மோதிரம்  மாற்றுவது  மூடநம்பிக்கை

 

லண்டன்  நகரத்தில்  சமீபத்தில்  நடந்த  இரண்டொரு  கல்யாணங்களில்  மணமகன்  மோதிரம்  மாற்றிக்  கொள்வது  கூட  மூடநம்பிக்கையில்  சேர்ந்தது  என்று  கருதி  மணவினையின்  போது  மணமகன்  மோதிரம்  மாற்றிக்  கொள்ள  சம்மதிக்க  மாட்டேன்  என்று  சொல்லி  விட்டாராம்.

“”நாங்கள்  ஒருவரை  ஒருவர்  வாழ்க்கைத்  துணைவர்களாக  ஏற்றுக்  கொண்டோம்  என்று  சொல்லி  இருவரும்  கையொப்பமிட்டு  பிறகு  மோதிரம்  மாற்றிக்  கொள்வது  எதற்காக”  என்று  மணமக்கள்  கல்யாணப்  பதிவு  ரிஜிஸ்டராரை  கேட்டார்கள்.  அதன்  மேல்  கல்யாணப்பதிவு  ரிஜிஸ்டராரும்  பாதிரியும்  ஒன்றும்  பேசாமல்  கல்யாணத்தை  பதிந்து  கொண்டார்களாம்.  இந்த  விஷயம்  சென்ற  வாரத்திய  கிராணிக்கல்  வாரப்பத்திரிகையில்  காணப்படுவதுடன்  தம்பதிகளின்  உருவப்  படங்களும்  அதில்  பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.  நமது  நாட்டில்  நடத்தும்  சுயமரியாதைத்  திருமணங்களில்  தாலி  கட்டவில்லையே  என்று  அழுவாரும்,  விளக்குப்  பற்ற  வைக்கவில்லையே  என்று அழுவாரும்,  சாணி  உருண்டை  பிடித்து  வைத்து  தேங்காய்  பழம்  உடைக்கவில்லையே  என்று  அழுவாரும்,  பார்ப்பான்  காலில்  விழுந்து  அம்மிக்கல்லில்  முட்டிக்  கொள்ளவில்லையே  என்று  அழுவாரும்  இதற்கு  என்ன  பதில்  சொல்வார்கள்  என்று  அறிய  ஆசைப்படுகின்றோம்.

ஆகவே  இனி  கல்யாணம்  என்றால்  ஒவ்வொருவரும்  ரிஜிஸ்டர்  செய்து  கொள்ள  வேண்டியதை  தான்  முக்கிய  காரியமாய்  கருத  வேண்டும்.  இதை  விட  ஜாக்கிரதையான  முறையில்  கல்யாணம்  செய்து  கொள்ள  வேண்டுமானால்  மணமக்கள்  இருவருக்கும்  டாக்டர்  சர்டிகேட்  பெற  வேண்டும்  ஆகிய  இந்த  இரண்டு  காரியங்களைத்  தவிர  கல்யாணக்  காரியத்தில்  வேறு  எந்தக்  காரியமும்  கலந்து  கொள்ளாமல்  இருக்கும்படி  பார்த்துக்  கொள்ளுவது  தான்  தற்கால  நிலைமைக்கு  ஏற்ற  சுயமரியாதைக்  கல்யாணமாகும்.

அந்தப்படி  சகிக்காமல்  “” அதாவது  வேண்டாமா?  இதாவது  வேண்டாமா?”  என்று  சொல்லிக்  கொண்டு  செய்யப்படும்  கல்யாணங்கள்  எதுவும்  அஞ்ஞானக்  கல்யாணமும்,  புராண  மரியாதைக்  கலியாணமுமேயாகும்  என்பது  நமது  அபிப்பிராயம்.

பந்துக்களையோ  நண்பர்களையோ  அழைப்பதும்,  அவர்களுக்கு  மரியாதை  செய்வதும்  வீண்  செலவு   என்று  சொல்லுகின்றோமே  தவிர  அவற்றை  மூடநம்பிக்கை  என்று  சொல்ல  வரவில்லை.  ஆனாலும்  அது  ஆடம்பரங்களில்  கொண்டு  வந்து  விட்டு  கடைசியாக  பணச்செலவு,  திரேகப்பிரயாசை  காலக்கேடு  முதலியவைகளுக்கு  அடிமையாக்கி  வைத்து  விடுகின்றதுடன்  இந்த  ஆடம்பரங்கள்  மக்களை  போட்டியில்  கொண்டு  வந்து  விட்டு  விடுகின்றது  என்றே  பயப்படுகின்றோம்.

பகுத்தறிவு  கட்டுரை  16.12.1934

You may also like...