மோடி ஏன் அஞ்சுகிறார்
மணிப்பூரில் மே 3-ஆம் தேதி தொடங்கிய கலவரம் இப்போது 82 நாட்களாக தொடர்கிறது. தொடர்ந்து அங்கே வன்முறைகள் மிக மோசமான அளவில் நடந்து வருகிறது. மே நான்காம் தேதி இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட செய்தி உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பவம் நடந்த அடுத்த நாளே 27 பழங்குடிகள் மோசமாக பாதிக்கப்பட்டது இப்போது வெளியாகியிருக்கிறது. இதில் 7 பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர், 2 பேர் எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 5-பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக அடுத்தடுத்த அதிர்ச்சிகரமான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
சுதந்திர போராட்ட வீரரின் மனைவி 80 வயதுடைய, அவரை வீட்டிற்குள்ளேயே வைத்து உயிருடன் எரித்துக் கொன்றிருக்கிறார்கள் கலவரக்காரர்கள். அண்டை மாநிலமான மிசோராமிலும் இந்த கலவரம் பரவத் தொடங்கியிருக்கிறது. மெய்தீஸ் இன மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை விடுமளவுக்கு வந்துவிட்டது.
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், அவர் குக்கி இனத்தைச் சேர்ந்தவர், அவர் பிரதமர் மோடியை மிக கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். பாஜக எம்.எல்.ஏ-வான பவோலியன்லால் ஹொக்கிப் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் பிரதமர் மோடி மணிப்பூர் கலவரத்திற்கு முக்கியத்துவம் தராமல் அமெரிக்கப் பயணத்திற்கு முக்கியத்துவம் தந்தது தவறு, அவரது பயணத்திற்கு முன்பாக அவரை பலமுறை சந்திக்க முயற்சித்தோம், ஆனால் இப்போது வரையிலும் பிரதமர் மோடியை சந்தித்து முறையிட முடியவில்லை. ஒரு வாரம் தள்ளி போடுவதே மிகப்பெரிய தாமதம் என்றார்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பேச 79 நாட்கள் ஆகின. மெய்தீஸ் இன குழுக்கள் போலீஸ் கமாண்டோக்களுடன் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த வன்முறைக்கு 99% காரணம் மெய்தீஸ் இன மக்களும், கமாண்டோக்களும் இணைந்து கமாண்டோக்கள் கொடுக்கும் ஆயுதத்தை வைத்து நடத்தும் தாக்குதல் தான் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதம் நடைப்பெற்றுள்ளது. ஆனால் இந்திய நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவில்லை. மோடி நேரில் வந்து இது குறித்து விளக்கம் தர வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை ஏற்க மறுத்து அடம் பிடிக்கிறார், மணிப்பூரே அழிந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு மோடி வந்துவிட்டார். பிரிட்டிஷ் நாடாளுமன்றம் விவாதிக்கிறது, ஆனால் இந்திய நாடாளுமன்றம் இது குறித்து விவாதிப்பதற்கு தயாராக இல்லை, இதுதான் மோடியின் உண்மையான சுயரூபம்.