கோவை உபசாரப் பத்திரங்கள்

தலைவரவர்களே! கோவை சுயமரியாதை இயக்கத் தலைவரே!! வாலிபத் தோழர்களே!!! மற்றும் இங்கு கூடியுள்ள தோழர்களே!!!! உங்கள் பத்திரங்களின் மூலம் உங்களுக்குள்ள ஆவேசம் இன்ன தென்று நன்றாய் விளங்குகின்றது.  அவற்றையெல்லாம் என்னைப் புகழும் வழியில் காட்டி விட்டீர்கள். நான் அப்புகழ்ச்சிகளை ஒப்புக் கொள்ளக்கூடுமா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். ஆனால் ஒன்றை மட்டும் ஒப்புக் கொள்ளு கிறேன். அதாவது என்னென்ன காரியம் நான் சாதித்து விட்டதாகக் குறிப் பிட்டிருக்கிறீர்களோ, அந்த காரியங்கள் எல்லாம் அவசியம் நடந்தாக வேண்டும் என்றும், அதற்காக நாம் எல்லோரும் பாடுபட வேண்டும் என்றும் ஒப்புக் கொள்ளுகிறேன்.

சீர்திருத்தம்

தவிர அப்பத்திரங்களின் இரண்டொரு இடங்களில் நமது இயக்கம் சீர்திருத்த இயக்கமென்றும், பொது நல இயக்கமென்றும், குறிப்பிட்டிருக் கிறீர்கள், அவைகளை நான் ஒப்புக் கொள்வதில்லை.  நமது இயக்கம் சீர்திருத்த இயக்கமல்ல. ஆனால் அழிவு வேலை இயக்கம் என்றே சொல்லு வேன். சீர்திருத்தம் என்றால் எதை சீர்திருத்துவது? இன்றைய நிலைமையில் மனித வாழ்க்கைக்கு, சமத்துவத் தன்மைக்கு பெரும்பான்மையான மக்களா கிய ஏழை மக்கள் படும் கஷ்டமும், தரித்திரமும் இழிவும் நீங்குவதற்கு அனுகூலமாக என்ன கொள்கைகள், நடை முறைகள் இங்கு இருக்கின்றன? என்று பாருங்கள். அதாவது மத சம்பந்தமாகவோ கடவுள் சம்பந்தமாகவோ, பொருளாதார முறை சம்பந்தமாகவோ, அரசியல் சம்பந்தமாகவோ ஏதாவது ஒரு கொள்கை மனித சமூக ஜீவகாருண்யத்திற்காவது சமத்துவத்திற்காவது ஏற்றதாய் இருக்கின்றதா? என்று பாருங்கள்.  இருந்தால்தானே சீர்திருத்தம் செய்வீர்கள்? மதம்-கடவுள் பொருளாளன் அரசன் இவர்கள் எல்லோரும் மக்களை வருத்தி வஞ்சித்துக் கொடுமைப்படுத்தி வாழும் மக்களாவார்கள். இவர்கள் எல்லோருமே ஒரு தாயின் வயிற்றுப் பிள்ளைகள். ஆளுக்கொரு வேலை பார்க்கின்றவர்கள். இவர்களுக்கு அனுகூலமாகவே எல்லாம் இருக் கின்றன. இவைகளில் எதை சீர்திருத்தம் செய்தாலும் செய்ய நினைத்தாலும் அவை இன்னும் வெகு காலம் நிலைத்திருப்பதற்கு தான் பயன்படுமே தவிர மாறுதலை உண்டாக்க முடியாது. இவைகள் எல்லாம் அழித்தொழிந்தால் ஒழிய கஷ்டம் நீங்கப்போவதில்லை.

உதாரணமாக “மகா விசேஷம்” பொருந்திய ஒரு (பேரூர்) தீர்த்தக் குளத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.  அது “ஒரு கடவுளால் உலகிலுள்ள மக்களின் சர்வபாவமும் நீங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட பொற்றாமரைக் குளமாய்” இருக்கலாம். அதன் புராணமானது “அக்குளத்து நீரில் ஒரு துளி மேலே பட்ட மாத்திரத்தில் சகல பாபமும் தீர்ந்து வெகு காலத்திற்கு சொர்க் கத்தில் இருக்கக் கூடிய மகத்துவமுடைய” தென்று கடவுளே சொன்னதாக இருக்கலாம். ஆனால் இன்றைய தினம் அக்குளத்து நீரில் ஒரு துளி மேலே பட்டால் சொரியும், ஊரலும், குஷ்டநோயும் உண்டாவதாய் இருந்தால் அதை நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் முனிசிபாலிட்டி என்ன செய்யும்? தண்ணீரை சுத்தமாக்க மருந்துகள் போடலாம் என்று சொல்லுவீர்கள். மருந்து கள் போட்டபின்னும் அத்தண்ணீரின் குணம் அப்படியே இருந்தால் என்ன செய்வீர்கள்? தண்ணீரை யெல்லாம் இரைத்து வெளியில் கொட்டி கிணற்றை சுத்தம் செய்வீர்கள். அந்தப்படி சுத்தம் செய்தபின்பும் அத்தண்ணீரின் குணம் அப்படியே இருந்தால் பிறகு என்ன செய்வீர்கள்? அக்கிணற்று நீர் ஊற்றமே விஷத்தன்மை பொருந்தியது என்று கருதி அக்குளத்தில் யாரையும் இரங்கச் செய்யாமல் செய்து குப்பை செத்தைகளைக் கொட்டி அதை மூடி விடுவீர்களா இல்லையா? இதைச் செய்யாமலிருந்தால் முனிசிபாலிட்டியாரையாவது பொது மக்களையாவது அறிவுடைய மக்கள் என்று நாம் கூறுவோமா?

ஆகவே மனித சமூகத்திற்கு தீங்கை இழைத்து வரும் விஷயம் கடவுள் சொன்னதானாலும், மதம் சொன்னதானாலும் அல்லது கடவுளும், மதமும், அரசாங்கமும் ஆனாலும் அவைகளை அழிக்கத் தைரியம் கொள்ள வேண்டும். நாம் எல்லோரும் வெகு காலமாகவே முன்னோர் காலந்தொட்டு மத சீர்திருத்த வாதிகளாகவும், கடவுள் சீர்திருத்த வாதிகளாகவும், ஒழுக்க சீர்திருத்த வாதிகளாகவும், அரச சீர்திருத்த வாதிகளாகவும் இருந்து பார்த்தாய் விட்டது. நமது முன்னோர்கள் காலம் தொட்டு ஆயிரக்கணக்கான வருஷங்களாய் சீர்திருத்தவாதிகளாய் இருந்தும் பார்த்தாய் விட்டது. எந்த துறையில் சீர்திருத்தமடைந்திருக்கிறோம். ஏழை “சீர்திருந்தமடைந்து” நாளுக்கு நாள் பட்டினியும், நோயும், இழிவும் அடைந்து கொண்டே போகி றான். பணக்காரனும் சோம்பேரியும் சீர்திருத்தமடைந்து நாளுக்குநாள் பெரும் பணக்காரனாகி, பிரபுவாகி, ஜமீனாகி, ராஜாவாகி தலைமுறை தலைமுறை ஜமீனும், ராஜாவுமாய் ஆகிக்கொண்டே போகின்றான். சீர்திருத்தத்தின் பலனைக் காண்பதற்கு இன்னும் வேறு என்ன உதாரணம் வேண்டும். ஆகவே ஏழைத்தன்மை, பணக்காரத்தன்மை என்கின்ற இரண்டு தன்மையும் உலகில் இருக்கக்கூடாது என்று அவைகளை அடியோடு அழிப்பது நல்ல வேலையா? அல்லது அத்தன்மைகள் எந்த ரூபத்திலாவது என்றும் இருக்கும்படி சீர்திருத்தம் செய்வது நல்ல வேலையா? என்று யோசித்துப்பாருங்கள்.  அழிவு வேலைக்கு எதிர்ப்புத்தான் சீர்திருத்த வேலை என்பது.  தீமைகளுக்கு காவல்தான் சீர்திருத்தம் என்பது. ஆகவே தீமைகளை அழிக்க வேண்டுமா னால் அவற்றின் காவல்களையும், காப்புகளையும் முதலில் நிர்த்தூளியாக்க வேண்டும்.

அரசனையானாலும், மதத்தையானாலும், கடவுளையானாலும், நாம் எதிர்ப்பதும், அழிக்க முற்படுவதுமான காரணமெல்லாம் இவை தீமைக்கு காவலாய் இருக்கின்றன என்கின்ற ஒரே நோக்கமேயல்லாமல் அவைகளிடம் நமக்கு பொறாமையோ, துவேஷமோ ஏற்பட்டதாலல்ல.  ஏழ்மைக் கஷ்ட மில்லாமலும், பணக்காரக்கொடுமை இல்லாமலும், பார்ப்பன உயர் சாதி இல்லா மலும்-பறைய தாழ்ந்த ஜாதி இல்லாமலும் முதலாளி ஆதிக்கமில்லாமலும்-கூலி அடிமைத்தன்மை இல்லாமலுமிருப்பதற்கு ஆதாரமான மதம், கடவுள், அரசன், சட்டம், நீதி, தர்மம் ஆகியவர்களை நாம் அழிப்பதில்லை. அவை களைப்பற்றி நமக்கு கவலையே இல்லை. இவர்கள் விஷயத்தில் நாம் மதத் துரோகியோ, கடவுள் துரோகியோ, ராஜத்துரோகியோ சட்டம் மறுக்கவோ, அதர்மக்காரனாகவோ நாம் சிறிதும் விரும்பவில்லை.

ஏழை பணக்காரத்தன்மையையும் கீழ்மேல் ஜாதியையும், முதலாளி அடிமையையும் கொண்டதான நிலைமைகள் நடைபெற ஆதரவாயிருக்கும் கடவுள், மதம், அரசன், தர்மம், சட்டம் ஒழிந்தே ஆகவேண்டும். ஆதரவா யிருக்கும் கடவுள், மதம், அரசன் என்பவைகள் மாத்திரமல்ல இவைகளை அனுமதித்துக்கொண்டிருக்கும் அரசாங்கமும், நீதி, ஒழுக்கம், பழக்கம், வழக்கம் முதலியன என்பவையையும், நாங்கள் அழித்தே தீருவோம். ராஜத் துரோகி, கடவுள் துரோகி, மதத்துரோகி பூச்சாண்டிகள் இனி சுயமரியாதைக் காரர்களிடம் செல்லாது.

சுயமரியாதைக்காரர்களிடம் மாத்திரமல்ல, வெகு சீக்கிரத்தில் உலகத்தி லேயே அவைகளுக்கு இடமில்லாமல் போகப்போகின்றது. இது காலவரையும் கஷ்டப்படும் மக்கள் தங்கள் தலைவிதியின் மீதும், கடவுள் மீதும், பழி போட்டுக்கொண்டு தலைவிதியை மாற்றவும் கடவுள் தயவு பெறவும் என்று, மேலும் மேலும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருந்துவந்தார்கள். ஆனால் இப்போது சுயமரியாதைக்காரர்களால்-நாத்திகர்களால், கடவுள் மதத் துரோகி களால் ஜனங்கள் உண்மையை உணர்ந்து கொண்டார்கள். இவைகள் சோம் பேரிகளும், பணக்கார முதலாளிகளும் செய்யும் சூழ்ச்சியும், பித்தலாட்ட முமே யொழிய வேறல்ல என்றும், கடவுளும் மதமும் இந்த பித்தலாட்டக்காரர் கற்பனைகளே தவிர வேறு இல்லை என்றும் உணர்ந்துகொண்டார்கள். நன்றாய் உணர்ந்துகொண்டார்கள். இப்பொழுது இவைகளை எப்படி ஒழிப்பது? என்பதில்தான் கவலையாய் இருக்கிறார்கள்.

 

வேகமாய்ப் போகவேண்டிய – போவதற்கு தயாராய் இருக்கிற – மோட் டார் காருக்கு முன்னால் பனை மரத்தைக் கொண்டுவந்து போட்டது போல், இன்று கடவுளும், மதமும், அரசாங்கமும் குறுக்கே கொண்டு வந்து போடப் பட்டு இருக்கின்றன. இவை வெகு நாளையத்த கடவுளாய் இருந்தாலென்ன? அவதார புருஷர்களால் உண்டாக்கப்பட்ட மதமாய் இருந்தாலென்ன? சட்டப்படி அமைக்கப்பட்ட அரசாங்கமாய் இருந்தால் என்ன? ஒழிய வேண்டும் என்ற முடிவுக்கு வந்த பின் அவை தானாக ஏற்பட்டால் என்ன சட்டப்படி ஏற்பட்டால் என்ன? சும்மா ஏற்பட்டால் என்ன? ஒழியவேண்டுமா? வேண்டாமா? என்பது தானே முக்கிய விஷயம்.

பொதுநலம்

அதுபோலவேதான் பொது நல சேவை என்பதும், மனித சமூக சம தர்மத்துக்கு விரோதமானதேயாகும். பொது நலம் என்றால் என்ன? எல்லோருக்குமே நன்மை செய்ய வேண்டுமென்பதுதான் அதன் பொருளாக முடியும். கொடுமைப்படுத்துகிற கூட்டத்துக்கும் – கொடுமைப்படுகின்ற கூட்டத்துக்கும் நன்மை செய்வதென்றால் அதனால் என்ன பிரயோஜனம் ஏற்படும்.  கஷ்டப்பட்ட – படுகின்ற கூட்டத்துக்குத் தான் நன்மை செய்ய வேண்டும்.

ஆகவே நாம் ஒரு கூட்டத்தாருக்குத்தான், ஒரு வகுப்பாருக்குத்தான் நன்மை செய்கின்றவர்களாவோம். அது மற்றொரு வகுப்பாருக்கு தீமையாய்த் தோன்றலாம். நமக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை. திருடனுக்கும் திருட்டுக் கொடுப்பவனுக்கும் எப்படி நன்மை செய்ய முடியும். “திருட்டுப்புத்தியை விட்டுவிடு, இல்லாவிட்டால் விட்டு விடும்படி செய்வேன்” என்பதுதான் திருடனுக்குச் செய்யும் நன்மையாகும். இதை நன்மையாகத் திருடன் மதிப் பானா? ஆதலால் நமது சேவை ஒரு நாளும் பணக்காரனுக்கும், முதலாளிக் கும் நன்மையாய் காணமுடியாது. அவர்களுக்கு இனியும் நன்மை செய்வது என்பது நமது கொள்கையுமல்ல. ஆகவே நாம் பொதுநல சேவைக்காரரல்ல. நாம் புரட்சிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுவோம். நமக்கு சீர்திருத்தக் காரர்களும், பொதுநலசேவைக்காரர்களும் பெரிய விரோதிகளே யாவார்கள். புரட்சி ஆரம்பித்த காலங்களில்தான் சீர்திருத்தங்கள், பொதுநல சேவைகள் புறப்படும். எதற்கு? புரட்சிகளை அடக்குவதற்கு. ஆகையால் நாம் எந்த வித சீர்திருத்தவாதிகளுடனும் எந்த வித பொதுநலவாதிகளுடனும் சேராமல் தனித்து நின்றே புரட்சி செய்ய வேண்டும்.

புரட்சி

தலை கீழாய் கவிழ்ப்பது தான் புரட்சியாகும். இதற்காக யாரும் பயப் படக்கூடாது. குழந்தைகளை பூச்சாண்டி பேர் சொல்லி மிரட்டுவது போல் நம்மையும் “புரட்சி என்று வாயில் சொல்லாதே, மனதினாலும் நினையாதே, வாய் வெந்துபோகும்” என்று பலர் சொல்லுவார்கள். இனி அந்தக் கதை பலியாது. புரட்சி செய்து வெற்றி பெற்ற தேசங்களையும், மக்களையும் பார்த்து விட்டோம். நாமும் சில விஷயங்களில் புரட்சி செய்தும் பார்த்துவிட்டோம். ஜாதிப் புரட்சி செய்தோமே என்ன ஆய் விட்டது? வெற்றி மார்க்கத்தில் செல்லுகிறோமா இல்லையா? மதப்புரட்சி செய்தோமே என்ன முழுகிப் போய் விட்டது? தத்துவார்த்தம் பேசி அதைக் காப்பாற்றப் பாடுபடுகின்றார்களே ஒழிய புரட்சி செய்தவர்களுக்கு என்ன ஆபத்து வந்தது? கோவில் நுழைவுப் புரட்சி என்ன ஆய் விட்டது? இப்போது அதுசட்ட சபைக்கு வந்து விட்டது. கோயிலுக்குள் விடுவதற்கு மனமில்லாதவனும்கூட நம்முடன் சேர்ந்து கொண்டு கோவிந்தா போட வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டானா இல்லையா? அரசியல் புரட்சியும் செய்கின்றோம். அரசனே வேண்டிய தில்லை என்றும் சொல்லுகின்றோம். பல தேசங்களில் இப்புரட்சிகள் வெற்றி பெற்றும் இருக்கின்றன. இவற்றை நாமும் தைரியமாய் சொல்லவும் முன்வந்து விட்டோம். என்ன ஆய்விட்டது? நம்மைப் பொருத்தவரை இந்தப் புரட்சி களை எல்லாம் நாம் ஏன் செய்தோம். ஏழை மக்கள் கஷ்டம் நீங்கவும் பாடுபடுகின்ற மக்களை சோம்பேரிகள் ஏய்த்து அவர்களது பலன்களை எல்லாம் அடையாமல் இருக்கவும் தான் செய்தோமே ஒழிய செய்கின்றோமே ஒழிய மற்றப்படி யாரிடமாவது குரோதமோ வெறுப்போ பொறாமையோ துவேஷமோ பலவந்தமோ மனதில் வைத்துச் செய்தோமா? என்று யோசித் துப் பாருங்கள்.   மனிதன் என்று ஒருவன் இருப்பானேயானால் அவன் முன் மற்றொரு மனிதன் கஷ்டப்படுவதைப் பார்த்தால் எவனும் பரிதாபப் பட்டுத்தான் தீருவான். சகிக்க முடியாத கஷ்டம் வந்து விட்டால் அவனுக்கு பாபமோ, நரகமோ, சட்டமோ, நீதியோ, பழக்கமோ, வழக்கமோ ஒன்றும் எதிரில் இருக்க முடியாது.

ஆதலால் இன்றைய நிலைமையானது சகிக்க முடியாத கஷ்டத்தாலும் வேறு அனேக வழிகளில் பார்த்துப்பார்த்து முடியாததாலும் ஏற்பட்டதாகும்.

நாம் அடுத்த ஜன்மத்தை நம்பி வெகுகாலம் வீணாக்கி விட்டோம். மேல் லோகத்தை நம்பி வெகுகாலம் வீணாக்கிவிட்டோம். தலைவிதியை நம்பி வெகு காலம் பாழாக்கி விட்டோம்.  ஒழுக்கத்தையும், நியாயத்தையும், சட்டத் தையும் நம்பி வெகு காலம் நாசமாக்கி விட்டோம். இப்போதும் தேசத்தையும், தேசீயத்தையும் நம்பி மறுபடியும் வெகு காலம் பாழாக்கி வருகி றோம். இவைகளை நம்புவது இவைகளுக்கு கட்டுப்படுவது இவைகளுக்காக பாடுபடுவது எல்லாம் முட்டாள்தனம் என்பதை உணர்ந்தோம்.  இனி மனித சமூக விடுதலைக்கும், ஒரு மனிதனை மற்றொரு மனிதன் அடக்கி அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்துவதை ஒழிப்பதற்கும், ஒரு மனிதனின் உழைப்பை மற்றொரு மனிதன் அனுபவித்துக்கொண்டு சோம்பேரியாய் வாழ்வதை அழிப்பதற்கும் பாடுபடவேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன்.

இது குற்றமானால் இது பாபமானால் இந்தக் குற்றத்தையும், பாபத் தையும் குஷாலாக ஒவ்வொருவரும் செய்யவேண்டியதுதான் வரவேற்க வேண்டியது தான். ஆனால் நமது கருத்தும், செய்கையும் பரிதாபத்தை ஆதார மாய்க் கொண்டதாகவும், குறோதத்தையும், பலாத்காரத்தையும் வெறுத்த தாகவும் இருக்க வேண்டுமெயொழிய மற்றபடி வீண் அர்த்தமற்ற ஆத்திரத் தையும், துவேஷத்தையும், முரட்டுத் தனத்தையும் குறிகொண்டதாய் இருக்கக் கூடாது.

குறிப்பு: 30.01.1933 இல் கோவை சுயமரியாதைச் சங்கத்தாராலும் மற்ற சங்கத்தாராலும் வழங்கிய உபசாரப் பத்திரத்திற்கு பதிலளித்து ஆற்றிய உரை.

குடி அரசு – சொற்பொழிவு – 05.02.1933

You may also like...