திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 22.12.2024 அன்று மேட்டூரில் நடந்த செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 22.12.2024 அன்று மேட்டூரில் நடந்த செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 1
பெரியார் அடையாளப்படுத்திய ஆரிய திராவிட போராட்டம் இப்போது மனு நீதி எதிர் சமூக நீதி, ஹிந்து இராஷ்ட்ரம் எதிர் அரசியல் சட்டம் என்று வடிவெடுத்து இருக்கிறது. ஒன்றிய பாஜக ஆட்சி பெரும்பான்மை அற்ற நிலையிலும் பார்ப்பனிய மனுவாத சீரழிவுக் கொள்கையை நோக்கி நாட்டை இழுத்து செல்கிறது. இதற்கு எதிரான தத்துவார்த்த போராட்டம் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது,
திராவிட மாடல் ஆட்சி தான் இதைத் தடுத்து நிறுத்தும் வலிமைபெற்ற அரணாக நிற்கிறது. அதை சீர்குலைக்க எந்தவித முறைகேடுகளையும் பயன்படுத்தி அகற்றுவதற்கு தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. திராவிட மாடல் ஆட்சியின் இருத்தல் என்பது பார்ப்பனிய ஹிந்து இராஷ்டர முறியடிப்புக்கான தேவையாகவும் அவசியமானதாகவும் வரலாறு கோரி நிற்கிறது. இந்த அடிப்படை கருத்தை கவனத்தில் கொண்டு அரசுக்கு வலிமை சேர்க்க வேண்டிய அவசியத்தை இந்த செயலவை வலியுறுத்துகிறது. இந்த அரசை ஆதரித்து காப்பாற்ற வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு உள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறது.

தீர்மானம் 2
சட்ட ஒழுங்கு சீர்குலைவையும் சமூக ஒழுங்கு சீர்குலைவையும் பிரித்து பார்க்க வேண்டி இருக்கிறது. சமூக ஒழுங்கு சீர்குலைவுகளால் ஏற்படும் சமூகப் பிரச்சினைகளை ஆட்சியின் மீது ஏற்றி சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாற்றுவதில் எந்த நியாயமும் இல்லை. தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு துப்பாக்கி சூடு போன்ற பெரிய சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்ததும் இல்லை. இயற்கை சீற்றங்களால் தொடர்ந்து மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அரசு இயந்திரங்கள் உடனடியாக களத்தில் இறங்கி செயல்படுவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு சில ஊடகங்களைத் தவிர பெரும்பாலான ஊடகங்கள் இயற்கை சீற்றங்களின் மக்கள் பாதிப்பை அரசுக்கு எதிரான பரப்பரையாக ஊடக ஒழுங்கின்றி செயல்பட்டு வருகின்றன. மக்கள் கருத்து என்று ஆட்சிக்கு எதிரான நபர்களை மட்டும் தேடிப் பிடித்து பேச வைக்கிறார்கள். பாதிப்புகள் என்று படம் பிடித்து காட்டுகின்ற காட்சிகளிலும் கூட நேர்மை இல்லை. ஒரு சில போராட்டங்களைத் தவிர பெரும்பாலான சாலை மறியல்கள் மக்கள் கோரிக்கைகள் என்பதைவிட ஆட்சிக்கு எதிரான அரசியலாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் அரசியல் ஈடுபடுத்திக் கொள்ளாத பெரியார் இயக்கம் இதை சுட்டி காட்டுவதை தனது கடமையாக கருதுகிறது

தீர்மானம் 3
பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்கான கிரிமிலேயர் வரம்பு தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக 8 இலட்சமாக மட்டுமே இருப்பதை மேலும் உயர்த்தி இட ஒதுக்கீட்டு பயன்களை பெறுவதற்கான தடையை, தடைகளை ஒன்றிய அரசு நீக்க வேண்டும் என்று இந்த செயலவை வலியுறுத்துகிறது
தமிழ்நாடு அரசு சட்டப்படி ஜாதிவாரி சென்சஸ் எடுக்க முடியாது. ஜாதிவாரி சர்வே மட்டுமே எடுக்க முடியும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல்வேறு ஆணையங்கள் நியமிக்கப்பட்டு அதற்கு ஏற்ப இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வந்திருக்கின்றன. 69% ஆக இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் இருக்கிறது. ஒன்றிய அரசு 2017இல் நியமித்த ரோகிணி ஆணையம் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் தேவைப்படுகிற மாற்றங்களை ஒன்றிய அரசுக்கு பரிந்துரையாக 2023லேயே வழங்கியிருக்கிறது. ஒன்றிய ஆட்சி இதுவரை அதை வெளியிடவில்லை. இந்த நிலையில் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டிய கடமையும் உரிமையும் ஒன்றிய ஆட்சிக்கே உள்ளது என்பதை சுட்டிக் காட்டுவதோடு, அந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் ரோகிணி ஆணையப் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த வேண்டும் என்றும் இந்த செயலவை வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4
அர்ச்சகர் பயிற்சி பெற்ற 28 அர்ச்சகர்களுக்கு தமிழக அரசு ஆட்சிக்கு வந்த 100ஆவது நாளில் பணி நியமன ஆணைகளை வழங்கியது. இதை எதிர்த்து நீதிமன்றங்களில் வந்த வழக்குகளால் அடுத்த கட்ட நியமனங்கள் நடைபெறாமல் தடைபட்டு நிற்கின்றன. நீதிமன்றத் தடைகளை நீக்கும் சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று இந்த செயலவை வலியுறுத்துகிறது

தீர்மானம் 5
மக்களுக்கு மாற்றுப் பண்பாடாக மதச்சார்பற்ற விழா கொண்டாட்டங்களை வளர்த்து எடுக்க வேண்டும். அவ்வாறு
ஜாதி மதம் கடந்த மக்கள் கூடுகைகள் விழாக்களாக மாற்றப்படுவது சமூக ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.
பொங்கல், மே தினம், மனித உரிமை நாள், மகளிர் தினம் போன்ற மதச்சார்பற்ற விழாக்களின் வரிசையில் அண்மைக்காலமாக பல நகரங்களில் இளையோர்கள் ஒன்று கூடி நடத்தும் வீதி திருவிழாக்கள் மிகச் சிறந்த முன்னெடுப்பாகும். அதை மென்மேலும் பரவலாக்க வேண்டும் என்று இந்த செயலவை கேட்டுக்கொள்கிறது.

You may also like...