சமத்துவபுரம் – டைடல் பார்க் – இரண்டுமே தேவை ஏ.எஸ். பன்னீர்செல்வம்
சமத்துவபுரம், டைடல் பார்க் [தொழில்நுட்பப் பூங்கா] இரண்டுமே ஒரே நேரத்தில் தொடங்கப்பட வேண்டும் என்பதே பெரியார்,அண்ணா பார்வை, என கலைஞர் கூறினார்
கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னைச் சந்திக்கும் பத்திரிகையாளர்களும் கல்வியாளர்களும் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை நான் எழுதுவதற்கான காரணம் என்னவென்று தொடர்ந்து கேட்டுவருகின்றனர். ஒரு தேசத்தை உருவாக்குவதில் இரண்டு விதமான கற்பனைகள் உண்டு: ஒரு கற்பனைக்கு Holding together என்றும் மற்றொரு கற்பனைக்கு Coming together என்றும் அரசியல் விஞ்ஞானத்தில் கூறப்படுகிறது.
இதில் Holding together என்ற கருத்தாக்கத்தில் அரசு இயந்திரத்துக்கும் பாதுகாப்புத் துறைக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து, மக்களுக்கான அதிகாரம் மற்றும் உரிமைகள் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்படுகின்றன. ஆனால், Coming together என்ற கருத்தாக்கத்தில் சாமானிய மக்களின் உரிமைகள், எதிர்பார்ப்புகள் முதலியவை முக்கியத்துவம் பெற்று, அரசு இயந்திரம் மக்களின் உரிமைகளை நிறைவேற்றும் ஒரு கருவியாக மாறுகிறது.
கலைஞரின் செயல்திட்டம்: அதிகாரக் குவிப்பில் நம்பிக்கை உடைய கட்சிகள் அனைத்தும் Holding together மரபில் வந்தவையாக இருக்கின்றன. நவீன இந்தியாவில் Coming together தத்துவத்தை முன்வைத்தது மட்டுமல்லாமல், அதற்கான செயல்திட்டத்தையும் அளித்த தலைவர் கலைஞர். இதற்கான பதிவுகள் 1942இல் தொடங்கி, மறையும் வரையில் அவர் எழுதிய எழுத்துகளில் விரிவாகக் காணப்படுகின்றன. 1974இல் சட்டமன்றத்தில் முதலமைச்சராக மாநில சுயாட்சித் தீர்மானத்தை முன்மொழிந்து கலைஞர் ஆற்றிய உரையைத் தமிழர்கள் அனைவரும் படிப்பது அவசியம்.
அந்த உரையில் மாநில உரிமைகள் பற்றி மட்டுமல்லாமல், மத்தியில் ஏற்படக்கூடிய விரும்பத்தகாத மாற்றங்களைப் பற்றி ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் கலைஞர் விவரிக்கிறார். ஜனநாயக மாண்புகளுக்கு மத்திய அரசு ஒரு பெரும் சவாலாக மாறக்கூடிய அபாயத்தை நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கு வருவதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே சட்டமன்றத்தில் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளார் கலைஞர். அந்தப் பேச்சிலிருந்து சில துளிகளைப் பார்ப்போம்:
“உடனடியாக நாளைக்கே மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டுவந்து, மாநில சுயாட்சி தந்துவிடும் என்கிற அந்த அவசரமான நம்பிக்கையோடும் இந்தத்தீர்மானத்தை இங்கே கொண்டுவரவில்லை. இந்தியாவில் தோன்ற இருக்கின்ற ஜனநாயகப் புரட்சியினுடைய தோற்றுவாயாக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிற நாளாக இருக்கும் என்ற கருத்தின் அடிப்படையிலேதான் அந்தத் தீர்மானத்தை இங்கே ஆளும் கட்சியின் சார்பாக – இந்தப் பேரவையில் முன்வைத்திருக்கிறோம்.”
வரலாற்றை வறட்டுத்தனமாக முன்வைத்து நடைபெறும் சிந்தனைகளுக்கு உதவாத கருத்துகளை வரலாற்று உதாரணங்களுடன் கலைஞர் சட்டமன்றத்தில் அந்தப் பேருரையில் சுக்குநூறாக உடைத்தார்; அவர் பேசியதாவது:
“வரலாற்றை மட்டுமே வைத்து இப்போது சொல்கிற எல்லா விஷயங்களுக்கும் தவறாகக் கருத்துகளைக் கற்பிக்கக் கூடாது. போர், போர் என்று அலைந்த அசோகன் களம் பல கண்டான், அவனுடைய கட்டாரி பட்டு ஆயிரக்கணக்கானவர் பிணமாயினர். அவனுடைய ரத, கஜ, துரக, பதாதி படைகளின் ஆர்வத்தால், வேகத்தால் சரிந்துபோன சாம்ராஜ்யங்கள் எத்தனையோ! கலிங்கம் வரை சென்றான். கலிங்கத்திலே களம் கண்டான்.
அங்கே பிணக் குவியல்களைப் பார்த்தான், அதற்குப் பிறகு நான் இனிமேல் போர் புரியமாட்டேன், நான் இனிமேல் பௌத்தன் என்றவுடனே அவனை, ‘உன்னுடைய பழைய வரலாறு போர் வரலாறு, ஆகவே ஒப்புக்கொள்ள மாட்டேன், நான் உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ என்று அன்றைய இந்தியா சொல்லியிருந்தால், இன்று இந்தியக் கொடியிலே அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்டிருக்க முடியாது. இன்றைக்கு அசோகச் சின்னம் நம்முடைய இந்தியா வலுவடைய தேசியச் சின்னமாக ஆகியிருக்காது. வழிப்பறிக் கொள்ளையடித்த ரட்சன் வால்மீகியாகி ராமாயணம் எழுதினான், அவனை ஒத்துக்கொண்டீர்கள், எங்களை ஒத்துக்கொள்ளக் கூடாதா?”
வரலாற்றை முன்கணித்தல்: அதிகாரக் குவிப்பு என்பது நேரு, பட்டேல் ஆட்சியிலிருந்து மோடி, அமித்ஷா ஆட்சிக்கு வழிவகுக்கும் என்பதை அன்றே கலைஞர் கணித்திருந்தார். 1974 சட்டமன்ற விவாதத்தில் அவர் சுட்டிக்காட்டிய எச்சரிக்கையை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்: “மாநிலத்தில் ஒரு முன்னேற்ற சர்க்கார் வந்து, முற்போக்கான சமதர்மத் திட்டத்தை நிறைவேற்றுகிற சர்க்காராக, இன்னும் தீவிர சர்க்காராக அமைந்து, அதற்கு நேர்முகமாக மத்திய அரசு ஒரு சனாதன சர்க்காராக, பிற்போக்கு சர்க்காராக அமைந்தால் அப்பொழுது நிலைமை என்ன?”
நீட் மரணங்கள் நிகழும் இந்தக் காலகட்டத்தில், வரம்பை மீறிச் செயல்படும் ஆளுநர்கள் விரவியிருக்கும் சூழலில், கலைஞரின் இந்த உரை ஒரு பெரிய ஜனநாயகக் கேடயமாக விளங்குகிறது. பத்திரிகையாளன் என்ற முறையில் கலைஞருடன் உரையாடுவது ஒரு பெரும் கற்றல் அனுபவம்தான்.
அவர் பயன்படுத்திய உருவகங்களும் படிமங்களும் கடினமான அரசியல் கருத்துகளை அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் சரளமாக வந்துவிழும். அரசியல் வாழ்க்கையில் எதிர்த்துச் செயல்படுதல், சமாதானமாகச் செல்லுதல் என்ற இரண்டு பாதையைப் பற்றிக் கூறும்போது ‘வாளும் கேடயமும்’ என்ற உருவகத்தை முன்வைத்துப் பேசினார்.
“நல்ல அரசியலில் நேரத்துக்கு ஏற்றாற்போல் வாளைப் பயன்படுத்த வேண்டும், அவசியம் ஏற்பட்டால் கேடயத்தைப் பயன்படுத்த வேண்டும். கேடயத்தைப் பயன்படுத்துவதால் கோழை என்ற முடிவுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை, உயிருடன் இருந்தால்தான் முற்போக்கு அரசியலில்மாற்றங்களைக் கொண்டுவர முடியும். இதைத்தான் நம் முன்னோர்கள் அன்றே, ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்று கூறியிருக்கிறார்கள்.”
1996-2001 ஆண்டு காலத்தில் அவர் முதலமைச்சராக இருந்தபோது சமத்துவத்தை முன்னிறுத்தவும் சாதி, மத பேதங்களைக் களையவும் தமிழ்நாட்டில் சமத்துவபுரங்களை உருவாக்கினார். அப்போது அவருடன் பேசும்போது, சுயமரியாதை அரசியலில் நீட்சியான அவருக்கும் மற்ற அரசியல் பாதைக்கும் உள்ள வித்தியாசத்தை மிகத் தெளிவாக எடுத்துச்சொன்னார்: “சிலருக்குப் பொருளாதார முன்னேற்றம்தான் முக்கியம், சிலருக்குச் சமுதாய மாற்றம் தான் முக்கியம், சிலருக்குத் தொழிலாளர் உரிமைதான் முக்கியம். ஆனால் சுயமரியாதை, சமதர்மம் என்பதில் நம்பிக்கை உடையவனுக்குச் சமத்துவபுரமும் டைடல் பார்க்கும் ஒரே நேரத்தில் உருவாக்க வேண்டிய பார்வை கிடைக்கும். இந்தப் பார்வைதான் அய்யாவிடம் இருந்தும் அண்ணாவிடம் இருந்தும் நான் கற்றுக்கொண்ட பாடம்.”
இன்னும் ஒரு நூற்றாண்டு: கலைஞரன் வாழ்க்கை நமக்களிக்கும் முக்கியப் பாடம் நம்பிக்கைதான். திராவிட இயக்கத்தில் கலைஞர் பங்குபெற்ற காலத்தில் அதிலிருந்த மற்ற அனைவரும் – அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், அரங்கண்ணல், இரா.செழியன் உள்ளிட்ட பலர் – முதுகலைப் பட்டதாரிகள். ஆனால், கலைஞரோ பள்ளிக் கல்வி மட்டுமே முடித்திருந்த ஒருவர்.
எழுத்தாற்றலிலும் பேச்சாற்றலிலும் இவர்கள் யாருக்கும் சளைத்தவராக அவர் இல்லை. அதேபோல், அவர் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் பணியாற்றிய காலத்தில் அவரைவிட அதிக உலக அனுபவம் பெற்றவர்களாக இருந்தவர்கள்தான் தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரமும் இயக்குநர் எல்லீஸ் டங்கனும்.
இருவரும் உலகம் முழுவதும் பயணித்தவர்கள்; ஹாலிவுட்டிலும் பல்வேறு ஐரோப்பிய ஸ்டுடியோக்களிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை நேரில் பார்த்துத் தொழில்நுட்பத்தைக் கற்றவர்கள். ஆனால், கலைஞர், திருவாரூரில் இருந்து பாண்டிச்சேரி, ஈரோடு வழியாக சேலம் சென்றடைந்தவர்.
உலகம் சுற்றிய அந்த இரண்டு ஆளுமைகளுக்கு நிகராய்த் திரைப்பட அறிவை அவர் பெற்றிருந்தார். பேனா, நாக்கு என்ற இரண்டே இரண்டு மூலதனத்தைக் கொண்டு வாழ்க்கையின் உச்சத்துக்கு ஒருவர் செல்ல முடியும் என்பதற்கான நம்பிக்கையின் அடையாளம்தான் கலைஞர்.
இந்த நம்பிக்கைக்குப் பின்னிருப்பது மக்கள்மீதான அசாத்தியமான அன்புதான். இந்த அன்புதான் கலைஞரின் அரசியல் உலகத்தை மட்டுமல்லாமல், படைப்புலகத்தையும் தீர்மானித்தது. அதனால்தான் சாதிக் கொடுமைகளுக்கு எதிரான உருவகமாக ராமானுஜரைப் பார்த்து, தன்னுடைய கடைசிப் படைப்பாய் ‘ராமானுஜர்’ தொலைக்காட்சித் தொடரை உருவாக்கினார். அரசியலிலும் படைப்புலகத்திலும் கலைஞர் ஏற்படுத்திய மாற்றங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள இன்னும் ஒரு நூற்றாண்டு ஆகுமெனத் தோன்றுகிறது.
ஜூன் 03: கலைஞர் நூற்றாண்டுத் தொடக்கம்
[கட்டுரையாளர் – கலைஞர் வரலாற்றை எழுதியவர் கட்டுரை, இந்து தமிழ்]
பெரியார் முழக்கம் 08062023 இதழ்