திருவாங்கூரில் சமதர்ம முழக்கம்

தோழர்களே! இன்று நான் பேசப்போவது உங்களுக்கு சந்தோஷமாக இருக்காது. ஏனெனில் நீங்கள் அநேகமாய் இன்று இங்கு நடக்கும் உற்சவத் திற்காக வந்தவர்கள். மிகுந்த பக்திவான்கள். நானோ அவற்றையெல்லாம் வீண் தெண்டம் என்றும், புரட்டு என்றும் சொல்லுகிறவன். அதுமாத்திரமல் லாமல் உங்களது கடவுள் உணர்ச்சி, மத உணர்ச்சி, ஜாதி உணர்ச்சி, தேச உணர்ச்சி ஆகியவைகளையும், உங்களது சமூகத்தில் வெகுகாலமாய் இருந்துவரும் பழக்க வழக்கங்களையும் குற்றம் சொல்வதோடல்லாமல் அடியோடு அழித்து ஒழித்துவிட வேண்டுமென்றும் சொல்லுகின்றவன். இதை நீங்கள் பொறுத்துக் கொண்டிருப்பீர்களா என்பது எனது முதல் சந்தேகமாகும். நீங்கள் பொறுத்தாலும் சரி பொறுக்காவிட்டாலும் சரி அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால் உங்களிடம் நான் முதலிலேயே என்னிஷ்டப் படி பேச அனுமதி வாங்கிவிட்டேன். ஆனால் நீங்கள் நான் பேசப்போவதைப் பற்றி வருத்தப்படுவதற்குமுன் ஒரு விஷயத்தை மாத்திரம் கவனித்துப்பார்க் கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். அதென்னவென்றால் நான் ஏன் இப்படிப் பேசுகிறேன். இதனால் எனக்கு என்ன லாபம்? இந்தப்படி பேசுவதனால் யாராவது எனக்கு பணம் கொடுப்பார்களா? ஒரு மனிதன் என்னைப் போல் வயது சென்றகிழவன்ஒருவன் ஜாதியைக் குற்றம் சொல்லவும், மதத்தைக் குற்றம் சொல்லவும், கடவுளைக் குற்றம் சொல்லவும், கோவிலைக் குற்றம் சொல்லவும், தேசத்தைக் குற்றம் சொல்லவும், அரசாங்கத்தைக் குற்றம் சொல்ல வுமான ஒரு கஷ்டமும் துக்கமுமான காரியத்தை ஏன் செய்ய வேண்டும். நான் இதற்குமுன் இவைகளையெல்லாம் ஒரு காலத்தில் ஆதரித்திருப்பது உங்களில் பலருக்கு நன்றாய்த் தெரியும். தேசியத்திற்காக பலதடவை சிறை சென்றதும் உங்களுக்குத் தெரியும்அப்படியிருக்க இப்போது இப்படிச் சொல்ல என்ன காரணம்? என்பதை யோசித்துப் பாருங்கள். இவைகளால் மக்கள் சமூகத்திற்கு ஏற்பட்ட நன்மை என்ன? என்று யோசித்துப்பாருங்கள்.

உலக சரித்திரம் கிடைத்த காலந்தொட்டு ஜாதி, மதம், கடவுள், தேசம், சமூகம், அரசாங்கம் ஆகியவை இருந்து தான் வந்திருக்கின்றனஇவை களைப் பற்றிய அபிமானங்களும், சீர்திருத்த முயற்சிகளும், பெரியார்களும், மகாத்மாக்களும் அவ்வப்போது தோன்றியும், பல சீர்திருத்தக் காரியங்களைச் செய்தும் தான் வந்திருக்கின்றனர்இவைகள் எல்லாம் மனிதசமூகத்திற்கு என்ன பயன் அளித்திருக்கின்றன? குறைந்தது ஒரு ஆயிரம் அல்லது 2000 வருஷ சரித்திரங்களையோ அல்லது அக்கால நிலையை உணர்த்தும் புராணக் கதைகளையோ எடுத்துக் கொண்டீர்களேயானால், அன்றைக்கும் இன்றைக் கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை யோசித்துப்பாருங்கள். 2000 வருஷத்திற்கு முன் இருந்த சண்டாளனும், ஏழையும், கஷ்டப்படும் கூலியும், பட்டினி கிடந்து, பசியால் வாடி, மழையால் நனைந்து வெயிலால் காய்ந்து உடுக்க உடையில்லாமல் படுக்கப் பாயில்லாமல் இருக்க இடமில்லாமல் அலைந்து திரிந்து அவதிப்படும் மக்களும் கோடிகோடியாய் இன்றும் இருந்து தான் வருகின்றார்கள் என்றால் இதுவரை இருந்து வந்த மத அபிமானமும், கடவுள் அபிமானமும், தேச அபிமானமும், அரச அபிமானமும் ஆகியவை கள் இக்கொடுமைகளை ஒழிக்கவோ, அல்லது இனிமேல் உலகில் இக் கொடுமைகள் இல்லாமல் செய்யவோ முடியவில்லை என்றால் இன்னமும் எத்தனை நாளைக்கு அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது போன்ற முட்டாள் தனமான வேலைகளாகிய மேற்படி அபிமானங்களை காப்பாற்றிக் கொண்டிருப்பது என்று கேட்கிறேன்.

சமீபகாலம்வரை அரசர்களை விஷ்ணு அவதாரமென்றும், விஷ்ணு அம்சமென்றும் சொல்லி வந்ததுடன் ஒவ்வொரு கூட்டங்களிலும் ராஜ விசுவாசத் தீர்மானம் செய்த பிறகே காரியங்களை துடங்கியும் வந்தோம். அதுபோலவே சர்வத்திற்கும், கடவுளே ஆதாரபூதம் என்றும் அவர் அருள் பெறுவதே எல்லாவற்றிற்கும் அவசியமானதென்றும் கருதி எந்தக் காரியம் செய்தாலும், எந்த எண்ணத்தை நினைத்தாலும், எந்தப் பேச்சைப் பேசினாலும், கடவுளை நினைத்து கடவுளை ஸ்தோத்தரித்த பிறகுதான் மற்ற காரியங்களை செய்துவந்தோம். அதுமாத்திரமாகோயிலில்லா ஊரில் குடி இருப்பது பாவம்என்று காடுமேடுகளில் எல்லாம் ஊர் கிராமங்களிலெல்லாம் கோயில் கள் கட்டினோம்சில கோயில்கள், கோட்டைகள் போல் கொத்தளங்கள் போல் கட்டி பல சுற்றுப்பிரசாரங்கள் விட்டு மதில்களும், வானமளாவக் கோபுரங்களும் கட்டி தங்கத்திலும், வெள்ளியிலும், தாம்பிரத்திலும், சாமிகள் செய்து ரத்தினங்களால் நகை போட்டு ஊரில் யார் பட்டினிகிடந்தாலும் எந்தக் குழந்தைக்கு பால் இல்லாவிட்டாலும், யாருக்கு வேஷ்டி துணி இல்லாமல் நிர்வாணமாய் இருந்தாலும், யாருக்கு பெண்டு இல்லாமல் கஷ்டமாய் இருந்தா லும் சிறிதும் லட்சியமில்லாமல் பால் பழம் பஞ்சாமிர்த அபிஷேகமும் ஆராதனையும், பட்டு பீதாம்பர உடையும் வருஷா வருஷம் கல்யாண திரு விழாக்களும், வைப்பாட்டி திருவிழாக்களும் செய்த வண்ணமாய் இருந்த துடன் மக்களில் கோடிக்கணக்கான பேருக்கு நாள் ஒன்றுக்கு ஒரு வேளை சாப்பாட்டிற்கும் விதி இல்லாவிட்டாலும் எண்ணிலடங்கா கடவுள்களுக்கு தினம் 4-வேளை 5-வேளை 6-வேளை மூட்டை மூட்டையாய் பொங்கிப் போட்டு ஆராதனை அம்சை செய்து வந்தோம்.

இவ்வளவு தானா ஒவ்வொரு கோவிலுக்கும் , ஒவ்வொரு சாமிக்கும் வருஷம் 10 லட்சம், 20 லட்சம் வரும்படி வரும்படியான பெருமைகளையும், சொத்துக்களை தேடிவைத்தோம். மத விஷயத்திலும் எத்தனையோ லட்சக்கணக்கான பெயர்கள் அடிக்கடி உயிரைக்கொடுத்து மதத்திற்காக என்று தலையைச் சிறைத்தும், கத்தரித்தும், முகத்தைச் சிறைத்தும், வளர்த்தும், காதை ஓட்டை செய்தும், மூக்கை ஓட்டை செய்தும், மண்ணைப்பூசியும், சாம்பலைப் பூசியும், சேற்றைப் பூசியும், சாணியை சாப்பிட்டும், மூத்திரத்தைக் குடித்தும், பட்டினி கிடந்தும் மற்றும் என்ன என்னவோ காட்டுமிராண்டித்தனமான காரியங்களைச் செய்தும் மதத்தைக் காப்பாற்றினோம். இதுபோலவே தேசத்திற்கு என்றும் அடிபட்டும், உதைபட்டும், சிறைசென்றும், தூக்கு மேடையில் உயிர்விட்டும் அன்னிய தேசத்தாருடன் போர்புரிவதென்னும் காரியத்தில் 10 லட்சக்கணக்கான பேர் உயிர்விட்டும் தேசாபிமானம் காட்டி னோம்இவ்வளவும் இன்று என்ன ஆயிற்று. பழய நிலையை வளர்க்கின்றதா அல்லது புதிதாக ஏதாவது சௌகரியம் செய்ததா? யோசித்துப்பாருங்கள். இன்று இன்னாட்டில் தற்குறிகள் எவ்வளவு பேர்கள்? 100க்கு 871/2 பேர் தற்குறிகளல்லவா? இன்னாட்டில் ஏழைகள் பாடுபட்டும் பட்டினி கிடப்பவர் கள்தங்கள் பிள்ளைக்குட்டிகளை காப்பாற்றமுடியாமல் மானத்தை விற்றும், விபசாரித்தனம் செய்தும் ஜீவிக்க வேண்டியவர்கள் எத்தனைபேர் யோசித் துப் பாருங்கள்.   இந்த மேல்கண்ட அபிமானங்களுக்கு மரியாதை கொடுத்து இன்னும் எத்தனை ஆயிரம்வருஷம் பரீiக்ஷ பார்ப்பது? அவைகளை சீர்திருத்தம் செய்ய இன்னும் எத்தனை வருஷம் காத்திருப்பது? என்பதை யோசித்துப் பாருங்கள். நான் சொல்லுவதென்ன வென்றால் இனி இந்த அபிமானங்களால் அதாவது ஜாதி, மத, கடவுள், தேசம், அரசு ஆகிய அபிமானங்களால் யாதொரு பயனும் இல்லை யென்றும் அவைகள் போலி யும், சூட்சியும் நிறைந்த ஏமாற்றல்கள் என்றும் தைரியமாய்ச் சொல்லுகின் றேன்.   ஆகையால் அதை விட்டு விட்டு மனுஷ்ய அபிமானம் என்கின்ற முறையில் ஒருவருக்கு ஒருவர் அபிமானம் வைத்து அன்பு வைத்து மனிதருக்காக மனிதர் உழைப்பதும் அபிமானம் வைப்பதும் என்கின்ற கொள்கையை ஏற்று நடத்த வேண்டும் என்று தான் சொல்லுகின்றேன்.

இனி ஜாதி மதம் கடவுள் தேசம் அரசு ஆகிய எவற்றிற்கும் சிறிதும் இடம்கொடாமலும் மனித அபிமானத்திற்காக மேல் கண்டவைகளில் எதை வேண்டுமானாலும் இழக்கவும் தயாராய் இருக்க வேண்டும். அன்றுதான் எல்லோரும் மனிதர்களாக இருக்க முடியும். இதனால் ஆபத்து ஒன்றும் ஏற்பட்டு விடாது என்றே எண்ணுகிறேன். ஆனால் இவைகளை நீங்கள் நன்றாய் யோசித்துப்பாருங்கள். பழய காரியங்கள் பயனளிக்காததாலேயே தான் இதைப்பற்றி பேசுகிறேன். உங்கள் புத்தியைக்கொண்டு ஆராய்ந்து பார்த்து உங்களுக்கு சரியென்று பட்டத்தைச் செய்யுங்கள்நான் சொல்லுவது குற்றமாகவும் துவேஷமாகவும் இருந்தாலும் இருக்கலாம்.

தோழர்களே! இன்றைய மகாநாடு முடிவடைந்துவிட்டது என்றாலும் நிகழ்ச்சிக்குறிப்பில்  எனது முடிவுரை பாக்கி இருக்கிறது இனிநான் என்ன சொல்வது என்பது விளங்கவில்லை. ஆனாலும் ஒரு விஷயத்தில் எனது அபிப்பிராயத்தைச் சொல்ல ஆசைப் படுகிறேன். அதென்னவென்றால் இன்று எல்லோரும் கோவில் பிரவேசத்தைப்பற்றி பேசினார்கள், நானும் ஒரு காரணம் பற்றி கோவில் பிரவேசத்திற்கு முயற்சித்தவன் தான். ஈரோட்டில் தேவஸ்தானக் கமிட்டியால் கோவில் பிரவேசம் பாசாக்கினதும் அந்தத் தீர்மானப்படி சிலர் கோவிலுக்குச் சென்றதும் அதனால் கேசுகள் நடந்து தண்டனை ஆனதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அதனால் பிரயோ ஜனமில்லை என்கின்ற முடிவுக்கு வந்ததோடு புதிதாக கோவில் பிரவேசம் பெறப்போகும் மக்களுக்கு புதிய கஷ்டங்களும் விளையக்கூடும் என்றே கருதிவிட்டேன். இப்பொழுது வரவர கோவில்களே தேவையில்லை என்றே தோன்றி விட்டது. கடவுளைப்பற்றிய நம்பிக்கை எப்படி இருந்தாலும் கோவிலும், பூசையும், உற்சவமும் அவசியமா? என்று யோசித்துப்பாருங்கள். தோழர் கேளப்பன் அவர்களே கடவுள் உண்டோ இல்லையோ தனக்கு தெரியாது என்று சொன்னார். இந்தமாதிரி சந்தேகப்பட்ட காரியத்துக்கு எவ்வளவு செலவு, மெனக்கேடு, கஷ்டம் என்பதை யோசித்துப் பாருங்கள். கடவுள் இருப்பதாக வைத்துக்கொண்டாலும் அது எல்லோருக்கும் ஒன்று போல் இல்லாமல் மக்களை பாழ்படுத்துகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தம், ஒவ்வொரு குணம், ஒவ்வொரு தோற்றம் சொல்லுகிறார்கள். இந்த மாதிரி இப்போது ஏதாவது ஒரு வஸ்துவைப்பற்றி ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி சொன்னால் அதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? அல்லது அந்த வஸ்த்துவை நம்புவீர்களா? எந்தக் கடவுளுக்கு எப்படிப்பட்ட தத்து வார்த்தம் சொன்னாலும் அதனால் ஏற்படுகிற பயன் என்ன என்பதும், அதில் என்ன வித்தியாசம் என்பதும் யோசிக்க வேண்டிய காரியமாகும். கோவில் களை எல்லாம் இடித்துவிடுவதால் எந்தக் கடவுளுக்கும் எவ்வித நஷ்டமும் ஏற்பட்டு விடாது. ஆகையால் யாரும் பயப்பட வேண்டாம்அனாவசியச் செலவும், மதியீனமும் விலகிவிடும். நீங்கள் எந்த முறையில் கடவுளை நிர்ணயத்தாலும் எந்த முறையில் எவ்வளவு நல்ல கருத்தில் மதத்தை நிர்மாணித்தாலும் பலன்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்குமே தவிர மூடநம்பிக்கை கடவுளைவிட குருட்டுப் பழக்க மதத்தைவிட சீர்திருத்த கடவு ளும் பகுத்தறிவு மதமும் ஒன்றும் அதிகமாய் சாதித்துவிடப்போவதில்லை.

எப்படியானாலும் ஒரு கடவுளை சிருஷ்டிப்பதாயிருந்தால்அவர் நமது கண்ணுக்குத் தெரிய மாட்டார் அவரை வணங்கினால் பிரார்த்தித்தால் பயன் உண்டுஎன்றுதான் சொல்லியாக வேண்டும். எப்படிப்பட்ட மதத்தை சிருஷ்டித்தாலும் அதற்கு ஒரு உபதேச கர்த்தாவை சிருஷ்டித்தாக வேண்டும். அக்கர்த்தாவுக்கு தெய்வீக தன்மை ஏற்படுத்தித்தான் ஆக வேண்டும். அவர் மூலமாக ஒரு வேதத்தை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். அவ்வேதம் கடவுளால் அவருக்கு சொல்லப்பட்டது என்பதை ஒப்புக் கொண்டு தான் ஆகவேண்டும். அதை மாற்றுவதற்கு யாருக்கும் அதிகாரமில்லை என்று சொல்லித்தானாக வேண்டும். பிறகு அந்தப்படி நடக்காதவனையோ, அல்லது அந்தக் கர்த்தாவை ஒப்புக் கொள்ளாதவனையோ வையவோ, கொலை செய்யவோ முயற்சித்தாக வேண்டும். இவ்வளவும் மாத்திரம் அல்லாமல் அந்த வேதத்திற்கு சுயநலக்காரர்கள் சோம்பேரிகள் ஆகியவர்கள் தங்கள் நலத்துக்கு ஏற்ற மாதிரியாகச் செய்து கொள்ளும் கருத்தை எவனாவது மாற்றிச் சொன்னால் அது எவ்வளவு உண்மையாய் இருந்தாலும் அவன் மீது பாய்ந்து தான் ஆகவேண்டும்இந்தப்படி தான் இது வரை நடந்துவந்திருக்கிறது. ஆகவே எந்த வழியில் எந்த மாதிரியில் எவ்வளவு நல்ல முறையில் கடவுளையும், மதத்தையும், வேதத்தையும் சிருஷ்டித்துக் கொண்டாலும் அது மனித சமூகப் பெரும்பான்மை மக்களுக்கு ஆபத்தையும், கேட்டையும் பிரிவினையும் முறட்டுத்தனத்தையும் குரோதத்தையும் அடிமைத்தனத்தை யும் உண்டாக்கியே தீரும். இதுவே இன்றைய எல்லா மதத்தினுடையவும் அனுபோகம்! பிரத்தியட்ச அனுபோகம்!!

ஆதலால், கடவுள், மதம், வேதம் என்கின்றதான கற்பனைகளை ஒழிப்பதும் அழிப்பதுந்தான் மனிதனுக்கு உண்மையான விடுதலையே ஒழிய மனிதனை கடவுள் உணர்ச்சியில் புகுத்தி மத வெறியில் ஆழ்த்தி வேதத்திற்கு அடிமையாக்கி கல்லில் முட்டிக் கொள்ள கோவிலுக்குள் தள்ளுவது மிகவும் மோசமும், கெடுதியுமான காரியமாகும்.

குறிப்பு: திருவாங்கூரைச் சேர்ந்த பரூரை அடுத்துள்ள மூத்த குன்னத்தில் பரூர் காஸ்மாபாலிட்டன் புரோக்ரிசிங் சங்கத்தாரால் 11.02.1933 & 12.02.1933 இரண்டு நாள்களில் நடைபெற்ற மாநாட்டில் 12.02.1933இல் மாநாட்டிற்கு தலைமையேற்று ஆற்றிய உரை.

குடி அரசுசொற்பொழிவு – 26.02.1933

 

 

You may also like...