ஆதி திராவிடர்களுக்கு இந்துக்களின் துரோகம்

உயர்திரு காந்தி அவர்கள் “ஆதிதிராவிடர்கள் கேட்கும் உரிமையை என் உயிர் போகும் அளவும் எதிர்த்தே தீருவேன்” என்று சொன்னதில் இருந்தும்,

“ஆதிதிராவிட தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு லண்டனுக்கு வந்திருப்பவர்கள் ஆதிதிராவிடர்களின் தலைவர்கள் அல்ல” என்று சொன்னதில் இருந்தும்,

“ஆதிதிராவிட தலைவர்கள் வெட்கப்பட்டு (அவமானப்பட்டு) ஓடும் படியாக நான் செய்யப்போகும் காரியத்திற்கு நீங்கள் உதவி புரிய வேண்டும்” என்று இந்திய மாணவர்களைக் கேட்டுக் கொண்டதிலிருந்தும், “ஆதி திராவிடருக்கு நான் தான் (காங்கிரசுதான்) பிரதிநிதியே யொழிய வேறு யாரும் இருப்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்றும்,

மற்றும் ஆதிதிராவிட  தலைவர்களை அவமானமாகப் பேசியதில் இருந்தும், ஆதிதிராவிட மக்களுக்கு திரு.காந்தியின் மீது அதிருப்தி ஏற்பட இடமுண்டாய் விட்டது.

இந்த சங்கதி தெரிந்த இந்திய காங்கிரசுகாரர்கள் என்பவர்கள் பலர் ஆங்காங்குள்ள சில ஆதி திராவிட கூலிகளைப் பிடித்து, கூலி கொடுத்து கூட்டி வைத்து, ஆதிதிராவிட தலைவர்களை ஏளனமாகப் பேசும்படி செய் தும், அவர்களிடம் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், திரு.காந்தி இடமே நம்பிக்கை இருப்பதாகவும் சீமைக்குத் தந்தி கொடுக்கச் செய்ததில் இருந்தும் காங்கிரசுக்காரரிடமும் ஆதி திராவிடர்களுக்கு அதிருப்தி ஏற்பட இடமேற்பட்டது.

இவை மாத்திரமல்லாமல் திரு.காந்தி அவர்கள் தனது சுயராஜ்ஜி யத்தில் “வருணாச்சிரமமும் பரம்பரைத் தொழிலும் காப்பாற்றபடும் என்று மேல் ஜாதியாருக்கு உறுதி கொடுக்கப்படும்” என்று தெரிவித்து இருந்தாலும் மற்றும் “கிராம வாசிகள் (சூத்திரரும் பஞ்சமரும்) மாடு மேய்த்தும் செருப் புத் தைத்தும் ஜீவிக்க வேண்டுமேயொழிய அவர்கள் வியாபாரிகளைப் போல (வைசியர்களைப் போல்) பணக்காரர்களாகி பெட்டியில் பணம் மீத்தக் கூடாது” என்றும் சொன்னதில் இருந்தும் திரு.காந்தியிடம் அவர்களுக்கு அடியோடு நம்பிக்கை இல்லாமல் போகவும் இடம் ஏற்பட்டு விட்டது. இவ்வளவுடன் மாத்திரம் இல்லாமல் இந்திய “தேசீய பத்திரிகை”கள் என்பவை யெல்லாம் அவை பார்ப்பனரால் நடத்தப்படுபவைகளானாலும் பார்ப்பனரல்லாதாரால் நடத்தப்படுபவைகளானாலும், எல்லாம் ஒரே மாதிரி யாக ஆதிதிராவிடர்களுக்கு துரோகமாகவே நடந்து கொள்வதாலும் அதாவது ஆதிதிராவிடர் கேட்பது அக்கிரமமென்றும், காந்தி சொல்லு வதும் காங்கிரசு சொல்லுவதுமே சரியென்றும் எழுதுவதோடு நிற்காமல், ஆதி திராவிடர்களது சேதியை சரி வர வெளிப்படுத்தாமல் தப்பும் தவறு மாகவும் பொது ஜனங்களுக்கு ஆதிதிராவிடர்கள் மீது தப்பர்த்தமும் துவேஷமும் ஏற்படும்படியாக கட்டுப்பாடாய் பிரசுரித்து வருவதாலும் ஆதிதிராவிடர்கள் மனம் பதறி எந்த வகையிலாகிலும் தங்களுக்குப் பந்தோபஸ்து கிடைக்க வேண்டும் என்று முயற்சி செய்யக் கட்டாயப் படுத்தப்பட்டு விட்டது.

நிற்க, சென்ற வாரம் சென்னையில் கூடிய ஆதிதிராவிடர்களின் மூன்று கூட்டங்களில் 3 நாளும் சில பார்ப்பனர்களும் அவர்களது கூலிக ளான சில காங்கிரசு சகாக்களும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் சென்று கலகம் செய்து இருக்கின்றார்கள் என்பதாக நம்பத்தகுந்த இடத்தில் இருந்து சேதி கிடைத்திருக்கின்றது.

அதாவது, முதல் நாள் பீச்சு மீட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது சில அய்யங்கார் பார்ப்பன மாணாக்கர்கள் வம்பில் பிரவேசித்து திரு. பொன்னம்பலம் பேசிக் கொண்டிருக்கும் போது “காந்திக்கு ஜெ, வந்தே மாதரம், அம்பட்காருக்கு ஷேம்” என்று சத்தம் போட்டு கூட்டத்தைக் கலைக்கசூக்ஷி செய்தார்களாம். ஒரு கனவான் அவர்களிடம் மரியாதையாய் “உங்கள் கூட்டத்திற்கு நாங்கள் வருகின்றோமா? நீங்கள் ஏன் எங்கள் கூட்டத்தில் கலவரம் செய்கின்றீர்கள்?” என்று கேட்க, அதற்கு சரியான பதில் சொல்லாமல் “இதெல்லாம் சுயமரியாதை பசங்களுடைய குறும்பு” என்று சொன்னாராம். பிறகு, அவர்களுக்கு புத்தி கற்பித்த பிறகு போய் விட்டார்கள்.

அடுத்தநாள் இந்த விஷயத்தையும், நடந்த தீர்மானத்தையும் எல்லா பத்திரிகை ஆபிசுக்கு அனுப்பியும் “திராவிடன்” தவிர மற்ற எப் பத்திரிகையும் லக்ஷியமே செய்யாமலும், சில ஒழுங்காய் போடாமல் ஆதிதிராவிடரை கண்டிக்கும் மாதிரியிலும் பரிகாசமாகவும், இழிவு படுத்தும் மாதிரியாகவுமே பிரசுரித்தன. அசோசியேட் பிரசுக்கு இந்த சேதியை நேரில் கொடுத்த போது “இந்த மாதிரி அனாமதேய சங்கதிகள் போட முடியாது” என்று சொல்லி விட்டார்களாம்.

பிறகு, அடுத்த மீட்டிங் நேபியர் பார்க்கில் திரு.சிவராஜ் பி.ஏ, பி.எல்., எம்.எல்.சி., அவர்கள் தலைமையில் கூட்டப்பட்ட போதும் சிலர் கூட்டத்தில் குழப்பம் செய்ய முயற்சித்து பயன்படாமல் போனதால் ஆதி திராவிடர்கள் திரும்பி வீட்டிற்கு போகும் போது அவர்களை காங்கிரசுகாரர் வழிமறித்து அடித்தும், கல் எறிந்தும் தொந்திரவு செய்திருக்கிறார்கள் என்று ஆதிதிராவிட தலைவர் ஒருவர் சொன்னதோடு, போலீசாரும், ஆதி திராவிடர் நன்றாய் உதைபட்ட பிறகு தான் வந்தார்கள் என்றும் சொன்னார்.

இந்த சங்கதியையும் “தேசிய பத்திரிகை” கள் என்பவை “ஆதி திராவிடர்கள் விஷமம்” என்றும் “காந்திக்கு ஆபத்து” என்றும் “ஆதி திராவிடர்கள் குறும்பு” என்றும் தலைப்பு கொடுத்து ஆதிதிராவிடர்கள் மீதே பழி சுமத்தி எழுதிற்றே யொழிய ஒன்றாவது அவர்கள் அடிபட்டதற்கு பரிதாபப்படாமலும், அடிபட்டதே வெளியில் தெரியாமலும் செய்து விட்ட தோடு, அவர்கள் மீது ஜனங்களுக்கு துவேஷம் உண்டாகும்படியாகவே செய்து வந்தன.

ஒரு தலைவர் ஒரு பத்திராதிபரைக்கண்டு இவ்விஷயங்களைச் சொல்லி கேட்டதற்கு “சுயமரியாதைக்காரர்கள் இதில் கலந்ததால் தான் நான் அப்படி செய்தேன்” என்றும் “நீங்கள் அவர்களோடு சேர்ந்தால் இன்னமும் உங்களுக்கு என்ன கதி கிடைக்கின்றது பாருங்கள்” என்றும் “இந்த காரணத்தால் தான் போலீஸ் உதவி உங்களுக்கில்லை” என்றும் சொன்னாராம்.

மூன்றாம் நாள் திரு.எம்.சி.ராஜா எம்.எல்.ஏ. அவர்கள் தலைமையில் நடந்த எழும்பூர் ஏரி கூட்டத்தில் சுமார் ஏழாயிரம் பேருக்கு மேலாகவே வந்திருந்தார்கள். இக்கூட்டத்திலும் கலவரம் செய்யப் பலர் நினைத்திருந் தாலும் கூட்டம் பலமாய் இருந்ததால் அங்கு ஒன்றும் செய்ய முடியாமல் போய் விட்டதால், திரும்பிப் போகும் போது வழியில் பெருத்த கலவரம் செய்யப்பட்டிருக்கின்றன. அடிதடிகளும் நடந்ததாய்த் தெரிகின்றன.

இந்த விஷயங்களை எல்லாம் உண்மையாய் எழுதாமல் சில பத்தி ரிகைகள் எல்லாம் கட்டுப்பாடாக ஆதிதிராவிடர்களுக்கு கொடுமையையே உண்டாக்கி வருகின்றன. இது மிகவும் பரிதாபகரமான விஷயமாகும். ஆதிதிராவிடர்களிடமிருந்து மலம் எடுக்கும் தொழில் முதல் கொண்டு எவ்வளவோ இன்றியமையாத வேலைகளைப்பெற்று வரும் இந்து மக்கள் என்பவர்கள், அவர்களுக்கு இவ்வளவு கொடுமையும், துரோகமும் செய்து வருவது எந்த விதத்திலும் பொறுக்க முடியாததேயாகும். இந்த கொடுமை கள் எப்படியாவது, ஆதிதிராவிடர்களை மெய்யாகவே ஒரு நாளைக்கு வெறி பிடிக்கத் தான் செய்து விடும். இது தவிர்க்க முடியாத இயற்கையாகும். பிறகு இப்போது “புலி வருகின்றது! புலி வருகின்றது!!” என்பது போல் ஆதி திராவிடர்களின் மீது சுமத்தும் பழியும், அபாண்ட பொய்யும், விஷமப் பிரசாரமும் ஒரு நாளைக்கு உண்மையாய் நடக்க நேரிட்டாலும் நேரிடலாம். ஆகையால் அறிவாளிகள் ஜாக்கிரதையாயும், முன் எச்சரிக்கை யாயும் நடந்து கொள்ள வேண்டியது புத்திசாலித்தனமாகும். வேதாந்தமும், தத்துவ ஞானமும்,அஹிம்சா தர்மமும் பைத்தியக்காரர்கள் ஆஸ்பத்திரியில் நடக்க வேண்டிய தாகுமே யொழிய ஆதிதிராவிடர் தலையில் கைவைக்க பயன்படுத்துவது தற்கொலையாகவே முடியும். அஹிம்சா தர்மத்தையும், கடவுள் பக்தி நம்பிக்கையையும் கொண்டு கோட்டை வாசலில் துளசியைக் கொட்டிய நாயக்கர் ராஜியம் இன்று பெயர் சொல்ல வார்சு இல்லை என்பதை யாரும் மறுக்கமுடியாது. நிற்க,

ஆதிதிராவிடர்கள் என்பவர்களும் பொறுமையை இழக்க வேண்டிய அவசியம் ஒன்றும் நேர்ந்து விடவில்லை. அவர்கள் இந்த சமயத்தில் பதிலுக்குப் பதில் என்று கூட பலாத்காரத்தில் இறங்குவது மிக மிக தப்பிதமே யாகும். ஆனால் உதைகளை பட்டுக்கொள்ளும்படி நாம் சொல்லவர வில்லை. பதிலுக்கு பதில் உதைப்போம் என்று எதிரிகள் நினைக்கும்படி நடந்து கொள்ள வேண்டியதானது  இப்படிப்பட்ட மக்களுக்கு மிகவும் அவசியமானாலும், பொறுத்தவரையில் அதிக பலம் ஏற்படும் என்பதை ஞாபக மூட்டுகின்றோம்.

நிற்க, இந்த நிலைமையில ஆதிதிராவிடர்கள் இனி இந்துக்களை நம்புவதோ, காங்கிரசையோ, காந்தியையோ நம்புவதோ “தான் சாக மருந்து குடிப்பதை”யே ஒக்கும் என்று தைரியமாய்ச் சொல்லுகின்றோம். கண்டிப்பாய் இனி ஆதிதிராவிடர்கள் அரசியலில் தனித்தொகுதி தேர்தல் முறையும், வகுப்புவாரி உத்தியோக முறையும் இல்லாமல் இந்தியாவில் அரைநிமிஷம் கூட மனிதர்களாய் வாழ  முடியாது. ஆதலால் அவர்கள் தனித்து நின்றோ, அல்லது தங்களுக்கு வேண்டிய உதவி அளிக்கக் கூடியவர்களுடன் கலந்தோ முயற்சி செய்து லக்ஷியத்தை அடைய கவலை கொள்ள வேண்டியது அவசியம் என்றும் ஏமாந்து விடக்கூடாது என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

குடி அரசு – தலையங்கம் – 25.10.1931

 

 

You may also like...