கோவை – சென்னை மாவட்டக் கழக கலந்துரையாடல் மாநாட்டுத் தீர்மானங்களை செயல்படுத்த – தோழர்கள் தீவிரம்

சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம், 28.05.2023 ஞாயிறு மாலை 6 மணியளவில், முருகேசன் திருமண மண்டபத்தில்  சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் நடைபெற்றது.

 

கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நோக்கவுரையாற்றினார்.  மாவட்டத் தலைவர் வேழவேந்தன் முன்னிலை வகித்தார்.

 

  • நிகழ்வில் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கான வரவு செலவு கணக்குகள் குறித்தும்
  • செயலவையில் இயற்றப்பட்ட தீர்மானம் குறித்தும்
  • “எது திராவிடம்! எது சனாதானம்!” சென்னையில் 200 தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அன்பு தனசேகரன், கரு.அண்ணாமலை உட்பட்ட சென்னை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், பகுதி கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் 25.5.2023 அன்று கோவை இரயில் நிலையம் அருகேயுள்ள வழக்கறிஞர் கார்கி அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு கலந்துரையாடல் கூட்டம்  நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு பணிச்சூழல் காரணமாக வர முடியாத தோழர்கள் தங்கள் ஆலோசனைகளை வாட்சப் மூலமாக தெரிவித்ததன் அடிப்படையிலும் கலந்து கொண்டவர்கள் கூறிய ஆலோசனையின் படியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  • கோவை கழகத் தோழர்கள் ஆதரவாளர்களையும் நண்பர்களையும் சந்தித்து ரூ.98,700 நன்கொடை பெற்று மாநாட்டின் செலவுகள் போக ரூ.47,736 மீதம் செய்து சேலத்தில் 25.5.2023 அன்று நடைபெற்ற செயலவைக் கூட்டத்தில் ஒப்படைத்துவிட்டு பிரச்சார பணிகளுக்கு ஒலிப்பெருக்கி வாங்கிட தலைமையிடம் ரூ.7736 பெற்றுக் கொண்டு ரூ.40,000 – யை தலைமையிடம் ஒப்படைத்தமைக்கும் மாநாட்டு பணியை கோவை பகுதியில் சிறப்பாக செய்தமைக்காக கோவை கழகத்தினருக்கு இக்கூட்டம் பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறது.
  • நடந்து முடிந்த இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநில மாநாட்டை மாற்று அமைப்பினரும், அமைப்பு சாராத தோழமையினரும் பாராட்டும் அளவுக்கு வெகு சிறப்பாகவும் கடுமையாகவும் செயல்பட்ட தோழர்கள் அனைவரையும் பாராட்டி வாழ்த்தி மகிழ்வுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
  • “எது திராவிடம்? எது சனாதனம்?” விளக்கத் தெருமுனை கூட்டங்களை கோவை மாநகரம், சூலூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, அன்னூர், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 25 கூட்டங்களை சிறப்பாக நடத்தி முடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
  • செயலவையில் நிறைவேற்றிய ஜாதி தீண்டாமை கொடுமைகள் பட்டியலை நண்பர்கள், தோழமை அமைப்பினர் உதவியுடன் ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் சென்று தெளிவான ஆதாரங்களுடன் பட்டியல் தயார் செய்து ஜூன் 15-க்குள் 50 சதவீத பகுதிகளையும் ஜூன் 25-க்குள் 100 சதவீத பகுதிகளையும் முடிப்பது என்றும் தலைமை அறிவித்த நாட்களில் முதற்கட்டமாக மனுக்களை கொடுப்பது எனவும் இரண்டாம் கட்டமாக ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்தி முடிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், மாநகர அமைப்பாளர் நிர்மல்குமார், கிருஷ்ணன், புரட்சித்தமிழன், துளசி, இசைமதி, சதீஷ், நிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் மற்றும் சிற்றுண்டிகளை தோழர் புரட்சித்தமிழன் வழங்கினார்.

பெரியார் முழக்கம் 01062023 இதழ்

You may also like...