வேஷம்  விளங்கி  விட்டது

 

“”வெள்ளை  அறிக்கையை  பஹிஷ்காரம்  செய்கின்றோம்.”  “”வைசிராய்  வந்தவுடன்  வெளியில்  எழுந்து  வந்து  விடுகின்றோம்.”  என்றெல்லாம்  கூறி  ஓட்டு  வாங்கி  சட்டசபைக்குச்  சென்று  இருக்கும்  நமது  காங்கிரஸ்  வீரர்கள்  இப்போது  மெள்ள  மெள்ள  தங்கள்  திரையை  நீக்கிக்  கொண்டு  வெளியில்  வர  ஆரம்பித்து  விட்டார்கள்.

அதாவது  வெள்ளை  அறிக்கையின்  பயனாய்  கிடைக்கக்  கூடிய  பதவிகளையும்,  உத்தியோகங்களையும்,  சம்பளங்களையும்  கைப்பற்ற  வேண்டுமென்றும்,  அந்தப்படி  செய்யாவிட்டால்  பிற்போக்காளர்கள்  (காங்கிரஸ்காரர்கள்  அல்லாதார்கள்)  அதை  அனுபவித்து  விடுவார்களென்றும்  சொல்லி  இப்போதே  பழய  பாடம்  படிக்க  ஆரம்பித்து  விட்டார்கள்.

முன்பு  ஒரு தடவையும்  கூட  இந்தப்படியே  அதாவது  காங்கிரஸ்காரர்கள்  சட்டசபைக்குச்  சென்றால்  மந்திரி  வேலையை  ஒப்புக்கொள்ளக்கூடாது  என்றும்,  மந்திரிகளை  ஆதரிக்கக்  கூடாதென்றும்  செய்திருந்த  காங்கிரஸ்  தீர்மானத்துக்கு  விரோதமாய்  மந்திரி  உத்தியோகம்  பெற  ஆசைப்பட்டு  அது  சௌகரியப்படாமல்  போகவே  தங்கள்  இஷ்டப்படி  மந்திரிகளை  ஆதரிக்கத்  தொடங்கி  மந்திரிகளின்  கையாள்களாகவும்  இருந்து  வந்தார்கள்.

அதை  மற்ற  மாகாண  காங்கிரஸ்வாதிகள்  கண்டித்து  சமாதானம்  கேட்டபோது  சென்னை  காங்கிரஸ்வாதிகள்   இதே  பதில்  தான்  சொன்னார்கள்.  என்னவென்றால்  “”மந்திரி  பதவிகளை  காங்கிரஸ்  ஆதிக்கத்தில்  வைத்திருக்கா  விட்டால்  பிற்போக்காளர்கள்  (ஜஸ்டிஸ்  கட்சியார்கள்)  கைப்பற்றி  விடுவார்கள்.  ஆதலால்  காங்கிரஸ்காரர்கள்  மந்திரிகளை  ஆதரிக்க  வேண்டியவர்களானார்கள்”  என்று  சொன்னார்கள்.

ஆதலால்  காங்கிரஸ்காரர்களுக்கு  எவ்வெப்பொழுது  சட்டசபைக்குள்  செல்ல  முடியாதோ  அப்பொழுதெல்லாம்  சட்டசபையை  பஹிஷ்கரிப்பதும்,  எவ்வெப்பொழுது  மந்திரி  பதவி  கிடைக்காதோ  அப்பொழுதெல்லாம்  மந்திரி  பதவி  ஒப்புக்கொள்ளக்கூடாது  என்று  தீர்மானிப்பதும்,  எவ்வெப்பொழுது  சாத்தியப்படுகின்றதோ  அப்பொழுதெல்லாம்  தேசத்துரோகிகளும்,  பிற்போக்காளர்களும்  பிரவேசியாமலும்,  மந்திரி  ஆகாமலும்  பார்த்துக்  கொள்ளுவதற்காக”  என்று  பிரவேசிப்பதும்  வழக்கமாக  இருந்து  வருகின்றது.

அதை  இந்த  வருஷ  தேர்தலிலும்  பட்டவர்த்தனமாய்  காட்டி  தங்களது  உள்வேஷத்தை  விளக்கிவிட்டார்கள்.

இதை  51234ந்  தேதி  பாட்னாவில்  கூடிய  காங்கிரஸ்  காரியக்கமிட்டியும்,  சட்டசபைப்  பஞ்சாயத்துபோர்டும்  சேர்ந்து  நிறைவேற்றி  இருக்கும்  தீர்மானத்தால்  அறியலாம். அதாவது,

“”கூட்டுக்கமிட்டி  அறிக்கையை  நிராகரித்து  விட  வேண்டும்.  நிராகரிப்பு  என்றால்  இப்போது  இருந்து  வரும்  அரசியலின்  கீழ்  இருந்து  கொண்டு  கஷ்டப்படவேண்டும்.  இது  சகிக்க  முடியாததாய்  இருந்தாலும்  அரசியல்  நிர்ணய  சபையாரால்  வகுக்கப்படும்  ஒரு  அரசியல்  கிடைக்கும்  வரை  இப்பொழுதிருக்கும்  அரசியலின்  கீழ்  இருக்க  வேண்டும்.

ஆகவே  “”சீர்திருத்தத்திட்டத்தை  நிராகரிக்கும்படி  அசம்பளி  மெம்பர்களை  கேட்டுக்  கொள்ளுகிறது.  காங்கிரஸ்  செய்வதை  பொதுஜனங்கள்  ஆதரிக்க  வேண்டும்”  என்று  தீர்மானித்து  இருக்கிறார்களாம்.

இதிலிருந்து  விளங்குவது  யாவருக்கும்  தெரிந்ததே.  சட்டசபை  மெம்பர்  பதவியையும்  மந்திரி  பதவியையும்  அடைவது  என்னும்  “”கஷ்டத்தை”  சகித்துக்  கொண்டும்,  சம்பளம்  வாங்கி  எண்ணி  எண்ணி  பெட்டியில்  போடுவது  என்னும்  “”துன்பத்தை”  அனுபவித்துக்  கொண்டும்  சீர்திருத்தங்களை  எதிர்க்கவோ  நிராகரிக்கவோ  ஆன  காரியங்களைச்  செய்ய  வேண்டும்  என்பதே  அல்லாமல்  வேறு  இரகசியம்  எதுவும்  இத்  தீர்மானத்தில்  இல்லை.

ஒரு  புருஷன்  தனது  மனைவியை  விபசாரி  என்று  கருதி  விலக்கி  வைக்க  வேண்டும்  என்று  தீர்மானித்து  அத்  தீர்மானத்தை  எப்படி  நிறைவேற்றினான்  என்றால்  அவளோடு  வாழ்ந்து  கொண்டும்,  பிள்ளைகளையும்  பெற்றுக்  கொண்டும்  இருந்துகொண்டே  அவளை  விலக்கி  விடுவது  என்ற  தீர்மானத்தை  நிறைவேற்றியதோடு  அதற்கு  சமாதானமும்  “”தான்  அந்தப்படி  செய்யாவிட்டால்  தன்  மனைவி  வேறு  ஒருவனுக்கு  பிள்ளை  பெற்றுவிடுவாள்  என்று  சொன்னானாம்.  அது  போலவே  அரசியலின்  கீழ்  இருந்து  கொண்டே  அந்த  பதவியையும்  சம்பளத்தையும்  அனுபவித்துக்  கொண்டு  அந்த  அரசியலை  பகிஷ்கரிப்பது  என்று  முடிவு  செய்து  விட்டார்கள்  நமது  காங்கிரஸ்காரர்கள். அப்பாடா  இது  எவ்வளவு  பெரிய  தியாகம்!  எவ்வளவு  பெரிய  வீரம்!!  வேறு  யாராவது  இந்தப்படி  செய்ய  முடியுமா!!!  என்று  யோசித்தால்  அதன்  பெருமை  விளங்கிவிடும்.

அறிவில்லாத  பாமர  மட  ஜனங்கள்  இவற்றை  நம்பி  ஏமாந்து  போகின்றார்கள்  என்பது  ஒரு  பக்கம்  இருக்க  அரசியலை  நிராகரிப்பது  என்றால்  என்ன  அருத்தம்  அது  எப்படி  முடியும்  என்பது  பற்றி  ஒரு  அறிஞனும்  யோசித்துப்  பார்த்ததே  கிடையாது.  பார்ப்பனர்கள்  என்ன  வியாக்கியானம்  சொல்லுகிறார்களோ  அதையே  நம்பி  கங்காதரா    மாண்டாயோ  என்று  அழுவதை  தவிர  நமது  மக்களுக்கு  சொந்தபுத்தி  சிறிது  கூட  இல்லை.  அரசியல்  சீர்திருத்தத்தின்  கீழ்  ஒரு  சிறிய  ஸ்தானத்தைப்  பெற்றுக்  கொண்டாலும்  அதற்குள்ள  நிபந்தனைப்படி  நடந்து  ஆகவேண்டுமே  ஒழிய  வேறு  வழியில்லை.  ஒருவன்  ஓட்டு  செய்தபோதே  அரசியலுக்கு  அடிமை  ஆகிவிட்டான்  என்றால்  சீர்திருத்த  சட்ட  சபைக்குள்  நுழைந்து  விட்ட  பிறகு  என்ன  ஆவான்  என்று  சொல்லவேண்டுமா?  அவன்  சீர்திருத்தப்படி  நடக்க  வேண்டியதைத்  தவிர  வேறு  ஒரு  காரியமும்  செய்ய  முடியாது.  அங்கு  நிராகரிப்பது  என்பதற்கு  ஒரு  காரியமும்  கிடையாது  என்றும்,  செய்யமுடியாது  என்றும்,  அந்த  வார்த்தைக்கு  அருத்தமில்லை  என்றும்  சொல்லுவோம்.

யார்  எழுந்து  வந்தாலும்  யார்  ராஜீனாமா  கொடுத்தாலும்  அரசியல்  சீர்திருத்தம்  என்பது  சிறிது  கூட  அசைவு  பெற்று  விடாது.

தோழர்கள்  தாஸ்,  நேரு  ஆகியவர்கள்  பல  தடவை  வெளியேறினார்கள்,  “”ராஜீனாமா”  கொடுத்தார்கள்,  ரப்பர்  பந்துமாதிரி  எகிரி  எகிரி  பேசினார்கள்  முடிவில்  என்ன  ஆச்சுது?

தோழர்கள்  ஆரோக்கியசாமி  முதலியார்,  ரங்கநாத  முதலியார்,  முத்துலக்ஷிமி  ரெட்டியார்.  “”ராஜீனாமா”  கொடுத்தார்கள்  என்ன  ஆச்சுது.  மறுபடியும்  அதே  பதவிக்கு  தொங்குகிறார்களே  ஒழிய  சீர்திருத்தத்தை  கடுகளவு  கூட  அசைத்து  விடவில்லை.

இந்த  இரகசியம்  தோழர்கள்  ராஜகோபாலாச்சாரிக்கோ,  காந்தியாருக்கோ,  அல்லது  சத்தியமூர்த்தி  அய்யருக்கோ  தெரியாது  என்று  நாம்  இதை  எடுத்துக்காட்ட  வரவில்லை.  இதை  இவர்கள்  தெரிந்தே  மக்களை  இந்தப்படி  பேசி  ஏமாற்றுகின்றார்கள்  என்பதைக்  காட்டவே  இதை  எழுதுகின்றோம்.

சீர்திருத்தம்  யார்  தடுத்தாலும்  யார்  நிராகரித்தாலும்  யார்  பஹிஷ்கரித்தாலும்  வரத்தான்  போகின்றது,  வந்தும்  ஆய்  விட்டது.  அதை  ஆதரித்து  பதவிகளை  ஏற்று  நடத்திக்  கொடுத்து  பணம்  பெற  பாட்னாவில்  தீர்மானமும்  6  மாதத்துக்கு  முன்பே  செய்தும்  ஆய்விட்டது.

“”மத்திய  அரசாங்கத்தில்  சுயாட்சி  இல்லாமல்  மாகாண  சுயாட்சி  வேண்டியதில்லை”  என்று  கூப்பாடு  போட்ட  வீரர்கள்  தான்  இன்று  மத்திய  அரசாங்கத்தை  நடத்திக்  கொடுக்கும்  தேர்தலில்  வெற்றி  பெற்று  விட்டார்கள்.  மாகாண  சுயாட்சியை  நடத்திக்  கொடுப்பதற்கும்,  மந்திரிகளை  விரட்டி  விட்டு  அந்தப்  பதவியை  எங்களுக்குக்  கொடுங்கள்  என்று  கவர்னரை  கெஞ்சுகிறார்கள்.  அந்த  தேர்தலிலும்  வெற்றி  பெற  இப்போது  இருந்தே  முயற்சி  செய்து  வருவதும்,  சூட்சிகள்  செய்வதும்,  கவர்னர்களை  போய்ப்  பார்ப்பதும்  யாரும்  அறியாததல்ல.

காங்கிரஸ்  சட்டசபைகளையும்  உத்தியோகங்களையும்  பஹிஷ்கரித் திருந்த  காலத்திலேயே  சட்டசபைத்  தலைவர்  பதவியையும்,  கமிட்டி  ஸ்தானங்களையும்,  அவற்றின்  வருவாய்களையும்  அனுபவித்து  வந்த  வீரர்கள்  இப்போது  காங்கிரசே  சட்டசபை  ஸ்தானத்தை  ஏற்றுக்  கொள்ள  தீர்மானித்து  விட்டு  உத்தியோகங்களை  யேற்றுக்  கொள்ளலாம்  என்று  யோசித்துக்  கொண்டும்  இருக்கும்போது  இனி  பஹிஷ்காரம்,  நிராகரிப்பு  என்பவைகள்  எல்லாம்  மக்களை  ஏமாற்றச்  செய்யும்  பழய  பாடங்களே  ஒழிய  இதில்  புதியது  ஒன்றுமே  இல்லை  என்பதே  நமது  அபிப்பிராயம்.

பகுத்தறிவு  துணைத் தலையங்கம்  09.12.1934

You may also like...