  தைரியமாய்ச்  சொல்லலாம்.

வக்கீல்கள்  பிழைக்கும்படியாகவே  சட்டங்கள்  தயாறாகிக்  கொண்டு  வருகின்றன.  வக்கீல்கள்  பிழைக்கும்படியாகவே  அரசியல்  கிளர்ச்சிகளும்,  தத்துவங்களும் நடைபெற்று  ஏற்பட்டு  வருகின்றன.  மற்றும்  கோர்ட்டுகளும்,  விசாரணைகளும்,  தீர்ப்புகளும்கூட  வக்கீல்கள்  பிழைப்புக்கு  அனுகூலமாகவே  இருந்து வருகின்றன.

தேச  மக்களின்  நன்மைக்கு  ஆக  என்று  சொல்லப்படும்  அரசியல்  திட்டம்  என்பது  100க்கு  99  பாகமும்  வக்கீல்கள்  பிழைப்புக்கு  அனுகூல மானவைகளே  ஒழிய  மனித  சமூக  பொது  நலனுக்கு  அனுகூலமானதென்று  சொல்ல முடியாது.

இந்திய  வக்கீல்களைப்  பற்றி  சமீப  காலத்திலேயே  பல  அறிஞர்கள்  அபிப்பிராயங்கள்  கொடுத்து  வந்திருக்கிறார்கள்.

மற்றும்  சமீப  காலமாகக்  கூட  கோர்ட்டுகளில்  வக்கீல்கள்  ஒழுக்கக்  குறைவாகவும்,  நாணையக்  குறைவாகவும்  நடந்து கொள்ளும்  விஷயங் களைப்  பற்றியும்  தாராளமாய்  பல  அதிகாரிகள்  குறிப்பிட்டிருப்பதுடன்  கட்சிக்காரர்களுடைய  பணங்களை  மோசம்  செய்ததற்காகக்  கடுங்காவல்  போன்ற  சிறை  தண்டனையும்  வக்கீலுக்குக்  கொடுத்திருக்கிறார்கள்  என்றால்  இந்த  வக்கீல்கள்  பாமர  மக்களிடம்  எவ்வளவு  மோசமாயும்,  நாணையக்  குறைவாயும்  நடந்திருப்பார்கள்  என்பதற்கு  உதாரணம்  வேண்டுமா  என்று  கேட்கின்றோம்.

சண்டே  டெஸ்பாச்  என்ற  ஒரு  லண்டன்  பத்திரிகையில்  ஐடன்கிறாலி  என்ற  ஒருவர்  இந்திய  நீதி  நிர்வாகத்தைப்  பற்றி  எழுதுகையில்,

“”இத்திய  வக்கீல்கள்  மிகவும்  ஒழுங்கீனமானவர்கள்  ஆவார்கள்.  அவர்களுக்குச்  சிறிதும்  மதிப்புக்  கொடுக்க  முடியாது” என்றும்,

இந்திய ஜட்ஜுகள் லஞ்சம் வாங்குபவர்கள்  என்றும்  குறிப்பிட்டிருக்கிறார்.

மற்றும்  சமீபத்தில்  சென்ற  வாரத்தில்  திருநெல்வேலியில்  ஐரோப்பிய  ஐ.சி.எஸ்.  ஜட்ஜி  ஒருவர்  குறிப்பிட்டிருப்பதாவது.

“”இந்திய  வக்கீல்களுக்கு  ஒரு  லட்சியமும்,  ஒரு  கோரிக்கையும்  இருப்பதாகத்  தெரியவில்லை”  (அதாவது  வக்கீல்களுக்கு  கொள்கையே  கிடையாது என்பதாகும்.)

“”எப்படியும்  தங்கள்  சுயநலமே  முக்கிய  நோக்கம்.”

“”வக்கீல்கள்  தங்களை  சீர்படுத்திக்  கொள்வதில்  கவலைப்படுவதே  கிடையாது.  சுமார்  500  வருஷங்களுக்கு  முன்  இங்கிலாந்து  தேசத்தில்  எப்படி  வக்கீல்கள்  வழக்குகளை  விர்த்தி  செய்து  மக்களைக்  கெடுத்து  வக்கீல்  தொழிலுக்கு  மிகவும்  இழிவை  உண்டாக்கி  வந்தார்களோ  அதுபோலவே  இப்போது  இந்திய  வக்கீல்கள்  நிலை  இருந்து  வருகிறது”

“”இந்தியாவில்  நீதி  செலுத்தும்  விஷயத்தில்  வக்கீல்களை நம்ப  முடியவில்லை.  மிகுந்த  அவநம்பிக்கை  கொள்ள வேண்டியிருக்கிறது”

என்று  குறிப்பிட்டிருக்கிறார். (இந்த ஜட்ஜியின் பெயர் தோழர்  ஈ.ஈ.மேக்,  ஐ.சி.எஸ்.)

மற்றும்  இதே  வாரத்தில்  அதுவும்  நமது  ஐகோர்ட்டிலேயே  ஆஜரான  வக்கீலைப்  பற்றி,  “”வக்கீலின்  நடத்தை  மிகவும்  ஒழுங்கீனமானது.  இதை  மிகவும்  பலமாகக்  கண்டிக்க  வேண்டும்.  இவருக்கு  புத்தி  கற்பிக்க  வேண்டும்”  என்று  எழுதி  இருக்கிறார்.

மற்றொரு  வழக்கில்  ஒரு  வக்கீல்  ஒரு  கட்சிக்காரன்  பாப்பர்  வியாஜ்யம்  செய்து  அவனுக்கு  ரிசீவராக  இருந்த  ஒரு  வக்கீல்  கட்சிக்காரனுக்காக  கிடைத்த  ரூபாய்களை  ஒரு  தடவை  2000மும்,  மற்றொரு  தடவை  1000மும்  ஆக  மூவாயிரம்  ரூபாய்  மோசடி  செய்து  ஒரு  வழக்கில்  2  வருஷக்  கடுங்காவலும்,  மற்றொரு  வழக்கில்  ஒரு  வருஷக்  கடுங்காவலும்  பெற்று  இருக்கிறார்.

சமீபத்தில்  ஹைகோர்ட்  ஐரோப்பிய  ஜட்ஜு  ஒருவர்  “”வக்கீல்களுக்கு  உள்ள  கடமையை  கவனிப்பதில்லை.  தப்பு  வழக்கை  சிருஷ்டிக்கிறது  கூடாது”  என்று  குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த  ஒரு  வருஷத்தில்  இந்திய  வக்கீல்  நடவடிக்கைகளைப்  பற்றிய குறிப்புகள் வெளியில் வந்தவைகளை மாத்திரம் எடுத்துப்  போடப்படுமானால் மனுதர்ம சாஸ்திரம் பராசரஸ்மிருதி ஆகிய  இரண்டையும்விட  பெரிதாகவே  ஒரு  புத்தகமாகும்.

இன்னமும்  தினமும்  நித்திய  வாழ்க்கையில்  விவகார  முறையிலும்,  சொந்த  முறையிலும்  வக்கீல்  கூட்டத்தில்  பெரும்பான்மையோரிடம்  இருந்து  வரும்  ஒழுக்கத்  தவறுதலான  காரியங்கள்  சொல்லி  முடியாது.  அனேகமாக  முன்சீப்,  ஜட்ஜி,  சப்  மேஜிஸ்ரேட்,  டிப்டி  மேஜிஸ்ரேட்  ஆகிய  உத்தியோகஸ்தர்கள்  சற்றேரக்குறைய  அந்த  ஜாதிக்காரர்களாகவே  இருப்பதால்  வக்கீல்களின்  அக்கிரமங்களும்,  அட்டூழியங்களும்  வெகு  சாதாரணமாக  மறைக்கப்பட்டு  விடுகின்றன.

எனவே  மனித  சமூக  ஒழுக்கத்தைப்  பற்றியோ,  மக்கள்  நீதியைப்  பற்றியோ  ஜனசமூக  சமாதானத்தையும்,  ஒழுங்கையும்  பற்றியோ  ஏதாவது  ஒரு  காரியம்  செய்ய  வேண்டுமானால்  இந்த  வக்கீல்  சமூகத்தை  ஒழித்தால்  அல்லது  மற்றபடி  ஒரு  “”தர்ம  தேவதையே”  உருவம்  பெற்று  ஆட்சி  புரிவதாய்  இருந்தாலும்  இன்றைய  நிலைமையைவிட  ஒரு  மயிர்க்கால்  அளவுகூட  மக்களுக்குப்  பயன்படாது  என்பது  நமது  அபிப்பிராயமாகும்.

குடி அரசு  துணைத் தலையங்கம்  20.01.1935

You may also like...