எது நல்ல ஜோடி ?
வருணாச்சிரம தரும தோழர் ராமச்சந்திரய்யர் “ஹரிஜனங்கள்” என்பவர்களை ஹிந்துக்கள் அல்ல என்று சொன்ன விஷயத்தைச் சுயமரியாதை இயக்கத்தோர் ராமசாமியும் ஆமோதித்து விட்டாராகையால் ராமச்சந்திர அய்யரும் ராமசாமியும் ‘நல்ல ஜோடி’ என்று சுதந்திரச் சங்கு என்னும் பத்திரிகை எழுதி இருக்கிறது.
என்றாலும் அதே பத்திரிகையின் வேறொரு இடத்தில் அந்த ஜோடிக்கு உவமை சொன்னதில் உண்மையைச் சொல்லி விட்டது. எப்படி எனில் இரண்டும் சரியான ஜோடி அல்ல வென்றும் சிறிது கூட பொருந்தாத ஜோடி என்றும் மக்கள் நன்றாய் உணரும்படி தன் மனதிலுள்ள உண்மையை தன்னை அறியாமலே வெளிப்படுத்தி விட்டது.
அதாவது, “இருவரும் சேர்ந்த நல்ல ஜோடி என்பது காராம் பசுவும் காளை எருமையும் ஒரு வண்டியில் கட்டப்பட்டு ஓட்டப்படுவது போலிருக் கிறது” என்று உவமை காட்டி எழுதி இருக்கிறது. ஆகவே காராம் பசுவும் காளை எருமையும் சரியான ஜோடி என்று யாராவது ஒப்புக் கொள்ளுவார் களா? ஒரு நாளும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். சுதந்திரச் சங்கு ஆசிரியரும் கூட தான் ஒரு குறிப்பிட்ட ஜாதியார் என்கின்ற முறையிலிருந்து விலகி தனியே நடு நிலையில் நீதிபதி என்கின்ற முறையில் இருந்து காராம் பசுவை யும் காளை எருமையையும் ஒன்றாய் நிறுத்திப் பார்ப்பாரானால் இரண்டும் சரியான ஜோடி என்று ஒரு நாளும் தீர்ப்பெழுதமாட்டார். ஆனால் இப்படி எழுதுவதற்கு உள்ள காரணங்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் வேலையைப் பிரதானமாகக் கருத இதுசமயம் நமக்கு நேரமில்லை, இங்கு இடமும் இல்லை.
நாம் சேர்க்கும் ஜோடி
ஆனால் நாம் இப்போது ஒரு ஜோடியைச் சேர்த்து வெளியில் காட்டு கிறோம். இது சரியான ஜோடியா? அல்லவா என்று நடுநிலைக் கண்களைக் கொண்டு பார்த்து முடிவுகாணத் தோழர்களை வேண்டிக்கொள்ளுகின்றோம்.
அதாவது:- “சுதந்திரச் சங்கு பத்திராதிபரின் தலைவரான “மகாத்மா” காந்தியையும் தோழர் வருணாச்சிரம ராமச்சந்திரய்யரின் தலைவரான “லோககுரு” சங்கராச்சாரியாரையும் ஒரு ஜோடியாகச் சேர்க்கிறோம். இரண் டையும் சரிபார்த்து எது நல்ல ஜோடி அதாவது சுதந்திரச்சங்கு மூலத்தில் சேர்த்துவிட்டு வியாக்கியானத்தில் பிரித்து விட்ட ஜோடி நல்ல சரியான ஜோடியா? அல்லது “குடி அரசு” சேர்த்த ஜோடி நல்ல சரியான ஜோடியா? என்பதை நல்ல நடுநிலைமைக் கண்ணாடிகொண்டு பார்த்து முடிவு செய்யுங் கள். ஒரு சமயம் “குடி அரசின்“ கண் காமாலைக் கண்ணாயிருந்தாலும் இருக்கலாம். அது பார்க்கும் கண்ணாடி வர்ணக் (துவேஷ) கண்ணாடியாய் இருந்தாலும் இருக்கலாம். ஆதலால் வாசகர்களையே ஆராய்ந்து தீர்ப்புச் சொல்லும்படி விரும்புகிறோம்.
- சங்கராச்சாரி இந்துமதத் தலைவர், இந்துமத அதிகாரி, இந்து மதத்தைக் காப்பவர். காந்தியும் தானே இந்துமதமாய் இருப்பவர். இந்து மதத்தைக் காக்கவே சுயராஜ்யம் கேட்பதாய்ச் சொல்லுகிறவர்.
- சங்கராச்சாரி இந்துமத வேதசாஸ்திர புராண இதிகாசங்களை ஒப்புக்கொண்டு பிரசாரம் செய்பவர். காந்தியும் இந்துமத வேதசாஸ்திர புராண இதிகாசம் ஆகியவைகளை ஒப்புக்கொண்டு வியாக்கியானம் எழுதி பிரசாரம் செய்பவர்.
- சங்கராச்சாரி வருணாச்சிரமத்தையும் “பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன்” என்கின்ற 4- வருணங்கள் பிறவியிலேயே உண்டு என்பவர். காந்தியும், வருணாச்சிரமமும் மேல்கண்ட நான்கு வருணப் பிறவியிலேயே உண்டு என்பவர்.
- சங்கராச்சாரியும், சுதர்மம் அதாவது அவனவன் வருணத் திற்கேற்ற தொழிலையே அவனவன் செய்ய வேண்டும் என்று உபதேசிப்பவர். காந்தியும் அவனவன் வருணதர்மத் தொழிலையே செய்ய வேண்டும் என்று சொல்லுபவர்.
- சங்கராச்சாரியும் ஜாதிப் பிரிவை ஒப்புக்கொள்வதுடன் ஒரு ஜாதிக்கு மற்றொரு ஜாதி சமபந்தி போஜனமோ, கலப்புமணமோ கூடாது என்று சொல்லுபவர். காந்தியும் ஜாதிப் பிரிவை ஒப்புக் கொண்டும் கலப்பு மணம் சமபந்தி போஜனம் ஆகியவைகளை ஒப்புக்கொள்ளாமலும் இருக்கிறவர். சங்கராச்சாரியும் பிறவியில் ஜாதி உண்டு என்கின்றவர். காந்தியும் பிறவியில் ஜாதி உண்டு என்கிறவர்.
- சங்கராச்சாரியும் முன்பின் ஜன்மம், தலைவிதி, கர்மம் என்பவை களை ஒப்புக்கொள்ளுகிறவர். காந்தியும் முன்பின் ஜன்மம், கர்மம், தலைவிதி ஆகியவைகளை ஒப்புக்கொள்ளுகிறவர்.
- சங்கராச்சாரி மனுதர்மம் பராசர தர்மம் ஆகியவைகளை ஒப்புக் கொள்ளுபவர். காந்தியும் மனுதர்மம் பராசர தர்மம் ஆகியவைகளை ஒப்புக்கொள்ளுபவர்.
- சங்கராச்சாரி தன்னை லோக குரு என்று அழைப்பதை ஒப்புக் கொள்ளுபவர். காந்தியும் தன்னை மகாத்மா என்று அழைப்பதை ஒப்புக்கொள்ளுபவர்.
- சங்கராச்சாரி பரமசிவனுடைய அம்சமாக கருதப்பட பார்ப்பனர் களால் புராணக் கதைகள் எழுதி பிரசாரம் செய்யப்படுபவர். காந்தியும் மகாவிஷ்ணு அவதாரமாய் கருதப்பட பிராமணக் கவிகளால் எழுதி யும் சுதந்திரச்சங்கு முதலிய அனேக பார்ப்பனர்களால் பிரசாரமும் செய்யப்படுபவர்.
- சங்கராச்சாரியும் இந்தமாதிரி படத்தையும், பிரசாரத்தையும் வெட்கப்படாமல் பொறுத்துக் கொள்ளுகிறவர். காந்தியும் வெட்கப் படாமல் இப்படிப்பட்ட பிரசாரங்கள் நடைபெறுவதை ஆnக்ஷபிக்கா மல் பார்த்துக் கொண்டிருப்பவர்.
- சங்கராச்சாரி தீண்டாதாருக்குக் கோவில் பிரவேசம் கொடுத்தால் இந்துமதமே போய்விடும் என்பவர். காந்தியும் தீண்டாதாருக்குத் தனிப்பிரதிநிதித்துவம் கொடுத்தால் இந்துமதமே போய்விடும் என்பவர்.
12, சங்கராச்சாரி தீண்டாதார் கோவிலுக்குள் போனால் கோவில் தீட்டுப்பட்டுவிடும் என்கிறார்.
காந்தி, புண்ணியார்ச்சனை (சம்ரோக்ஷணை) செய்து தீட்டைப் போக்கிக் கொள்ளலாம் என்கிறார்.
- சங்கராச்சாரி மனிதனுக்கு தீண்டாமை உண்டு என்கிறார். காந்தியும் மனிதனுக்கு தீண்டாமை உண்டு என்கிறார்.
- சங்கராச்சாரி மாடு தின்பவர்கள் – சண்டாளர்கள், கோவிலுக்குள் போக உரிமை இல்லாத ஜாதி என்கிறார். காந்தியும் மாடு தின்பவர் கீழ்ஜாதி கோவிலுக்குள் அனுமதிக்கக் கூடாத ஜாதி என்கிறார்.
- சங்கராச்சாரி ராமராஜ்யம் வேண்டுமென்கிறார். காந்தியும் ராம ராஜ்யம் ஸ்தாபிப்பதற்காகவே உயிர் வாழ்கிறேன் என்கிறார்.
- சங்கராச்சாரி சுயராஜ்யத்தை விட மதம் பெரியது என்கிறார். காந்தி யும் மதத்திற்காகத்தான் சுயராஜ்யம் கேட்கிறேன் என்கிறார்.
- சங்கராச்சாரி பொது உடைமைக் கொள்கை கூடாது. அது கடவுள் ஆக்கினைக்கு விரோதம் என்கிறார்.
காந்தியும் பொது உடைமைக் கொள்கை கூடாது. அதை ஒழிக்கத் தான் உப்புசத்தியாக்கிரகம் ஆரம்பித்து மக்கள் கவனத்தை அதில் திருப்பிவிட்டேன் என்கிறார்.
- சங்கராச்சாரிக்கு மடம் உண்டு காந்திக்கும் மடம் (ஆச்சிரமம்) உண்டு.
- சங்கராச்சாரிக்கும் அடிமைகள் போன்ற பக்தர்கள் உண்டு. காந்திக் கும் அடிமைகள் போன்ற பக்தர்கள் உண்டு.
- சங்கராச்சாரிக்கும் முதலாளிமார்கள் ஊரார் உழைப்பில் வாழ்கின்ற வர்கள் பணம்கொடுத்து பிரசாரம் செய்விக்கிறார்கள்.
காந்திக்கும் முதலாளிமார்கள் ஊரார் உழைப்பில் வாழுகிறவர்கள் பணம்கொடுத்து பிரசாரம் செய்விக்கிறார்கள்.
- சங்கராச்சாரியும் எதற்கும் பகவான் கட்டளை இடுகிறதாகச் சொல்லுகிறார். காந்தியும் எதற்கும் பகவான் கட்டளையிட்டதாகச் சொல்லுகிறார்.
- சங்கராச்சாரி பூஜை ஜபம் செய்கிறார். காந்தியும் பிரார்த்தனை பஜனை செய்கிறார்.
- சங்கராச்சாரிக்கு டி. ஆர், ராமச்சந்திரய்யர் போன்ற வருணாச் சிரமிகள் உதவியாளர்களாக இருக்கிறார்கள். காந்திக்கும் மாளவியா போன்ற வருணாச்சிரமிகள் உதவியாளர்களாக இருக்கிறார்கள்.
- சங்கராச்சாரிக்கு காவி உடுத்தியிருந்தாலும் சென்றவிடமெல் லாம் இந்திரபோகம். காந்திக்கும் அரைத்துணி கட்டியிருந்தாலும் சென்ற விடமெல்லாம் ராஜபோகம் நடக்கிறது.
- சங்கராச்சாரி காலில் ஜனங்கள் விழுகின்றார்கள். காந்தி காலி லும் ஜனங்கள் விழுகின்றார்கள்.
- சங்கராச்சாரியையும் பார்ப்பனர்கள்தான் லோககுருவாக்கி னார்கள். காந்தியையும் பார்ப்பனர்கள் தான் மகாத்மா ஏன் அவதார புருடராய் ஆக்கினார்கள்.
- சங்கராச்சாரி விக்கிரக ஆராதனையை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கிறார். காந்தியும் விக்கிரக ஆராதனையை ஆதரித்து அதை நிலைத்துவைக்க உதவி செய்கிறார்.
- சங்கராச்சாரி பெண்களை சீதை, நளாயினி, சந்திரமதிபோல் இருக்கச் சொல்லுகிறார். காந்தியும் பெண்களை சீதை, நளாயினி, சந்திர மதிபோல் இருக்கச் சொல்லுகிறார்.
- சங்கராச்சாரி படம் கடவுள் படம்போல் பாவிக்கப்பட்டு அதை வீடுகளில் கோவில்களில் பூஜையில் வைக்கப்பட்டிருக்கிறது. காந்தி படமும் கடவுள் படம் போல் பாவிக்கப்பட்டு அனேக வீடுகளிலும் ரதம், தேர்களிலும் கூட வைத்துப் பூஜிக்கப்படுகிறது.
ஆகவே ஒரு நல்ல சரியான ஜோடிசேர்க்க சுதந்திரச் சங்கு இனியும் என்ன என்ன விஷயங்களில் பொருத்தம் தேவை என்று கருதுகின்றது என்று தெரிந்தால் நம்மால் ஆனவரை முயற்சித்துப் பார்க்கின்றோம். முடியா விட்டால் இவ்வளவுதான் இதற்கு மேல் நல்ல ஜோடி சேர்க்க நம்மால் ஆக வில்லை என்று கண்ணியமாய் ஒப்புக்கொள்ளுகிறோம்.
குடி அரசு – கட்டுரை – 22.01.1933