ஆதி திராவிடர் சங்க வரவேற்பு

 

தாழ்த்தப்பட்டவர்கள் ஈடேற ஒரே ஒரு வழிதான் உண்டென்றும், அது உலகில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டிய முயற்சி எடுக்க வேண்டு மென்றும், அம்முயற்சிக்கு எதிரியாய் இருக்கும் சாதனங் களான தேசாபிமானம், மதாபிமானம் என்பவைகளை அடியோடு அழித்து உலக ஏழைகள் அபிமானம் – உலக தாழ்த்தப்பட்டவர்கள் அபிமானம் என்பதன் உணர்ச்சியுடன் வேலை செய்யத் துணிய வேண்டும் என்றும், உலக மனித சமூகத்தை 2 வகுப்பாகத்தான் பிரிக்க வேண்டு மென்றும், அது ஒன்று, தொழில் செய்து கஷ்டப்பட்டு வாழும் ஏழை, மற்றொன்று தொழில் செய்யா மல் மற்றவர்கள் தொழிலின் பயனை அனுபவிக்கும் சோம்பேரி செல்வ வான்கள் என்றும் இரண்டே பிரிவாகப் பிரிந்து  போராடி விடுதலை அடையத் தயாராயிருக்க வேண்டு மென்றும் பேசினார்.

(கடைசியாக ஒரு உபதேசியார் எழுந்து ராமசாமியின் உழைப்பையும் உபதேசத்தையும் தான் பல வருஷங்களாகப் பார்த்து வருவதாகவும், அவர் மூலம் தான் மக்கள் கஷ்டம் ஒழியக் கூடுமென்றும், ஆனால் அவர் கடவுளை நம்பவில்லை யென்று சொல்லுவது தனக்கு வருத்தத்தைக் கொடுக்கிற தென்றும் சொன்னார்.) அதற்கு ராமசாமி  பதிலளிக்கையில், கடவுளை நம்ப வேண்டும் என்பது ஒரு அடக்கு முறை என்றும், அது அவனவன் சொந்த விஷயமாகப் பாவிக்க வேண்டுமென்றும் கடவுள் மீது சிறிதாவது நம்பிக்கை இருப்பவர்கள் ராமசாமியால் கடவுள் இல்லாமல் போய் விடுமோ என்று பயப் பட வேண்டியதில்லை என்றும், உலகில் நடக்கும் அக்கிரமங்களுக்கும், ஏழை களை வஞ்சித்து கொடுமைபடுத்தி வேலை வாங்கி சோம்பேரியாய் வாழும் அயோக்கியத்தனத்திற்கும் பெரிதும் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் தான் காரணஸ்தர்களாகவும் பொருப்பாளிகளாகவும் இருக்கின்றார்களே ஒழிய வேறில்லை என்றும், ஆதலால் கடவுள் நம்பிக்கை போய் விட்டால் உலகம் என்ன கதியாகும் என்று யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் சொன்னார்.

குறிப்பு : 22-10-1932 இரவு கொழும்பு ராதாபுரம் டிவிஷன் திருநெல்வேலி ஜில்லா ஆதிதிராவிடர் சங்கத்தின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்துப் பேசியது.

குடி அரசு – சொற்பொழிவு – 13.11.1932

You may also like...