ஏன் தோற்றார்? – சித்திரபுத்திரன்
கேள்வி :- தோழர் காந்தியார் ஏன் தோல்வி அடைந்தார்?
பதில் :- காந்தியார் அரசியலில் தலையிட்டபோது சமூக சீர்திருத் தத்தைப்பற்றியே பிரதானமாய்ப் பேசி பாமர ஜனங்களிடம் செல்வாக்குப் பெற்றார். அதாவது,
தீண்டாமை ஒழியாமல் சுயராஜ்ஜியம் கிடைக்காது என்றும் இந்து மு°லீம் ஒற்றுமை ஏற்படாமல் சுயராஜ்ஜியம் கிடைக்காது என்றும், மதுபானம் ஒழியாமல் சுயராஜ்ஜியம் கிடைக்காது என்றும் சொன்னார்.
ஒவ்வொரு வீட்டிலும் ராட்டினம் சுற்றப்பட்டாலொழிய சுயராஜ்ஜியம் கிடைக்காதென்றார்.
நாளாக நாளாக தீண்டாமையை ஒழிப்பதை ஒரு பக்கம் பேசிக் கொண்டு மற்றொருபுரம் வருணாச்சிரம தர்மத்தை ஆதரித்தார். ஜாதிப்பிரிவு முறை ஜாதிப்படி தொழில் முறை அப்படியே இருக்கவேண்டும். ஆனால் ஜாதிகளில் மேல் கீழ் வித்தியாசம் கூடாது என்று சொல்லிப் பூசி மெழு குகிறார்.
பிராமணனாய் பிறந்தாலொழிய பிராமணனாக முடியாது என்று சொன்னார். அப்புரம் சுயராஜ்ஜியம் கிடைத்துவிட்டால் தீண்டாமை தானே ஒழிந்துவிடும் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்.
கடைசியாக சுயமரியாதைக்காரர்கள் கிளர்ச்சியால் தீண்டப்படாத வர்கள் என்பவர்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கிடைத்து விட்ட பிறகு அதை ஒழிக்க ஹரிஜன இயக்கம் என்று கோவிலுக்குள் விட வேண்டும் என்று ஒன்று ஆரம்பித்து, அவர்களைக் கிளர்ச்சி செய்து, கடைசியாக அக்கிளர்ச்சியையும், பட்டினியில் ஆரம்பித்து சட்டசபையில் கொண்டுபோய் விடப்பட்டாய் விட்டது. இதனால், இனி சட்டம் ஏற்படும் வரை கோவிற்பிரவேசம் முடியாது என்று தீர்மானமாய் விட்டது.
இந்து மு°லிம் ஒற்றுமைப் பிரச்சினையும் 21-நாள் பட்டினி விரதத் தையும் கடந்து, அதுவும் தீண்டாமை ஒழிப்பைப் போலவே, சுயராஜ்யம் கொடுக்கப்பட்டு விட்டால் இந்து மு°லிம் ஒற்றுமையும் தானாக ஏற்பட்டு விடும் என்றும், தோழர் காந்தியாராலேயே சொல்லப்பட்டு விட்டது.
மதுவிலக்குப் பிரச்சினையும் சுயராஜ்யம் கிடைத்தாலொழிய மதுவை விலக்க முடியாது என்று முடிவு கட்டப்பட்டது.
ராட்டின விஷயமும் சில வீடுகளில் மாத்திரம் சிறிது நாளே சுற்றி விட்டு முடிவில் கரையானுக்கும் நெருப்புக்கும் ஆளாயின.
ராட்டின தத்துவமும் மாறிவிட்டது. அதாவது ராட்டினம் வெள்ளைக் காரனுடன் சண்டை போட ஒரு ஆயுதமென்றும், கதர் ஒரு தேசீய உடை யென்றும், தேசீய சின்னமென்றும் சொல்லப்பட்டு விட்டது.
ஆகவே காந்தியாரின் சுயராஜ்ய நிபந்தனைகள் ஒன்றுகூட நிறை வேற்றப் படாமல் போய் விட்டதால் காந்தியார் வாக்குப் படியே சுயராஜ்யம் கிடைக்காமல் போய் விட்டது. இதனால் காந்தியார் தோல்வியடைய வேண்டியது நியாயமே ஆயிற்று.
கே :- இப்பொழுது, காந்தியார் என்ன செய்யப்போகிறார்?
ப :- ஜெயிலுக்குப் போகப் போகிறார்.
கே :- ஏன் ஜெயிலுக்குப் போகிறார்?
ப :- வில்லிங்டன் பிரபு பேட்டி அளிக்க மறுத்த பாவத்திற்கு பிராயச் சித்தம் செய்து கொள்ளுவதற்காக ஜெயிலுக்குப் போகிறார். இது வெளிப் படையான அர்த்தம். மற்றொரு தத்துவார்த்தம் என்னவென்றால் அவர் வெளியிலிருந்து கொண்டு என்ன வேலை செய்வது என்பது ஒரு பெரிய பரிசுப் பிரச்சினையாய் விட்டது. இரண்டாவது காந்தியார் வெளியில் இருந் தால் தோல்வியை ஒப்புக் கொண்டதாக ஆகிவிடும். ஆதலால் ஜெயிலில் இருக்கும் வரை அவரை இந்தக் கேள்வி கேட்க யாருக்கும் சந்தர்ப்பம் வாய்க்காது. அன்றியும் போர் இன்னும் முடியவில்லை என்கின்ற அருத்தத் தையும் கொடுக்கும். ஆதலால் ஜெயிலில் இருப்பதே உத்தமம் என்று கருதி விட்டார்.
கே :- வில்லிங்டன் பிரபு காந்தியாரை ஜெயிலில் வைத்து விடுவாரா?
ப :- ஜெயிலில் வைக்காவிட்டால் சர்க்கார் தோற்றுப் போய் விட்டார் கள். என்னை ஜெயிலில் வைக்கவிருந்த சர்க்காருக்கு சக்தியில்லை என்று முன் ஒருதரம் உப்பு சத்தியாக்கிரகத்தின் போது காந்தியார் சர்க்காரை பரிகாசம் செய்ததுபோல இப்போதும் பரிகாசம் செய்வார். அப்போது வில்லிங்டன் பிரபுக்கு ரோஷம் வந்து உடனே ஜெயிலில் வைத்துவிடுhர். (வைத்து விட்டார்: ப-ர்)
“யாரைவிட்டது காண் சுயமரியாதை எவரைவிட்டது காண்” என் கின்ற பல்லவிப்படி இன்றைய காந்தி வில்லிங்டன் சண்டை சுயராஜ்யத் தைப் பொருத்ததல்ல, பின்னை என்னவென்றால் அது முழுச் சுயமரியாதை யைப் பொருத்ததேயாகும். எப்படியெனில் தோற்றுப்போனாலும் பரவா யில்லை. ஊரார் சிரிப்பார்களே! என்பதுதான் கவலை என்று ஒருவர் சொன்னதுபோல் ரோஷம்தான் பாதிக்கின்றது.
கே:- அதென்ன அப்படிச் சொல்லுகிறீர் சுயராஜ்யம் கிடைக்கவில்லையே என்ற கவலை மக்களுக்கு இருக்காதா?
பதில்:- சுயராஜ்யம் என்றால் என்ன என்று எனக்கும் தெரியாது உமக்கும் தெரியாது. காந்தியாரும் இதுவரை விவரித்ததும் இல்லை; ஒத்துழையாமையின் போது ஒருவர் காந்தியாரை உம்முடைய சயராஜ்யத் துக்கு அர்த்தமென்னவென்று கேட்டார். அதற்கு பதில் காந்தியார் அது இப்போது சொல்லமுடியாது என்று சொல்லிவிட்டார். கடைசியாக காங்கிர சில் முடிவு செய்யப்பட்ட பூர்ண சுயேட்சை காங்கிரசின் லட்சியம் என்பது தான் சற்று விளக்கமாக ஜனங்களுக்கு தெரிந்தது. அதென்னவென்றால் ஆங்கிலேயர் இந்தியாவைவிட்டுப் போய்விட வேண்டியதாகும்.
கேள்வி:- அப்படியானால் அது எப்பொழுது முடியக் கூடிய காரியம்?
பதில்:- அது காந்தியாரின் மற்றொரு பட்டினி விரதத்துக்குப் பிறகுதான் சொல்லமுடியும்.
கேள்வி:- அதுவரை நாம் என்ன செய்வது?
பதில்:- அஹிம்சை, ஆத்மசக்தி, சத்தியம், சத்தியாக்கிரகம் என்கின்ற கடவுள் தன்மைகளில் நம்பிக்கை இல்லாமல் கையில் வலுத்தவன் காரியம் என்பதில் நம்பிக்கை வைத்து, ஜாதி மதம் தேசம் என்கின்ற வித்தியாச மில்லாமல் உலகில் உள்ள ஏழை மக்கள் எல்லோரும் ஒன்று கூடும்படியான மார்க்கத்தை செய்து ஏமாற்றுகின்றவர்களை ஒழிக்க முயற்சி செய்து கொண்டிருக்க வேண்டும்.
ஒரே ஒரு கேள்வி !
காங்கிரசுக்காரன் கேள்வி:- கடவுள் இல்லை என்று சொல்லுகின்றீர் களே அப்படியானால் ஒரு மனிதன் ஏன் பணக்காரனாய் இருக்கின்றான்? ஒரு மனிதன் ஏன் ஏழையாய் இருக்கிறான்.
சுயமரியாதைக்காரன் பதில்:- தனி உடமைக்கொள்கையை ஒழித்து பொதுவுடமைக் கொள்கையை ஏற்படுத்தாததால் ஒருவன் பணக்காரனா கவும், ஒருவன் ஏழையாகவும் இருக்க முடிகின்றது.
குடி அரசு –- உரையாடல் -– 06.08.1933