பிரதமர் ஆனவுடன் மோடி செய்த சதி அம்பலப்படுத்திய முன்னாள் அதிகாரி

குஜராத் மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்த பிரதமர் மோடி, அப்போதெல்லாம்     ஜி.எஸ்.டி கூடாது, அது மாநில உரிமையைப் பறிக்கும் செயல் என்றார். ஒன்றிய அரசு மாநிலங்களுக்கான உரிமைகளை நசுக்கக்கூடாது, மாநில அரசுகளுக்கு உரிய நிதியை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் பலமுறைப் பேசியிருக்கிறார். 2014 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் கூட, ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களுக்கு அதிக உரிமை வழங்குவோம் என்று மேடைக்கு மேடை முழங்கினார். அப்பேர்ப்பட்ட மாநில உரிமைப் போராளியாக தன்னைக் காட்டிக்கொண்ட நரேந்திர மோடி, ஆட்சிக்கு வந்தவுடன் சத்தமில்லாமல், பின்வாசல் வழியாக செய்ய முயன்ற காரியங்கள் அம்பலமாகியிருக்கின்றன.

மாநிலங்களுக்கு   நிதியை  பகிர்ந்தளிக்க   அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு நிதிக்குழு. தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்த அமைப்பை, ஒன்றிய அரசு கடந்த 9 ஆண்டுகளாக கையாளும் விதம் பலமுறை சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கிறது. வளர்ந்த தென் மாநிலங்களுக்கான வருவாய் பங்கீட்டைக் குறைக்கும் விதமாக பரிந்துரைகளை நிதிக்குழு வழங்க, ஒன்றிய அரசின் தலையீடுதான் காரணம் என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கின்றன.

மாநில உரிமைகளை நசுக்கும் இத்தகைய முயற்சிகளை நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த நாள்முதலே தொடங்கிவிட்டார் என்ற செய்திகள் தற்போது வெளியாகியிருக்கின்றன. 2014-இல் மோடி பிரதமரான பிறகு மாநிலங்களுக்கான நிதியை பெருமளவு குறைக்க வேண்டுமென நிதிக்குழுவுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தினார் என்று சர்வதேச ஊடகமான அல்ஜசீரா ஜனவரி 18-ஆம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அப்போது பிரதமர் அலுவலகத்தில் இணை செயலாளராக இருந்த பி.வி.ஆர்.சுப்பிரமணியம் இதுதொடர்பாக முக்கியமான தகவல்களை அந்த ஊடக நிறுவனத்திடம் பகிர்ந்துள்ளார்.

அன்றைய நிதிக்குழு தலைவர் ஒய்.வி.ரெட்டியுடன் பிரதமர் மற்றும் நிதி ஆயோக் தலைமை நிர்வாகி பி.வி.எம்.சுப்ரமணியன் சுமார் 2 மணி நேரம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். அப்போதே ஒய்.வி.ரெட்டி பிரதமரின் கோரிக்கையை ஏற்க மறுத்திருக்கிறார். நிதிக்குழு உறுதியாக இருந்ததால், மோடி அரசு அடுத்த 48 மணி நேரத்தில் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில், பல்வேறு நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துவிட்டது என்று பி.வி.ஆர்.சுப்ரமணியம் குற்றம்சாட்டியுள்ளார். நிதிக்குழுவிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் நிதிக்குழு பரிந்துரைகளை வரவேற்பதாக பாராட்டியிருப்பதையும் அல்ஜசீரா சுட்டிக்காட்டியுள்ளது.

சுப்பிரமணியம் அப்போது நிதிக்குழு தலைவராக இருந்த ஒய்.வி.ரெட்டியுடன் பேசியதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், “பல்வேறு உண்மைகளை பல கட்டங்களாக மூடி மறைத்த பிறகே பட்ஜெட் வெளியிடப்படுகிறது. இந்திய அரசின் வரவு, செலவு கணக்குகள் வெளிப்படையாக இருந்தால் அரசின் உண்மையான நிதி நிலைமை தெரிந்துவிடும். நிதிக்குழுவும் ஏற்க மறுத்ததால் வேறு வழியின்றி மாநிலங்களுக்கு 42% பங்கை அளிக்க வேண்டும் என்ற முடிவை அரசு ஏற்றது” என்றும் பி.வி.ஆர்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். நிதிக்குழு பரிந்துரைகளை ஒன்றிய அரசு ஏற்க மறுத்ததை நாடாளுமன்றத்திலேயே பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

பி.வி.ஆர். சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் பற்றி சர்வதேச செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய நிதியமைச்சகம், பிரதமர் அலுவலகம் பதில் தரவில்லை. மத்திய வரிகளில் மாநிலங்கள் பெறும் பங்கை 32%-ல் இருந்து 42%-ஆக அதிகரிக்க வேண்டும் என டிசம்பர் 2014-இல் நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் நிதிக்குழுவின் பரிந்துரையை மீறி மாநிலங்களுக்கான பங்கு 33% என்ற அளவிலேயே இருக்க வேண்டும் என்பதுதான் மோடி அரசின் விருப்பமாக இருந்துள்ளது. அரசியல் சாசனப்படி நிதிக்குழு பரிந்துரைகளை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் அல்லது ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் புதிய நிதிக்குழுவை ஒன்றிய அரசு அமைக்க வேண்டும். ஒன்றை ஏற்றுக்கொண்டு, மற்றொன்றை ஏற்க முடியாது என அரசியலமைப்புச் சட்டப்படி சொல்ல இயலாது. ஆனால் அரசியலமைப்புச் சட்டமே செல்லாது என்று அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற அளவில், அனைத்து வரம்புகளையும் மீறிக்கொண்டிருக்கிறது மோடி அரசு.

மாநிலங்களுக்கான நிதியை குறைக்க நடக்கும் முயற்சிகளை அரசு அதிகாரி ஒருவரே முதல்முறையாக ஒப்புக்கொண்டு இருக்கிறார். நிதி ஒதுக்கீடு குறைக்கப்படுவதாக தொடர்ச்சியாக எழுந்துவரும் தென் மாநிலங்களில் குரலில் உண்மையிருக்கிறது என்பதை இச்செய்தி உறுதி செய்திருக்கிறது.

பெரியார் முழக்கம் 25012024 இதழ்

You may also like...