தஞ்சை ஜில்லா மகாநாடு
இம்மாதம் 8, 9 தேதிகளில் தஞ்சை ஜில்லா மூன்றாவது சுயமரியாதை மகாநாடு நாகபட்டணத்தில் சிறப்பாக நடைபெற்ற விபரம் மற்றொரு பக்கம் காணலாம். அதை ஊன்றிப் பார்ப்பவர்களுக்கும், நேரில் மகாநாட்டு நடவடிக் கைகளைக் கவனித்தவர்களுக்கும், தமிழ் நாட்டில் எந்த இயக்கத்தை எப்படிப் பட்ட கொள்கையை மக்கள் ஆண், பெண், இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் முதலியவர்கள் விரும்புகின்றார்கள்? எதில் ஊக்கமாய் இருக்கின்றார்கள்? என்பது விளங்கும்.
மகாநாடு நாகையில் நடைபெற வொட்டாமல் செய்ய வெளியிலிருந்து செய்யப்பட்ட சில சூட்சிகள் மகாநாட்டுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மேல் கூட்டம் சேர்த்துக் கொடுத்து அதி விமரிசையாய் அதாவது ஒரு மாகாண மகாநாடு போல் நடத்திக் கொடுத்து விட்டது. ஆகையால் அத்திருக் கூட்டத் தாருக்கு மகாநாடு நடத்தியவர்களின் நன்றியறிதல் உரியதாக வேண்டும் என்பதில் குற்றம் இல்லை. மகாநாடு நடக்க 2, 3 நாட்கள் இருக்கும்போது சுமார் 150 கையெழுத்துக் கொண்ட விண்ணப்பம் ஒன்று அவ்வூர் கலெக்டருக்குச் சமர்ப்பித்து மகாநாட்டை நிறுத்த 144 உத்திரவு போட வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ளப்பட்டிருந்தது.
இதே போல் இதற்கு முன் 1931ம் வருஷம் நடந்த நாகை மகாநாட்டிலும் பலர் பொதுஜனங்களிடம் விஷமப் பிரசாரம் செய்ததும், தெருக்களில் காலித்தனம் செய்ததும், அது சம்மந்தமாய் அடி தடி நடந்து கிரிமினல் கோர்ட்டுகளில் விசாரணைகள் நடந்ததும் பலருக்கு ஞாபகமிருக்கலாம். அப்படி யெல்லாம் இருத்தும் அம்மகாநாடு தோழர் ஊ. பு. அ. சௌந்திர பாண்டியரவர்கள் தலைமையில் விசேஷமாய் நடைபெற்றதும் ஞாபக மிருக்கலாம்.
அதுபோலவே இந்த மகாநாட்டுக்கும் மேல் குறிப்பிட்டபடி பல தடுப்பு கள் செய்ய முயற்சிகள் பல செய்யப்பட்டிருந்தாலும் அவ்வூர் ஸ்தல அதிகாரி யாகிய கலெக்டர் அவர்கள் உள்ளூர் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ பிரமுகர்கள் பலரை அழைத்துத் தனியே விசாரித்து உண்மை இன்னது என்று அறிந்த பின்பு 144 உத்திரவு போட மறுத்ததுடன் மகாநாடு சிறப்பாய் நடக்க வேண்டு மென்று கோருவதாகவும் வெளிப்படையாய் தெரிவித்துக்கொண்டாராம். அதுபோலவே அங்குள்ள போலீஸ் அதிகாரிகளும், சில காங்கிரஸ் தொண்டர் களும், சில முஸ்லீம் பிரமுகர்களும், சில கிறிஸ்தவ நண்பர்களும் 2 நாளும் மகாநாட்டுப் பந்தலில் இடைவிடாது கூடவே இருந்து மகாநாட்டை உற்சாகப் படுத்தி ஆனந்தித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
மற்றும் ஒரு விசேஷம் என்னவென்றால் இரண்டொரு முக்கிய அதிகாரிகள் மற்ற ஜனங்களுக்குத் தெரியாமல் கூட்டத்திற்கு வந்து விஷயங்க ளைக் கவனித்துச் சென்றதாகவும் இரண்டொரு பிரசங்கங்களைப்பற்றி தாங்கள் இதுவரை இப்படிப்பட்ட கருத்துக்கள் கொண்ட பிரசங்கங்கள் கேட்டதில்லை என்றும், அவற்றில் கடுகளவாவது குற்றம் சொல்ல இட மில்லை என்றும், இதுதான் இனி இந்தியாவுக்கு வேண்டியதும், நடை பெறப்போவதுமானதென்றும் சொன்னதாகவும் திருப்திகரமாய் தெரிய வந்ததாகும்.
கூட்டத்திற்கு சுமார் 250 முஸ்லீம்களுக்குக் குறையாமல் இரண்டு நாள் 4 வேளைகளில் இருந்ததும், பெண்கள் 100 பேர்கள் வரை சதா கூடியிருந் ததும், கலப்பு மணம், விதவை மணம், கல்யாண ரத்து மணம், புரோகிதமற்ற மணம் ஆகியவைகளுக்கு அங்கேயே பல பேச்சு வார்த்தைகள் தனித் தனியே பிரமுகர்களிடத்தில் நடைபெற்றதும் சில கல்யாணப் பேச்சுகள் முடிவு பெற்றதும் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
மகாநாட்டுக்குத் தலைமை வகிக்க வந்த தோழர் வல்லத்தரசு அவர் களையும் மகாநாட்டுக்குத் துவக்குவிழா வாற்ற வந்த தோழர் நீலாவதி அம்மையாரையும், மேல்நாட்டுக்குச் சென்றுவிட்டு நாகைக்கு முதல் முதல் வரும் தோழர் ராமசாமியையும் பார்க்கவும் அவர்களுடைய சொற்பொழி வைக் கேட்கவும் என்று தஞ்சை ஜில்லாவிலும் தென்னாற்காடு ஜில்லாவில் உள்ள கிராமங்களிலும் முக்கிய பட்டணங்களிலுமிருந்து வந்த வாலிபர்கள் சுமார் 1000 பேர்களுக்கு மேலாகவே இருப்பார்கள் என்பதுடன் அவர்க ளுக்கு அங்கு காணப்பட்ட உற்சாகத்திற்கு அளவு கூறவேமுடியாது என்று சொல்வதில் சிறிதும் அதிகமில்லை. ஆனால் ஒரு விஷயம், சென்ற வருஷத் திற்கு முந்தியவருஷ மகாநாடுகளில் காணப்பட்டதான செல்வவான்கள் உத்தியோகஸ்தர்கள், ஸ்தல ஸ்தாபனங்களின் தலைவர்கள் என்கின்ற கூட்டங் கள் பூதக்கண்ணாடி வைத்துத்தான் தேடிப்பார்க்கவேண்டி இருந்தது. கூடுமா னவரை மறைந்துகொள்ளவே முயற்சித்திருக்கிறார்கள் என்றும் தெரியவந்தது. என்றாலும் வாலிபர்களாய் உள்ள செல்வவான்களும் வாலிபர்களாய் உள்ள சில உத்தியோகஸ்தர்களும் வந்து இருந்ததுடன் தங்களை தைரியமாகவும் உறுதியாகவும் மகாநாட்டு நடவடிக்கைகளில் காட்டிக் கொண்டார்கள். ஆகவே மேற்கண்ட காரியங்களில் இருந்து சுயமரியாதை இயக்கத்தின் போக்கு இன்னது என்பதும் அது எந்த தன்மையில் விளங்குகின்றது என்பதும் வாசகர்களுக்கு ஒருவாறு விளங்கக்கூடும் என்றே கருதுகின்றோம். தவிர மகாநாட்டு தலைவர் தோழர் வல்லத்தரசு அவர்களது தலைமை உபன்யாசம் சற்று நீண்டதாய் இருந்தாலும் அவ்வுபன்யாசமானது சுய மரியாதை இயக்கத்தின் 4, 5 வருஷ சரித்திரத்தை ஒருவாறு விளக்கி அதன் படிப் படியான விருத்தியையும், முற்போக்கையும் சுட்டிக்காட்டுவதாய் இருக் கின்றது என்பதுடன் வாலிபர்களுக்கு உற்சாகத்தையும் பிற்காலத்தில் பலமான நம்பிக்கையையும் உண்டாக்கும் தஸ்தாவேஜாயிருக்கிறது.
மகாநாட்டுக்கு துவக்க விழாவாற்றிய தோழர் நீலாவதியம்மையாரின் உபன்யாசம் ஆண்களைத் திடுக்கிடச் செய்தும், பெண்கள் நிலைமையை எடுத்துக்காட்டி ஆண்மக்களை வெட்கி தலைகுனியச் செய்தும்விட்டது. அது போலவே வரவேற்புத் தலைவர் தோழர் சிவராமசாமி அவர்கள் சர்க்கார் உத்தி யோகத்தில் இருப்பவர். ஆனாலும் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். ஆனாலும் தைரியமாய் முன்வந்து இந்தப் பொருப்புள்ள பதவியை ஏற்றுக் கொண்டதோடு பல தத்துவங்கள் கொண்ட உபன்யாசமானது போற்றத்தக்கதேயாகும்.
நிற்க அங்கு மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒரு முக்கிய தீர்மானமாவது:-
“ சென்னை மாகாணத்தில் தஞ்சை ஜில்லாவை ஒரு “மாடல் ஏரியா வாக” (பகுதியாக) எடுத்துக்கொண்டு சுயமரியாதை இயக்க ஜில்லா, தாலுக்கா, கிராமங்களை ஏற்படுத்தி நமது வேலைத்திட்டத் திற்கண்ட துறைகளிலும் வேலை செய்து காண்பிக்க ஒரு கமிட்டி நியமிக்க இம்மகாநாடு கேட்டுக் கொள்கிறது”
என்பதாகும்.
இது அன்று அங்கு கூடியுள்ள இளைஞர்கள் ஊக்கத்தாலும் வேகத் தின் உணர்ச்சியாலும் ஏற்பட்டது என்று சொல்லக்கூடுமானாலும் உண்மை யிலேயே தஞ்சை ஜில்லாவானது இது சமயம் இயக்க சம்பந்தமான எந்த அபிப்பிராயத்துக்கும் தலை சிறந்து விளங்கத் தயாராயிருக்கின்றது என்பதில் ஆnக்ஷபணை இல்லை. ஆனாலும் தஞ்சை ஜில்லாவிலுள்ள பார்ப்பனர் களைவிட மிகக் குறுகிய நோக்கமே அந்த ஜில்லா மிராசுதார்களும், செல்வ வான்களும் பார்ப்பனரல்லாத வக்கீல்களில் பலரும் ஸ்தல ஸ்தாபனங்களில் கலந்துள்ளவர்களுமானவர்களின் மனப்பான்மை இருந்து வருகின்றது என்பதை ஒளிக்காமல் சொல்லித் தீர வேண்டியதாய் இருக்கின்றது.
தஞ்சை ஜில்லாவில் இதுசமயம் பார்ப்பனரல்லாதார் என்கின்ற உணர்ச்சி மேற்கண்ட கூட்டத்தார்களில் முன் இருந்ததில் 100க்கு 25 பாகம் கூட இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இதற்குக் காரணம் பார்ப்பனர்கள் தங்கள் ஜாதி உயர்வு போய் விட்டால் தங்கள் நிலை மோசமாகிவிடும் என்று எப்படிப் பயப்படுகின்றார்களோ அதேபோல் பார்ப்பனரல்லாத மிராசுதாரர் கள் முதலியவர்களும் தங்களுக்குள் ஏற்பட்ட கட்சிப் பிணக்கால் பார்ப்பனர் விரோதம் வந்தால் தாங்கள் கவிழ்ந்து விடுவோம் என்ற பயமும் பணக்காரத் தன்மைக்கு உண்டான உயர்வும், மதிப்பும் போய்விட்டால் தங்கள் நிலை மிகமோசமாய்ப் போய் விடுமே என்ற கவலையும் சேர்ந்து அவர்களை உலக நடப்பில் இருந்தே தள்ளி ஒதுக்கி வைத்து விட்டதுடன் சதாகாலமும் உத்தியோகம், பதவி, பணக்கொள்ளை என்கின்ற “பேய்கள்” பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கின்றன.
இதன் பயனாய் அந்த நாட்டு மிராசுதாரர்கள், பெரிய மனிதர்கள், ஸ்தல ஸ்தாபன தலைவர்கள் என்பவர்கள் பார்ப்பனரல்லாதாராய் இருந்தாலும் ஏழை மக்களின் தாழ்த்தப்பட்ட மக்களின் நன்மைகளுக்கும், விடுதலை களுக்கும் பார்ப்பனர்களைப் போலவே பெரிய எதிரிகளாகவும் முட்டுக் கட்டையாகவும் தான் இருக்கிறார்கள்.
எனவே தஞ்சை ஜில்லாவை சுயமரியாதை மாடல் சென்டராக ஆக்குவது என்பது அந்த ஜில்லாவில் உள்ள மேல்கண்ட கூட்டத்தாரின் யோக்கியதையை வெளியாக்கி பொது ஜனங்களுக்கு அவர்களிடம் இருக்கும் பயத்தையும், பயத்தினால் ஏற்பட்ட மரியாதையையும் ஒழிக்க வேண்டும் என்பதே முக்கிய காரியமாகும். இந்தக் காரியத்தை ஒவ்வொரு ஜில்லாவிலும் செய்து வருவதுதான் சுயமரியாதைத் தொண்டின் முக்கிய தத்துவமாகும்.
ஆதலால் தஞ்சை ஜில்லா வாலிபர்கள் அவர்கள் மகாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானத்தைக் காரியத்தில் நடத்திக் கொடுப்பார்கள் என்றே கருதுகிறோம்.
அந்தப்படி இவர்கள் நடத்திக்காட்டி விட்டார்கள் என்பதற்கு அத் தாட்சி என்னவென்றால் இனிவரப்போகும் தேர்தல்களில் செல்வவான்களின் நிலை என்ன ஆகின்றது என்பதேயாகும்.
குடி அரசு – தலையங்கம் – 16.04.1933