செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானம் போல் சேலம் மாநாட்டுத் தீர்மானங்களும் வெற்றி பெறும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
கழக மாநில மாநாட்டில் (ஏப்.30) இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைஅமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையின் கடந்த இதழ் தொடர்ச்சி.
பெரியாரின் தொண்டினை படம்பிடிக்கும் வரிகள்!
தந்தை பெரியாரின் தொண்டினைப் பற்றி ஒருவர் எழுதியிருந்ததைப் படித்தேன்.
“அவரின் கையெழுத்து நன்றாக இருக்காது, ஆனால் நாம் அழகாக எழுதினோம். அவரின் பேச்சு கொச்சையாக இருந்தது, ஆனால் நாம் அழகுத் தமிழில் பேசினோம். அவர் பள்ளிக்கூடம் கூட தாண்டவில்லை, ஆனால் நாம் பல்கலைக் கழகங்களில் பட்டங்கள் பெற்றோம். அவர் உடை கைலியும் சட்டையுமாய் இருந்தது. ஆனால் நாம் கோட்சூட் அணிந்தோம். தந்தையே உன்னை போற்றுகிறோம், தலைநிமிர்ந்து வாழ்த்துகிறோம்.”
பெரியாரையும் அவர் ஆற்றிய தொண்டினையும் சிறப்பாக படம்பிடிக்கும் வரிகள் இவை.
ஒவ்வொரு கூட்டத்திலும் பேசத் தொடங்கும் போது, பெரியார் இப்படி சொல்கிறார். “என்னுடைய கருத்துக்களையும் என்னுடைய அனுபவங்களையும் உங்களுக்குச் சொல்ல எனக்கு உரிமை உண்டு. இதனைப் போன்றே, நான் சொல்லுகின்ற கருத்துக் களை சிந்தித்துப் பார்த்து ஏற்றுக் கொள்ளவோ அல்லது ஒதுக்கி தள்ளவோ உங்களுக்கு உரிமை உண்டு என்கிற அடிப்படையில் தான் எந்தக் கருத்தையும் நான் சொல்கிறேன். நான் சொல்லுகின்ற எல்லாவற்றையும் நீங்கள் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை” என்று சொல்லிவிட்டு தான் பேசவே தொடங்குகிறார்.
உலகத்திலே இப்படி சொல்லிவிட்டு பேசத் தொடங்கிய தலைவர்கள் வேறு யாராவது இருப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை. யார் பேசினாலும், ஏன் நானே பேசினாலும் நான் பேசுவதை மக்கள் நம்பவேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்துத் தான் பேசுகிறேன்.
ஆனால் பெரியார் உங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்கிறார். அப்படியென்றால், பெரியார் எனும் தலைவனுக்கு தன்னுடைய கருத்துகளின் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்திருக்க வேண்டும்.
பெரியார் சமுதாயத்திலே அழுத்தப்பட்ட மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக உழைத்தார். தமிழர்களை படிக்க விடாமல் வைத்திருக்கக் கூடிய ஜாதியை எதிர்த்தார், ஜாதியைப் பாதுகாக்கக் கூடிய மதத்தை எதிர்த்தார். மதத்தை பாதுகாக்கக்கூடிய கடவுளை எதிர்த்தார்.
கடவுள் மறுப்பு கருத்துகளை பேசுகிறார் என்பதற்காக தொடக்கத்தில் பெரியாரை கல்லால் அடித்தார்கள், செருப்பால் அடித்தார்கள், சாணத்தால் அடித்தார்கள், இன்னும் சொல்லப் போனால் மனித மலத்தைக் கூட பெரியாரின் மீது வீசினார்கள். ஆனால் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்ட பெரியார், எந்த மக்கள் தன்னை அடித் தார்களோ, வெறுத்தார்களோ அந்த மக்களுக்காகவே பேசினார், அந்த மக்களுக்காகவே போராடினார், அந்த மக்களுக்காக உரிமைகளைப் பெற்றுத் தந்தார்.
எந்த மக்கள் முன்பு பெரியாரை வெறுத் தார்களோ, அந்த மக்களே பின்பு பெரியாரின் தொண்டைப் புரிந்து கொண்டு அவருக்கு நன்றி செலுத்தக் கூடியவர்களாக மாறினார்கள். மரணமடைவதற்கு 3 நாட்களுக்கு முன்பு வரை பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களிடம் பேசிய தலைவர் பெரியார்.
வாழ்நாள் பாராட்டு!
‘தமிழ்நாடு’ என பெயர் சூட்டுவதில் அண்ணாவுக்கு இருந்த அந்த உறுதிப்பாட்டை சமீபத்தில் கூட நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நினைவுகூர்ந்தார்கள். பேரறிஞர் அண்ணாவின் மணி விழாவை கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. சார்பில் நடத்த தேதி கேட்பதற்காக அண்ணாவின் நுங்கம்பாக்கம் இல்லத்துக்கு செல்கிறார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள். அப்போது, அண்ணாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அனுப்பு கிறார்கள்.
பிறகு மீண்டும் கோபாலபுரம் வந்து விடுகிறார். இந்த விஷயம் கேள்விப்பட்ட அண்ணா உடனே தன்னுடைய காரினை அனுப்பி நம் தலைவர் அவர்களை அழைத்து வரச் சொல்கிறார். அப்போது நம் தலைவர் அவர்களுக்கு வயது 16 தான். முதலமைச்சர் அண்ணாவின் காரில் ஏறி மீண்டும் அவரது வீட்டுக்கு செல்கிறார். அங்கு சோர்வாக இருந்த அண்ணா, என்ன வேண்டும் என்று கேட்க இளைஞர் தி.மு.க. சார்பில் உங்கள் மணி விழாவை நடத்த விரும்புகிறோம். நீங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். எனவே, உங்கள் தேதியை தாருங்கள் என கேட்கிறார் நம் முதலமைச்சர். இதைக் கேட்ட அண்ணா, “உன் அப்பனைப் போலவே பிடிவாதக்காரனாக இருக்கிறாயே,” என்று சொல்கிறார். இதை தன்னுடைய வாழ்நாள் பாராட்டாகவே எடுத்துக் கொண்டதாக நம் தலைவர் அவர்கள் கூறினார்கள்.
‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டும் விழா!
தன் மணிவிழாவுக்கு உடல்நிலைக் குறைவால் வர முடியாத நிலையில் இருந்த பேரறிஞர் அண்ணா, தமிழ்நாட்டுக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டும் அந்த விழாவுக்கு வந்தார். உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அந்த நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் எவ்வளவோ எச்சரித்தார்கள்.
ஆனால், தாய்த்திருநாட்டுக்கு ‘தமிழ்நாடு’ என பெயரிடும் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாவிட்டால் இந்த உயிர் இருந்தால் என்ன “போனால் என்ன?’ என்று கூறிதான் ‘தமிழ் நாடு’ எனும் பெயர் சூட்டும் விழாவில் நம்முடைய அறிஞர் அண்ணா அவர்கள் அன்று கலந்து கொண்டார்கள்.
அண்ணா காலத்தில் தமிழ்நாடு என்ற பெயர் கூடாது என்றார்கள். இப்போது நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய காலத்திலும் தமிழ்நாடு என்கிற பெயர் அவர்களின் கண்களை உறுத்துகிறது.
ஒரு மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று அவர்கள் அவ்வளவோ விடாப்பிடியாக இருக்க காரணம் என்ன? ஏனென்றால் அந்தப் பெயர் அவர்களை தொந்தரவு செய்கிறது.
‘தமிழ்நாடு’ என்ற அந்தப் பெயர்தான் தமிழ் மக்களை, தாங்கள் ஒரு தேசிய இனம் என்ற உணர்வைப் பெற வைத்தது. எமர்ஜென்சியை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அமல்படுத்திய போது, நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய ஆட்சி நடந்தது. அப்போது, எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
எமர்ஜென்சி காலத்து ‘மிசா’ கைது!
அதனால் தான், தமிழ்நாடு இந்தியாவில் தனித்தீவாக உள்ளது என்று இந்திரா காந்தி கூறினார். எமர்ஜென்சி காலத்தில் மாநில கட்சிகள் தடை செய்யப்படும் என்று ஒரு செய்தி பரவியது.
அப்போது தான் அ.தி.மு.க.. அனைத்து இந்திய அண்ணா தி.மு.க. ஆனது. ஆனால், தி.மு.க. அப்போதும் தி.மு.க.வாகவே இருந்தது. நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தீவிர அரசியலுக்கு வரக் காரணமே எமர்ஜென்சி காலத்து மிசா கைதுதான்.
அ.தி.மு.க. அப்போதும் டெல்லி சொல் கேட்டு நடந்தது. இப்போதும் டெல்லி சொல் கேட்டு தான் நடக்கிறது. ஆனால், நாம் அன்றும் நம் உரிமைகள் பறிக்கப்பட்ட போது, டெல்லிக்கு எதிராக நின்றோம், இன்றும் நம் உரிமைகளுக்காக டெல்லியை கேள்வி கேட்கிறோம்.
வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை!
இன்றைக்கு சமூகநீதியின் தலைநகராக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. சமூகநீதிக்கு ஆபத்து என்றால், அதற்காக முதலில் வருகிற குரல் நம்முடைய முதலமைச்சருடையதாக இருக்கிறது.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டைத் தந்த சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு சென்னையில் கம்பீர சிலை அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார் நம்முடைய முதலமைச்சர்.
இந்தியா முழுவதும் உள்ள கோடான கோடி பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்று கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அனுபவிக்கும் 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு சமூகநீதிக் காவலர் வி.பி. சிங்கே காரணம். இது போன்ற வரலாறுகளை எல்லாம் நாம் தெரிந்து கொள்வதோடு, நம் வீட்டுக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
இல்லையெனில், நம்முடைய எதிரிகள் அவர்களுடைய தவறான கொள்கைகளை நம்முடைய பிள்ளைகளின் மூளையிலே ஏற்றி விடுவார்கள். இன்றைக்கு நம் வீடுகளிலே கூட சில பிள்ளைகள் இடஒதுக்கீடு பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கிற நிலைமையைப் பார்க்கிறோம்.
ஜாதி ரீதியாக இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது, பொருளாதார ரீதியில்தான் கொடுக்க வேண்டும் என்ற விஷமத்தனமானக் கருத்துகளை பேசுவதைப் பார்க்கிறபோது கவலையாக இருக்கிறது.
எதிரிகளை அலறவிட்ட பேரறிஞர் அண்ணா!
பெரியாருக்கும் அண்ணாவுக்குமான பிரிவு 18 ஆண்டுகள் நீடித்தது. அப்போது, இதோடு திராவிட இயக்கமே முடிந்தது என்று பாசிஸ்ட்டுகள் உற்சாகப்பட்டனர். ஆனால், 1967 தேர்தலில், கழகம் வெற்றி பெற்றதும், “வண்டியை திருச்சிக்கு விடு, பெரியாரைச் சந்திக்க வேண்டும்,” என கூறி அண்ணா நம் எதிரிகளை அலறவிட்டார். பெரியாருக்கு தம்முடைய அமைச்சரவையே காணிக்கை என்று அறிவித்தார் பேரறிஞர் அண்ணா.
தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை!
தந்தை பெரியார் அவர்கள் மறைந்தபோது அவரை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஆணை பிறப்பித்தார் முத்தமிழறிஞர் கலைஞர். தந்தை பெரியார் எந்த அரசுப்பதவியிலும் இருந்ததில்லை, அவருக்கு எப்படி அரசு மரியாதை கொடுக்க முடியும் என்று அதிகாரிகள் கேட்டபோது, கலைஞர் சொன்னார், “காந்தி எந்த அரசுப் பதவியில் இருந்தார். அவருக்கு எப்படி அரசு மரியாதை கொடுக்கப் பட்டதோ அதே மாதிரி தந்தை பெரியாருக்கும் அரசு மரியாதை கொடுக்க வேண்டும், அதனால் என்னுடைய ஆட்சியே போனாலும் பரவாயில்லை” என்றார் கலைஞர்.
அவர்களுடைய வழியில் வந்த நம்முடைய முதலமைச்சர் அவர்கள், தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாகவும் அதேபோல் அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும் அறிவித்தார்.
தந்தை பெரியாருக்குக் காட்டும் நன்றி உணர்வு!
அதுமட்டுமல்ல, தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு ஆண்டு முழுவதும் நடத்தும் என்றும் அறிவித்திருக்கிறார் என்றால், இவையெல்லாம் தந்தை பெரியாருக்கு நாம் காட்டுகிற நன்றி உணர்வு.
பெரியார் வழியில் நம்முடைய முதலமைச்சர் அவர்களும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பெண்களின் கல்விக்காக மாதம் 1000 நிதியுதவி கொடுக்கிறார். குடும்பத் தலைவிகளுக்கு மாதாமாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகையினை பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் வழங்க இருக்கிறார். பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் என்ற திட்டத்தை தந்துள்ளார்கள்.
மாநில உரிமைகளை பாதுகாப்பதிலும் நம்முடைய அரசு கவனமுடன் செயல்பட்டு வரு கிறது. நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் செய்யும் வகையில் அரசமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதுமட்டுமல்லாமல், பிற மாநில முதலமைச்சர்களுக்கும் நம்முடைய முதலமைச்சர் கடிதம் எழுதினார்.
‘தீ பரவட்டும்!’
இதனை டெல்லி, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் பாராட்டி பதில் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள் என்றால், பேரறிஞர் அண்ணா ‘தீ பரவட்டும்’ என்று சொன்னது போல தீ பரவத் தொடங்கியிருக்கிறது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் திராவிட இயக்கங் களுடனும் – திராவிட சிந்தனையாளர்களுடன் அவ்வளவு நெருக்கமாக இருந்தார். திராவிட இயக்கங்களின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களை ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சட்டமாக்கிய பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உண்டு. 1929ஆம் ஆண்டு நடைபெற்ற செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்கு சொத்துரிமை வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. பெண்களுக்கு சொத்துரிமை என இந்திய ஒன்றியத்திலேயே முதன்முறை யாக 1989-ல் சட்ட வடிவம் கொடுத்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
அந்த வகையில், இந்த மாநாட்டில் நிறைவேற்றப்படுகிற தீர்மானங்களும் நிச்சயம் ஒரு நாள் சட்டம் ஆக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
ஒற்றுமையுடன் செயல்படவேண்டும்!
இந்த நேரத்தில் நான் ஒன்றை கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். தேர்தல் அரசியலில் ஈடுபடாத நம்முடைய திராவிட இயக்கங்கள் பல தனித்தனியாக இயங்குகிறீர்கள். நீங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றாக இருந்து செயல்பட வேண்டும் என்பதுதான் அது.
தந்தை பெரியாரின் லட்சியங்களை நம் நெஞ்சில் ஏந்துவோம் அவருடைய மன உறுதியை நாம் பெறுவோம், அவர் காண விரும்பிய ஒரு சமத்துவ சமதர்ம தமிழ் நாட்டை உருவாக்க உறுதியேற்போம். தமிழ் நாடு தமிழ்நாடாகவே இருக்க என்றைக்கும் தொடர்ந்து உழைப்போம்.
முக்கியமாக அடுத்து நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. இது மிக மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் ஓட்டுமொத்த இந்தியாவை வழிநடத்துகிற தலைவராகவும் நம்பிக்கையாகவும் இருப்பவர் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முதலமைச்சர் அவர்கள்.
எப்படி சென்ற சட்டமன்றத் தேர்தலில் பாசிஸ்டுகளின் அடிமைகளை வீட்டுக்கு அனுப்பினோமோ, அதே போல வரவிருக்கிற மக்களவை தேர்தலில் பாசிஸ்டுகளையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற உறுதியோடு உழைப்போம் என கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன்.
பெரியார் முழக்கம் 11052023 இதழ்