தலையங்கம் – சுப்ரமணியசாமிகள்!

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் போட்டுத் தந்த துரோகப் பாதையில் வீரியத்துடன் நடைபோடுகிறது, பா.ஜ.க. ஆட்சி. அய்.நா.வால் போர்க் குற்ற விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இலங்கை அதிபர் இராஜபக்சே, மோடியின் பதவியேற்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். கச்சத் தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்க உரிமை கிடையாது என்று உச்சநீதிமன்றத்தில் ஆட்சி மனு போடுகிறது. அய்.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்களால் இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட மனித உரிமையாளர்கள் குழு இந்தியாவுக்கு வருவதற்கு ‘விசா’ வழங்க மறுத்து விட்டார்கள்.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறீலங்காவுடன் இணைந்து வெளிப்படையாக செயல்படும் சுப்ரமணியசாமி என்ற பார்ப்பனர், பா.ஜ.க.வின் ‘செயல் உத்திக் குழு’ தலைவர் பதவிக்கு முடிசூட்டப்பட்டுள்ளார். பதவி கிடைத்தவுடன் இலங்கைக்குப் போய் இராஜபக்சேயையும் அவரது தம்பி, கோத்தபய இராஜபக்சேயையும் சந்தித்து இலங்கை அரசுக்கு ஆதரவாக வேகம் வேகமாக காய்களை நகர்த்தக் தொடங்கிவிட்டார். கொழும்பிலிருந்து வெளிவரும் ‘டெய்லி மிர்ரர்’ ஆங்கில நாளேட்டில் அவரது சிறப்புப் பேட்டி ஒன்று (ஜூலை 23, 2014) வெளி வந்திருக்கிறது.
அய்.நா. மனித உரிமை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட குழுவைக் கண்டு இராஜபக்சே அஞ்சத் தேவையில்லை என்றும், அது கல்லெறிந்தால் பயந்து ஓடும் காக்கைகளைப்போல் அதிகாரம் ஏதுமில்லாத குழு என்றும் அய்.நா. பாதுகாப்புக் கவுன்சில் ஒப்புதல் பெறாமல், மனித உரிமை ஆணையம் எதையும் செய்துவிட முடியாது என்றும், அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல, இந்தியாவின் தேசிய நலன்களை மீறி, தமிழ்நாடு அரசு செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்றும், தமிழர்கள் நலனுக்காக இந்தியாவின் தேசிய நலனை தியாகம் செய்ய முடியாது என்றும் (சூயவiடியேட iவேநசநளவள டிக ஐனேயை றடைட nடிவ நெ ளயஉசகைiஉநன கடிச வாயவ டிக கூயஅடை iவேநசநளவபள) ஆணவமாக கூறியிருக்கிறார்.
கொழும்பிலுள்ள பண்டார நாயகா சர்வதேச ஆய்வு மய்யத்தில் ‘மோடியின் இந்தியா’ என்ற தலைப்பில் நடந்த குழு விவாதங்களில் பங்கேற்கச் சென்ற சுப்ரமணியசாமி, இந்தியாவின் முழு ஆதரவை இலங்கை பக்கம் திருப்பும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். ஆக°டு மாதம் இராணுவ அதிகாரிகள் மாநாடு ஒன்றும் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் இந்திய இராணுவ அதிகாரிகளோடு சுப்ரமணியசாமியும் பங்கேற்கவிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்திய-இலங்கை வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சிகள் நடப்பதாக இந்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பின்புலத்தில்தான் இலங்கை இராணுவ அமைச்சகம், தமிழக முதல்வர் மீனவர் உயிர் காக்க பிரதமர் மோடிக்கு எழுதும் கடிதங்களை ‘காதல் கடிதம்’ என்று கொச்சைப்படுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வரை இழிவுபடுத்தும் படங்களை வெளியிட்டது. வழமைக்கு மாறாக தமிழ்நாட்டில் தி.மு.க. உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் இயக்கங்களும் தமிழக முதல்வருக்கு எதிரான இந்த இழிவைக் கண்டித்துக் குரல் எழுப்பியிருப்பது வரவேற்கத்தக்க ஒரு வரலாற்றுத் திருப்பம். இந்த நாகரிகமான பண்பாடு தொடர வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம்.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை அலட்சியப்படுத்தி, அந்நாட்டுடன் வர்த்தகத் தொடர்பை வளர்க்க இந்திய ஆட்சி முயற்சிப்பது, வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் நடவடிக்கையே யாகும்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் ஏதுமின்றி, சுப்ரமணியசாமிகள் தான்தோன்றித்தனமாக செயல்படும் உரிமையை அளித்தது யார்? தேசிய நலனுக்காக தமிழர் நலன்களை பலிகடாவாக்குவோம் என்று பேட்டி அளிக்கக்கூடிய ஆணவம் எங்கிருந்து வந்தது? இதே குரலில் – பா.ஜ.க.வின் வெளியுறவுக் கொள்கைக்கான ஆலோசகராக உள்ள சேஷாத்திரி சாரி என்ற பார்ப்பனரும் பேசி வருகிறார்.
தமிழர் நலனைப் பலியிடுவோம் என்று கொக்கரிக்கும் இந்த சுப்ரமணியசாமிதான், உ.பி. மாநிலம் கான்பூரில் 1995இல் பார்ப்பனர் மாநாட்டைக் கூட்டி, “பிராமணர்களின் சுயமரியாதையில்தான் இந்தியாவின் சுயமரியாதையே அடங்கியிருக்கிறது” என்று பிரகடனம் செய்தார்.
1991இல் நேர்மையின் சின்னமாக செயல்பட்ட நாடாளுமன்றத் தலைவர் ரபிராய் அவர்களை ‘கைது செய்வேன்’ என்று மிரட்டியவர் சுப்ரமணியசாமி. (ரபிராய், வி.பி.சிங் ஆட்சியிலும், அவரைத் தொடர்ந்து வந்த சந்திரசேகர் ஆட்சியிலும் அவைத் தலைவராக நீடித்தவர்) அப்போது, சந்திரசேகர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த சுப்ரமணியசாமி, கட்சி மாறும் சட்டத்தின் கீழ் தனது கட்சி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்காகவே அவைத் தலைவரை மிரட்டியவர். இதற்காக பிரதமராக இருந்த சந்திரசேகர் அவையில் அவைத் தலைவரிடம் மன்னிப்புக் கேட்டார். அதுமட்டுமல்ல, அமைச்சரவையின் ஒப்புதல் பெறாமலேயே கட்சித் தாவல் தடைச் சட்டத்தை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தலைவருக்கு எதிராக தடை வாங்கியவர். சட்டத்துறை அமைச்சரானவுடன், ‘பாபர் மசூதி-இராம ஜென்ம பூமி’ மோதலுக்கு வித்திட்ட கே.எம்.பாண்டே எனும் பார்ப்பன மாவட்ட நீதிபதியை ம.பி. மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தினார். ‘பாபர் மசூதிக்குள்’ 13,178 நாள்கள் பூட்டப்பட்டுக் கிடந்த ஒரு பகுதியை ஒரே நாள் விசாரணையில் வழிபாட்டுக்கு திறந்துவிட்டு, மோதலுக்கு வித்திட்டவர்தான், இந்த பாண்டே.
இராஜிவ் காந்தி ‘ஆசி’யுடன் பதவிக்கு வந்த சந்திரசேகர் ஆட்சி, இராஜிவ் காந்திக்கு நன்றி காட்ட அவர் மீதான போபோர்° ஊழல் வழக்கைக் குலைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது. சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் இந்த ‘சீர்குலைப்பு’க்கு அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியவர் சுப்ரமணியசாமி. தன்னால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞரையே – சி.பி.அய்க்கு எதிராக வாதாட வைத்தவர். இதைக் கண்டு நீதிமன்றத்தில் கொதித்துப் போன சி.பி.அய். இணை இயக்குனராக இருந்த அதிகாரி மாதவன், நீதிமன்றத்திலேயே ஒரு அதிகாரி வழக்கறிஞராக நின்று வாதாடிய அதிசயம் நடந்தது. தில்லை தீட்சதப் பார்ப்பனர்கள் வழக்கு என்றாலும், காஞ்சி சங்கராச்சாரி கொலை வழக்கு என்றாலும், பார்ப்பனர்களுக்காக களத்தில் வந்து நிற்கக்கூடியவர், சுப்ரமணியசாமி!
பார்ப்பன ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக வலம் வரும் இந்த பார்ப்பன சக்திகள், தமிழர்களின் இனப் பகைவர்களாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்திய ஆட்சி அதிகாரம் பார்ப்பனர்களின் பிடியில் இருக்கும் வரை தமிழினத்தை ஆபத்துகள் சூழ்ந்தே நிற்கும் என்ற உண்மையை தமிழர்கள் புரிந்து பார்ப்பன எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுப்பது அவசியம்!

பெரியார் முழக்கம் 07082014 இதழ்

You may also like...

Leave a Reply