நமது கடமை
உலக முழுமையும், அந்தந்த நாடுகளில் அந்தந்த கக்ஷிகள் அரசியலைப் பிடித்து அந்தந்த தேசவாசிகளுக்கு நன்மை புரிகின்றோமென்று சொல்லிக் கொண்டு, பற்பல துவாராக்களில் உழைத்து வருகின்றன. நமது ஆங்கில நாட்டின் நாஷனலிஸ்ட் கட்சி, அதாவது தேசீயக் கக்ஷி என்று வழங்கும் ஒரு சார்பார், தோழர் ராம்சே மக்டொனால்டின் தலைமையின்கீழ் ஆங்கில நாட்டு அரசியலை நடத்தி வருகின்றார்கள். இவர்களுடைய முக்கியப் போக்கு என்னவெனில், இருக்கும் சமூகதிட்டத்தை வைத்துக் கொண்டு அங்கோர் சீர்திருத்தம், இங்கோர் சீர்திருத்தத்தைக் காட்டி, ஆண்டு வருவதாகும். பிரான்ஸ் நாட்டிலும், பழைய சேம்பர் ஆவ் டிப்புடிஸ் என்ற பழைய பார்லிமெண்டை வைத்துக் கொண்டு முதலாளி, சிறு முதலாளி இயக்கங்களைப் பாதுகாத்து வருகின்றனர். ஜர்மனியில் ஏகாதிபத்திய கெய்சர் ஆட்சியை உடைத்தும், மழை நின்றும் தூவானம் நிற்கவில்லை என்பது போல் ஜெர்மனியைப் பிடித்த “”சனியன்” ஒழியவில்லை. அவ்வுலகில், பெரும்பான்மையோர் தொழிலாளர், விவசாயிகளாக விருக்கின்றனர். ஏகாதிபத்திய அரசில் பட்டு வந்த கஷ்டங்களுக்கு விமோசனமின்றி அத்தேச வாசிகள் தற்போது பாசிஸ்டிகள் கையில் அகப்பட்டுக் கொண்டு வருந்துகின்றனர். அமெரிக்க நாடு டிமோக்கிராட்டிக்களென்றும், ரிப்பப்ளிக்கர்களென்றும் இவ்விரு கட்சிகளின் நடுவில் தவித்து தியங்குங்காலை, ரூஸ்வெல்ட் என்னும் பெரியோர் சோஷலிசத்தை முதலாளித் திட்டத்துக்குள் நுழைந்து பார்க்கலாமாவென்று பரீக்ஷித்து வருகின்றார். மற்ற அமெரிக்க ஐரோப்பிய சிற்றரரசுகளிலும் மேல் போன்ற பெரிய அரசுகள் தட்டித் தடுமாறிக் கொண்டு வருவதைப்போல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இந்த ராஜ்யங்களில் ஒன்றிலேனும், சாந்தமாகிலும், சமாதானமாகிலும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஐரோப்பிய, அமெரிக்க உலக மெங்கும் குழப்பங்களே அதிகரிக்கின்றன. கஷ்டங்களும் அதிகரிக்கின்றன.
ஐரோப்பா, அமெரிக்க உலகம் நிலை குலைந்து வருந்தி வருங்காலை, ஏனைய நாடுகளில் அதனினும் பதின்மடங்கு கேடாயிருப்பதைக் காணலாம். ஜனப்பெருக்கிலும், தரித்திரத்திலும் உயர்ந்த நாடு சீன தேசமெனலாம். அதில் 40 கோடி மக்கள் இரண்டு, மூன்று தளகர்த்தராட்சியில் கட்டுண்டு கலகங்களிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். அந்நிய அரசுகளால் அந்நாட்டு கக்ஷிகள் தூண்டப்பட்டு, முன்னுக்கு போக வொட்டாமல் தடுக்கப்பட்டு வருகின்றனர். அந்நாட்டு தேசீயக் கக்ஷியார் மாலுமியற்ற கப்பலைப்போல் தட்டுத் தடுமாறி நிற்கின்றனர். இன்னது வேண்டுமென்ற துணிவும் அற்று, நாற்பது கோடி மக்கள் பற்றில்லாத வாழ்க்கையில் மிதந்து வருகின்றனர். விளையும் நிலங்கள் தேசமுழுதும் நிறைந்திருந்தும் உலக நதிகளுக்கெல்லாம் பெரிய நதிகள் நிலங்களை நீர்ப்பாய்ச்ச செய்து வந்தும் அடுத்தடுத்து பஞ்சங்களால் கோடிக்கணக்கான மக்கள் பசியால் சாகின்றனர். இந்த பயங்கரமான துர்பாக்கியத்தில் சீனர் இருந்துவந்தும், முதலாளி ஆதிக்கத்தில் கட்டுண்ட ஜப்பான் தேசம், அதன் உள் நாட்டுக் குழப்பத்தையும் வறுமையையும் கவனியாது, சீன தேசத்தைப் படையெடுத்து, சென்னை ராஜதானிக்கொப்பான நீர்வளம், நிலவளம் பொருந்திய மஞ்சூரிய நாட்டைப் பிடித்துக் கொண்டது. தன்னுடைய நாட்டில் உண்டாயிருக்கும் அதிருப்திக்கு பரிகாரம் ஒன்றும் தேடாது, அயல்நாடுகளைப் பிடிக்கும் வண்ணம் தனது போர்த்தலத்தை அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலக சமாதானத்தை உருவமாக எடுத்திருக்கும் சோவியத் நிலங்களை அபகரிக்கவும் ஜப்பான் பார்க்கிறது. இத்யாதி குழப்பத்தில் உலக பேரரசுகளும் சிற்றரசுகளும் தடுமாறிக் கொண்டிருக்க, நமது இந்திய தேசத்தின் நிலைமை என்ன? இந்த வேதமோதும் நாடாகிலும் சுகப்பட்டு வாழ்கின்றதா?
“”சுயராஜ்யம் யாருக்கு?” என்ற புத்தகத்தின் முதல் பாகத்தை வாசித்தவர்கள், நமது இந்திய நாட்டின் தற்கால நிலைமையை எளிதில் உணர்ந்திருக்கலாம். பகிர் முகத்தில் விசேஷமொன்று மில்லாமையாகத் தோன்றினபோதிலும் அந்தர் முகத்தில் அதிர்ப்தியே நிறைந்துள்ளது. ரயில்கள் ஓடுகின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில்களுக்கும், குளங்களுக்கும் யாத்திரை செல்கின்றனர். தேரும், திருவிழாக்களும் கோவில்களில் குறைவில்லை. சர்க்கார் வரி வசூலாகி வருகின்றது. சேனை, சிப்பந்திகளும், போலீசும், தத்தம் காபந்துகளைச் செய்து வருகின்றனர். இதன் மத்தியில் மக்கள் வாழ்க்கை பரிதாபகரமாக இருந்து வருவது பார்வையிலேயே தோன்றும். இந்த உள்நாட்டு மக்களின் தீமையை பரிகரிக்க இதுவரை ஆண்டுவந்த அரசியல் திட்டங்களுக்குப் பதிலாக புதியதோர் திட்டம் வருகையை யாவரும் எதிர்பார்க்கின்றார்கள்.
இந்த திட்டமாவதென்ன? அரசியல் மத்திய சபையில், 100க்கு 200 பேர் அங்கத்தினர் நியமிக்கப்படப்போகின்றனர். இவர்களை நியமிக்க முப்பது லட்சம் வாக்காளர்கட்குப் பதில், மூன்று கோடி வாக்காளர்கள் வரப்போகின்றார்கள். நிலம், நீர், வீடுவாசல் இல்லாத இருபது கோடி மக்களுக்கு ஓட்டுறிமை இல்லை. மகமதியர்களுக்குச் சில தனிப்பிரதிநிதிகளும், இந்துக்களுக்குச் சில தனிப் பிரதிநிதிகளும் சிற்சில மாகாணங்களில் கொடுக்கப்படுகின்றன. முதலாளி வகுப்பைச் சேர்ந்த நிலச்சுவான்தார்களும், வர்த்தகர்களும் சட்டசபைகளில் நிறைந்திருக்கப் போகின்றார்கள். தனிச் சொத்துரிமை, மதப் பாதுகாப்பு, ஜாதிக்காதரவு புதிய திட்டத்திலும் காக்கப்படப் போகின்றன. இனி தேச மக்களுக்கு என்ன வேண்டும்? இந்த பாதுகாப்புகளோடு ஐந்நூற்றம்பத்தாறு சிற்றரசுகளும் ஏகாதிபத்திய ஆட்சியில் கலந்து கொள்ள போகின்றனர். இவர்களுடைய நவரத்தினங்களிழைத்த தலைப்பாகைகளும், வயிர முடிகளும், வயிரத் தோடாக்களும், நவரத்தினமிழைத்த கண்டசரங்களும், காதுகளில் ஜொலிக்கும் வயிரக் கடுக்கன்களும் மகத்தான சட்டசபைகளில் ஜொலிக்கப் போகின்றன. இந்தக் காட்சியைக் காணும் முப்பது கோடி மக்களின் பசி ஆறிவிடுமன்றோ? தீரா வியாதிகளும் தீர்ந்து விடுமன்றோ? நாடும், நகரமும், தேசம் முழுமையும் பாலும், தேனும், தினைமாவும் நிறைந்தோடுமன்றோ? இந்த முக்கிய அம்சியங்களை எதிர்த்து முட்டுக் கட்டை போடவோ அல்லது ஒத்துழைக்கவோ, காங்கிரஸ் சுயராஜ்யக்கட்சி “”மறு ஜெனன”மெடுத்துள்ளது. கெல்கர்கள், தங்களது சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துகின்றனர். மூஞ்சேக்களும் இந்து மகாசபைகளை வலுக்கப்பார்க்கின்றார்கள். அரசாங்கமும் இந்தக் கட்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கப் போகின்றது. இதன் மத்தியில் நமது அதாவது சோஷியலிஸ்டுகள் வேலை என்ன?
முக்கியமாக நமது பல்வேறுபட்ட, பல பேர்களால் வழங்கப்பட்ட சங்கங்களை ஒன்றுபடுத்த வேண்டும். பலவிதக் கொள்கை களையும் அபிப்பிராயங்களையும் ஒரே முகமாக மாற்றி, தேசத்திலுள்ள மக்களுக்கு உணவும், நிலமும், உலக சமாதானமும் அடைய வேண்டி அதற்கு வேண்டிய நடவடிக்கைகளைத் தேட வேண்டும். தற்காலத்திற்கு வேண்டியவை மக்களது உடலும் உயிரும் பொருந்தி வாழவேண்டியதே. இந்தத் தத்துவத்தை உணர்ந்தவர்கள் ஒருவரே. மற்ற எல்லாவிதக் கட்சியினரும் பயனற்ற வியர்த்தமான காரியங்களை மேல் போற்றிக் கொண்டு, அரசாங்கத்தில் நுழைகின்றார்கள். ஜாதி, மதம், பொருள், செல்வம், செல்வாக்கு, சுகபோகம் இவைகளை நாடுகின்றவர்களால் தற்கால அரசுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சோசியலிஸ்டு களோவெனில் எது வொழிந்தால் மக்கள் சுகப்படுவார்கள். அவர்களைப் பிடித்தாட்டும் தீவினைகள் ஒழியும்? என்ற மனப்பான்மை மேற்கொண்டவர்கள், இந்த மனப்பான்மையை பெருக்க வைப்பதுதான் நமது முக்கிய கடமை.
புரட்சி தலையங்கம் 22.04.1934