ஈ.வெ.ராவுக்கு சென்னிமலை யூனியன் போர்டார் வரவேற்பு
தோழர்களே! இன்று இவ்வூர் யூனியன் போர்டார் அழைப்புக்கு இணங்கி வந்த சமயம் உற்சவக் கூட்டத்திற்காக ஒரு பொதுக்கூட்டம் கூட்ட வேண்டுமென்று சொன்னதால் இங்கு பேச ஒப்புக்கொண்டேன். ஆனால் இங்கு கூடியிருக்கும் நீங்கள் பெரிதும் இந்த உற்சவத்திற்காக வந்தவர்கள்.
நான் பேசும் விஷயம் உங்கள் மனத்திற்கு திருப்தியாய் இருக்காது, ஆனாலும் உங்கள் மனதை புண்படுத்தவேண்டும் என்று நான் பேசவர வில்லை. ஆனால் இதன் பயன் என்ன என்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளவே நான் சில விஷயங்களைப் பேசுகிறேன்.
இன்றைய உற்சவமும், கொண்டாட்டமும் என்ன கருத்தைக் கொண் டது? சுப்பிரமணியசாமிக்கு கல்யாணம். கல்யாணம் செய்து கொண்ட சாமி தேர்மீது ஊர்கோலம் வருகின்றார். இதற்காக இத்தனை ஆயிரம் ஜனங்கள் வீடு வாசல், வேலை வியாபாரம் முதலியவைகளை விட்டு விட்டு வந்து இன்று இங்கு கூட்டத்தில் நெருக்கப்படுகிறார்கள். பலர் காவடி தூக்கி ஆடுகிறார்கள். சாமிக்குக் கல்யாணம் என்பதில் ஏதாவது அறிவு இருக்கிறதா? வருஷந்தோறுமா கல்யாணம் செய்வது? இந்த காவடி தூக்கிக்கொண்டு கண்டபடி குதிப்பதிலும் உளருவதிலும் ஏதாவது அருத்தம் இருக்கிறதா? இதை அன்னிய மதக்காரனோ அன்னிய தேசத்தானோ பார்த்தால் என்ன சொல்லுவான்? வேறு மதக்காரன் இந்தபடி ஆடினால் நாம் என்ன சொல்லு வோம். நமது அறிவுக்கும் நாகரீகத்திற்கும் இது தானா அடையாளம்? எத்தனை வருஷகாலமாக இந்தப்படி மூடக்கொள்கையில் ஈடுபட்டு வரு கிறோம்? என்ன பலனைக் கண்டோம். மனிதனுக்கு முற்போக்கே கிடை யாதா? 2000, 3000 வருஷத்திற்கு முந்திய நிலை நம்மிடம் சிறிதும் மாற வில்லை. இம்மாதிரி நடவடிக்கை நம்மை மிருக பிராயக்காரன் என்று காட்டு வதுடன் நமது பணம் எவ்வளவு செலவாகின்றது, நமது நேரமும் ஊக்கமும் எவ்வளவு செலவாகின்றது பாருங்கள். கடவுளைப் பற்றிய எண்ணங்களும் பக்திகளும் நமக்கு என்ன பலனைக் கொடுக்கின்றன? அதிக பக்திக்காரன் தனக்கு வேண்டியதெல்லாம் கடவுள் தருவார் என்று எண்ணுகின்றான். கடவுளைப் பற்றி அதிகமாய் அறிந்தவன் சகலமும் கடவுள் செயல் அவனன்றி ஓரணுவும் அசையாது என்று எண்ணுகிறான். மனிதனுடைய முற்போக்கையும் அவனது கஷ்டத்தையும் கொடுமையையும் நிவர்த்தி செய்து கொள்ளுவதையும் இந்த எண்ணங்கள் தடைப் படுத்துகின்றன.
பல ஆயிர வருஷங்களாக ஒருவன் கீழ் ஜாதியாய் இருப்பதற்கும் கல்வி அறிவு பெறாமல் இருப்பதற்கும் சதா உழைத்து உழைத்து பாடுபட்டும் பட்டினியாயும் போதிய ஆதாரமும் வசதியும் இல்லாமலும் இருப்பதற்கும் இந்த எண்ணங்களே காரணமாகும் இது போலவே பாடுபடாத சோம்பேரிகள் கோடீஸ்வரர்கள் ஆகவும் தலைமுறை தலைமுiறாய் பிரபுக்களாகவும் மேல் ஜாதிக்காரர்களாகவும் இருப்பதற்கும் இந்த எண்ணங்கள் தான் காரணம். இந்த எண்ணங்கள் பணக்காரனுக்கும் சோம்பேரிக்கும் (பார்ப்பானுக்கும்) தான் அனுகூலம். தொழிலாளிக்கும், கூலிக்காரனுக்கும், பண்ணைய ஆளுக்கும் கெடுதியே ஆகும்.
ஏழைகள் தங்கள் தரித்திரத்திற்கும் கஷ்டத்துக்கும் கடவுளும் தலைவிதியும் தான் காரணம் என்று சொல்லிவிடுவாரேயாகில் அவர்கள் எப்படி தரித்திரத்தை நீக்கிக்கொள்ள முடியும்? அவன் தன் பாட்டின் பயனை எவன் அனுபவிக்கிறான்? ஏன் அனுபவிக்கிறான்? என்று பார்த்து அவை களை தடுக்கவேண்டும். இந்த காரியம் செய்ய ஒரு கடவுளும் ஒப்பாது. ஏனென்றால் கடவுளையும் தலைவிதியையும் பணக்காரனும் சோம்பேரியும் தான் உண்டுபண்ணுகிறான். ஆகையால் அவைகளை தங்களுக்கு தகுந்த மாதிரியாகத் தான் உண்டு பண்ணிக்கொள்ளுவார்கள். இதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம். இங்கு மாத்திரம் அல்லாமல் எல்லா தேசங்களிலும் பணக்காரர்கள் தங்கள் நன்மைக்கும் அது ஸ்திரமாய் இருப்பதற்கும் இந்த மாதிரியாகத்தான் கடவுளை சிருஷ்டித்து அதைப் பிரசாரம் செய்யப் பாதிரி களை ஏற்படுத்தி அவர்களுக்கு பணம் கொடுத்து காப்பாற்றி வருகிறார்கள். இந்தப் புரட்டுகளை உலகில் வெகு பேர் அறிந்திருந்தாலும் ரஷியா தேசத் தார்கள் தான் முதன் முதலில் இதை அழித்து நிர்த்தூளியாக்கிப் பணக்காரத் தன்மையையும் பாதிரித் தன்மையையும் ஒழித்தார்கள். ரஷியா தேசமானது இந்தியாவைப்போலவே பணக்காரருடையவும், பார்ப்பனர் (பாதிரி) களுடை யவும் ஆதிக்கத்தில் இருந்து ஏழை மக்களை வாட்டி வதைத்து வந்தது. ஆனால் அவர்கள் அதற்குக் காரணம் கடவுள் புரட்டும், மதப்புரட்டும் என்பதை உணர்ந்து அந்த இரண்டையும் அழிக்கத் தொடங்கி இன்று எலலோரும் சமமாய் வாழுகின்றார்கள். அங்கு சோம்பேரியோ, பிரபோ, பணக்காரனோ, முதலாளியோ, மிராசுதாரனோ, ஜமீன்தாரனோ கிடையாது. எல்லோரும் பாடுபடவேண்டியது. அதன் பயனை எல்லோரும் சமமாய் அனுபவிக்க வேண்டியது. ஒருவனை ஒருவன் ஏய்க்கவோ, ஒருவன் பாடு பட்டதை ஒருவன் அனுபவிக்கவோ முடியாது.
ஆனால் இன்று இங்கு “கடவுள் செயலால்” இருக்கும் தேசத்தில் ஒரு மனிதனுக்கு 1000 ஏக்கர் 10000 ஏக்கர் பூமி கூட இருக்கிறது. பூமிக்குச் சொந்தக்காரன் என்பவன் உழுவதில்லை, விதைப்பதில்லை, தண்ணீர் இறைப்பதில்லை, பாத்தி கட்டுவதில்லை, அறுப்பு அறுப்பதில்லை. ஆனால் விளைந்த வெள்ளாமையை எல்லாம் தன் வீட்டில் கொண்டு போய்க் கொட்டிக் கொள்ளுகிறான். உழுது, விதைத்து, தண்ணீர் பாய்ச்சி, அறுப்பு அறுத்த ஆளுக்கு ஓருபடி போராதா, இரண்டுபடி போராதா என்று அரை வயிற்றுக்குத்தான் கொடுக்கிறான். துணி வேண்டுமானால் தர்மத்துக்கு இனாம் கொடுப்பது போல் அரைத் துணி கொடுக்கிறான். வீடு வேண்டு மானால் காட்டில் கை அகலம் இடம் காட்டுகிறான். இதெல்லாம் பிச்சை கொடுப்பது போல் கொடுக்கிறான். ஆனால் மிராசுதாரனோ இவ்வளவையும் விற்று மாடி வீடு, மோட்டார் வண்டி, தேவடியாள், பிராந்தி, உஸ்கி, நாடகம், சினிமா, தாலூகா, ஜில்லா போர்டு மெம்பர், பிரசிடெண்ட்டு, முனிசிபல் சேர்மென் ஆகியவைகளுக்கு பதினாயிரக்கணக்காக வாரி செலவு செய்து ராஜ போகம் அனுபவிக்கிறான். இந்த அக்கிரமங்களுக்கு உடந்தையாய் இருக்கிற கடவுளும், அனுமதித்துக் கொண்டிருக்கிற கடவுளும், இன்னமும் நமது நாட்டுக்கு வேண்டுமா என்று கேட்கின்றேன். கடவுள் புரட்டு ஒழிந்தா லொழிய இந்த மிராசுதாரர்கள் ஒழியமாட்டார்கள். இவர்களது இப்படிப்பட்ட அகந்தையும் ஆணவமுமான காரியங்களும் ஒழியாது. உங்கள் தரித்திரங் களும் ஒழியாது.
ஆகையால் இவைகளை யெல்லாம் நன்றாய் யோசித்து உங்கள் கஷ்டத்திற்கும் அறிவீனத்திற்கும் காரணம் என்ன என்று கண்டுபிடித்து அதன் படி நடவுங்கள்.
குறிப்பு: 09.02.1933இல் சென்னிமலை போர்டு பள்ளிக்கூடத்தில் சென்னிமலை யூனியன் போர்டாரால் வழங்கப்பட்ட உபசார நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை,
குடி அரசு – சொற்பொழிவு – 19.02.1933