அரசியலில் பங்கேற்காத இந்த இயக்கத்தை நோக்கி திரண்டிருக்கும் இளைஞர் கூட்டத்தைப் பார்த்து வியக்கிறேன் – மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் முழக்கம்

 

சனாதனத்தை வேரறுப்போம், வெறுப்பு அரசியலை வீழ்த்துவோம், மாநில உரிமைகளைக் காப்போம் என்ற முழக்கங்களோடு திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநில மாநாட்டில்” கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமையடை கிறேன். இந்த இரண்டு நாள் மாநாடு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு பல்வேறு முன்னணி பேச்சாளர்கள் எல்லாம் பங்கேற்று கருத்துரை வழங்கியிருக்கிறார்கள். இந்த மாநாட்டை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தி இருக்கக்கூடிய அண்ணன் கொளத்தூர் மணி அவர்களுக்கும் திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

திவிகவுடன் எனக்கு நெருக்கம்

குறிப்பாக இந்த மேடையில் நம்முடைய கொள்கையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கிற ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இளைஞர்களுக்கு நம்முடைய கருத்துக்களை கொள்கைகளை விளக்கக்கூடிய ஒரு முயற்சியாக திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணியின் சார்பாக நடந்த “திராவிட மாடல் பயிற்சிப் பாசறை” கடந்த ஆறு மாதங்களில் “திராவிட இயக்க வரலாறு”, “மாநில சுயாட்சி” ஆகிய இரண்டு தலைப்புகளில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பயிற்சி பாசறையை நடத்தி முடித்திருக்கிறோம். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் அண்ணன் கொளத்தூர் மணி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எங்களை எல்லாம் பெருமைப்படுத்தினார். இதற்காக நான் அவரிடத்தில் நன்றி சொல்லவில்லை, இந்த மேடையை நான் நன்றி சொல்வதற்காக பயன்படுத்திக் கொள்கிறேன். அதுமட்டுமல்லாமல் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பயிற்சிப் பாசறையை முடித்து விட்டோம், அடுத்து தலைவரிடத்தில் ஒப்புதல் பெற்று அனைத்து ஒன்றியங்களிலும் பாசறைக் கூட்டத்தை நடத்த உள்ளோம். இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு. என்னுடைய சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் நம்முடைய இயக்கத்தின் படிப்பகம் உள்ளது. அதன் பக்கத்திலேயே தந்தை பெரியாரின் சிலையும் இருக்கிறது. நான் என்னுடைய சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் உங்களுடைய படிப்பகத்தை தாண்டி தான் செல்ல வேண்டும், தந்தை பெரியாரின் சிலையை வணங்கி விட்டுத் தான் நான் செல்ல வேண்டும், அப்படி ஒரு நெருக்கம் எனக்கும் இந்த இயக்கத்திற்கும் இருக்கிறது.

இது தமிழ்நாடு! என்ற பெயரில் நடக்கும் இந்த மாநாட்டில் தமிழ்நாடு என்று நம் மாநிலத்திற்கு பெயர் சூட்டிய  பேரறிஞர் அண்ணா தொடர்பான ஒரு செய்தியை நினைவு கூர்ந்து எனது உரையை தொடங்குகிறேன். 1967 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் முதல்முறையாக ஆட்சியமைக்கிறது. பேரறிஞர் அண்ணா முதல்வராகிறார், அவர் முதல்வரான பிறகு நாட்டில் இருக்கும் பல்வேறு தலைவர்களிடமிருந்தும் அவருக்கு வாழ்த்துகள் வருகிறது. மாலைகள், பூங்கொத்து, சால்வைகள் என வருகிறது. அதற்கு அண்ணா கூறுகிறார் இந்த மாலைகள் பூங்கொத்துகள் வாழ்த்து செய்திகள் எல்லாம் முதலமைச்சர் அண்ணா துரைக்கு தான் அனுப்பப்படுகின்றன, ஆனால் ஒரே ஒரு வாழ்த்துச் செய்தி மட்டும் தான் தனிப்பட்ட அண்ணா துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஒரு வாழ்த்துச் செய்தியை அனுப்பியது வேறு யாரும் இல்லை தந்தை பெரியார் அவர்கள் தான் என்றார் அண்ணா. இதன்மூலம் பெரியார் மீதிருந்த அன்பை, பற்றை அண்ணா வெளிப்படுத்தியிருந்தார்.

பகுத்தறிவாளனாக பங்கேற்கிறேன்

இன்றைக்கு அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மாநிலம் முழுவதும் அரசு நிகழ்ச்சிகள், கழக நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். இந்த நிகழ்ச்சியில் கூட நான் அமைச்சராக கலந்து கொள்ளவில்லை, உங்களில் ஒருவனாக, திராவிடக் கொள்கையில் பிடிப்புள்ளவனாக, பகுத்தறிவாளனாக நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்றால் அதில் கொஞ்சம் கூட உங்களுக்கு ஐயம் வேண்டாம்.

“இது தமிழ்நாடு!” இந்த மாநாட்டிற்கு இப்படி ஒரு தலைப்பை தேர்வு செய்தவர்களுக்கு முதலில் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தலைப்பிற்குள் இரண்டு செய்திகள் உள்ளடங்கி இருக்கிறது, இது தமிழ்நாடு, இதன் உரிமைகளைக் காப்பது நமது கடமை என்பதை உரக்கச் சொல்வது. மற்றொன்று இது தமிழ்நாடு உங்கள் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சமாட்டோம் என்று பாசிச சங்கிகளைப் பார்த்து கூறுவது. இந்த இரண்டுக்காகவும் தான் நாம் இங்கே கூடியிருக்கிறோம்.

நம்முடைய எதிரிகள் கலைஞரை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காக நிறைய கதைகளை சொல்வார்கள். அதில் ஒன்றுதான் கலைஞர் ரயில் ஏறி திருவாரூரில் இருந்து நேராக சென்னைக்கு சென்றுவிட்டார் என்று கூறுவார்கள். ஆனால் அது உண்மை கிடையாது, உண்மையில் கலைஞர் திருவாரூரில் இருந்து நேராக சென்னைக்கு செல்லவில்லை, அவர் சேலத்திற்கு வந்து அங்கிருந்து கோவைக்கு சென்று, அதன்பிறகு ஈரோட்டிற்கு சென்று தந்தை பெரியாரோடு குடிஅரசு பத்திரிகையில் பணியாற்றிவிட்டுத் தான் அவர் சென்னைக்கு சென்றார். அதை நானும் இப்போது சொல்லலாம், நானும் நேராக இங்கு வரவில்லை, கலைஞரின் பேரனாகிய நான் பெரியாரின் பேரன் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களை வெற்றிபெறச் செய்த ஈரோட்டு மக்களை சந்தித்து அவர்களுக்கு நன்றியை சொல்லிவிட்டு, இன்று (30.04.2023) காலை திருச்சிக்கு சென்று நம்முடைய முதல்வரின் புகைப்படக் கண்காட்சியை திறந்துவைத்துவிட்டு இப்போது நான் உங்களை எல்லாம் சந்திக்க வந்துள்ளேன்.

கலைஞர் இளமைக்காலத்தில் உலவிய சேலம் மண்ணில் இந்த மாநாடு நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் ஒரு வித்தியாசம், அப்போது நம் மாநிலத்திற்கு பெயர் சென்னை மாகாணம், ஆனால் கலைஞருடைய பேரன் என்னுடைய காலத்தில் இந்த மாநிலத்திற்கு பெயர் தமிழ்நாடு. அதேபோல் நம்முடைய பேரன், பேத்திகள் காலத்திலும் இது தமிழ்நாடாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாநாடு நடந்துகொண்டிருக்கிறது.

கலைஞரின் பகுத்தறிவு

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து தான் கலைஞர் பல திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதினார்.கலைஞர் மாடர்ன் தியேட்டர்ஸில் பணியாற்றிய போது நடந்த ஒரு சம்பவம், அவருடைய பகுத்தறிவை பேசுகின்ற நினைவுகூறுகின்ற ஒரு சம்பவத்தை நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். இதை கலைஞர் நெஞ்சுக்கு நீதி புத்தகத்திலும் வெளியிட்டுள்ளார், 1949 ஆம் ஆண்டு சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ், மாயாவதி என்ற ஒரு திரைப்படத்தை தயாரிக்கிறார்கள், அந்த படம் பெரிதாக வெற்றிபெறவில்லை. அவர்களுக்கு பெரியளவில் நட்டம் ஏற்பட்டது. அவர்கள் கலைஞரை சந்தித்து நாங்கள் எடுத்த மாயாவதி திரைப்படம் பெரியளவில் நட்டம் ஏற்பட்டுவிட்டது, நீங்கள் கதை, திரைக்கதை, வசனம் எழுதி மாடர்ன் தியேட்டர்ஸ்க்கு ஒரு திரைப்படம் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். கலைஞரும் ஒப்புக் கொண்டார். பிறகு கலைஞர் கதை வசனம் எழுதி படம் தயாராகும் நிலையில், படபிடிப்பை தொடங்குவதற்காக ஜோதிடர் ஒருவரை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அழைத்துவருகிறது. அந்த ஜோதிடர் கலைஞரிடம் சென்று நீங்கள் கதை வசனம் எழுதலாம், ஆனால் படத்திற்கு தேதியை நான்தான் குறிக்கப்போகிறேன் என்று திமிராக கலைஞரிடம் அந்த ஜோதிடர் கூறுகிறார். உடனே கலைஞர் அவரிடம் நக்கலாக கேட்கிறார், நீங்கள் தானே மாயாவதி படத்திற்கும் தேதி குறித்தீர்கள் என்று கேட்டார். அந்த ஜோதிடர் ஆமாங்கய்யா என்று சிரித்துக்கொண்டே போய்விட்டார். அப்படி நம்முடைய கலைஞர் கதை வசனம் எழுதிய மிகப் பெரிய வெற்றிப் படம் தான் மந்திரகுமாரி.

அதேபோல் நம்முடைய முதலமைச்சர் பற்றியெல்லாம் பல ஆருடங்களை இரண்டு வருடங்களுக்கு முன்பு சொன்னார்கள். கட்டம் சரியில்லை என்றார்கள், ஜாதகத்தில் அமைப்பே இல்லை என்று சொன்னார்கள். தமிழ்நாட்டிற்கு இவர் முதலமைச்சரே ஆக முடியாது என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அவற்றையெல்லாம் தனது உழைப்பால் தவிடு பொடியாக்கி, வென்றுகாட்டி, நாடு போற்றும் திராவிட மாடல் அரசை நடத்தி வருகிறார். அண்மையில் சேலம் வந்த நம்முடைய முதல்வர் அதே மாடர்ன் தியேட்டர்ஸ் வாசலில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

திராவிடர் விடுதலைக் கழகம் என்ற தேர்தல் அரசியலில் இல்லாத சமுதாய இயக்கத்தை நோக்கி இவ்வளவு இளைஞர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை பார்த்தால் எனக்கு வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது. பெரியார் அடிக்கடி சொல்வார் எனது தொண்டர்கள் துறவிகளுக்கும் மேலானவர்கள் என்று. துறவிகளுக்குக் கூட இறந்த பின்பு சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கும் ஆனால் என் தொண்டர்களுக்கு அந்த ஆசை கூட கிடையாது என்று சொல்வார். அப்படிப்பட்ட துறவிக்கும் மேலான உங்களை சந்திப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

இது தமிழ்நாடு என்று ஏன் சொல்கிறோம் இந்திய ஒன்றியத்தில் எத்தனையோ மாநிலங்கள் உள்ளன, ஆனால் மற்ற மாநிலங்களை விட நம்முடைய மாநிலத்திற்கு என்ன சிறப்பு என்றால் மற்ற மாநிலத்தை ஆளுகின்ற கட்சிகளுக்கு எல்லாம் ஒன்றியத்தை ஆளுகின்ற பாசிஸ்டுகள் வெறும் அரசியல் எதிரிகள், ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் தான் அவர்கள் கொள்கை எதிரிகள். எவ்வளவோ முயன்று பார்க்கிறார்கள், எவ்வளவோ செலவு செய்து பார்க்கிறார்கள், என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள், மாநில தலைவர்களையெல்லாம் மாற்றிப் பார்க்கிறார்கள், ஆனால் பாசிச சக்திகளால் தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கவே முடியாது. “அவர்களின் கண்களுக்கு தெரியாத தடுப்புச் சுவர் தமிழ்நாட்டை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. அந்த சுவற்றில் மோதி மோதித் தான் மூக்குடைந்து போகிறார்கள், அந்த சுவற்றிற்கு பெயர் தான் தந்தை பெரியார்”. அதனால் தான் நான் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விளையாட்டுத்துறை மானியக் கோரிக்கையின் போது சொன்னேன், எங்களது பயிற்சியாளர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன் இப்படி இந்தியாவில் எந்த இயக்கத்திற்கும் பயிற்சியாளர்கள் கிடைத்தது கிடையாது. அதிலும் சிறப்பு என்னவென்றால் தலைமைப் பயிற்சியாளர் யாரென்றால் தந்தை பெரியார் தான்.

ஜாதிப் பட்டங்களை ஒழித்த பெரியார்

தந்தை பெரியார் என்ன சாதித்து விட்டார் என்று நம் காதுபடவே கேட்கிறார்கள். நன்றாக யோசித்துப் பாருங்கள், தந்தை பெரியார் இந்த மண்ணில் தன்னுடைய இயக்கத்தை ஆரம்பிக்கும் போது தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களின் பெயர்களுடன் சேர்ந்து அவர்களின் ஜாதிப் பெயரும் இருந்தது. உதாரணமாக சீனிவாச அய்யங்கார், சத்தியமூர்த்தி அய்யர், வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்தர முதலியார் என இப்படித்தான் அனைவருடைய பெயருக்குப் பின்னாலும் ஜாதிப் பெயர் இருந்தது? 1973 இல் தந்தை பெரியார் மறையும் போது தமிழ்நாட்டில் யாருடைய பெயருக்குப் பின்னாலும் ஜாதிப் பெயர் இல்லை என்பதை செய்து காட்டியவர் பெரியார், இது எவ்வளவு பெரிய சாதனை. இந்தியாவில் எந்த மாநிலத்தை வேண்டு மானாலும் எடுத்துக் கொள்ளுங்கள், ஜாதிப் பெயரை போட்டுக்கொள்ளாத மக்கள் தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறார்கள், காரணம் அவருடைய பேச்சுக்களும் எழுத்துக்களும் தான்.

சமூக சமத்துவத்தை நோக்கிய நாம் இன்னும் செல்ல வேண்டிய தூரம் இருக்கிறது. ஆனால் அசைக்க முடியாததாக இருந்த ஜாதிய சமூகத்தை பெரியார் அசைத்துக் காட்டினார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. சேலத்தில் பக்கத்தில் இருக்கக்கூடிய ஈரோட்டில் பிறந்த பெரியார் தான் தமிழர்களுக்கு தன்மான உணர்வை ஊட்டினார். முதுகெலும்பு வளைந்து நின்ற மக்களை நிமிர்ந்து நிற்க வைத்தார். ஆனால் கொடுமை என்னவென்றால் இந்த சேலத்தை சேர்ந்த ஒருவர் பதவி வேண்டும் என்பதற்காக முதுகெலும்பு இருப்பதையே மறந்து டேபிள் சேருக்கு கீழே புகுந்து சென்று பதவியைப் பெற்றார். அதையும் நாம் பார்த்தோம். ஆனால் அது அவருடைய சுயநலம். ஆனால் டெல்லியின் கால்களில் விழுந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்ததை தான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனிநபர் காலில் விழுவதையே நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது, ஆனால் தமிழ்நாட்டின் உரிமைகளையே மோடியின் காலடியில் வைத்தது தான் மன்னிக்க முடியாத துரோகம்.

இந்த சூழ்நிலையில் தான் நல்வாய்ப்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தது, தமிழ்நாடும் பிழைத்தது. இதுவே தற்போது அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் இந்த மாநாட்டிற்கு இது தமிழ்நாடு என்று தலைப்பு வைத்திருக்க முடியாது; பெயரே மாறியிருக்கும். வேண்டுமென்றால் மாறியப் பெயரை மீண்டும் தமிழ்நாடு என்று வையுங்கள் என்று போராட்டம் நடந்திருக்கும்.

தமிழ்நாடு அரசு எழுதித் தந்த உரையை படிக்காமல் அவருடைய இஷ்டத்திற்கு படித்தார் ஆளுநர் ரவி. அதிலிருந்த தந்தை பெரியார், அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, காமராசர் என அவர்களின் பெயர்களைக் கூட உச்சரிக்காமல் ஆளுநர் தவிர்த்தார். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்று, ஆளுநர் படித்த உரை அவைக் குறிப்பில் இடம் பெறாது. தமிழ்நாடு அரசு எழுதிக் கொடுத்த உரை தான் அவைக் குறிப்பில் இடம் பெறும் என்று சொன்னார். இதை கோபம் என்று சொல்வதை விட நம்முடைய முதலமைச்சருக்கு இருக்கிற சுயமரியாதை என்று தான் சொல்ல வேண்டும். இதைத்தான் அறிஞர் அண்ணா அன்றே சொன்னார் தமிழ்நாடு என்ற பெயரை யாரும் மாற்ற நினைத்தாலும் அவர்களுக்குள் ஓர் அச்சம் பிறக்கும் அந்த அச்சம் இருக்கிற வரை தமிழ்நாட்டை இந்த அண்ணாதுரை தான் ஆள்கிறான் என்று பொருள் என்று சொன்னார். இந்த சுயமரியாதை உணர்வை, மாநில உரிமை எண்ணத்தை எல்லாம் நமக்கு ஊட்டியவர் தந்தை பெரியார்.

தமிழ்நாட்டு மக்கள் தந்தை பெரியாரை சரியாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம்முடைய எதிரிகள் தான் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அவர் ஏதோ கடவுள் இல்லை என்று சொன்னவர் என்பதை மட்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கும் பிற மாநிலத்திற்கும் தத்துவ அடிப்படையில் கொள்கை அடிப்படையிலும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. தமிழ்நாட்டில் எந்த குக் கிராமத்தில் பிறந்த குழந்தையும் அது வளர்ந்து கல்லூரி செல்வதற்குள் ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு கூட்டத்தில் சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி,  சமத்துவம், பெண்ணுரிமை, மாநில உரிமை, மொழி உரிமை, இந்தி திணிப்பு எதிர்ப்பு, இவற்றில் ஒன்றையாவது நிச்சயம் காதால் கேட்டிருப்பார்கள். இதில் யாரும் தமிழ்நாட்டிற்கு விதிவிலக்காக இருந்திருக்க மாட்டார்கள். இதனால்தான் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட 50 ஆண்டுகள் முன்னோக்கி இருக்கிறது. வேகமாக வளர்கிறது இதனால் தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியாரை ஒரு சகாப்தம் என்று சொன்னார். தமிழ்நாட்டில் என்று ஒரு தனிப் பண்பை ஏற்படுத்தி தந்தவர் தான் தந்தை பெரியார் அவர்கள். 1968 ஆம் ஆண்டு தந்தை பெரியார் ஒரு முறை விடுதலை பிறந்த நாள் மலரில் எழுதுகிறார் எனக்கு மிகவும் சோர்வாக உள்ளது. பொதுப் பணியாற்றி, மக்கள் பணியாற்றி, தன்னுடைய கருத்துக்களை எல்லாம் சொல்லி சொல்லி எனக்கு சோர்வாக உள்ளது என்று ஒரு கடிதம் எழுதுகிறார்.  அப்போது பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சர். அமெரிக்காவில் சிகிச்சையில் இருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட அண்ணா பெரியாருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். ஒரு தலைவன் தான் முன்வைத்துப் பேசிய அனைத்துமே செயல்முறைக்கு வந்ததை தன் வாழ்நாள் காலத்திலேயே பார்த்ததுண்டு என்று சொன்னால் அது தந்தை பெரியார் நீங்கள் மட்டும் தான் என்று அண்ணா அந்த கடிதத்தில் எழுதினார். இது எவ்வளவு பெரிய உண்மை காரல் மார்க்ஸின் மார்க்சிய கொள்கைகள் அவரது மரணத்திற்குப் பிறகு தான் செயல் வடிவம் பெற்றது. ஆனால் தந்தை பெரியாருக்கு அப்படி அல்ல தான் நினைத்ததை எல்லாம் தன்னுடைய தம்பிகள் சட்டமாக்கினார்கள். எனவே தான் தமிழ்நாட்டில் அரசியல் செய்வது சங்கிகளுக்கு அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

(தொடரும்)

பெரியார் முழக்கம் 04052023 இதழ்

You may also like...