சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!
“சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்!"
"சமூக ஒற்றுமையைக் காப்போம்!"
1. பத்தாண்டு மோடி ஆட்சியில் என்ன நடந்தது? சட்டங்கள் சீர்குலைக்கப்பட்டன. மதவெறி தூண்டப்பட்டது. மாநில அடையாளங்கள் அழிக்கப்பட்டன.
2. நீட் தேர்வால் நமது அனிதாக்களை இழந்தோம். ஜி.எஸ்.டி-யால் தமிழ்நாட்டின் வருவாயை இழந்தோம். வரலாறு காணாத மழை வெள்ளத்தை நமது மாநிலம் சந்தித்த போதும் ஈவுஇரக்கமின்றி நிவாரண நிதியே இல்லை போ என்று இறுமாப்புடன் பேசியது ஒன்றிய மோடி ஆட்சி.
3. ஆளுநர் ரவி சனாதனப் பெருமை பேசுகிறார். தமிழ்மறை தந்த வள்ளுவருக்கு காவி சாயம் பூசுகிறார். தலித்மக்களுக்கு பூணூல் அணிவிக்கிறார். தீட்சிதர்கள் நடத்தும் குழந்தைத் திருமணங்களை ஆதரிக்கிறார். தேசத்தந்தை காந்தியை அவமதிக்கிறார். சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தரமறுக்கிறார். அண்ணா சூட்டிய தமிழ்நாடு என்ற பெயரை ஏற்க முடியாது என்கிறார். ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ் தலைமையிடமாக மாற்றிவிட்டார். உச்சநீதிமன்றமே தலையில் குட்டிய பிறகும் பாஜக ஆட்சிதரும் இறுமாப்பில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிக்கிறார். பெரியார் – அண்ணா – கலைஞர் – காமராசர் போன்றோர் கட்டிக்காத்த திராவிடம் என்ற சமூகநீதியை கொச்சைப்படுத்துகிறார்.
4. பாஜக தலைவர் என்ற பதவி, அதிகார இறுமாப்பில் தமிழ்நாட்டின் வரலாறு தெரியாத அண்ணாமலை தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்படுவதை நியாயப்படுத்தி, தமிழ்நாடு மதிக்கும் தலைவர்களை இழிவுபடுத்திவருகிறார். தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி ஆட்சியின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் நியாயப்படுத்தி – தமிழர்களின் துரோகியாக வலம் வருகிறார். பத்திரிகையாளர்களை மிரட்டுகிறார்.
5. எடப்பாடி பழனிசாமி நான்கு ஆண்டுகள் முதல்வராக இருந்த போது பாஜக ஆட்சியின் உத்தரவுகளுக்கு அடிபணிந்து செயல்பட்டார். தனது நான்காண்டு ஆட்சியை காப்பாற்றுவதற்காக பாஜக அரசின் ஊதுகுழலாக மாறி காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம், விவசாய விரோத சட்டங்கள், முத்தலாக் தடை சட்டம் என்று அத்தனைக்கும் ஆதரவளித்த எடப்பாடி பழனிச்சாமி, இப்போது இஸ்லாமியர் வாக்குகளை பெற நாடகமாடி வருகிறார். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர மறுத்து ஒன்றிய பாஜகஆட்சி அனுப்பிய கடிதத்தைக் கூட மக்களுக்கு தெரிவிக்காமல் ஓராண்டு காலம் மறைத்து வைத்திருந்தார். கூட்டணியில் இணைந்து மோடியே பிரதமராக வேண்டும் என்று பேசினார். இப்போது திடீரென பாஜககூட்டணியில் இல்லை என்கிறார். மோடி மீண்டும் பதவிக்கு வந்தாலும் ஆதரவு தர மாட்டோம் என்று அவரால் உறுதியாகக் கூற முடியுமா?
பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்று அறிவித்த பிறகும் பில்கிஸ் பானு பிரச்சனையிலும், தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்க மறுத்ததிலும் மோடியைக் கண்டிக்காமல் திமுக ஆட்சியை மட்டுமே கண்டிக்கிறார்.
6. திமுக ஆட்சி பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் பல மகத்தான சாதனைகளை படைத்துவருகிறது. மகளிர் கட்டணமில்லா பேருந்துப் பயணம், பள்ளியில் காலை சிற்றுண்டி, மகளிர் உரிமைத்தொகை, அரசுப் பள்ளியில் படித்து கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், தமிழ்நாட்டை தொழில்வளமாக்கிட தொழில் முதலீடுகளைக் கொண்டுவரும் தீவிர முயற்சி, சமூகநீதிக்கு போராடிய தலைவர்களுக்கு நினைவுச் சின்னம், மருத்துவ மேற்படிப்புகளில் மோடி ஆட்சி தர
மறுத்த இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டைசட்டப் போராட்டம் நடத்தி மீட்டுத்தந்தது என பல்வேறு சாதனைகளை திமுக அரசு செய்திருக்கிறது. அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் பயிற்சி பெறும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு, முதல்நிலை தேர்வுகளுக்கு மாதம் ரூ.7,500/- முதன்மை தேர்வுக்கு மாதம் ரூ.25,000/- வழங்கும் திட்டம் என்று ஏராளமான சாதனைப் பட்டியல்களுடன் திமுக மக்களை சந்திக்கிறது; கடந்த 10 ஆண்டு பாஜக ஆட்சி தமிழ்நாட்டுக்கு என்று எந்தவொரு தனி சிறப்பு திட்டத்தையாவது கொண்டுவந்ததா? இல்லை, இல்லவே இல்லை. மதுரை எய்ம்ஸ் குறட்டை விட்டுத் தூங்குகிறது. கோரிக்கை வைக்காமலேயே 10 சதவீத EWS இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தது.
7. ராகுல்காந்தி நீதி கேட்டும் நடத்தும் நடை பயணத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் அசாம் முதல்வரின்ஆதரவோடு பாஜகவினர் கலவரம் செய்கின்றனர். பயணம் செய்யும் வாகனங்களை உடைக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜக தலைவர் நடத்தும் ‘யாத்திரை எனும் நாடகத்திற்கு’ அவர் எவ்வளவு தரம் தாழ்ந்து கருத்துக்களைப் பேசினாலும் திராவிட மாடல் அரசு அவர்களுக்கு முழு பாதுகாப்பு தருகிறது. எல்லை மீறும் ஆளுநரை தமிழ்நாடு அரசு கருத்தியல் ரீதியாக எதிர்கொள்கிறது. ஆனால் ஆளுநர் ரவிக்கு உரிய மரியாதையை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. போராடும் கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் ஜனநாயக உரிமைகளை வழங்குகிறது. குறைகளை சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ளும் பக்குவத்தோடு நடந்துகொள்கிறது. இதுதான் திராவிட மாடல் அரசின் உயரிய பண்பாடு.
8. திராவிட மாடல் அரசின் பெண்ணுரிமைத் திட்டங்கள்; ஆனால் குஜராத் கலவரத்தில்
பில்கிஸ் பானுகுடும்பத்தையே கொலை செய்து – அவரது குழந்தையை படுகொலை செய்த கும்பலுக்கு உச்சநீதிமன்றத்தில் பொய்யான தகவலைக் கூறி விடுதலை செய்தது ஒன்றிய பாஜக ஆட்சி. மணிப்பூரில் கலவரம் இல்லாத நாட்களே இல்லை, பெண்ணை பாலுறவு வன்முறைக்கு உள்ளாக்கி நிர்வாண ஊர்வலம் நடத்திய நிலையிலும், அம்மாநிலத்தின் பக்கம் திரும்பி பார்க்கவே மறுக்கிறார் மோடி.
9. நீதிமன்றங்கள், சி.பி.அய், அமுலாக்கத்துறை, ஆளுநர் மாளிகைகள், தேர்தல் ஆணையம், நாடாளுமன்றம், அரசியல் சட்டம் என அனைத்து அதிகார மட்டங்களையும் சீர்குலைத்து விட்டது. பாஜக அல்லாத மாநில முதல்வர்களையும், அமைச்சர்களையும் கைது செய்கிறது.
பாஜகவில் இருந்தால் அல்லது கட்சி மாறிவிட்டால் எந்த முறைகேடு செய்தாலும்
அமுலாக்கத்துறை நெருங்காது. தமிழ்நாட்டில் இலஞ்சம் பெற்று கையும்களவுமாக பிடிபட்ட அமுலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை காப்பாற்றத் துடிப்பது தான் இவர்களின் ஊழல் ஒழிப்பு லட்சணம்.
10. நமது தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டது. மக்களுக்காக உழைக்கும் திமுக ஆட்சிக்கு எதிராக ஆளுநர் – அண்ணாமலை – எடப்பாடி பழனிச்சாமி என்ற முக்கூட்டு அணி வெவ்வேறு வடிவங்களில் கரம்கோர்த்து நிற்கின்றன.
11. இந்த அணி தமிழர்களுக்கு, சமூகநீதிக்கு, தமிழ்நாட்டு உரிமைகளுக்கு குரல் கொடுப்பது இல்லை. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக ஆட்சிக்கு தமிழ்நாட்டின் கதவை திறந்து விடவே துடித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மட்டுமே திராவிடம் என்ற சமூகநீதிக் களத்தில் வாளும், கேடயமும் ஏந்தி நிற்கிறது. ‘இந்தியா கூட்டணி’யை சீர்மையாக்கி அதை வெற்றிகரமாக இயங்க வைக்கக்கூடிய வரலாற்றுத் தேவையை திமுக அணியிடமே தங்கி நிற்கிறது.
வாக்காளர்களே! வருகிற நாடாளுமன்றத் தேர்தல் நமக்கான சோதனைக் களம். கல்வி – மருத்துவம் – இடஒதுக்கீடு – பெண்ணுரிமை – மத நல்லிணக்கம் – தொழில் வளர்ச்சி என்று அனைத்து துறைகளிலும் வழிகாட்டும் பெருமைக்குரியவர்கள் நாம்.
மோடி மீண்டும் பதவிக்கு வந்தால் நாடாளுமன்றம் இருக்காது; மாநிலங்கள் இருக்காது;
கருத்துரிமை பறிக்கப்படும்; ஒற்றை சர்வாதிகாரம் நாட்டைக் கைப்பற்றிவிடும்.
பெரியார் – காமராசர் – அண்ணா – கலைஞர் கட்டிக்காத்த, பண்படுத்திய சமூகநீதி மண்ணைக் காப்பாற்ற திமுக அணி ஒன்றே நமக்கான பாதுகாப்பு கவசம்; இது ஒன்றே நமக்கான விடியல்.
திமுக அணியை 40 தொகுதிகளிலும் வெற்றிபெற உறுதி ஏற்போம்.
திராவிடர் விடுதலைக் கழகம்