தலையங்கம் தோழர்களே, தயாராவீர்!

வைக்கம் போராட்டத்திற்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில் “வைக்கம் போர் முடியவில்லை” எனும் தலைப்பில் ஜாதித் தீண்டாமைக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுக்க திராவிடர் விடுதலைக் கழகம் முடிவு செய்து இருக்கிறது. தமிழ்நாட்டில் சாக்கடை மலகுழிகளை சுத்தம் செய்யும் ஆபத்தான இழிவு வேலைகளுக்கு மனிதர்களைப் பயன்படுத்தும் அவலம் தொடர்கிறது. நச்சுக் காற்றில் சிக்கி பல தலித் தோழர்கள் உயிரிழக்கிறார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சனையில் கவனம் செலுத்தி செயல்பட முன் வந்திருப்பதை நாம் பாராட்டி வரவேற்கிறோம். மனித கழிவுகளை மனிதர்கள் எடுப்பது சட்டப்படி தடை செய்யப்பட்ட நிலையில் இந்த அவலம் தமிழகத்தில் அதிகம் நடப்பதை முதல்வர் நேர்மையோடு ஒப்புக்கொண்டு இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

முதல் கட்டமாக நகர பகுதிகளில் நவீன இயந்திரங்களை அடுத்த நான்கு மாத காலத்துக்குள் முழுமையாக செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இனிவரும் காலங்களில் மனிதர்கள் செய்யும் இந்த இழிவு வேலைகளை தடுக்க அரசு அலுவலர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், தவறுவோர் தண்டிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாட்டு கிராமங்களில் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. பார்ப்பனியத்தின் கருத்தியலான இந்தத் தீண்டாமையைத் திணிக்கும் இடைநிலை ஜாதியினர் கட்சி மாறுபாடுகளை கடந்து கைகோர்த்து நிற்கிறார்கள். இது மறுக்க முடியாத உண்மை நிலை

ஜாதி எதிர்ப்பை தனது இலட்சியமாகக் கொண்டுள்ள பெரியார் இயக்கமான திராவிடர் விடுதலைக் கழகம் கடந்த காலங்களில் பெரியார் திராவிடர் கழகமாக செயல்பட்ட போது இந்தத் தீண்டாமைகளை எதிர்த்து களமிறங்கி போராடியது திராவிடர் விடுதலைக் கழகம் ஏனைய  ஜாதி அமைப்புகளை போன்றது அல்ல. ஜாதி மறுப்பாளர்களைக் கொண்ட ஒரு இயக்கம் என்ற தனித்துவத்தோடு இந்த போராட்டத்தை முன்னெடுப்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

தீண்டாமைக்கு உள்ளாக்கப்படும் பிரிவினர்களே இத்தகைய உரிமைப் போராட்டங்களை நடத்தும் போது ஜாதி ஆதிக்கவாதிகள் அதை ஜாதி மோதல் களமாக மாற்றி விடுகிறார்கள், பெரியார் இயக்கம் நடத்தும் போராட்டங்களை அப்படி திசை திருப்பி விட முடியாது.

இந்தக் கொள்கை உறுதியோடு தமிழ்நாட்டின் தீண்டாமையைத் திணிக்கும் கிராமங்கள், கடைகள் தீண்டாமை வடிவங்கள் குறித்த பட்டியலை தயாரிக்கும் பணிகளில் ஜூன் மாதம் முதல் தேதி தொடங்கி ஜூன் 30ஆம் தேதி வரை தோழர்கள் களத்தில் இறங்குகிறார்கள். உரிய நடவடிக்கைகளுக்கு அரசின் பார்வைக்கும் அரசு அமைப்புகளின் பார்வைக்கும் இவை கொண்டு செல்லப்படுவதோடு இறுதிக்கட்டமாக களமிறங்கி அறவழியில் போராடவும் திராவிடர் விடுதலைக் கழகம் தீர்மானித்துள்ளது.

பெரியார் இயக்கத்தை வன்மத்தோடு பார்க்கும் சிலர் அறிவு ஜீவிகளாகத் தங்களைக் கருதிக் கொண்டிருப்போர் தீண்டாமை ஒழிப்பில் தமிழ்நாட்டை விட உத்தரபிரதேசம் முன்னிலையில் இருக்கிறது என்று பேசி வருகிறார்கள்.

தேசிய குற்றப்பிரிவு ஆணையம் (என்சிஆர்பி) தரும் தகவல்படி தீண்டாமை கொடுமைகளில் இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருப்பது உத்தரப்பிரதேசம் தான் 2018இல் 11,924 வழக்குகளும் முறையே 2019இல் 11,829; 2020இல் 12,714; 2021இல் 13,146 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

யூனியன் பிரதேசங்களில் மணிப்பூர் முதல் இடத்தில் இருக்கிறது அந்தமான் தீவில் மட்டும் தான் 2018 இல் இருந்து எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் கிரீஸ் சந்திரா எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் அஜயகுமார் அளித்த பதில் இது (தகவல்: ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ மார்ச் 24 2023). உத்தரபிரதேசம் தீண்டாமை கொடுமைகளின் முதலிடத்திலும், பீஹார் 2ஆவது இடத்திலும், ராஜஸ்தான் 3ஆவது இடத்திலும், மத்திய பிரதேசம் 4ஆவது இடத்திலும், ஆந்திரா 5ஆவது இடத்திலும், தெலுங்கானா 6ஆவது இடத்திலும், கர்நாடகா 7ஆவது இடத்திலும், குஜராத் 8ஆவது இடத்திலும், தமிழ்நாடு 9ஆவது இடத்திலும் இருக்கிறது

தீண்டாமைக்கு கருத்தியலை வழங்கிக் கொண்டிருக்கும் ஜாதியையும் ஜாதியைக் காப்பாற்றும் பார்ப்பனியத்தையும் இணைத்து தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை நாம் முன்னெடுத்து வருகிறோம். பார்ப்பனியத்தோடு சமரசம் செய்து கொண்டு தீண்டாமைக்குக் காரணமே ஆதிக்க ஜாதியினரும் காவல்துறையும் அரசும் தான் என்று அம்பேத்கர் சிந்தனைக்கு மாறாக பிரச்சனையின் ஆழத்தை சுருக்கி திசை திருப்பும் முயற்சிகளும் நடந்துகொண்டு இருக்கின்றன.

பெரியார் எதிர்ப்பு காழ்ப்புணர்ச்சியோடு பேசிவரும் இத்தகைய குழப்பவாதிகளை புறம்தள்ளி இந்தப் பெரும் பணியை முன்னெடுக்க நாம் தயாராவோம்.

சேலம் மாநாட்டின் வெற்றி அதன் செயல் திட்டங்களை முன்னெடுப்பதிலேயே அடங்கி இருக்கிறது என்பதை உணர்ந்து கழகத் தோழர்கள் தீண்டாமைப் பட்டியல் தயாரிக்கும் பணிகளை துரிதமாக தொடங்கிடுவார்கள் எனும் உறுதியான நம்பிக்கை நமக்கு உண்டு. தோழர்களே, தயாராவீர்!

 

பெரியார் முழக்கம் 25052023 இதழ்

 

You may also like...