தலைவிரித்தாடிய சாதிவெறி

பெரியார் ஐரோப்பிய பயணம் மேற்கொண்ட இக்காலகட்டத்தில் அவர் இல்லாத நிலையிலும் குடி அரசும் சுயமரியாதை இயக்கமும் தளராமல் எழுச்சிநடை போட்டன.
என்.சிவராஜ் சட்டமன்ற உறுப்பினராகவும் வழக்கறிஞராகவும் இருந்தும் கூட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த காரணத்தால் சென்னை காஸ்மோபாலிட்டன் கிளப்பில் உறுப்பினராக மறுக்கப்பட்டார். குடி அரசு கண்டித்தது. பால்ய விவாகத்தைத் தடைசெய்யும் சாரதா தடைச்சட்டம் அமுலுக்கு வந்தபிறகும் கூட அந்த சட்டம் தங்களைக் கட்டுப்படுத்தாது என்று தனது மகளான சிறுமிக்கு திருமணம் செய்கிறார் ஒரு தந்தை. மாவட்ட நீதிமன்றம் அவரைத் தண்டிக்கிறது. கல்கத்தா உயர்நீதிமன்றமோ அவரை விடுதலை செய்கிறது. இந்து, முகமதிய குடும்பங்களில் நடைபெறும் காரியங் களை இங்கிலாந்து சட்டங்களே தடுக்கமுடியாது என்று 1780, 1797 ஆம் ஆண்டுகளில் கிழக்கிந்தியக் கம்பெனி இயற்றிய சட்டத்தை உயர்நீதிமன்றம் எடுத்துக்காட்டியது. அந்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென்று குடி அரசு குரல் கொடுத்தது.
தாழ்த்தப்பட்ட பெண்கள் ரவிக்கை அணிந்தால் அவர்கள் மார்புகள் அறுக்கப்படும். வெள்ளை வேட்டி கட்டக்கூடாது. கிராப் வைக்கக்கூடாது என்று சேலம் மாவட்டம் தாத்தையங்கார்பட்டியில் ஆதிக்க சாதியினர் விதித்த கட்டுப்பாடுகளை குடி அரசு தட்டிக்கேட்டது. தாழ்த்தப்பட்டோர் தனித் தொகுதி முறையை முதலில் ஆதரித்த எம்.சி.ராஜா பிறகு காந்தியார் பக்கம் சாய்ந்து வேறு குரலில் பேசியது குடி அரசு விமர்சனம் செய்யத் தயங்க வில்லை. கோயிலுக்கு நுழையவே அனுமதி மறுக்கப்பட்ட நாடார் சமூகத் தைச் சார்ந்த வி.வி.இராமசாமி இராமநாதபுரம் மாவட்ட தேவஸ்தானக் கமிட்டித் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டபோது குடி அரசு பாராட்டி மகிழ்ந்தது. மன்னார்குடியில் நடந்த சுயமரியாதை இயக்க மாநாட்டில் பேசிய குஞ்சிதம் குருசாமி அந்நிய ஆட்சி அந்நிய பாஷைகளை எதிர்க்கும் காங்கிரசாரைப் பார்த்து ஒரு கேள்வியை எழுப்பினார். ஆங்கிலேயர் அந்நியர் என்றால் ஆரியர் யார்? ஆங்கிலம் அந்நிய பாஷை என்றால் சமஸ்கிருதம் எந்த பாட்டன் வீட்டு பாஷை?
யோகாவை மதத்தோடு இணைத்து தெய்வீக முலாம்பூசும் முயற்சிகள் இப்போது நடப்பதைப் போலவே அந்தக் காலத்திலும் நடந்ததை யோகாப் புரட்டு என்ற கட்டுரையில் குடி அரசு சுட்டிக்காட்டுகிறது.
– பதிப்பாளர்

You may also like...