வரவேற்கின்றோம்

45 மாத காலமாய் விசாரணை நடந்துவந்த “மீரத் சதிவழக்கு”  கேசு ஒரு வழியில் முடிவடைந்துவிட்டது,  அதாவது 27 எதிரிகளுக்கு, 3 வருஷ முதல் ஆயுள் பரியந்தம் சிறைக்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தண்டனையைப்பற்றி நாம் சிறிதும் கவலைப் படவில்லை. இந்த 27 பேர் மாத்திரம் அல்ல இன்னும் ஒரு 270 பேர்களும் சேர்த்து தூக்கில்போடப்பட்டி ருந்தாலும் சரி நாம் அதற்காகக் கவலைப்படப் போவதில்லை.  ஏனென்றால் இந்தத் தோழர்கள் சிறையிலிருப்பதாலோ, தூக்கில் கொல்லப்படுவதாலோ அவர்களது கொள்கையாகிய பொதுவுடமைக் கொள்கை என்பது, அதாவது முதலாளிகளின் ஆதிக்க ஆட்சியை சிதைத்து, நசுக்கி சரீரத்தினால் பாடுபடுகின்ற மக்களுடைய ஆட்சிக்கு உலக அரசாங்கங்களையெல்லாம் திருத்தி அமைக்க வேண்டும் என்கின்ற கொள்கையோ, உணர்ச்சியோ, அருகிப் போய்விடும்  என்கின்ற பயம் நமக்கு இல்லை. அல்லது இன்று தண்டனை அடைந்த தோழர்கள் தான் இக்கொள்கைக்கு கர்த்தாக்கள் ஆவார் கள், கர்மவீரர்கள் ஆவார்கள்.  ஆதலால் இவர்கள் போய்விட்டால் இந்தக் கொள்கையைக் கொண்டு செலுத்த உலகில்வேறு ஆட்கள் இல்லாமல் போய்விடுமே  என்கின்ற பயமும் நமக்கு இல்லை. அல்லது இந்த தோழர்கள் ஜெயிலில் கஷ்டப்படாமலோ, அல்லது தூக்கு மேடையில் உயிர்விடாமலோ, இருப்பார்களானால் உலகத்தில் சுகமாக நெடுநாளைக்கு ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு வாழப்போகிறவர்கள் என்றாவது நாம் கருதவில்லை.

உண்மையைப் பேசப்போனால் அவர்கள் உண்மையான கர்ம வீரர்களாய் இருப்பார்களானால் வெளியில் இருப்பதைவிட சிறையில் கவலை யற்று சுகமாகவே இருக்கநேரிடும். ஏனெனில் உண்மையாக வேலை செய்து வரும் சமதர்மத் தொண்டர்களுக்கு வெளியில் இருக்கும் கவலையும், தொல்லையும், பொருப்பும் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கும் பலவித உபத்திரவங்களும் கொஞ்சநஞ்சமல்ல.

கொள்கையில் இருக்கும் உண்மை ஊக்கமே இவ்வளவையும், சகித்துக்கொண்டு வேலை செய்யச் சொல்லுகின்றது.

ஆனால் இத்தொண்டர்கள் ஜெயிலில் இருப்பதின் மூலம் அவர்கள் ஜெயிலில் வதியும் ஒவ்வொரு வினாடியும், அவர்களது கொள்கையானது அவர்களைப் போன்ற 1,10,100,1000 கணக்கான தொண்டர்களைத் தட்டி எழுப்பி ஊக்கப்படுத்திக்கொண்டே தான் இருக்கச்செய்யும். அன்றியும் தூக்கு மேடையில் உயிர்விட்டு இருப்பார்களேயானால் அவ்வுயிரின் ஞாபகம் எப் பொழுதும் உண்மை தொண்டர்களின் உள்ளம்விட்டு அகலாமல் சதா அவர் களைத்தட்டி ஓட்டிக்கொண்டேதான் இருக்கும். இன்றையத் தினம் உலகில் உள்ள முக்கிய கொள்கைகளில் பல அவை சரியாயிருந்தாலும், தப்பாய் இருந்தாலும் அக் கொள்கையைக் கைக்கொண்டவர்களின் தியாகத்தை மதித்தே கொள்கைகள் பரவவும், நிலைநிறுத்தவும் செய்கின்றது என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.  ஆனால் பிற்காலத்தில் அதற்கு ஆயும் குறைவும், சக்திக்குறைவும் ஏற்படுகிறது என்பது கால தேச வேறுபாட்டாலும், அபிப்பிராய வேறுபாட்டாலும்  கொள்கையின் பயனற்ற தன்மையாலுமே யொழிய வேறில்லை.

இன்று எத்தனையோ கொள்கைகள், பிரசாரம் பண்ணப் பதினாயிரக் கணக்கான ஆட்கள் இருந்தும் பிரசாரத்திற்கு பத்துலட்சக்கணக்காண ரூபாய் கள் வருமானம் இருந்தும் அவை சடங்கு முறைபோல் நடைபெருவதையும், சில மறைந்துபோய்கொண்டு வருவதையும், மறைந்தே போய்விட்டதையும் நாம் சரித்திரங்களில் பார்ப்பதோடு மாத்திரமல்லாமல் நேரிலும் பார்த்து வரு கின்றோம். ஆகவே இன்றைய உலக நிலையில் சிறப்பாக இன்னாட்டு மக்க ளின் உணர்ச்சி நிலையில் இருந்து ஒரு அறிவாளியாயிருப்பவன் சிந்தித்துப் பார்ப்பானேயானால் பொதுவுடமைக் கொள்கை என்பதை இனி இந்தமாதிரி 27 பேரை தண்டித்தோ, அல்லது 2700000 இருபத்தி ஏழு லட்சம் பேரை “சமணர்களைக் கழுவேற்றியது” போல் நடுத்தெருவில் நிறுத்தி கழுவேற்றிக் கொன்றோ செய்வதன்மூலம் அடக்கிவிடலாம் என்று நினைப்பது கொழுந்துவிட்டெறியும் பெரும் நெருப்பை நெய்யைவிட்டு அணைத்து விடலாம் என்று எண்ணுவதுபோல்தான் முடியும்! கண்டிப்பாய் அப்படித் தான் முடியும்!! கட்டாயம் அப்படியேதான் முடியும்!!!

ஏன்? எப்படி? என்கின்ற கேள்விகள் பிறக்கலாம். இன்றையத்தினம் பொதுவுடமைக் கொள்கை உணர்ச்சி என்பது பெரிதும் இந்தியாவில் ஏற்பட்ட தல்ல. ஐரோப்பிய நாடுகளில் நடைபெரும் காட்சிகளையும், அவற்றின் அனுபவங்களையும் கண்டு தோன்றிய உணர்ச்சியேயாகும். ஐரோப்பாவில் சரிபகுதிக்கு மேற்பட்ட விஸ்தீரணமுள்ள தேசம் ஆகிய ரஷியா முழுவதும் பொதுஉடைமைக் கொள்கையே தாண்டவமாடி ஆட்சிபுரிகின்றது. அதன் ஜனத்தொகை இங்கிலாந்தைப்போல் நான்கு மடங்குகொண்டது.  மற்றும் ஜர்மனி தேசத்திலும் பொது உடைமைக் கொள்கை உணர்ச்சி கரைபுரண்டு ஓடுகிறது. இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் பிரான்சிலும், சைனாவிலும் பொது உடைமைக் கக்ஷிகள் தங்களது பிரசாரங்களை தாராளமாய் நடத்து கின்றன. ஜப்பானில் 1932-ம் வருஷத்தில் மட்டும் 7000 பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிறைசென்றதும், இப்பொழுது 2000 பேர் சிறை யிடப்பட்டதும் ஜப்பானில் பொதுவுடமைக் கொள்கை உரம் பெற்றிருப்பதை நன்கு விளக்குகின்றது.

ஸ்பெயின் தேசத்திலோ இன்றோ, நாளையோ இதற்குள் ஒருசமயம் நடந்து இருக்குமோ என்று சொல்லும்படியாகப் பொது உடைமைக் கிளர்ச்சி யும், புரட்சியும் தாண்டவமாடுகின்றன. இவைகள் ஆங்கிலப் பத்திரிகைகளில் காணப்படும் விஷயங்களே தவிர கற்பனை என்றோ, கட்டுக் கதை என்றோ சொல்லி ஏய்த்துவிட முடியாது.

இந்தியாவிலும் இன்றும் வாலிபர்கள் உள்ளத்தை அறியும் கருவி ஒன்று இருந்து பரிசோதித்துப் பார்ப்போமேயானால் பத்து லக்ஷக்கணக்கான வாலிபர்கள் உள்ளம் முழுவதையும் கவர்ந்து அவர்களது இரத்தத்தைக் கொதிக்கச் செய்து கொண்டிருக்கும் உணர்ச்சி பொது உடைமை கொள்கை யைப் பற்றியதென்றே தான் கண்டுபிடிக்க முடியும். அல்லாமலும் கொள்ளை நோய்க்கும், தொத்து நோய்க்கும், பட்டினிக்கும், வேலையில்லாத் திண்டாட் டத்திற்கும், மூப்புக்கும், சாக்காட்டிற்கும், நெஞ்சடைப்பிற்கும், தற்செயலாய் ஏற்படும் ஆபத்துக்கும் பலியாகக் கொடுக்கப்படும்- கொடுத்துத் தீர வேண்டியதாயிருக்கும்-கொடுக்காமலே கோழிக்குஞ்சை கருடன் தூக்குவது போல் நமக்குத் தெரியாமலே போகும் படியாயிருக்கும் இந்த அற்ப உயிரை, அதாவது ஒரு மனிதனுடைய சரீரத்தில் உள்ள ரோமம் முழுவதும் எண்ணிப் பார்த்து அதில் ஒரு ரோமம் குறைந்தால் அந்த மொத்த எண்ணிக்கை எவ்வளவு விகிதம் குறைவுபடுமோ அதற்குச் சமானமான அதாவது இந்தியா வின் 35 கோடி ஜனத்தொகையில் ஒரு மனிதன் குறைந்துவிட்டால் 35 கோடி யில் எத்தனை விகிதாச்சாரம் குறையுமோ அதுபோன்ற நிலையில் உள்ள உயிர்களை இப்பேர்ப்பட்ட அதாவது 100க்கு 99 மக்கள் ஏழைகளாக, கூலி களாக, இழிவான வாழ்க்கை நடத்துபவர்களாக இருந்துகொண்டு பார்ப்பனர் களாலும், பணக்காரர்களாலும், அரசாங்கங்களினாலும் வதைக்கப்படும் பூச்சி புழுப்போன்ற மக்களின் விடுதலைக்கும், அவர்களது மான வாழ்க் கைக்கும், அவர்களது உழைப்பின் பயனை அவர்களே அனுபவித்துக் கொண்டிருப் பதற்குமான காரியத்திற்கு உயிர்விட நேர்ந்தால் எந்தப் பேதை பின் வாங்கு வான், மனவருத்தமடைவான் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

ஆகவே மீரத்வழக்கு சரியாய் விசாரணை செய்திருந்தாலும் சரி, அக்கிரமமாய் விசாரித்து இருந்தாலும் சரி, ஒரு காசு செலவில்லாமல் விசாரித்து இருந்தாலும் சரி, ஒருகோடி ரூபாய் செலவுசெய்து விசாரணை நடத்தி இருந்தாலும் சரி, மற்றும் அதன் தீர்ப்பு நியாயத் தீர்ப்பாய் இருந்தாலும் சரி, அநியாயமான தீர்ப்பாய் இருந்தாலும் சரி அவற்றில் பிரவேசித்து நேரத்தையும்  யோசனையையும் பாழாக்க நாம் சிறிதும் கவலைகொள்ளாமல் மீரத்து முடிவை நாம் மேளதாளத்தோடு வரவேற்பதுடன், தண்டனை அடைந்த தோழர்களை மனமார, வாயார, கையாரப் பாராட்டுகின்றோம். முக் காலும் பாராட்டுகின்றோம். இனியும் நமக்கும் நம்போன்ற வாலிபர்களுக்கும் அதாவது நம் போன்ற மான உணர்ச்சி கொண்ட வாலிபர்களுக்கும் இந்தப் பெரும் பேரு கிடைக்கப் பெறும் நிலையை அடைய முடியவில்லையே என்று நமக்காகவும் எமதருமைத் தோழர்களான வாலிபர்களுக்காகவும் வருந்தி மற்றுமொரு முறை வரவேற்கின்றோம்.

நிற்க சர்க்காரால் இப்பிரசாரங்களை அடக்குவதற்கு தங்களுக்கு ஒரு ஆதாரம்வேண்டுமே என்கின்ற கவலைகொண்டு எதிரிகள் என்பவர்கள் பலாத்காரம் செய்ய பிரசாரம் செய்தார்கள் என்று ஒரு சாக்கு கற்பிக்கப் பட்டிருக்கிறது.  நம்மைப் பொருத்தவரை பலாத்காரம் என்பதை எப்போதும் வெறுத்தே வந்திருக்கின்றோம்.  பலாத்காரம் இல்லாமலே நமது லட்சியங்கள் நிறைவேற வேண்டும் என்றே ஆசைப்பட்டு வந்திருக்கின்றோம். ஆனால் எந்த சமயத்திலும் பலாத்காரம் கூடவே கூடாதென்றும், நமக்கு விரோதமாக ஏற்படும் பலாத்காரத்தையெல்லாம் பொறுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் சொல்ல நம்மால் முடியவில்லை.  பாம்பை அடிக்காதீர்கள் என்று சொல்லலாமே தவிர பாம்பு கடிக்கவரும்போது தடுக்காமலோ, தட்டாமலோ இருந்து முத்தமிட்டு கடிபடுங்கள் என்று சொல்லக்கூடிய இயற்கைக்கு மீறியதான போலி அஹிம்சையை வேஷத்துக்காக உபதேசிக்க இப்போது நாம் தயாராய் இல்லை.

தவிரவும் 100க்கு 90 மக்களாய் உள்ளவர்களை வஞ்சித்து, வதைத்து, கொடுமைப்படுத்தி, அழுத்தி வைத்து கொள்ளை கொள்ளும் தன்மையை வெளியிடுவது பலாத்காரமானால் இவ்வித பலாத்காரத்தை மனிதத்தன்மை யுள்ள ஒவ்வொரு ஆணும் பெண்ணும் வரவேற்க வேண்டும் என்றும், இவ்வித பலாத்காரத்தில் தவராது இறங்கி வேலை செய்யவேண்டும் என்றும் தான் விண்ணப்பித்துக் கொள்ளுகின்றோம். யோக்கியமான சர்க்காருக்கு பலாத்காரம் உண்டாகாமல் இருப்பதைத் தடுக்க வேண்டும் என்கின்ற உணர்ச்சி கடுகளவாவது இருக்குமானால் இவ்விதப்பிரசாரம் தாராளமாய் நடைபெறும் விஷயத்தில் அதற்கு இடையூறாய் ஏற்படும் எவ்வித பலாத்காரச் செய்கைகளையும் தடுத்துப் பிரசார பாதைகளை செப்பனிட்டு ஒழுங்காக்கி கொடுக்க வேண்டியது பொறுப்பும் கடமையுமாகும்.  ஆதலால் இவ்வித போலி பலாத்காரப் பூச்சாண்டிக்கு பொதுவுடமைக் கொள்கையில் ஆர்வ முள்ள தோழர்கள் பயப்படமாட்டார்கள் என்றும் உண்மையிலேயே எந்த வழியிலும் பலாத்காரம் ஏற்படுவதை வெறுப்பார்கள் என்றுமே நம்பு கின்றோம்.

அடக்கு முறை பயன்படுமா? வெற்றிபெறுமா என்கின்ற விஷயத்தில் நாம் ஒரு சிறிதும் கவலைகொள்ளவும் இல்லை. அடக்கு முறையில் இந்த இயக்கம் தோல்வி அடைந்து போகுமோ என்று பயப்படவும் இல்லை. இந்த அபிப்பிராயத்தை நாம் பிரத்தியட்ச ஒரு அனுபவத்தைக்கொண்டே சொல்லுகின்றோமே அல்லாமல் நமது சொந்த தைரியத்தையே ஆதாரமாய்க் கொண்டு சொல்லுவதாக யாரும் நினைக்கக் கூடாதென்றே கருதுகின்றோம். ஏனெனில் பொதுவுடமைக் கொள்கை பிரசாரம் செய்யப்படுவதை தடுக்கவோ அடக்கவோ அடக்கு முறைகளைக் கையாளும் விஷயத்தில் ரஷிய சார் சக்ரவர்த்தி அரசாங்கத்தை விட இனி உலகில் வேறு யாராலாவது அதிகமான அடக்கு முறையைக் கையாண்டு விட முடியும் என்பதாக நாம் கருதி விட முடியாது. அன்றியும் சாரை விட கொடுங்கோன்மை அடக்கு முறைக்கு முதற்பரிசு பெற இந்த உலகத்தில் வேறு எந்த அரசாங்கத்தாலும் இன்று முடியவே முடியாது என்றும் சொல்லுவோம். அந்த சார் அரசாங்கத்தால் செய்யப்பட்ட அடக்கு முறைக் கொடுமைகளில் பலவற்றின் சின்னங்களை நேரிலேயே பார்த்திருக்கிறோம். பலரின் சரீரத்தில் உயிருடன் தோல் உரிக்கப் பட்டு, அத்தோல்களை நகங்களுடன் காட்சி சாலைகளில் வைக்கப்பட்டிருக் கின்றதையும் கண்கள் குத்தப்பட்ட சின்னங்களையும் பார்க்க நேரிட்டது.

எனவே இவைகளைவிட இனி எப்படி கொடுமைப்படுத்தி மக்களை அடக்கிவிடமுடியும் என்பது நமக்கு விளங்கவில்லை.  அன்றியும் அப்படிப் பட்ட அடக்கு முறை நடத்திய அரசாட்சிகள் அடைந்த பலன்களையும் காதால் கேட்டுவிட்டோம், கண்ணால் பார்த்தும் விட்டோம். அதனால் கொள்கை ஒழிந்துவிடவும் இல்லை, பிரசாரகர்கள் மறைந்துவிடவும் இல்லை. அதற்கு பதிலாக முழு வேகத்துடன் வெற்றிபெற்று ஜெகஜ்ஜோதியாய் உலகக் கண்கள் கூசும்படி விளங்குகின்றதையே பார்க்கின்றோம்.  அதனால் தான் வரவேற்கின்றோம் என்று மறுபடியும் சொல்லுகின்றோம்.

குடி அரசு – தலையங்கம் – 22.01.1933

 

 

You may also like...